தமிழ்நாடு

“இது கலைஞர் வழி நடக்கக்கூடிய அரசு.. கலைஞர்களுக்கான அரசு” : சென்னை சங்கமம் விழாவில் முதல்வர் பேச்சு!

திராவிட இயக்கம் தான் கலை வடிவங்கள் மூலமாக சாமானிய மக்கள் வாழ்க்கையில் அனுபவித்த வலியைப் பேசியது.” என சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“இது கலைஞர் வழி நடக்கக்கூடிய அரசு.. கலைஞர்களுக்கான அரசு” : சென்னை சங்கமம் விழாவில் முதல்வர் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (13.1.2023) சென்னை, தீவுத்திடலில், தமிழ் மண்ணின் கலைகளைக் களிப்போடு கொண்டாடும் வகையில் சென்னை மாநகரில் 40 வகையான கலைகளுடன் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் நடத்தப்படும் “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா”-வை தொடங்கி வைத்து, கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.

சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவில், நையாண்டி மேளம், கரகாட்டம், பறையாட்டம், புரவியாட்டம், காவடியாட்டம், புலியாட்டம், தோடர் நடனம், மயிலாட்டம், சிலம்பாட்டம், வில்லுப்பாட்டு, நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளிட்ட 40 வகையான கலைகளுடன் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

“சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா”-வை தொடங்கி வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் ஆற்றிய உரை பின்வருமாறு :-

தமிழ்நாட்டுடைய கலையும், கலைஞர்களும் தலைநகர் சென்னையிலே சங்கமிக்கக்கூடிய வகையில் இந்த “சென்னை சங்கமம்” நிகழ்ச்சியை தொடங்கி வைக்கக்கூடிய ஒரு வாய்ப்பை பெற்றமைக்கு நான் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன். வாய்ப்பினை உருவாக்கித் தந்திருக்கக்கூடிய அனைவருக்கும் முதலில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

“இது கலைஞர் வழி நடக்கக்கூடிய அரசு.. கலைஞர்களுக்கான அரசு” : சென்னை சங்கமம் விழாவில் முதல்வர் பேச்சு!

ஒரு திருவிழாவில் எப்படி எல்லோரும் மகிழ்ச்சியாகவும், குதூகல மனநிலையோடு இருப்பார்களோ அப்படித்தான் நம்முடைய நம்ம ஊரு திருவிழாவிலும் நாம் எல்லோரும் கலந்துகொண்டு இன்றைக்கு மகிழ்ச்சியாக இருந்து கொண்டிருக்கிறோம்.

தொடர்ந்து சட்டமன்றம், அரசு நிகழ்ச்சிகள், ஆய்வுகள், பல்வேறு நிகழ்ச்சிகள் என்று தொடர்ந்து பணிகள் இருந்தாலும், இந்த கலை நிகழ்ச்சியை பார்க்க வேண்டுமென்ற ஆவலோடு நான் இங்கு வந்து பார்த்து இருக்கிறேன். வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் எப்படிபொழுதுபோனது என்று எனக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும்.

"தமிழன் என்றோர் இனமுண்டு! தனியே அவற்கொரு குணமுண்டு!" நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார் எழுதிய வரி இது. இது வெறும் ஆரவாரம் காட்டும் வரி மட்டும் அல்ல, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆவணப்படுத்தப்பட்ட நம்முடைய பண்பாட்டு, இலக்கியப் பெட்டகங்களை முன்னிறுத்தும் ஒரு பெருமித முழக்கம் இது!

நெஞ்சை அள்ளக்கூடிய சிலப்பதிகாரம் 'முத்தமிழ்க் காப்பியம்' என்று போற்றப்படும் அளவுக்கு இயல், இசை, நாடகம் என பழந்தமிழ்நாட்டின் கலை மேன்மையைத் திட்டவட்டமாய் தீட்டிக் காட்டியிருக்கிறது.

நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் வரிசைப்படுத்திச் சொல்வார்கள். இதில் நாடகம்தான் முதலில் தோன்றியது. இசை பின்னரும், அதன் பின்னர்தான் இயலும் தோன்றியது என்று. திராவிட இயக்கம் தான் கலைகள் என்பது வசதி படைத்த வர்க்கத்தின் பொழுதுபோக்கு அம்சம் என்று இருந்த நிலையை அடியோடு மாற்றி, அவற்றை அடித்தட்டு மக்களிடத்தில் எடுத்துச் சென்ற இயக்கம் திராவிட இயக்கம்.

“இது கலைஞர் வழி நடக்கக்கூடிய அரசு.. கலைஞர்களுக்கான அரசு” : சென்னை சங்கமம் விழாவில் முதல்வர் பேச்சு!

திராவிட இயக்கம் தான் ஒரு சமுதாயத்தின் ஒரு தரப்பினருக்கான சாமரவீச்சாய் அல்ல... சாதிகளின் பெயரால், சமயங்களின் பெயரால் சமத்துவத்துக்கு சமாதி கட்ட நினைத்த போக்குக்கு எதிரான சம்மட்டியாய்... மூடப்பழக்கங்களுக்கு எதிரான முரசொலியாய் கலைகளை மாற்றியது.

திராவிட இயக்கம் தான் கலை வடிவங்கள் மூலமாக சாமானிய மக்கள் வாழ்க்கையில் அனுபவித்த வலியைப் பேசியது.

திராவிட இயக்கம் தான் சாமானிய மக்களின் மொழியில் பேசியது.

திராவிட இயக்கம் கலைகளை வளர்த்தது, கலைகளால் வளர்ந்தது.

நாடகம், திரைப்படங்கள், கிராமியக் கலைகள் அனைத்தையும் பயன்படுத்தி, மக்களிடையே பரப்புரை செய்தோம். கலைகளின் வளர்ச்சிக்கும், கலைஞர்கள் வாழ்வில் மலர்ச்சிக்கும் கண்ணும் கருத்துமாய் கணக்கற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அரசு. இது கலைஞர் வழி நடக்கக்கூடிய அரசு. அதனால்தான், இது கலைஞர்களுக்கான அரசாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

அதனால்தான் 2022-23-ஆம் ஆண்டு நிதிநிலைக் கூட்டத்தொடரில் கலை, பண்பாட்டுத்துறையின் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு 48 கோடி ரூபாய்க்கும் மேலான நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. கலைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், கலைகளைப் போதிக்கும் கல்விக்கூடங்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், கற்பித்தலின் தரத்தை உயர்த்த உதவும் நவீன கருவிகளை வழங்கிடவும் தாராளமாக நிதி ஒதுக்கீடு நம்முடைய அரசு செய்திருக்கிறது.

கலைகள் வளர வேண்டும் என்றால் கலைஞர்கள் வறுமையின்றி வாழ வேண்டும். அதற்கு அவர்களுக்குக் கலைவாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

“இது கலைஞர் வழி நடக்கக்கூடிய அரசு.. கலைஞர்களுக்கான அரசு” : சென்னை சங்கமம் விழாவில் முதல்வர் பேச்சு!

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக வாய்ப்புகள் இல்லாமல் வாடிக் கிடந்த கலைஞர்களுக்கு வான் மழையாய் ஏராளமான வாய்ப்புகளும், நலத்திட்ட உதவிகளும் அரசால் வழங்கப்படுகின்றன.

* தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் கூடும் இடங்களில் ‘கலைச் சங்கமம்’ என்ற பெயரில் 160 கலை நிகழ்ச்சிகள் நடத்த 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுக் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

* 500 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு இசைக்கருவிகள், ஆடை ஆபரணங்கள் வழங்குவதற்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் நிதியுதவி வழங்க 50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

* கலைமாமணி விருது பெற்ற வறிய நிலையில் வாழும் ஒவ்வொரு மூத்த, சிறந்த கலைஞருக்கும் பொற்கிழியாக வழங்கப்படும் விருதுத் தொகை 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

* திறமை மிக்க கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வண்ணம் ஒவ்வொரு மாவட்டத்திலும் வழங்கப்படும் ‘மாவட்ட கலைமன்ற விருதுகள்’ எண்ணிக்கை ஐந்தில் இருந்து 15-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

* தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பாக சென்னை மற்றும் 10 மாவட்டங்களில் ‘பொங்கல் கலைவிழாக்கள்’ நடத்த 50 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மூலம் அதிகமான கலைஞர்கள் பயன்பெறும் வண்ணம், மன்றத்திற்கான நல்கைத் தொகை 3 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

“இது கலைஞர் வழி நடக்கக்கூடிய அரசு.. கலைஞர்களுக்கான அரசு” : சென்னை சங்கமம் விழாவில் முதல்வர் பேச்சு!

இதற்கெல்லாம் மகுடம் சூட்டுவதைப் போல ‘நம்ம ஊரு திருவிழா’ என்ற பெயரில் தமிழ்நாட்டின் தலைநகரமாக இருக்கக்கூடிய சென்னையிலும், கலை பண்பாட்டு மண்டலங்களின் தலைமை இடங்களாக இருக்கக்கூடிய காஞ்சிபுரம், திருச்சி, கோயம்புத்தூர், சேலம், தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய நகரங்களிலும், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கலைவிழாக்கள் நடத்த 9 கோடியே 84 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ என்ற பெயரில் மிகப்பெரிய கலைக் கொண்டாட்டமாக நடக்கும் இந்தக் கலைவிழாக்கள், சென்னை மாநகரில் 18 இடங்களில் நிகழ்த்தப்பட இருக்கிறது.

இந்த நிகழ்ச்சிகளில் நாட்டுப்புறக் கலைஞர்கள், செவ்வியல் கலைஞர்கள், பிறமாநில கலைஞர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். நாற்பதுக்கும் அதிகமான கலை வடிவங்களை உங்கள் கண்முன்னே நிகழ்த்தி உங்களையெல்லாம் மகிழ்விக்க இருக்கிறார்கள்.

இந்த விழாவில் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் ஒவ்வொரு கலைஞருக்கும் இதுவரை வழங்கப்பட்ட ஒருநாள் மதிப்பூதியத்தை 2000 ரூபாயிலிருந்து 5000 ரூபாயாக உயர்த்தி வழங்க இருக்கிறோம்.

‘சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவில்’ கண்ணுக்கு விருந்தான கலைவிழாவோடு, சென்னை மக்களின் நாவுக்கு விருந்தளிக்கும் உணவுத் திருவிழாவுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களின் தனிச்சிறப்பான உணவு வகைகள் உங்களுக்காகப் பரிமாறப்படும். விழாவுக்கு வரும் மக்கள் அனைவரும் பங்கேற்று மகிழ வழுக்குமரம், உறியடி போன்ற பல்வேறு கேளிக்கை விளையாட்டுகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. தமிழ் ஆர்வலர்களுக்குச் செந்தமிழ் விருந்து படைக்க கவியரங்கம், கருத்தரங்கம் ஆகிய நிகழ்ச்சிகளோடு ஒரு இலக்கியத் திருவிழாவும் நடக்கவிருக்கிறது.

பொதுவாகவே மக்கள் தனித்தனித் தீவுகளாக தங்களை இப்போது மாற்றிக் கொள்கிறார்கள். இந்த மனநிலை மாற வேண்டும்.

உண்மையான பொழுதுபோக்கு என்பது நம்முடைய கலைகள்தான். அந்தக் கலைகள் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல், நம் மனதைப் பண்படுத்துவதாகவும் அது அமைந்திருக்கிறது.

தமிழர்களாக நாம் ஒன்று சேருவதற்கு நம்முடைய கலைகள்தான் இணைப்புப் பாலங்களாக அமையும். எனவே

கலை வளர்ப்போம்!        

நம் நிலையை வளர்ப்போம்!

என்று இந்த நேரத்தில் உங்களையெல்லாம் கேட்டுக் கொண்டு, மீண்டும் உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய இனிய தமிழ்த் திருநாளாக இருக்கக்கூடிய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன். ” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories