தமிழ்நாடு

“மொழி ஒரு இனத்தின் ரத்த ஓட்டம்; மொழி அழிந்தால், இனமும் அழியும்” : தமிழ் இசைச் சங்கத்தில் முதல்வர் பேச்சு!

மொழி தான் ஒரு இனத்தினுடைய இரத்தஓட்டம். மொழி அழிந்தால் இனமும் அழிந்து போகும். தமிழின் வளர்ச்சியும், தமிழனின் வளர்ச்சியும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

“மொழி ஒரு இனத்தின் ரத்த ஓட்டம்; மொழி அழிந்தால், இனமும் அழியும்” : தமிழ் இசைச் சங்கத்தில் முதல்வர் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (21.12.2022) சென்னை, இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற தமிழ் இசைச் சங்கத்தின் 80-ஆம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :- தமிழ் இசைச் சங்கத்தின் எண்பதாம் ஆண்டு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விழாவில் நானும் பங்கெடுத்து, விருதுகளை வழங்கி, அவர்களை வாழ்த்தக்கூடிய, ஒருசில நிமிடம் உரையாற்றக்கூடிய வாய்ப்பைப் பெற்று உங்கள் முன்னால் நிற்கிறேன். வாய்ப்பை பெற்றமைக்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கக்கூடிய அனைவருக்கும்  நான் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தமிழ்நாட்டில் தமிழிசை இன்று இந்தளவுக்குக் கொடி கட்டிப் பறக்கிறது என்று சொன்னால், அதற்குக் காரணம் இந்த தமிழிசைச் சங்கம்தான். அத்தகைய வரலாற்றுப் புகழ் பெற்ற, இந்த இராஜா அண்ணாமலை மன்றத்தில் நான் நின்று கொண்டு இருக்கிறேன், உங்களிடத்திலே உரையாடிக் கொண்டு இருக்கிறேன். இந்த அரங்கம் இங்கே கம்பீரமாக நிற்கிறது என்றால், இது வெறும் கட்டடம் அல்ல, கலைச் சின்னமாக நின்று கொண்டு இருக்கிறது! இசைச்சின்னமாக நின்று கொண்டு இருக்கிறது! தமிழ் அடையாளமாக நின்று கொண்டு இருக்கிறது! இந்தக் கட்டடம்தான், தமிழிசையை, கோட்டை கட்டிக் காத்த அரங்கம்! அப்படிப்பட்ட அரங்கத்தில், நாம் இன்றைக்கு நாமெல்லாம் மகிழ்ச்சியோடு கூடி இருக்கிறோம்.

“மொழி ஒரு இனத்தின் ரத்த ஓட்டம்; மொழி அழிந்தால், இனமும் அழியும்” : தமிழ் இசைச் சங்கத்தில் முதல்வர் பேச்சு!

பல நூற்றாண்டு காலமாக, நம்முடைய தமிழ் நிலப்பரப்பு, பல்வேறு பண்பாட்டுப் படையெடுப்புகளுக்கு ஆளானது. அந்நியர் ஆக்கிரமிப்பால்,  தமிழ்நாடு பாதிக்கப்பட்டது. அந்நிய இனத்தவர் படையெடுப்பால், நமது இனம் அதனுடைய உரிமையை இழந்தது. அந்நிய மொழிக்காரர்களின் ஊடுருவல் காரணத்தால், தமிழ் புறக்கணிக்கப்பட்டது. ஆதிக்க வர்க்கத்தினரால், தமிழர் புறக்கணிக்கப்பட்டனர். இப்படி  பல்வேறு  தாக்குதலால் தமிழ் நாடும் - தமிழினமும் - தமிழ் மொழியும் தாக்குதலுக்கு உள்ளானது.

இந்தச் சூழலில் தமிழினத்தின் உரிமையைக் காக்க, திராவிட இயக்கம் எழுந்தது.

தமிழ் மொழியைக் காக்க, மறைமலையடிகள் தலைமையில், தனித்தமிழ் இயக்கம் எழுந்தது.

தமிழ்க் கலையைக் காக்க, இந்தத் தமிழ் இசைச் சங்கம் எழுந்தது.

தனித்தமிழ் இயக்கமாக இருந்தாலும், தமிழிசை இயக்கமாக இருந்தாலும், அனைத்தையும் திராவிட இயக்கம் முழுமையாக ஆதரித்துப் போற்றியது.

தமிழ்நாட்டில், தமிழ் மேடைகளில், தமிழ்ப் பாட்டைப் பாடுவது, கேவலம் என்று நினைத்த ஒரு காலம் இருந்தது. தமிழில் பாடினால், மேடை தீட்டாகிவிடும் என்று நினைத்தார்கள். தமிழை நீசபாஷை என்று பழித்தார்கள். தமிழ்நாட்டில், தமிழ் மேடைகளில், தமிழில் பாட வேண்டும் என கோரிக்கை வைக்க வேண்டி இருந்தது.

“மொழி ஒரு இனத்தின் ரத்த ஓட்டம்; மொழி அழிந்தால், இனமும் அழியும்” : தமிழ் இசைச் சங்கத்தில் முதல்வர் பேச்சு!

தமிழில் பாடச் சொல்லி, இசை மேடைகளில் திராவிட இயக்கத்தினர் குரல் கொடுக்கத் தொடங்கினார்கள். இதனால் வேறு வழியில்லாமல், ஒரு பாட்டு பாடுவார்கள். அதற்கு 'துக்கடா' பாட்டு என்று பெயர். தமிழையே துக்கடா ஆக்கி வைத்திருந்தார்கள்.

"தமிழ் நீசபாஷையாக இருந்தால், தமிழன் கொடுக்கும் காசு நீசக்காசு ஆகாதா?" என்று கேட்டார் தந்தை பெரியார் அவர்கள்.

1936-ஆம் ஆண்டு, 'பண்டைத் தமிழிசை' குறித்து யாழ்நூலை இயற்றிய விபுலானந்தர் அவர்கள், சென்னைப்  பல்கலைக் கழகத்தில் ஆற்றிய உரையை, தந்தை பெரியார் தன்னுடைய 'விடுதலை' நாளிதழில் வெளியிட்டு பெருமைப்படுத்தினார். இதிலிருந்து இசை இயக்கம் என்பது அரசியல் முழக்கமாகவே மாறியது.

* மகாகவி பாரதியார்

* தமிழ்த்தாத்தா உ.வே.சா.

* புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

* மூதறிஞர் ராஜாஜி

* கல்கி கிருஷ்ணமூர்த்தி

* ரசிகமணி டி.கே.சி

* ஆர்.கே.சண்முகனார்

* பேரறிஞர் அண்ணா 

ஆகியோர் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இதனை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள்.

இதில் மகத்தான பங்களிப்பைச் செய்தவர்தான், இந்த மன்றத்தின் வாசலில் கம்பீரமாக நிற்கிறாரே அண்ணாமலை அரசர் அவர்கள். தமிழிசைக்காகத் தன்னை ஒப்படைத்துக் கொண்டார். அரசர் என்றால், தமிழிசையைக் காத்த அரசர் அவர். தமிழிசையை அந்த தமிழிசை மேடையைக் காத்த அரசர் அவர். பிறமொழி படையெடுப்பைத் தடுத்த அரசர் அவர்.

அரசர் அண்ணாமலை அவர்கள் தமிழ் இசைச் சங்கத்தைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, 1940-ஆம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவின் போது 16 ஆயிரம் ரூபாய் வழங்கினார்கள். 

“மொழி ஒரு இனத்தின் ரத்த ஓட்டம்; மொழி அழிந்தால், இனமும் அழியும்” : தமிழ் இசைச் சங்கத்தில் முதல்வர் பேச்சு!

1943-ஆம் ஆண்டு தமிழிசைச் சங்கமாக அது உருவாக்கப்பட்டது. தமிழிசைச் சங்கத்திற்கு 1952-ஆம் ஆண்டு இந்த ராஜா அண்ணாமலை மன்றம் உருவானது. அதாவது நான் பிறப்பதற்கு முதலாண்டு, இன்றைக்கு நான் எண்பதாவது ஆண்டு விழாவில் வந்து பங்கெடுத்திருக்கிறேன்.

இந்தத் தமிழிசை இயக்கத்தில், ராஜா அண்ணாமலை அவர்களின் குடும்பத்தின் பங்களிப்பு யாராலும் மறக்க முடியாது, மறைக்கவும் முடியாது!

* ராஜா சர் அண்ணாமலையாரைப் போலவே, அவருடைய புதல்வர்களான ராஜா சர் முத்தையா அவர்களும், எம்.ஏ.சிதம்பரம் அவர்களும் இசைக்குத் தொண்டு ஆற்றினார்கள்.

1938-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தபோது தாளமுத்து மரணம் அடைந்தார். அவரது உடலை இடுகாட்டுக்குத்  தனது தோளிலே தூக்கி வந்தவர்களில்  ஒருவர்தான் ராஜா சர் முத்தையா அவர்கள். இத்தகைய தமிழ்மொழிக் குடும்பம் தான் இது.

அதன்பிறகு இவர்களது வாரிசுகள், குடும்ப வாரிசுகளாக மட்டுமல்லாமல், இசை வாரிசுகளாகவும் செயல்பட்டார்கள். இம்மன்றத்தின் மதிப்புறு செயலாளராக  இருக்கும் மரியாதைக்குரிய ஏ.சி.முத்தையா அவர்களும்,  தனது இசை வளர்க்கும் பணியை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.  மரியாதைக்குரிய எம்.ஏ.எம்.ராமசாமி அவர்கள், தனது வாழ்நாள் முழுவதும், இசை நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஊக்குவித்து வந்தார்கள். இந்தக் குடும்பம் இந்தத் தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக வழங்கியவை மூன்று சொத்துகள்!

“மொழி ஒரு இனத்தின் ரத்த ஓட்டம்; மொழி அழிந்தால், இனமும் அழியும்” : தமிழ் இசைச் சங்கத்தில் முதல்வர் பேச்சு!

* ஒன்று - கல்வி வளர்ச்சிக்காக உருவாக்கியது, சிதம்பரம் அண்ணாமலைப்    பல்கலைக்கழகம்!

* இரண்டு - தொழில், நிதி நிர்வாகத்துக்காக உருவாக்கியது, இந்தியன் வங்கி!

* மூன்று - இசைக்காகத் தமிழிசை மன்றங்கள்!

இவை அனைத்தும் தகுதிநிறைந்த வாரிசுகளால், மிகச்சிறப்பாக வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது! இதனை இங்கே நினைவுறுத்த வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது.

தமிழிசைச் சங்கத்தின் 55-ஆவது ஆண்டு விழாவில், அதாவது  1998-ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து 58-ஆவது ஆண்டு விழாவில் 2000-ஆம் ஆண்டில் நான் கலந்து கொண்டிருக்கிறேன் சென்னை மாநகரத்தினுடைய மேயராக. அப்போதும் இசைக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் வாய்ப்பைப் பெற்றேன். இன்று முதல்வராக வந்துள்ளேன்.

“மொழி ஒரு இனத்தின் ரத்த ஓட்டம்; மொழி அழிந்தால், இனமும் அழியும்” : தமிழ் இசைச் சங்கத்தில் முதல்வர் பேச்சு!

இது தமிழ் இசை மன்றம் என்பதால், தமிழிசையை நான் அதிகம் வலியுறுத்தத் தேவையில்லை. தொய்வில்லாமல் தொடருங்கள் என்பதுதான் எல்லோருடைய விருப்பம். அதைத்தான் நான் நினைவுப்படுத்துகிறேன்.

சில நாட்களுக்கு முன்பு மியூசிக் அகாடமி ஹாலில் சொன்னதை இங்கே மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் ஆதல் வேண்டும். அந்த வரிசையில் இசையிலும் தமிழிசை செழிக்க வேண்டும். இது குறுகிய எண்ணம் கிடையாது. மொழி தான் ஒரு இனத்தினுடைய இரத்தஓட்டம். மொழி அழிந்தால், இனமும் அழிந்து போகும். எனவேதான் தமிழின் வளர்ச்சியும், தமிழனின் வளர்ச்சியும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை!  அதனால் பிறமொழி ஆதிக்கத்தை எதிர்ப்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். பிறமொழி மீதான வெறுப்பு அல்ல அது!

ஒருவர் விரும்பினால் எத்தனை மொழி வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம். ஆனால் திணித்தால் எதையும் ஏற்கமாட்டோம் என்பதே நம்முடைய மொழிக் கொள்கை!

அந்த வகையில் இதுபோன்ற தமிழிசை மன்றங்களின் பணி மிக மிக மிக மகத்தானதாக அமைந்திருக்கிறது. ஒரு மன்றம் அல்ல, இது போல பல மன்றங்கள் தோன்ற வேண்டும். இசை மன்றங்கள், கலை மன்றங்கள், தமிழ் மன்றங்கள் உருவாக வேண்டும். அதற்கு மரியாதைக்குரிய நம்முடைய ஏ.சி.முத்தையா அவர்கள் தலைமையிலான தமிழிசை மன்றம் வழிகாட்ட வேண்டும் என்று கேட்டு இந்த சிறப்பான நிகழ்ச்சியில் பங்கெடுப்பதில் நான் மீண்டும் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய நன்றியை தெரிவிக்கிறேன்.

மியூசிக் அகடாமி ஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நான் நிறைவாக பேசுகிறபோது சொன்னேன், முதலமைச்சராக பொறுப்பேற்று எவ்வளவு பணிகள் செய்து கொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்கு தெரியும். அதை நான் நினைவுபடுத்த அவசியமில்லை. கொரோனாவை சந்தித்தோம், புயலை சந்தித்தோம், மழையை சந்தித்தோம், வெள்ளத்தை சந்தித்தோம், இப்படி பல பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.  ஆக ஆங்கிலத்தில் சொல்லவேண்டுமென்றால் ஒரே டென்ஷனாக இருக்கக்கூடிய நேரத்தில் ஒரு மன அமைதி, ஒரு மன நிம்மதி இந்த நிகழ்ச்சியின் மூலமாக நான் பெறுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories