தமிழ்நாடு

ஊரக சுகாதாரத்தில் தமிழ்நாடு 3-ம் இடம் பெற்று சாதனை.. குடியரசு தலைவரிடமிருந்து விருதை பெற்றார் அமைச்சர் !

2021-22ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சுகாதாரத்திற்கான மதிப்பீட்டில், தேசிய அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில், தமிழகம் ‘மூன்றாம்’ இடத்தை பிடித்துள்ளது.

 ஊரக சுகாதாரத்தில் தமிழ்நாடு 3-ம் இடம் பெற்று சாதனை.. குடியரசு தலைவரிடமிருந்து விருதை பெற்றார் அமைச்சர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஓவ்வொரு ஆண்டும், ஜல்சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை மூலம் ஊரக பகுதிகளில் உள்ள சுகாதாரத்தின் தரம் மற்றும் சுகாதார உட்கட்டமைப்பில் அடைந்த முன்னேற்றம் ஆகியவற்றை முக்கிய அளவீடுகளாக கொண்டு இந்தியாவிலுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தரவரிசைப்படுத்தப்படும்.

அதன் அடிப்படையில், 2021-22ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சுகாதாரத்திற்கான மதிப்பீட்டில், தேசிய அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில், தமிழகம் ‘மூன்றாம்’ இடத்தை பிடித்துள்ளது. இதற்காக இந்திய குடியரசுத் தலைவர் அவர்களால், தமிழகத்திற்கு விருது வழங்கப்பட்டது.

இவ்விருதினை இன்று புது தில்லியில் நடைபெற்ற தூய்மை பாரத விழாவில் தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் முதன்மைச் செயலாளர் பெ.அமுதா இ.ஆ.ப குடியரசு தலைவரிடம் இருந்து பெற்றனர்.

மேலும், ‘சுஜலாம் 1.0’ எனும் 100 நாள் நீர் மேலாண்மை இயக்கத்தில், வீட்டுத்தோட்டம், தனி நபர் உறிஞ்சுக்குழிகள் மற்றும் சமுதாய உறிஞ்சுக்குழிகள் போன்ற கழிவு நீர் மேலாண்மை பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தமிழகத்தில், பல்வேறு திட்டங்களின் கீழ் அப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 1.03 இலட்சம் தனி நபர்/சமுதாய உறிஞ்சுக்குழிகள் மற்றும் வீட்டுத்தோட்டம் அமைக்கப்பட்டது.

தேசிய அளவில், ‘சுஜலாம் 1.0’ எனும் 100 நாள் நீர் மேலாண்மை இயக்கத்தில் தமிழகம் ‘ஐந்தாம்’ இடம் பெற்றுள்ளது. அதற்கான விருதையும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் ஊரக வளர்ச்சி ஊராட்சிதுறையின் முதன்மைச் செயலாளர் திருமதி. பெ. அமுதா இ.ஆ.ப. குடியரசு தலைவரிடம் இருந்து பெற்றனர். கூடுதலாக தமிழகத்தில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு இவ்விழாவில் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

முன்னதாக, தமிழகத்தில், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) பகுதி I-இன் கீழ், மக்களிடையே மனமாற்றத்தை ஏற்படுத்தி சுமார் 50 இலட்சம் தனி நபர் இல்லக் கழிப்பறைகள் மற்றும் இடவசதி இல்லாத வீடுகள் பயன்பெறும் வகையில் 413 சமுதாய சுகாதார வளாகங்களும் கட்டப்பட்டுள்ளது.

இதன் மூலம், 12,525 கிராம ஊராட்சிகள் அனைத்தும் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நிலையினை எய்தின. தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) பகுதி II-இன் கீழ், பாதுகாப்பான கழிப்பறை வசதிகள் பெறுவதிலிருந்து எந்த ஒரு குடும்பமும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டி, கூடுதலாக 3.89 இலட்சம் குடும்பங்களுக்கு கழிப்பறை வசதிகள் ஏற்ப்படுத்தபட்டு வருகிறது.

திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நிலையினை தக்கவைத்தல், திடக்கழிவு மேலாண்மை, கழிவு நீர் மேலாண்மை மற்றும் கிராமங்கள் தூய்மையாக காட்சியளித்தல் ஆகியவையே, 2020-21ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) பகுதி II-இன் முக்கிய கூறுகள் ஆகும்.

“சுத்தம் மற்றும் பசுமை” கிராமங்களை உருவாக்கிட, பல்வேறு முன் முயற்சிகளை மேற்கொள்வதில் தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இன் நிலையினை எய்திட 12,500 சுகாதார ஊக்குநர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், இவர்கள் மேற்கொள்ளும் பணியினை தூய்மை தமிழகம் என்ற கைபேசி செயலி மூலம் கண்காணிக்கப்படுகிறது.

சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை மற்றும் கழிவு நீர் மேலாண்மையில் கிராம ஊராட்சி நிறைவுற்ற நிலையினை அடைவதற்காக, அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் ‘கிராம ஊராட்சிக்கான முழு சுகாதாரத் திட்டம்’ (Village Sanitation Saturation Plan) தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் அடிப்படையில், தேவைப்படும் பணிகள் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஊரக பகுதிகளில், மாண்புமிகு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி ஆகஸ்ட் 15-ஆம் நாள் முதல் ‘நம்ம ஊரு சூப்பரு’ என்ற மக்கள் இயக்கம் துவங்கப்பட்டு தூய்மை பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. நாளது தேதி வரை, 46,777 குப்பை அதிகம் கொட்டப்பட்டுள்ள இடங்கள் (Garbage Hotspots), 16,765 பொது இடங்கள், 21,059 பள்ளிகள், 22,458 அங்கன்வாடி மையங்கள், 45,069 அரசு கட்டிடங்கள்/நிறுவனங்கள், 45,369 நீர் நிலைகள், 9,572 சமுதாய சுகாதார வளாகங்கள் மற்றும் 1,558 கி. மீ. கழிவு நீர் வடிகால்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொது மக்கள் பங்களிப்புடன் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 4.36 இலட்சம் மரக்கன்றுகள் பல்வேறு களப்பணியாளர்களின் உதவியுடன் நடப்பட்டுள்ளது.

    banner

    Related Stories

    Related Stories