ஈரோடு மாவட்டம் பாசூர் அருகேயுள்ள செங்கோடம் பாளையத்தைச் சேர்ந்தவர் துரைசாமி, விவசாயியான இவர் கடந்த மாதம் 25ம் தேதி உயிரிழந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் அவரது உடலை ஆற்றின் ஓரத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்துள்ளனர்.
இந்த நிலையில், பாசூர் அருகே காவிரி ஆற்று தடுப்பணை அருகே ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கிடந்துள்ளது. அதனை அருகில் சென்றுபார்த்தபோது அதன் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதுகுறித்து காவல்நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அந்த சடலம் கடந்த மாதம் உயிரிழந்துள்ள விவசாயி துரைசாமி என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரது சடலத்தை போலிஸார் அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதனால் அவரது சடலம் இரண்டாவது முறையாக உறவினர்களால் அடக்கம் செய்யப்பட்டது.
இது தொடர்பாக கூறிய போலிஸார், கடந்த சில தினங்களாக காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மயானத்தில் தண்ணீர் புகுந்து அங்கிருந்த மண் அரிக்கப்பட்டது என்றும் இதனால் புதைக்கப்பட்டிருந்த துரைசாமியின் சடலம் வெளியே வந்தது என்றும் கூறியுள்ளனர். மேலும், முதலில் அது வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட சடலம் என்று நினைத்த நிலையில், விசாரணையில் இந்த தகவல் வெளிவந்ததாகவும் கூறினர்.