தமிழ்நாடு

”தன்னை விட்டால் வேறு யாரும் இல்லை என்ற மிதப்பில் ஆளுநர் RN.ரவி..” : சாட்டையை சுழற்றிய அமைச்சர் ரகுபதி!

தமிழ்நாடு சட்டமன்றத்தின் இறையாண்மையை ஆளுநர் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.

”தன்னை விட்டால் வேறு யாரும் இல்லை என்ற மிதப்பில் ஆளுநர் RN.ரவி..” : சாட்டையை சுழற்றிய அமைச்சர் ரகுபதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆளுநர் ரவி தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் - தமிழ்நாடு சட்டமன்றத்தின் இறையாண்மையையும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து அமைச்சர் எஸ்.ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

“அரசியல் சட்டத்திற்கு மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டும்” என்ற அடிப்படையை மறந்து விட்டு, தமிழ்நாடு ஆளுநர் தனது விருப்பு வெறுப்புகளுக்காகவும், தான் சார்ந்த அரசியல் சிந்தனைகளுக்காகவும் தமிழ்நாட்டு மக்களின் நலனையும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் இறையாண்மையையும் தொடர்ந்து கொச்சைப்படுத்திக் கொண்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

அரசியல்சட்டச் செயல்பாடுகள் நடைபெறும் இடமா அல்லது அரசியல் மன்றமா ஆளுநர் மாளிகை என்ற கேள்வியைத் தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் கேட்கும் சூழல் ஆளுநரால் உருவாகியிருக்கிறது என்பது கவலையளிக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரைக் காட்டிலும் தான் மேலானவர் (Superior than the Chief Minister) என்ற நினைப்பில் ஆளுநர் செயல்படக் கூடாது என்ற மிக முக்கியமான காரணத்தின் அடிப்படையில்தான் “ஆளுநரை நியமித்தால் போதும்” என்று அரசியல் நிர்ணய சபையிலேயே விவாதித்து முடிவு எடுக்கப்பட்டது என்பதை ஏனோ ஆளுநர் மறந்து விட்டு, தான் ஏதோ மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ள முதலமைச்சருக்கு மேல் அதிகாரம் உள்ளவர் என்ற கற்பனைக் குதிரையில் பவனி வருவது மக்களாட்சிக் கருத்தியலை மாசுபடுத்துகிறது.

”தன்னை விட்டால் வேறு யாரும் இல்லை என்ற மிதப்பில் ஆளுநர் RN.ரவி..” : சாட்டையை சுழற்றிய அமைச்சர் ரகுபதி!

மாநில அரசின் நிர்வாக அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமும், அந்த அரசின் அமைச்சரவையிடமும் இருக்கிறது. அந்த அமைச்சரவைதான் சட்டமன்றத்திற்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டது.

ஆகவேதான், அமைச்சரவை ஆலோசனையின்படி ஆளுநர் செயல்பட வேண்டும் என்று “Shamsher Singh Case” உள்ளிட்ட அனைத்து வழக்குகளிலுமே உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.

“சட்ட மேதாவித்தனத்தில்” தன்னை விட்டால் வேறு யாரும் இல்லை என்ற நினைப்பில் இருக்கும் ஆளுநர், அந்தத் தீர்ப்பை படித்துப் பார்க்கவில்லை என்றே தோன்றுகிறது. அதே வழக்கின் தீர்ப்பில், “For a centrally appointed constitutional functionary to take up public stances critical of Government policy settled by the Cabinet or to interfere in the administration directly - these are unconstitutional faux pas and run counter to Parliamentary System” என்பதையும் அமைச்சரவை எடுத்த கொள்கை முடிவையும், அதன் அடிப்படையில் தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பியுள்ள ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா உள்ளிட்ட மசோதாக்களைப் பற்றிப் பொதுவெளியில் பேசும்போது ஏனோ மறந்து விட்டார் ஆளுநர்!

இப்படிப்பட்ட ஆளுநர்களிடம் சட்டமன்ற இறையாண்மை சிக்கித் தவிக்கும் சூழலைத் தவிர்க்கவே சர்க்காரியா கமிஷன் தனது பரிந்துரையில் அரசியல் சட்டப்பிரிவு 200-இன்படி ஆளுநரின் ஒப்புதலுக்காக மசோதாக்களை அனுப்பி வைக்கும்போது, அந்தப் பிரிவில் உள்ள “Withhold” என்ற வாசகம் அறவே நீக்கப்பட வேண்டும் என்று தெளிவாகப் பரிந்துரைத்துள்ளது. இந்த “withhold” அதிகாரமே ஆளுநருக்கு இருக்கக் கூடாது என்றே பரிந்துரைத்துள்ளது. சட்ட நுணுக்கங்கள் தெரிந்தவர்போல் பொதுவெளியில் பேசும் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான ஆளுநர் அவர்கள் “சம்ஷேர் சிங் வழக்கு தீர்ப்பு” “சர்க்காரியா கமிஷன் பரிந்துரைகள்” ஆகியவற்றையெல்லாம் பரந்து விரிந்து கிடக்கும் ஆளுநர் மாளிகையில் அமர்ந்து படித்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

”தன்னை விட்டால் வேறு யாரும் இல்லை என்ற மிதப்பில் ஆளுநர் RN.ரவி..” : சாட்டையை சுழற்றிய அமைச்சர் ரகுபதி!

அதே சர்க்காரியா கமிஷன் பரிந்துரையில், “Governor should not act contrary to the advice of Council of Ministers merely because personally he does not like the policy embodied in the bill” என்று எச்சரித்துள்ளது மட்டுமின்றி, “தனது ஒப்புதலுக்கு வந்த ஒரு மசோதா மீது ஏதாவது கருத்துகேட்க நினைத்தால் அதை ஒரு மாதத்திற்குள் செய்ய வேண்டும்” என்று “Time limit”-உம் நிர்ணயித்திருக்கிறது. அரசியல் ஆர்வத்தில் திளைத்து, மதவாத அரசியலுக்கு மாலை சூடுகின்ற நினைப்பில் மிதக்கும் ஆளுநர் அவர்கள் அரசியல் சட்டத்தையும் பார்ப்பதில்லை; உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை; ஒன்றிய - மாநில அரசு உறவுகள் குறித்து பரிந்துரை கொடுத்துள்ள சர்க்காரியா கமிஷன் அறிக்கைகளைக்கூட படித்துப் பார்க்க விரும்புவதில்லை!

எல்லாவற்றுக்கும் மேல் “Governor is mere agent of the centre” என்பதையும் மறந்து, ஏதோ “Superior Chief Minister” போலும், தான் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கும், அதன் இறையாண்மைக்கும் கட்டுப்பட்டவரல்ல என்ற தொனியிலும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பதிலளித்த பிறகும் ராஜ்பவன் டுவிட்டர் கணக்கை “அரசிற்கு எதிரான பரப்புரைக்குப் பயன்படுத்துவது” மரபுகளுக்கும், தாம் வகிக்கும் பதவியின் மாண்புக்கும் எதிரான செயல் என்பதை ஆளுநர் உணர வேண்டும்.

ஆகவே, அருணாசல பிரதேச சட்டமன்ற வழக்கில், “It is not within the realm of Governor to embroil himself in any political thicket” என்று ஆளுநரின் செயல்பாடுகள் தெளிவாக உச்சநீதிமன்ற அரசியல்சாசன அமர்வு வரையறுத்துள்ளது. “Maru Ram” வழக்கில் இருந்து, அண்மையில் வெளிவந்த “ஏ.ஜி.பேரறிவாளன் வழக்கு”தீர்ப்பு வரை, “ஆளுநர் அமைச்சரவையின் முடிவிற்குக் கட்டுப்பட்டே நடக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. ஆனாலும், எதையாவது பேசி, இந்தப் பதவிக்கு மேலும் ஒரு பதவிக்கு சென்று விட வேண்டும் என்ற பதவிவெறியில், அரசியல்சட்டத்தின் அடிப்படையிலான தீர்ப்புகள் எல்லாம் ஆளுநரின் கண்ணுக்குத் தெரியவில்லை.

சர்க்காரியா கமிஷன் ஆளுநர் பதவிக்குப் பரிந்துரைத்த “தகுதிகள்” முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டிருந்தால், “தமிழ்நாடு சட்டமன்றத்தின் இறையாண்மை - தமிழ்நாட்டு மக்களின் நலன்” என்ற “பூமாலை” மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் ரவியின் கையில் சிக்கிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது என்ற ஆதங்கம் என் போன்றோருக்கு மட்டுமல்ல, நல்லதொரு நாடாளுமன்ற ஜனநாயகத்தை விரும்பும் ஒவ்வொரு குடிமகனுக்கும் இன்றைக்கு வந்துள்ளது என்றால், அதற்கு முழுப் பொறுப்பு ஆளுநர் ரவி அவர்களும், பொதுவெளியில் அவரது அரசியல் செயல்பாடுகளும்தான்!

“அரசியல்சட்டத்தைப் பாதுகாப்பேன்” என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்ட ஆளுநர் அவர்கள், அந்த அரசியல்சட்டத்தின் மீதே நம்பிக்கையின்றிச் செயல்படுவது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கும் நல்லதல்ல; அவர் வகிக்கும் பதவிக்கும் ஏற்றதல்ல என்பதைத் தெரிவித்து, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் - தமிழ்நாடு சட்டமன்றத்தின் இறையாண்மையையும் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories