தமிழ்நாடு

வீரத்துடனும் விவேகத்துடன் நடக்கும் திராவிட மாடல் ஆட்சி: பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

வீரத்துடனும், விவேகத்துடன் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

வீரத்துடனும் விவேகத்துடன் நடக்கும் திராவிட மாடல் ஆட்சி: பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய பதிலுரை:-

கடல்கண்டு மலைகண்டு பயன் கொண்ட தமிழ்நாடு வாழ்க!

களங்கண்டு கலை கண்டு கவின் கொண்ட தமிழ்நாடு வாழ்க!

உடல்கொண்டு உரங்கொண்டு உயர்வாண்ட தமிழ்நாடு வாழ்க!

உளமாண்டு உலகாண்டு புகழாண்ட தமிழ்நாடு வாழ்க! வாழ்கவே! என்று தாய்த் தமிழ்நாட்டை வாழ்த்தி, பேரவைத் தலைவர் அவர்களுக்கும், இந்த மாமன்ற உறுப்பினர்களுக்கும் என்னுடைய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களையும், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களையும் கூறி, எனது உரையை நான் தொடங்குகிறேன்.

தாய்த் தமிழ்நாட்டைக் காக்க ஒப்படைத்துக் கொண்டு தூங்காமை, கல்வி, துணிவுடமை ஆகிய மூன்றையும் முறைமேற்கொண்டு முறைசெய்து வெல்லும் திராவிட மாடல் ஆட்சியானது நடைபெற்று வரும் வேளையில் மகிழ்ச்சியான மனநிலையில் இந்த மாமன்றத்தில் நான் கம்பீரமாக நிற்கிறேன்.

சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகளை உள்ளடக்கிய திராவிட மாடல் ஆட்சியானது வீரத்துடனும், விவேகத்துடன் நடைபெற்று வருகிறது என்பதை தமிழ்நாடு மட்டுமல்ல; இந்தியத் துணைக்கண்டமே இப்போது உணர்ந்துவிட்டது.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், சமத்துவப் போராளி அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், அறிஞர்களுக்கெல்லாம் பேரறிஞர் அண்ணா, எங்களை எல்லாம் ஆளாக்கி அழகு பார்த்த நவீன தமிழ்நாட்டின் சிற்பி முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர், இவர்களது கொள்கைகளையும், இலட்சியங்களையும் கொண்டு செலுத்துவதற்காக உருவாக்கப்பட்டதே இந்த திராவிட மாடல் ஆட்சி!

இருபது மாதங்களைக் கடந்திருக்கிறது கழக அரசு. அதற்குள் இமாலய சாதனைகளைச் செய்திருக்கிறோம். நாம் கடந்துள்ள காலம் குறைவுதான். ஆனால் ஆற்றியுள்ள பணிகள் அதிகம்.

வீரத்துடனும் விவேகத்துடன் நடக்கும் திராவிட மாடல் ஆட்சி: பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

அதேநேரத்தில், இந்த இருபது மாத காலம் போனதே தெரியவில்லை. இலக்கினை அடைவதை நோக்கமாகக் கொண்டு நாம் செயல்பட்டோம். மக்களின் நலன் மட்டுமே நம்முடைய சிந்தையில் நின்றது; அதுவே மக்களின் மனதை வென்றது.

சமூகநீதி - சமத்துவம் - சுயமரியாதை - மொழிப்பற்று - இன உரிமை - மாநில சுயாட்சி ஆகிய தத்துவங்களின் அடித்தளத்தில் எழுப்பப்பட்ட பலம் வாய்ந்த இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். அரசியல் களத்தில் எந்த நோக்கத்தை விதைத்ததோ, அதே நோக்கம் கொண்ட மக்களாட்சியை எந்தவித சமரசத்துக்கும் இடமின்றி கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக நாங்கள் நடத்தி வருகிறோம்.

தமிழ்நாட்டின் மேன்மைக்கும் வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் உயர்வுக்கும் வழிவகுக்கும் 'திராவிட மாடல்' கொள்கையை உருவாக்கி அதன் தடத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி செயல்பட்டு வருகிறது. செயல்பட்டு வருகிறது என்பதை விட - திராவிட மாடல் ஆட்சியானது வெற்றி பெற்று வருகிறது என்பதுதான் சரியானதாகும்.

'எல்லார்க்கும் எல்லாம்' என்ற அடிப்படையிலேயே தமிழ்நாட்டினுடைய வளர்ச்சியானது அமைய வேண்டும் என்று நாம் திட்டமிட்டோம். தொழில் வளர்ச்சி - சமூக மாற்றம் - கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும்; அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் என்று விரும்பினோம். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று திட்டமிட்டோம்.

வீரத்துடனும் விவேகத்துடன் நடக்கும் திராவிட மாடல் ஆட்சி: பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

பொருளாதாரம் - கல்வி - சமூகம் - சிந்தனை - செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒருசேர வளர வேண்டும். அதுதான் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் காணவிரும்பிய வளர்ச்சி. அது தான் திராவிட மாடல் வளர்ச்சி! அதுதான் தமிழ்நாடு காணும் தனித்துவமான வளர்ச்சி. அத்தகைய திராவிட மாடல் சிகரத்தை நோக்கிய பயணமானது ஒரு சரித்திரப் பயணமாக - ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பதை இந்த மாமன்றத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதில் நான் பெருமை அடைகிறேன்.

கடந்த 9 ஆம் தேதியன்று மாண்புமிகு ஆளுநர் அவர்கள் இந்த மாமன்றத்தில் 2023-2024 ஆம் ஆண்டின் தொடக்கத்துக்கான தொடக்கவுரையை ஆற்றினார்கள். தமிழ்நாடு அரசின் பன்முகக் கூறுகளை விளக்கியும், தமிழ்நாடு அரசு எந்த வகையில் எல்லாம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்பதைப் பாராட்டியும், எதிர்காலத்தில் செயல்படுத்த இருக்கக்கூடிய முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து சுருக்கமாக அறிவித்தும் தனது உரையை இந்த மாமன்றத்துக்கு ஆற்றினார்கள்.

அன்றையதினம் நிகழ்ந்தவற்றை மீண்டும் பேசி அரசியலாக்க நான் விரும்பவில்லை. அதே நேரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியின் மாண்பைக் காக்கவும், மக்கள் எங்களுக்கு வழங்கிய ஆட்சியின் வலிமையை உணர்த்தவும், நூற்றாண்டைக் கடந்த இந்த சட்டமன்றத்தின் விழுமியங்களைப் போற்றவும் நான் என்னுடைய சக்தியை மீறியும் செயல்படுவேன் என்பதை இந்த மாமன்றமும் என்னை இச்சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுத்து அனுப்பிய தமிழ்ப் பெருமக்களும் நன்கு அறிவார்கள்.

பேரவைத் தலைவர் அவர்களே,

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை

ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்

அலைகடல் ஓய்வதில்லை

செந்தமிழே நீ பகைவென்று முடிசூடிவா

மயிலாட வான்கோழி தடை செய்வதோ

மாங்குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ?

முயர்கூட்டம் சிங்கத்தின் எதிர்நிற்பதோ

அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ ?

உயிருக்கு நிகர் இந்த நாடு அல்லவோ

அதன் உரிமைக்கு உரியவர்கள் நாம் அல்லவோ?

என்ற திராவிட இயக்கக் கவிஞர் முத்துக்கூத்தன் அவர்களின் கவிதையை நாம் என்றும் நினைவில் கொண்டு, பெருமித நடைபோடுவோம்.

தமிழ்காக்க, தமிழர் நலன் காக்க, தமிழ்நாட்டின் மானம் காக்க என்றும் உழைக்கும் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மகன் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் (மேசையைத் தட்டும் ஒலி) என்பதை மெய்ப்பித்துக் காட்டும் நாளாக, அன்றைய தினம் அமைந்திருந்ததே தவிர வேறல்ல.

பேரவைத் தலைவர் அவர்களே, ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் இம்மாமன்றத்துக்கு வருகை தந்து உரையாற்றிய மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு இந்த அரசின் சார்பிலான நன்றியை இந்த மாமன்றத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நாட்காட்டியில் நகரும் ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டுக்கு நன்மை தரும் நாளாக உயர்ந்து வருகிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள். அதற்காக அவர்கள் பாராட்டி வருகிறார்கள். 'கடிகாரம் ஓடும் முன் ஓடு' என்று புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எழுதினார்.

அதேபோலத்தான் நாங்கள் வேகமாகவும் - அதே நேரத்தில் விவேகமாகவும் செயல்பட்டு வருகிறோம். ‘நான்’ என்று சொல்லும் போது என்னை மட்டுமல்ல; அமைச்சரவையை மட்டுமல்ல; நமது சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் உள்ளடக்கி ஒட்டுமொத்தமாகச் சேர்த்துத்தான் நான் சொல்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

banner

Related Stories

Related Stories