தமிழ்நாடு

தமிழர்களின் பெருமை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ள கீழடி அருங்காட்சியகத்தின் 10 சிறப்புகள்!

தொல்லியல் துறை சார்பில் 18.43 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தை நேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழர்களின் பெருமை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ள கீழடி அருங்காட்சியகத்தின் 10 சிறப்புகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (5.3.2023) சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை உலகத் தமிழர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் 31,000 சதுர அடி பரப்பளவில் 18.43 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார்.

தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை கீழடி அகழாய்வுத் தளத்தில் 2018-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து தற்போது வரை ஐந்து கட்டங்களாக அகழாய்வு மேற்கொண்டு வருகிறது. தமிழர்களின் பண்பாட்டின் முக்கியத்துவம் மற்றும் தொன்மையை நிரூபிக்கவும், அதை உலகளவில் கொண்டு செல்லவும் தொல்லியல் துறை உலகப் புகழ்பெற்ற அறிவியல் ஆய்வகங்களுக்கு கீழடியில் கண்டெடுக்கப்பட்ட முக்கியமான கண்டுபிடிப்புகளை அனுப்பி அதிகாரபூர்வமான முடிவுகளைப் பெற்றுள்ளது.

தமிழர்களின் பெருமை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ள கீழடி அருங்காட்சியகத்தின் 10 சிறப்புகள்!

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட மாதிரிகளின் அறிவியல் காலக்கணிப்பு கி.மு. ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வைகை ஆற்றங்கரையில் நகரமயமாக்கல் இருந்ததை உறுதிப்படுத்தியது. மேலும், கங்கைச் சமவெளியின் நகரமயமாக்கலுக்கு சமகாலமானது என்பதையும் உறுதிபடுத்தியுள்ளது. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தமிழ்ச் சமூகம் கல்வியறிவும் எழுத்தறிவும் பெற்றிருந்தனர் என்பதை அறிவியல் அடிப்படையில் நிலைநிறுத்தியுள்ளது.

கீழடி அகழாய்வில் 1000-க்கும் மேற்பட்ட குறியீடுகளும், 60-க்கும் மேற்பட்ட தமிழி எழுத்துப் பொறிப்புக் கொண்ட பானை ஓடுகளும் கண்டெக்கப்பட்டுள்ளன. இப்பானை ஓடுகளில் குவிரன் ஆதன், ஆதன் போன்ற தனிநபர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளதன் வாயிலாக சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரும் கல்வியறிவு பெற்றிருந்தனர் என்பதை வெளிப்படுகிறது.

தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தரவுகள் மற்றும் மற்றும் கண்டுபிடிப்புகளின் வாயிலாக வைகை ஆற்றங்கரையில் வாழ்ந்த தமிழ்ச் சமூகமானது வேளாண்மை மூலம் பொருளாதாரத்தினை உயர்த்திக் கொண்டனர், மட்கலன்கள், இரும்பு, நெசவு, மணிகள், சங்கு வளையல்கள் ஆகிய தொழில்களை மேற்கொண்டிருந்தனர் என்பதும் அகழாய்வுச் சான்றுகள் மூலம் அறிகிறோம்.

மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் பகுதிகளில் கிடைக்கப்பெறுகின்ற மூலக்கற்களைக் கொண்டு சூதுபவள மணிகள், அகேட் போன்ற கல்மணிகள் செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பைக் காட்டுகின்றனது. அதுபோல, கங்கைச் சமவெளியைச் சார்ந்த கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முந்தைய வெள்ளி முத்திரைக் காசுகள் கிடைப்பதின் மூலம் கங்கைச் சமவெளியுடன் வணிகப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதை உறுதிசெய்ய முடிகிறது.

தமிழர்களின் பெருமை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ள கீழடி அருங்காட்சியகத்தின் 10 சிறப்புகள்!

மேலும், ரோம் நாட்டுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்புக்கு நாட்டு நாணயங்களும், ரோம் நாட்டு ரௌலட்டட் மற்றும் அரிட்டன் வகை பானை ஓடுகளும் வலுசேர்க்கின்றன.

கீழடியில் கிடைக்கப்பெற்ற தொல்பொருட்கள் நகர நாகரிகத்திற்கான கூறுகளை வெளிப்படுத்தியுள்ளது. பண்டைத் தமிழ்ச் சமூகம் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் எழுத்தறிவு பெற்றும், நகர நாகரிகத்துடனும் மேம்பட்ட தமிழ்ச் சமூகமாகவும் விளங்கியதை கீழடி அகழாய்வு முடிவுகள் வாயிலாக அறிவியல் பூர்வமாக தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை நிலை நிறுத்தியுள்ளது.

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் உலகத் தமிழர்கள் பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் 31,000 சதுர அடி பரப்பளவில் 18.43 கோடி ரூபாய் செலவில் கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகத்தில், மதுரையும் கீழடியும், வேளாண்மையும் நீர் மேலாண்மையும், கலம் செய்கோ, ஆடையும் அணிகலன்களும், கடல்வழி வணிகம், வாழ்வியல் எனும் ஆறு பொருண்மைகள் அடிப்படையில் தனித்தனி கட்டடங்களில் தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழர்களின் தொன்மை, பண்பாடு, நாகரிகம், கல்வியறிவு, எழுத்தறிவு, உலகின் பல்வேறு பகுதியுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பு ஆகியவற்றினை பறைசாற்றும் விதத்திலும், அதனை உலகிற்கு வெளிக்கொணரும் வகையிலும், உலகத்தமிழர்கள் பெருமை கொள்ளும் வகையிலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்து, பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, கீழடி அருங்காட்சியகத்தை அமைத்த தொல்லியல் துறை வல்லுநர்கள் மற்றும் சிற்பிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நினைவுப் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

கீழடி அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ள சிறப்பம்சங்கள்:

தமிழ்நாட்டின் தொன்மை மற்றும் வரலாற்றினையும், கீழடியின் முக்கியத்துவத்தையும் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் 15 நிமிட ஒளி-ஒலிக் காட்சி குளிரூட்டப்பட்ட அரங்கில் காட்சிப்படுத்தப்படுகிறது.

வைகை ஆற்றங்கரையில் உள்ள தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை தொடுதிரையில் அறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

கீழடி அருங்காட்சியகத்தில் பொருண்மை சார்ந்து அமைக்கப்பட்ட கட்டடங்களான, வேளாண்மை, இரும்புத் தொழில், நெசவு, மணிகள் தயாரித்தல் கடல்வழி வணிகம், மேம்பட்ட சமூகம் மற்றும் எழுத்தறிவு ஆகியவற்றிற்கு உரிய விளக்கம் இரண்டு நிமிட உயிரூட்டுக்காட்சி (Animation) வாயிலாக காட்சிப்படுத்தப்படுகிறது.

கீழடி அகழாய்வுப் பணிகள், தோற்றம், செயல்பாடுகள் ஆகியவற்றை மெய்நிகர் காட்சி (Virtual Reality Exhibition) வாயிலாக தத்ரூபமாக உணர்ந்து கொள்ளும் வகையில் சிறப்பாக மெய்நிகர் காட்சிக்கூடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சூதுபவள கற்களால் செய்யப்பட்ட மோதிரக்கல்லின் மாதிரி சுழன்று காணும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சங்ககால மக்களின் கடல்சார் வணிகத்தினை பிரதிபலிக்கும் வகையில் சங்ககால கப்பலின் மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது.

அகழாய்வில் அரிதாக கண்டெடுக்கப்பட்டுள்ள தொல்பொருட்கள், மட்பாண்டங்கள், அகழாய்வுக் குழிகள், செங்கற்கட்டுமானங்கள் போன்றவற்றின் மாதிரிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தமிழர்களின் பெருமை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ள கீழடி அருங்காட்சியகத்தின் 10 சிறப்புகள்!

குழந்தைகளும் மாணவர்களும் தமிழர் விளையாட்டுகளை தொடுதிரையில் விளையாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அதிமுக்கியமான தொல்பொருட்கள் முப்பரிமாண வடிவில் (3 Dimension) பொதுமக்கள் உவகையுடன் கண்டு களிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களது பெயரினை தொடுதிரையில் எழுதினால் தமிழி எழுத்தில் தங்களது பெயரைக் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கைச் சீமையின் மரபுசார் உணவு முறைகளை ஊக்குவிக்கும் வகையில் சிறுதானிய உணவு வகைகளை விற்பனை செய்யும் உணவுக்கூடமும் அமைக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories