
முரசொலி தலையங்கம்!
12-02-2026
விவசாயிகள் விரோத ... தொழிலாளர் விரோத..
ஒன்றிய பா.ஜ.க. அரசின் விவசாயிகள் விரோத.. தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து பிப்ரவரி 12 அன்று தொழிற்சங்க அமைப்புகள் நடத்தும் வேலைநிறுத்தத்துக்கு திராவிட முன்னேற்றக் கழகம் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு திராவிட முன்னேற்றக் கழகம் போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது என்று தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
மத்திய தொழிற்சங்கங்கள், தொழில்வாரி தொழிற்சங்கங்கள், துறைவாரியான தொழிற்சங்க சம்மேளனங்கள், விவசாய அமைப்புகள் இணைந்துஒன்றிய அரசின் விவசாயிகள் விரோத, தொழிலாளர் விரோத, ஜனநாயக விரோத மற்றும் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து இந்த வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசாங்கம் தன்னிச்சையாக மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமலும், தொழிற்சங்கங்களோடு முறையாக கலந்து ஆலோசிக்காமலும், நாடாளுமன்றத்தில் விவாதமின்றியே நிறைவேற்றிய நான்கு தொகுப்புச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பது மிக முக்கியமான கோரிக்கை ஆகும்.
தொழிலுறவு சட்டத் தொகுப்பு 2000, சம்பளத் தொகுப்பு 2019, பணித்தலப் பாதுகாப்பு மற்றும் பணி நிலைமைகள் சட்டத் தொகுப்பு 2020, சமூகப் பாதுகாப்பு தொகுப்பு 2020 – என்ற நான்கும் தொழிலாளர்களின் ஊதியப் பாதுகாப்பு, வேலைப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு ஆகிய மூன்றையும் கேள்விக்குறி ஆக்குகிறது. இவை மக்கள் விரோத, ஜனநாயக விரோத, சமூக விரோதச் சட்டங்கள் ஆகும்.
தொழிலாளர்கள் 100 ஆண்டு காலமாகப் போராடிப் பெற்ற உரிமைகளை பறித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பெருநிறுவனங்களுக்கும் ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது பா.ஜ.க. அரசு. மின்சார சட்டத்தை திருத்துவதன் மூலம் உற்பத்தி பகிர்மானம் போன்றவைகள் தனியார் மயமாக்கும் அபாயம் உள்ளதை இப்போராட்டம் வலியுறுத்திச் சொல்கிறது.
மோடி அரசு மூன்று விவசாய சட்டங்களைக் கொண்டு வந்த போது நாட்டின் ஒட்டு மொத்த விவசாய சமூகமும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடியது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மனமில்லாமல் அதனை திரும்பப் பெற்றார்கள். இப்போதும் ஏதாவது ஒரு வழியில் அதனை அமல்படுத்த நேரம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது பா.ஜ.க. அரசு.
விவசாயிகளின் விளைபொருளுக்கு நியாயமான விலை வழங்குவோம் என்ற உத்தரவாதத்தை இதுவரை ஒன்றிய பா.ஜ.க. அரசு நிறைவேற்றவில்லை. விதைகள் சட்டத்தை திருத்தம் செய்து சிறு - குறு விவசாயிகள் கைவசம் உள்ள விதைகளை அழிக்க நினைக்கிறார்கள்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை பெயர் மாற்றம் செய்ததோடு அதன் உண்மையான நோக்கத்தைச் சிதைத்துவிட்டார்கள். ஒன்றிய அரசின் பொறுப்பைத் தட்டிக் கழித்து மாநிலங்களின் நிதிச் சுமையை கூடுதலாக்கும் வகையில் இதனை மாற்றிவிட்டார்கள்.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே முன்மொழியப்பட்ட இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயத்தை அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு முழுவதுமாக சரணடையச் செய்வதாகும். 45 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை அமெரிக்காவிடமிருந்து வரி இல்லாமல் இறக்குமதி செய்வது என அமெரிக்கா - இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இந்திய இறையாண்மை, விவசாயம், பொருளாதாரத்தில் மிகப்பெரும் பாதிப்பை உண்டாக்கும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் திருத்தச் சட்டம், வனப் பாதுகாப்பு திருத்தச் சட்டம், 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் திருத்த விதிகள் ஆகிய அனைத்தும் விவசாயிகள், பழங்குடியினருக்குமட்டுமின்றி நாட்டு மக்கள் அனைவருக்கும் விரோதமானவை ஆகும். இன்சூரன்ஸ் துறையில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது.
டங்ஸ்டன் கனிமத் தொகுதியை ஏலத்திற்கு அறிவித்தது பா.ஜ.க. அரசு. மக்கள் எதிர்ப்பு, தமிழ்நாடு அரசின் எதிர்ப்பு ஆகியவை காரணமாக அந்த ஏலத்தை திரும்பப் பெற்றார்கள்.
அதிக ஆபத்தான அணுசக்தி உற்பத்தித் துறையில், லாப நோக்கத்துடன் செயல்படும் தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் நுழைவதற்கு மோடி அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக "இந்தியாவை மாற்றுவதற்கான அணுசக்தியின் நிலையான பயன்பாடு மற்றும் மேம்பாட்டுச் சட்டம் (SHANTI)” என்ற ஒன்றைக் கொண்டு வந்துள்ளது.
வரைவு விதை மசோதா, மின்சார திருத்த மசோதா மற்றும் SHANTI சட்டம் ஆகியவற்றைத் திரும்பப் பெற வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை (MGNREGA) மீட்டெடுத்து 100 நாட்களை முழுமையாகக் கிடைக்கச் செய்ய வேண்டும். 'விக்ஸித் பாரத் – ரோஜ்கார் அவுர் அஜீவிகா மிஷன் (கிராமின்) சட்டம், 2025' ஐ ரத்து செய்ய வேண்டும்.
இதுபோன்ற தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோதச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தத்துக்கு தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றன.
பா.ஜ.க. அரசு என்பது கார்ப்பரேட்டுகளுக்காக, கார்ப்பரேட்டுகளால் ஆளப்படும் கார்ப்பரேட் அரசாங்கம். இவர்களுக்கு தொழிலாளர்களோ, உழவர்களோ, பொதுவாக மக்களோ உழைப்பை மட்டும் கொடுக்க வேண்டியவர்களே தவிர, உரிமை படைத்தவர்கள் அல்ல. மக்களின் உழைப்பை, கார்ப்பரேட்டுகளுக்கு கரன்சி ஆக்கும் ஒற்றைச் செயலை மட்டுமே ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்து வருகிறது. அவர்களது அனைத்து நடவடிக்கைகளும் இதனை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே நடக்கின்றன.






