மு.க.ஸ்டாலின்

உங்களது அறிவு கல்வி அறிவாக- பகுத்தறிவாக வளர வேண்டும்: மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

உங்களது அறிவு கல்வி அறிவாக - பகுத்தறிவாக வளர வேண்டும் என கலை திருவிழாவில் பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் வைத்துள்ளார்.

உங்களது அறிவு கல்வி அறிவாக- பகுத்தறிவாக வளர வேண்டும்:  மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (12.1.2023) சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில், பள்ளிக்கல்வித் துறையின் கலை திருவிழாவில் கலந்து கொண்டு ஆற்றிய உரை:-

தமிழ்நாடு அரசினுடைய பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடத்தப்பட்டிருக்கக்கூடிய மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிவாகை சூடிய ஒவ்வொரு மாணவ, மாணவியர்க்கும் முதலில் என்னுடைய அன்பான வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நீங்கள் பெற்றுள்ள வெற்றி என்பது சாதாரண வெற்றி அல்ல. பல்லாயிரக்கணக்கானவர்களுடன் நீங்கள் போட்டி போட்டு வெற்றி பெற்றிருக்கிறீர்கள்.

இந்த வெற்றிக்கு உங்களுடைய துணிச்சலும், தன்னம்பிக்கையும், அறிவாற்றலும் அடிப்படை காரணம். இதை வாழ்நாள் முழுமைக்கும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உங்களை நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

ஏடு தூக்கிப் பள்ளியில்

இன்று பயிலும் பையனே

நாடுகாக்கும் தலைவனாய்

நாளை விளங்கப் போகிறாய்” என்று எழுதினார் குழந்தைக்

கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்கள்.

அந்த வகையில் நாளைய தமிழ்நாட்டைக் காக்கும் இலட்சியவாதிகளாக நீங்கள் இருக்கப் போகிறீர்கள். ஆக, அதற்காக நீங்கள் அடைந்திருக்கக்கூடிய இந்த வெற்றியை முதற்கட்ட வெற்றியாக இதனை நீங்கள் கருதிட வேண்டும்.

உங்களது அறிவு கல்வி அறிவாக- பகுத்தறிவாக வளர வேண்டும்:  மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் இந்த கலைவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கூடம், பாடப்புத்தகம், வகுப்பறை ஆகியவற்றைத் தாண்டி இத்துறையானது பல்வேறு வகைகளிலும் மாணவர்களின் அறிவுத்திறனையும், கலைத்திறனையும் ஊக்கப்படுத்தி வருகிறது.

13 ஆயிரத்து 210 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 6 முதல் 12-ஆம் வகுப்புவரை பயிலக்கூடிய 28 லட்சத்து 53 ஆயிரத்து 882 மாணவர்களை, 206 வகையிலான போட்டிகளில் பங்கேற்கச் செய்து, மாபெரும் விழாவாக, இதை உருவாக்கி இருக்கக்கூடிய இந்தத் துறையை பொறுப்பேற்றுக் கொண்டிருக்கக்கூடிய மாண்புமிகு அமைச்சர் தம்பி அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை நான் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். அதேபோல் அவருக்கு துணை நின்றிருக்கக்கூடிய இந்தத் துறையினுடைய உயர் அதிகாரிகள், அலுவலர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அவர்களுக்கெல்லாம் எனது மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

பாடம், பாடப்புத்தகம், வகுப்பறை ஆகியவற்றைத் தாண்டி, கற்பித்தல் வழிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை பயன்படுத்தி வருகிறது. நமது மரபார்ந்த கலைகளை மாணவர்கள் நெஞ்சில் விதைப்பதை நான் பாராட்டுகிறேன்.

பள்ளிக் கல்வியில் கலை மற்றும் பண்பாட்டை ஒருங்கிணைப்பதால் மாணவர்களின் சிந்தனைத் திறன் அதிகரிக்கும், விரிவடையும். பிற பாடங்களை கற்பதால் முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கும். இதனால் தன்னம்பிக்கை பெறுவார்கள்.

6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவ, மாணவியருக்கு கலைப் பயிற்சி அளிக்கவும் கல்வியில் கலைகளை கொணரும் வகையில், கால அட்டவணை உருவாக்கி கலை அரங்கமாக செயல்படுத்தி வருகிறது.

உங்களது அறிவு கல்வி அறிவாக- பகுத்தறிவாக வளர வேண்டும்:  மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

கலையில் ஆர்வமுள்ள ஒரு ஆசிரியரால் ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பும் மேற்கொள்ளப்படுகிறது. மாநில அளவில் கருத்தாளர்களின் பங்கெடுப்புடன் அனைத்துக் கலை வடிவங்களுக்கும் கலைத்திட்டம் உருவாக்கப்பட்டு, அதன் அடிப்படையில், இந்தத் திட்டம் பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில்தான் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் நீங்கள் பங்கெடுத்து பரிசுகளைப் பெற்றுள்ளீர்கள்.

கலையரசன், கலையரசி பட்டமும் அரசு சார்பில் வழங்கப்படுகிறது. முதல் 20 இடங்களைப் பெறக்கூடிய மாணவர்களை வெளிநாட்டிற்கு கல்விச்சுற்றுலா அழைத்துச்செல்கிறோம். வாழ்வின் கடினமான நேரங்களில் நாம் கற்ற கலைகளை மனதிற்கு மாமருந்து என்பதனை உணர்ந்து, மாணவர்களின் கல்வித்திறன்களை, கற்பனைத் திறனை ஊக்கப்படுத்தும் வகையில் கலைத் திருவிழாவினை உருவாக்கியிருக்கும் பள்ளிக் கல்வித்துறைக்கு என்னுடைய பாராட்டுக்களை நான் மீண்டும், மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவர்களின் கலை ஆர்வத்தை ஊக்குவிப்பது, கற்பனைத் திறனை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைவடிவங்கள் மற்றும் பண்பாடு பற்றிய பெருமிதத்தையும் மாணவர்களிடையே சேர்க்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை செயல்பட்டு வருகிறது.

கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் பள்ளிக் கல்வித் துறையானது எத்தனையோ மகத்தான முன்னெடுப்புகளைச் செய்திருக்கிறது.

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு 36 ஆயிரத்து 895 கோடி ரூபாய் நிதியை பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கியுள்ளதுடன் அரசுப் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

இல்லம் தேடிக் கல்வி

எனது கனவுத் திட்டமான ‘நான் முதல்வன்’

பள்ளி மேலாண்மைக் குழுக்கள்

எண்ணும் எழுத்தும்

ஆகிய திட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களிடையே புது எழுச்சியை உருவாக்கியுள்ளது.

மருத்துவம், பொறியியல் போன்ற தொழில் படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், அவர்களது கல்வி, விடுதிக் கட்டணத்தையும் அரசே ஏற்றுக்கொண்டுள்ளது.

உங்களது அறிவு கல்வி அறிவாக- பகுத்தறிவாக வளர வேண்டும்:  மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கக்கூடிய புதுமைப் பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பல்லாயிரம் மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள்.

சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து ஆயத்தப் பயிற்சிகள் வழங்கப்பட்டு, உரிய மருத்துவ சிகிச்சை, உபகரணங்கள் வழங்கி தக்க வகுப்புகளில் சேர்க்கப்பட்டு, தொடர்ந்து முழுமையான கல்வி பெற ஆலோசனை வழங்கப்படுகிறது.

அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளிலும், உயர் தொழில் கல்வி ஆய்வகங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் (Smart Class Rooms) அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாணவர்களுக்குக் கல்வி தொடர்பான தகவல்களையும், வழிகாட்டுதல்களையும் வழங்கக்கூடிய நோக்கத்தோடு 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டணமில்லா தொலைபேசிச் சேவை 14417 ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு 11, 12-ஆம் வகுப்புகளில் சிறப்புப் பயிற்சி அளிப்பதற்கான மாதிரிப் பள்ளித் திட்டம் நடைபெற்று வருகிறது.

அரசுப் பள்ளி மாணவர்களிடையே பல்கோண திறன்களை வளர்க்கக்கூடிய நோக்கில், பள்ளிகளில் சிறார் திரைப்படம் திரையிடுதல் சிறப்புமிக்க புதுமை முயற்சி சென்ற ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அரசுப்பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவர்களிடையே அறிவியல் மற்றும் கணித கருத்துக்கள் குறித்து சிந்திக்கும் ஆர்வத்தை உருவாக்க, 13 ஆயிரத்து 210 அரசுப் பள்ளிகளில் ‘வானவில் மன்றம்’ தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி ஏராளமான திட்டங்களை நமது அரசு செயல்படுத்தி வருகிறது.

ஒரு போட்டியில் கலந்து கொண்டோம் - வெற்றி பெற்றோம் - பரிசு பெற்றோம் என்று இல்லாமல் தொடர்ச்சியாக நீங்கள் போட்டிகளில் பங்கெடுங்கள்.

படிப்பு முடிந்ததும் வேலைக்கு போய்விட்டோம், திருமணம் நடந்துவிட்டது, கை நிறைய சம்பாதிக்கிறோம் என்பதில் மட்டும் நிறைவடைந்து விடாமல் கலைத் தொண்டையும் இத்துடன் சேர்த்து அனைவரும் தொடர வேண்டும்.

உங்களது அறிவு கலை அறிவாக, கல்வி அறிவாக, பகுத்தறிவாக வளர வேண்டும், வளர வேண்டும் என்று உங்கள் அத்தனை பேரையும் நான் மனதார மீண்டும் ஒரு முறை வாழ்த்தி விடை பெறுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

banner

Related Stories

Related Stories