தமிழ்நாடு

“50 ஆண்டுகளுக்கு முன்பே குடிசைகள் இல்லா நகரங்களை உருவாக்கியவர் கலைஞர்தான்..” : முதலமைச்சர் பெருமிதம்!

தமிழ்நாடு அரசின் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள், ஐ.நா. ஏற்றுக் கொள்ளப்பட்ட நீடித்த வளர்ச்சி இலக்குகளுடன் பொருந்தி உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“50 ஆண்டுகளுக்கு முன்பே குடிசைகள் இல்லா நகரங்களை உருவாக்கியவர் கலைஞர்தான்..” : முதலமைச்சர் பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (18.02.2023) நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற CREDAI FAIRPRO 2023-ல் கலந்து கொண்டு ஆற்றிய உரையாற்றினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை பின்வருமாறு :-

“ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களை உள்ளடக்கியிருக்கக்கூடிய தென்னிந்தியாவின் மிகப்பெரிய பிராப்பர்ட்டி கண்காட்சி நிகழ்வில், ‘தமிழ்நாடு ரியல் எஸ்டேட் தொலைநோக்குத் திட்டம்-2030’ என்ற அறிமுக நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன், பெருமைப்படுகிறேன்.

இந்தக் கண்காட்சியை மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருக்கிற கிரெடாய் அமைப்பின் தலைவர் மற்றும் நிருவாகிகளுக்கு  என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். 

அனைத்துத் துறையையும் உள்ளடக்கியிருக்கக்கூடிய திராவிட மாடல் வளர்ச்சியைத் தமிழ்நாடு கண்டு வருகிறது. நம்முடைய இலக்கு பெரிதாக இருப்பதால், நம்முடைய முயற்சிகளும் பெரிதாக அமைந்துள்ளன. அந்த வகையில் அனைத்துத் துறைகளிலும் இதுவரை இல்லாத அளவுக்கு மாபெரும் வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்து வருவது கண்கூடாகத் தெரிகிறது.

“50 ஆண்டுகளுக்கு முன்பே குடிசைகள் இல்லா நகரங்களை உருவாக்கியவர் கலைஞர்தான்..” : முதலமைச்சர் பெருமிதம்!

தமிழ்நாட்டை நோக்கி பல்வேறு நிறுவனங்கள் அணிவகுத்து வரக்கூடிய காட்சியே இதற்கு சாட்சியாக அமைந்திருக்கிறது. இப்படி வருகை தரக் கூடிய நிறுவனங்களை வரவேற்கும் அளவுக்கு உள்கட்டமைப்புகளையும் தமிழ்நாடு அரசு உருவாக்கி வருகிறது. புதிய புதிய தொழில் கொள்கைகளையும் அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ரியல் எஸ்டேட் தொலைநோக்குத் திட்டம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

நாகரிக மனிதரின் அடையாளங்களில் முக்கியமானதாக விளங்கும் வீட்டு வசதியினை தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உருவாக்கித் தரக்கூடிய முயற்சியில் இந்த அரசு அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு வருகிறது. ஆகவே முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் துறையில் நடைபெறக்கூடிய இந்த நிகழ்வில் பங்கேற்பதை சிறப்பான ஒன்றாக நான் கருதுகிறேன். 

தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதை என்பது எல்லோருக்குமான வளர்ச்சி என்ற அடிப்படையில் அமைய வேண்டும் என்பதுதான் அரசினுடைய நோக்கம். அந்த வகையில் கல்வி, வேளாண்மை, மருத்துவம், சிறு தொழில், பெண்கள் முன்னேற்றம், சுற்றுச்சூழல் போன்ற எல்லாத் துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறோம். அந்த வகையில் மக்களுக்குத் தேவையான வீட்டு வசதிகளையும், அனைவரும் பெற வேண்டும் என்ற அந்த நோக்கத்தில் கிராமம் மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.


குடிசைகள் இல்லா நகரங்களை உருவாக்க இந்தியாவிலேயே முதன்முறையாக குடிசைவாழ் மக்களின் வீட்டுவசதிக்காக தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தை 50 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கியவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் என்பதை இந்த நேரத்தில் நான் நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

“50 ஆண்டுகளுக்கு முன்பே குடிசைகள் இல்லா நகரங்களை உருவாக்கியவர் கலைஞர்தான்..” : முதலமைச்சர் பெருமிதம்!

அவர் அமைத்து தந்த பாதையில் தான் இன்று நம் மாநிலம் பெருமிதத்தோடு வளர்ந்து வருகிறது. அந்த நோக்கத்துடன் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது இந்த அரசு. 

தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளும் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும், அனைத்துப் பிரச்சினைகளையும் உடனுக்குடன் தீர்த்து வைப்பதாகவும், அதனால் அனைத்து மாநிலங்களுக்கும் தமிழ்நாடு முன்மாதிரியாகத் திகழ்வதாகவும் ‘இந்தியா டுடே’ ஆங்கில இதழ் அண்மையில் பாராட்டு தெரிவித்து கட்டுரை வெளியிட்டிருப்பதை நான் இந்த நேரத்தில் உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்கள், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர், குறைந்த, நடுத்தர வருவாய் மக்கள் மற்றும் உயர் வருவாய்ப் பிரிவு மக்களுக்கு வீட்டு வசதியினை வழங்குவதற்கான பல்வேறு திட்டங்களை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலமாக நம்முடைய கழக அரசு செயல்படுத்தி வருகிறது. 

தமிழ்நாட்டில், 1991-இல் 1 கோடியே 90 இலட்சமாக இருந்த நகர மக்கள் தொகை, 2011-ல் 3 மூன்று கோடியே 49 இலட்சமாக அதிகரித்து, 2031-இல் 5 கோடியே 34 இலட்சம் அளவிற்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி பார்த்தால், தமிழ்நாட்டில் 832 நகரங்கள் உள்ளன. தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 49 விழுக்காடு மக்கள் நகர்ப்புறங்களில் வாழ்ந்து வருகின்றனர்.  இந்தச் சூழ்நிலையில், நகரமயமாதலில் தமிழ்நாடு நாட்டிலேயே முன்னணி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது.

பெருகிவரும் மக்கள் தொகை மற்றும் குடியேற்றம் ஆகியவற்றால் நகரங்களில் ஏற்படும் விரைவான வளர்ச்சியால்தான் பெருநகரங்கள் உருவாகின்றன. இதைக்  கருத்தில்கொண்டுதான், தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை, நகர்ப்புற வளர்ச்சிக்கான பல்வேறு கொள்கைகளை வகுத்து நடைமுறைப்படுத்தி வருவதோடு, பல்வேறு வீட்டு வசதித் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.  

“50 ஆண்டுகளுக்கு முன்பே குடிசைகள் இல்லா நகரங்களை உருவாக்கியவர் கலைஞர்தான்..” : முதலமைச்சர் பெருமிதம்!

தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள், ஐ.நா. அவையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நீடித்த வளர்ச்சி இலக்குகளுடன் (Sustainable Development Goals) பொருந்தி உள்ளது.

“எல்லாருக்கும் எல்லாம்” என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டு, நாங்கள் திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தி வருகிறோம். மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகளில் எந்த ஒரு தனிமனிதரையும் விட்டுவிடக் கூடாது என்பதை கருத்தில்கொண்டு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் கவனம் செலுத்தி, நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.  இந்த அளவுகோலை அனைத்துத் திட்டங்களிலும் பொருத்திப் பார்த்து செயல்படுத்தி வருகிறோம்.

குறிப்பாக - வீட்டு வசதித் துறையில்;

2030-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் போதுமான பாதுகாப்பான, வாங்கும் திறனுக்கேற்ற வீடுகளையும், அடிப்படை வசதிகளையும் அளித்தல் -

  • குடிசைப் பகுதிகளை மேம்படுத்துதல்- 

  • நகரமயமாதலை மேம்படுத்துதல் -

  • நகரங்கள், புறநகர்ப் பகுதிகள் மற்றும் கிராமப் பகுதிகளுக்கு இடையே தொடர்புகளை ஏற்படுத்துதல் - ஆகிய குறிக்கோள்களை வைத்துள்ளோம்.

 தொழில் துறையின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப, அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. விண்ணப்பங்களுக்கு விரைவான அனுமதிகளை வழங்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டிருக்கிறது.

புதிய துணைக்கோள் நகரங்களை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம். வெளிவட்டச் சாலையின் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரசு உறுதிபூண்டுள்ளது. இதனால் வரும் ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் துறையில் மகத்தான வாய்ப்புகள் உருவாகும் என நம்புகிறேன்.

சென்னையில் அதிகரித்து வரும் மக்கள் தொகை, புதிய தொழில் நிறுவனங்கள் வருகை போன்றவற்றால், அவர்களுக்கான வாழ்விடங்கள் மற்றும் நிறுவனங்கள் இயங்குவதற்கான இடங்களின் தேவையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனவே, அதற்கேற்ப வீடுகள் மற்றும் வணிக இடங்களை உருவாக்கி வழங்கிடும் முக்கிய பொறுப்பை கிரெடாய் ஏற்க வேண்டும் என்று முதலமைச்சர் என்கிற முறையில் நான் கேட்டுக் கொள்கிறேன்.

“50 ஆண்டுகளுக்கு முன்பே குடிசைகள் இல்லா நகரங்களை உருவாக்கியவர் கலைஞர்தான்..” : முதலமைச்சர் பெருமிதம்!

தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரையில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம், கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள், நகர் ஊரமைப்பு இயக்ககம் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் ஆகியவற்றின் மூலமாக திட்டங்களைத் தீட்டி, கொள்கைகளை வகுத்து, நகர்ப்புற வளர்ச்சிப் பணிகள் மற்றும் வீட்டு வசதி தேவைகளை பல்லாண்டுகளாக தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வருகிறது.

* கட்டடங்கள் கட்டுவதற்கு, மனைப் பிரிவிற்கு மற்றும் மனைகளுக்கு ஒப்புதல் வழங்குவதை விரைவுபடுத்தும் விதமாக, திட்ட அனுமதி வழங்குவதில் ஒற்றைச்சாளர முறையை செயல்பாட்டுக்குக் கொண்டு வந்திருக்கிறோம். 

* பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம், நகர் ஊரமைப்பு இயக்ககம், நகராட்சி நிருவாக இயக்ககம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் மற்றும் தடையின்மைச் சான்று வழங்கக்கூடிய துறைகள். இந்த ஒற்றைச் சாளர முறையில் இணைத்து, தமிழ்நாட்டில் எந்தப் பகுதியாக இருந்தாலும், பொது மக்கள் திட்ட அனுமதிக்கான ஒப்புதலை எளிதில் பெற வழிவகுக்கப்பட்டுள்ளது.  

* அனைத்தையும் ஆன்லைன் மூலம் வழங்கிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அதன் தொடக்கமாக, DTCP மற்றும் CMDA பகுதிகளில் உள்ள உயரமான கட்டடம் மற்றும் உயரம் குறைந்த கட்டடத்திற்கு ஆன்லைன் மூலமாக திட்ட அனுமதி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  


DTCP-யால் உருவாக்கப்பட்டு, நடைமுறையில் உள்ள மனைப்பிரிவு ஒப்புதலுக்கான ஆன்லைன் முறை, விரைவில் CMDA-விலும் நடைமுறைப்படுத்தப்படும் என்பதை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

மேலும், அறிவித்த அடுத்த கட்ட நடவடிக்கையாக பின்வரும் நடவடிக்கைகளையும், நாங்கள் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறோம் என்பதையும் இந்த நேரத்தில் உங்களுக்கு மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

* காலதாமதத்தைத் தவிர்க்கும் பொருட்டு, பல்வேறு துறைகளுக்கான பணிகளை ஒருங்கிணைத்து, மனை, மனை உட்பிரிவு மற்றும் நில வகைப்படுத்துதலுக்கான செயல்முறை நேரலையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

* அகலம் குறைந்த சாலைகளுக்கு, தற்போது வழங்கப்படும் தளப்பரப்பு குறியீட்டினை (Floor Space Index) அதிகரிக்க வேண்டுமென்று கிரெடாய் அமைப்பினர் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் கோரிக்கையை அரசு உரிய முறையில் பரிசீலித்து, சாதகமான முடிவை அறிவிக்கும் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.  

“50 ஆண்டுகளுக்கு முன்பே குடிசைகள் இல்லா நகரங்களை உருவாக்கியவர் கலைஞர்தான்..” : முதலமைச்சர் பெருமிதம்!

* உயரமான அல்லது உயரம் இல்லாத கட்டடங்களின் தளப்பரப்பு குறியீடானது, சாலையின் அகலத்தைப் பொறுத்து மேற்கொள்ளப்படும். தளப்பரப்பு குறியீட்டினை அதிகரிக்கும் நேர்வில், ஏழை எளியோர் பயன்பெறும் வகையில் மலிவு விலையில் வீடுகளை வழங்கிட இயலும்.  

எனவே, கிரெடாய் உறுப்பினர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொண்டு, மலிவு விலையில் வீடுகளை வழங்கிட முன்வர வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

கட்டுமானப் பணியில் நீங்கள் புதிய தொழில்நுட்பங்களை உலகத்தின் எப்பகுதியில் இருந்தாலும் கொண்டு வந்து அவற்றை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தி, தரமான அதே சமயம் வாங்கத்தக்க விலையில் வீடுகளை வழங்கிட வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.

2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றிடக்கூடிய வகையில், தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ்நாடு அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

அந்த இலட்சிய இலக்கினை அடைவதற்காக, தமிழ்நாட்டின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், பணியாளர்களின் திறனை மேம்படுத்துதல், வருங்காலத் தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பணியாளர்களைத் தயார்ப்படுத்துதல் போன்ற பல முன்னேற்ற நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருவதையும் நீங்கள் நன்றாக அறிவீர்கள்.

துபாயில் நடைபெற்ற ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டாளர்கள் சந்திப்பின்போது, “தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புக்களும், சாத்தியக்கூறுகளும் ஏராளமாக உள்ளன.  தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ரியல் எஸ்டேட் வணிகத்திற்கு, மிகப்பெரிய வாய்ப்புக்கள் இருக்கின்றன. வாருங்கள்! இதற்கான பயணத்தில் இணைந்து நாம் எல்லோரும் பயனடைவோம்” என்று அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களுக்கு நான் அழைப்பு விடுத்திருந்தேன்.  அதை இந்த இனிய வேளையில் உங்களிடையே நான் நினைவு கூற விரும்புகிறேன். அந்த அடிப்படையில், நீங்களும் எங்களோடு இணைந்து பயணித்து, பயனடையுங்கள் என்று உங்களையெல்லாம் நான் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாடு அரசின் சிறப்பான நடவடிக்கைகளுக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்கக்கூடிய நீங்கள், தொடர்ந்து உங்கள் ஆதரவினையும், ஒத்துழைப்பினையும் தரவேண்டும் என்று கேட்டு, இந்த அளவில் என்னுடைய உரையை நிறைவு செய்து கொள்கிறேன். எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories