
உங்களில் ஒருவனான என்னுடைய 70-ஆவது பிறந்தநாளில் கழக உடன்பிறப்புகளான உங்கள் ஒவ்வொருவரின் அன்பான வாழ்த்துகளையும் மனம் உவந்து ஏற்றுக் கொள்வதுடன், திராவிடக் கருத்தியலின் அடிப்படை நோக்கங்களான சமூகநீதி - சமத்துவம் - சுயமரியாதை - மாநில உரிமை இவற்றைத் தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்திய ஒன்றிய அளவில் நிலைநாட்டிடும் ஜனநாயக அறப்பணியில் நாம் அனைவரும் இணைந்து நின்று, தொடர்ந்து உழைத்திட வேண்டும் எனக் குறிப்பிட்டு தி.மு.க உடன்பிறப்புகளுக்கு தி.மு.க தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் பிறந்தநாள் மடல்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பரப்புரை முடித்துத் திரும்பிய நிலையில், அங்கு மக்களிடமிருந்து பெற்ற உளப்பூர்வமான உற்சாக வரவேற்பில் கிடைத்த மகிழ்ச்சியுடன் இதனை எழுதுகிறேன். தேர்தல் பரப்புரையின் கடைசி நாளில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வெற்றி வேட்பாளர் அன்புச் சகோதரர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களுக்கு ஒருநாள் பரப்புரை செய்யும் திட்டத்துடன் ஈரோட்டுக்குப் பயணமானேன்.
முதல்நாள் இரவில் கோவை விமான நிலையத்தில் தரையிறங்கி, ஈரோட்டினை அடையும்போது ஏறத்தாழ இரவு 10.30 மணியாகிவிட்டது. தேர்தல் விதிமுறைகளினால் அந்த நேரத்தில் எந்த நிகழ்ச்சியும் இல்லை என்றாலும், மக்கள் திரண்டு நின்று அன்பைப் பொழிந்தனர்.
பெண்கள் பலர் கைக்குழந்தைகளுடன் நின்று வாழ்த்தினர். ஆண் ஒருவர் தன் குழந்தையுடன் நின்றார். என்னுடைய வாகனத்தின் வேகம் குறைவதைக் கண்டவுடன் ஆவலுடன் ஓடிவந்து, தன் பெண் குழந்தையின் கையில் ஓர் உணவுப் பொட்டலத்தைக் கொடுத்து, என்னிடத் தரச் சொன்னார்.

சென்னையில் பணிகளை முடித்துவிட்டு, கோவை வந்து, அங்கிருந்து ஈரோடு பயணிப்பதால், தொடர்ச்சியான பணிகளுக்கிடையே நான் சாப்பிட்டிருப்பேனோ இல்லையோ என்ற நினைப்பில், fried rice வாங்கிவைத்து, அதைத் தன் மகள் கையால் கொடுக்கச் செய்த அந்தத் தமிழரின் அன்பினில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் உணர்வைக் கண்டேன்!
அவருடைய பெண் குழந்தை என்னிடம் உணவுப் பொட்டலத்தைத் தந்ததுடன், “Advance Happy Birthday தாத்தா” என்று வாழ்த்துகளைப் பகிர்ந்த போது நெகிழ்ந்து போனேன். அப்போது அங்கே கூடியிருந்த பெண்களும் குழந்தைகளும் எனக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளை முன்கூட்டியே தெரிவித்து மகிழ்ந்தனர். என்னுடைய பிறந்தநாளை மக்களின் வாழ்த்துகளால் நினைவுபடுத்திக்கொண்டபோது உள்ளத்தில் உற்சாகம் ஊற்றெடுத்தது.








