தமிழ்நாடு

“ஏன் கடலுக்குள் பேனா சின்னம்?”: வெற்று கூச்சலிடும் கூட்டத்திற்கு பாடம் எடுக்கும் எழுத்தாளர் S.K.P கருணா!

கலைஞரின் பேனா நினைவுச் சின்னம் குறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

“ஏன் கடலுக்குள் பேனா சின்னம்?”: வெற்று கூச்சலிடும் கூட்டத்திற்கு  பாடம் எடுக்கும் எழுத்தாளர் S.K.P கருணா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் எழுத்தாற்றலை போற்றும் வகையில், அவருக்கு மெரினா கடற்கரையில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நேற்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், "கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைக்க வேண்டாம். அங்கு நினைவுச் சின்னம் வைத்தால் ஒரு நாள் வந்து நான் உடைப்பேன்" என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சீமானின் இந்த பேச்சுக்கு தி.மு.க தொண்டர்கள், எழுத்தாளர்கள், பொதுமக்கள் என பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் "சீமான் கலைஞரின் பேனா சிலையை உடைக்கும் வரை எங்கள் கைகள் பூப்பறித்துக் கொண்டிருக்குமா" என அமைச்சர் சேகர்பாபு எச்சரித்துள்ளார்.

“ஏன் கடலுக்குள் பேனா சின்னம்?”: வெற்று கூச்சலிடும் கூட்டத்திற்கு  பாடம் எடுக்கும் எழுத்தாளர் S.K.P கருணா!

இந்நிலையில் எழுத்தாளர் எஸ்.கே.பி கருணா, சீமானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது ட்விட்டரில், "நினைவுச் சின்னங்கள் : தமிழ்நாட்டில் ஐயன் வள்ளுவர் முதல் மகாத்மா காந்தி, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், காமராஜர், எம்ஜிஆர் முதல் கி.ராஜநாராயணன் வரை அத்தனை ஆளுமைகளுக்கும் நினைவுச் சின்னங்கள், சிலைகள், பல்கலைக்கழகங்கள், நூலகங்கள் என எண்ணற்ற அடையாளங்களை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. அத்தனையும் அரசு செலவில்தான் நடந்தது.

அமைத்தவர் எங்கள் தலைவர் கலைஞர். அண்ணல் அம்பேத்கர் பெயரில் பல்கலை தொடங்க அவர் பிறந்த மஹாராஷ்டிராவிலேயே முடியாமல் தவித்தபோது, இங்கே தமிழ்நாட்டில் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு அண்ணலின் பெயரை சூட்டியவர் தலைவர் கலைஞர்.

அண்ணா என்றால் நூலகம், பெரியார் என்றால் பல்கலைகழகம், காமராஜர் என்றால் கல்வி தினம், எம்.ஜி.ஆர் என்றால் ஐந்து நாளும் சத்துணவில் முட்டை என அவரவர் இயல்புகேற்ப அடையாளம் இட்டு இனி வரும் காலமெல்லாம் அவர்களை மக்கள் இப்படிதான் நினைவு கூற வேண்டும் என வழி காட்டியவர் கலைஞர். தன்னை அழிப்பேன் என சவடால் விட்டவர்களுக்கும் அவர்தான் அரசு மரியாதையுடன் இறுதி ஊர்வலம் நடத்தினார். கலைஞர் தமிழ்நாட்டின் தனிப்பெரும் அடையாளம். அரசியல் எதிரிகளும் மதிக்கக்கூடிய ஆற்றலை கொண்டவர்.

“ஏன் கடலுக்குள் பேனா சின்னம்?”: வெற்று கூச்சலிடும் கூட்டத்திற்கு  பாடம் எடுக்கும் எழுத்தாளர் S.K.P கருணா!

அவருக்கு வாக்களிக்காத மக்களும் கூட அவரை வணங்கத் தவறுவதில்லை. காரணம் தனக்கு வாக்களிக்காதவர்களுக்கும் பாரபட்சமின்றி திட்டங்களைக் கொண்டு சேர்த்தார். கலைஞர் மரணமும், அன்றைய நிகழ்வுகளுமே ஒரு வரலாற்றுச் சாதனை. யாருடைய தயவாலும் அவர் மெரினாவில் புதைக்கப்பட வில்லை. கலைஞர் எனும் தனி மனிதனின் மாபெரும் ஆளுமையைக் கருத்தில் கொண்டு, சரித்திரத்தில் முதன்முறையாக நள்ளிரவில் உயர்நீதிமன்றம் கூடி அந்த இடத்தை அளித்தது. கலைஞர் அங்கே உறைந்திருப்பது அவர் சட்டப்படி பெற்ற உரிமை. எவருடைய கருணையாலும் அல்ல! இது கலைஞரின் அரசு.

கலைஞரின் நினைவுச் சின்னத்தை சட்ட அனுமதியுடன் அமைத்தே தீருவோம். உங்கள் தலைவருக்கு சிலை வைக்க மக்கள் பணம் 80 கோடி செலவிடலாமா என கேட்கும் மேதாவிகளே! சில ஆண்டுகளுக்கு முன் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வந்ததே! நினைவிருக்கா? அதற்காக அரசு செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா? 120 கோடி ரூபாய். எதே! 120 கோடியா? அந்த பணத்தில் உருவான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நினைவு நூலகம் எங்கே? விளையாட்டு அரங்கம் எங்கே? மருத்துவமனைகள் எங்கே? என தேடுகிறீர்களா? கிடைக்காது.

5 கோடியில் அவரது நினைவிடம் முன்பு ஒரு நினைவு வளைவு. மற்ற பணமெல்லாம் மாவட்டத்துக்கு ஒரு நூறாண்டு நினைவுக் கூட்டம் போட்டு தன்னை எம்.ஜி.ஆரின் வாரிசாக எடப்பாடி முடி சூடிக் கொண்டார் என்பதுதான் வரலாறு. ஒவ்வொரு மாவட்டத்திலும் பந்தல் பில் மட்டும் 1.15 கோடி ஆனதாம்! இதை மறுப்பவர்கள் முன் வரலாம். இப்போது கலைஞர் நினைவிடத்துக்கு செலவு கணக்கு கேட்போர் எல்லாம் எம்.ஜி.ஆர் நூறாண்டு கொண்டாட்டம் என வீண் விரயம் செய்தபோது பொத்திக் கொண்டு பார்த்தவர்கள்தான். சரி.. மற்றவர்களுக்காக விளக்குகிறேன்.

“ஏன் கடலுக்குள் பேனா சின்னம்?”: வெற்று கூச்சலிடும் கூட்டத்திற்கு  பாடம் எடுக்கும் எழுத்தாளர் S.K.P கருணா!

ஏன் கலைஞர் நினைவிடத்தில் நினைவுச் சின்னம்?

கலைஞர் என்பவர் ஒரு எழுத்தாளன் நாடாள முடியும் என நிறுவியவர். வாழ்நாள் எல்லாம் அரசியல், திரைப்படம், நாடகம், இலக்கியம், இலக்கணம் என எழுதிக் குவித்தவர். கல்விதான் சமத்துவமான சமூகத்தை உருவாக்கும் என அறிந்து கல்விப் புரட்சியை ஏற்படுத்தியவர். அவரது நினைவாக 100 அடி உயரத்தில் அவரது உருவச் சிலையை வைக்கவில்லை.

மாறாக ஒரு பேனாவை வைக்கிறது அரசு. அந்தப் பேனா எப்போதும் கலைஞரை மட்டுமல்ல! தமிழ்நாடு என்பது ஓர் அறிவுச் சமூகம் என்பதையும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.

ஏன் மெரினா? ஏன் கடலுக்குள்?

பல மாநிலச் சுற்றுலாப் பயணிகள் வந்து போகும் இடம். அவர்கள் நம்மை மதிப்பிடும் அளவுகோலாக பேனா. கடலுக்குள் 300 மீட்டர் நடைபாலம் அமைப்பதால் மக்களுக்கு புதிய அனுபவம், உற்சாகம் கிடைக்கும். சுற்றுலாப் பயணிகள் வருகை பல மடங்கு அதிகரிக்கும். எனவேதான் உலகெங்கும் நாடுகளில் கண்ணாடி நடைபாலங்கள் அமைப்பப்பட்டு வருகிறது.

மேலும், அந்தப் பகுதி மக்களின் கருத்தை அறியதான் கருத்துக் கேட்புக் கூட்டமே தவிர எவருடைய அரசியல் முழக்கங்களுக்கும் ஆன மேடை அல்ல அது. மெரினா பகுதி வாழ் மக்களின் கருத்தே இங்கு முக்கியம். சுற்றுலா பயணிகள் அதிகரிப்பதின் மூலம் அவர்களுக்கும் அதில் பலனுண்டு.

மற்றத் தலைவர்களுக்கு மக்கள் பணத்தில் பொது இடங்களில் நினைவுச் சின்னங்கள், மணி மண்டபங்கள் எழுப்பப்பட்ட பொதெல்லாம் வராத ஆத்திரம் கலைஞருக்கு எனும் போது மட்டும் பொத்துக் கொண்டு வருகின்றது என்றால் அது அவர்களின் அடிமனதில் இருக்கும் சாதிய வன்மத்தை தவிர வேறில்லை. இவைகளை எதிர்கொள்ள திமுகவுக்கும் தெரியும். திமுக தொண்டனுக்கும் தெரியும்.

அன்பான எதிரிகளுக்கு ஓர் இறுதி வேண்டுகோள்! கொஞ்சம் கதறலை மீதம் வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து கலைஞர் நூற்றாண்டு வரப் போகிறது. இந்த ஒரு நினைவுச் சின்னம் மட்டுமல்ல! தமிழ்நாடு முழுக்க நூலகங்களாக, மருத்துவ மனைகளாக, விளையாட்டு அரங்களாக, மேம்பாலங்களாக, பேருந்து நிலையங்களாக மெட்ரோ பாதைகளாக, எண்ணற்ற நூல்களாக காணும் இடமெல்லாம் எங்கள் கலைஞரின் பெயரைச் சொல்லப் போகிறது.

மறைந்த பின்பும் மக்கள பயன்பாட்டுச் சின்னங்களாக என்றும் வாழப் போகிறார் எங்கள் கலைஞர். இதை செய்வது நன்றியுள்ள தமிழ்ச் சமூகத்தின் கடமை. இந்த அரசு செய்யும். இதைக் காணவே தனது ஒவ்வொரு ரத்த அணுக்களிலும் கலைஞரைச் சுமந்து கொண்டிருக்கிறான் திமுக தொண்டன்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories