தமிழ்நாடு

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்தது திமுகதான்.. நடப்பது தமிழின்,தமிழின ஆட்சி: முதல்வர் பெருமிதம்

தமிழ்மொழிக்கும், வளம் சேர்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல திட்டங்களைச் செம்மொழி நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்தது திமுகதான்..  நடப்பது தமிழின்,தமிழின ஆட்சி: முதல்வர் பெருமிதம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (22.8.2022) சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்ற கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கும் விழாவில் ஆற்றிய உரை:-

இன்று ஆகஸ்ட் 22. இது வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இந்த நாள், சிங்காரச் சென்னையினுடைய 383-ஆம் ஆண்டினுடைய பிறந்தநாள்.

22.08.1639 - என்பது சென்னை உருவாக்கப்பட்ட நாள்!

சென்னையின் வணக்கத்திற்குரிய மேயராக நான் இருந்தபொழுதுதான் மதராஸ் என்ற பெயரை சென்னையாக, அப்போதைய முதலமைச்சராக இருந்த நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் மாற்றி, இன்று ஊரெங்கும் ”நம்ம சென்னை, ”நம்ம பெருமை” என்று உணர்வுப் பெருக்குடன் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழர்கள் வாழும் இந்த தாய்த் திருநாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டி மகிழ்ந்த அரசுதான் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக அரசு அண்ணா தலைமையிலே என்பதும் வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.

அதேபோல் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட இந்த தலைநகருக்கு சென்னை என்று அதிகாரப்பூர்வமாகப் பெயரைச் சூட்டியதும் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அரசுதான். இதேபோல், மூவாயிரம் ஆண்டு பழமை கொண்ட தமிழுக்குச் செம்மொழி என்ற தகுதியைப் பெற்றுத் தந்ததும் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அரசுதான்.

உலகின் மிகத் தொன்மையான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என உலகின் பல மொழியியலாளர்களும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் போற்றுகின்றனர்.

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்தது திமுகதான்..  நடப்பது தமிழின்,தமிழின ஆட்சி: முதல்வர் பெருமிதம்

பிற மொழிகளின் உதவியின்றித் தனித்துச் செயல்படும் ஆற்றல் கொண்டது நம்முடைய செம்மொழித் தமிழ். பழையன கழிந்து புதியதை உள்வாங்கும் திறன் கொண்ட தமிழ் மொழி, காலமாற்றத்திற்கேற்ற சொற்களஞ்சியத்தைக் கொண்டுள்ள மொழி. இத்தகைய பல்வேறு சிறப்புகளைக் கொண்ட நமது தமிழ் மொழிக்கு செம்மொழித் தகுதி வழங்க வேண்டும் என முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் கூறியதையும் அதற்காக அவர் எடுத்த முயற்சிகளையும் நாடு நன்றாக அறியும்.

தமிழுக்குச் செம்மொழித் தகுதியை ஒன்றிய அரசு 2004-இல் வழங்கிய பின்பும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆற்றிய பணிகள் தமிழக வரலாற்றில் இன்றும் நிலைத்து இருக்கக்கூடியவை.

மைசூரில் இயங்கி வந்த செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை சென்னைக்கு இடமாற்றம் செய்து தந்தவரும் கலைஞர் தான்.

அதன் உள் கட்டமைப்பையும் நிருவாகத்தையும் பொலிவாக உருவாக்கித் தந்தார்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் அலுவலகத் திறப்பு விழா 30.06.2008 அன்று நடைபெற்றது.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில்தான், தமிழ்நாடு அரசு 2007, நவம்பர் 5-ஆம் நாள், சென்னைப் பெரும்பாக்கத்தில் 16.586 ஏக்கர் (6.71.5 ஹெக்டேர்) நிலம் வழங்கியது. 1 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவில், அந்நிலத்தினைச் சமன்படுத்தியும் வழங்கியது அன்றைய கழக அரசு. இந்த இடத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டு மாண்புமிகு பிரதமர் அவர்களால் என் முன்னிலையில் 12.01.2022 அன்று திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

அதுதான் இன்று நாம் காணக்கூடிய இந்த மாபெரும் கட்டடம்.

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்தது திமுகதான்..  நடப்பது தமிழின்,தமிழின ஆட்சி: முதல்வர் பெருமிதம்

2008-ஆம் ஆண்டு நடந்த செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் அலுவலகத் திறப்பு விழாவில் பேசிய நம்முடைய கலைஞர் அவர்கள் மகத்தான அறிவிப்பு ஒன்றைச் செய்தார்.

“150 ஆண்டுகளுக்கு முன்பு கண்ட கனவு, அந்தக் கனவு நினைவாக வேண்டும் என்று 50 ஆண்டுகளுக்கு முன்பே நான் கொண்ட நினைவு. செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் காலூன்றுகின்ற இந்த இனிய நாளில் எனக்கென்று உள்ள சொந்தப் பணத்திலிருந்து ஒரு கோடி ரூபாயை நிறுவனத்தின் பொறுப்பில் கலைஞர் கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை ஒன்று நிறுவிட வழங்குகிறேன்” என்று பெருமிதத்தோடு கலைஞர் அவர்கள் குறிப்பிட்டார்.

வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என வாழ்ந்தவர் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அன்னைத் தமிழ் மீதான அவரது அன்பின் வெளிப்பாடுதான் அந்த அறிவிப்பு.

‘தமிழுயர்ந்தால் தமிழ்நாடு உயரும்’ என்ற புரட்சிக்கவிஞரின் வழித்தடத்தில் இத்தகைய அறிவிப்பினைச் கலைஞர் அவர்கள் செய்தார்கள். அத்தகைய விருதுகள் மொழியியல் அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

“கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் அறக்கட்டளை” வாயிலாக ஆண்டுதோறும் தகுதி வாய்ந்த தமிழறிஞர்களுக்குக்

‘கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கப்பட்டு வருகிறது.

இவ்விருது இந்தியாவிலேயே மிக உயரிய அளவில் ரூ. 10 இலட்சம் பரிசுத் தொகையும், பாராட்டிதழும், கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உருவம் பொறித்த நினைவுப் பரிசும் அடங்கியதாகும்.

முதல் விருது 2010, ஜூன் 23 அன்று கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அன்றைய குடியரசுத் தலைவர் அவர்களால் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலா’ அவர்களுக்கு வழங்கப்பட்டது. இடையில் 2011 முதல் 2019-ஆம் ஆண்டு வரை இது அறிவிக்கப்படாமல் இருந்த அந்த விருதுகளுக்குக் கழக அரசு பொறுப்பேற்றவுடன், விருதாளர்கள் முறையோடு தேர்ந்தெடுக்கப்பட்டு 22.01.2022 அன்று நடைபெற்ற விழாவில் பரிசுகள் அளிக்கப்பட்டன.

இன்றைய தினம் 2020-ஆம் ஆண்டுக்கான விருது முன்னாள் துணைவேந்தர் ம.ராசேந்திரன் அவர்களுக்கும்

2021-ஆம் ஆண்டுக்கான விருது பேராசிரியர் முனைவர் க.நெடுஞ்செழியன் அவர்களுக்கும்

2022-ஆம் ஆண்டுக்கான விருது பிரெஞ்சு நாட்டின் அறிஞர் ழான் லூயிக் செவ்வியார் அவர்களுக்கும் வழங்கப்படுகிறது.

விருது பெற்ற மூவரையும் தமிழ்நாடு அரசின் சார்பில் நான் நெஞ்சார பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்த சிறப்புக்குரியவர் ம.ராசேந்திரன் அவர்கள்.

பச்சையப்பன் கல்லூரியின் படிக்கட்டும் பைந்தமிழ் பாடும் என்று அந்தக் காலத்தில் சொல்வார்கள். அத்தகைய பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் படித்தவர் ராசேந்திரன் அவர்கள். வரலாற்றின் கருவூலம் என்று சொல்லப்படுகின்ற மெக்கன்சியின் சுவடிகளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழ்நாடு அரசின் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராகவும், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராகவும் பணியாற்றிவர். குறள் பீடம், அகர முதலித் திட்டம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் இயக்குநராக இருந்தவர். இத்தகைய சிறப்புக்குரியவரை தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் இயக்குநராக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் 2008-ஆம் ஆண்டு நியமித்தார்கள்.

செம்மொழிப் பெருமிதத்துக்காகவே ஐந்து நாள் மாநாடு கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடந்தது. தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் தாமே தம் கடின உழைப்பையும், உறுதியையும், கரைகாணாத் தமிழ்க்காதலையும் காட்டிய மாநாடாக அது திகழ்ந்தது. இந்தியக் குடியரசுத் தலைவரே நேரில் வந்து நெஞ்சுருகப் பாராட்டி வாழ்த்தினார். இத்தகைய சிறப்பு பெற்ற இந்த செம்மொழி மாநாட்டிற்கு ஒருங்கிணைப்பாளராக இருந்து சிறப்பாக பணியாற்றியவர்தான் இப்போது விருது பெறுகிற நம்முடைய ம.ராசேந்திரன் அவர்கள்.

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்தது திமுகதான்..  நடப்பது தமிழின்,தமிழின ஆட்சி: முதல்வர் பெருமிதம்

இன்றைக்கு பொதுநூலகச் சட்டத்திருத்த உயர்நிலைக்குழுத் தலைவராக இருக்கிறார். 14 நூல்களை எழுதி இருக்கிறார். 12 நூல்களை பதிப்பித்தும் உள்ளார். கணையாழி இலக்கிய இதழின் வெளியீட்டாளராகவும் பணியாற்றி வருகிறார். தமிழ் வேந்தராகவே நித்தமும் செயல்படும் ம.ராசேந்திரனுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயரிலான இவ்விருது வழங்கப்படுவது மிக, மிகப் பொருத்தம், பொருத்தம், பொருத்தம்.

2021ஆம்-ஆண்டுக்கான கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெறும் பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்களின் அறிவுத் திறத்தை நான் சொல்லத் தொடங்கினால் பல மணி நேரம் ஆகும்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும், இனமானப் பேராசிரியர் அவர்களும் இன்று இருந்திருந்தால் முனைவர் க. நெடுஞ்செழியன் அவர்களுக்கு விருது வழங்கும் காட்சியைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்.

தமிழுக்கும், தமிழினத்துக்கும், திராவிட இயக்கத்துக்கும் தொண்டாற்றுவதற்காகத் தனது வாழ்நாளை ஒப்படைத்துக் கொண்டவர்தான் பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்கள். இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழரும், தமிழரின் அடையாளங்கள், சங்க காலத் தமிழர் சமயம், தமிழர் இயங்கியல், உலகத் தோற்றமும் தமிழர் கோட்பாடும், ஆசீவகமும் அய்யனார் வரலாறும் ஆகிய பல்வேறு நூல்களைப் படைத்தவர்.

தந்தை பெரியார் குறித்தும், திராவிட இயக்கம் பற்றியும் தொடர்ந்து எழுதி வரக்கூடியவர் பேராசிரியர் அவர்கள். எழுதுபவர் மட்டுமல்ல, இன உரிமைப் போராளி அவர். அவருக்கு இந்த விருது தரப்பட்டது பெருமைக்குரியது.

2022-ஆம் ஆண்டுக்கான கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை, பிரான்ஸ் நாட்டு அறிஞரான முனைவர் ழான் லூயிக் செவ்வியார் பெறுகிறார். இவர், தமிழர் அல்லாதவர்கள் பண்டைத் தமிழ் இலக்கியத்தின் உள்ளடக்கத்தைப் புரிந்து கொள்ள உதவும் படைப்புகளை வெளியிட்டு வருவதோடு, ஆய்வுப் பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். பழந்தமிழ் இலக்கண ஆய்வுகளில் மிக்க ஆர்வம் கொண்டவராக விளங்குகிறார். பல உலக ஆய்வு நிறுவனங்களோடு இணைந்து இத்தகைய பணிகளை அவர் செய்து வருவது சிறப்புக்குரிய ஒன்று.

இந்த வகையில், தகுதியும் தமிழ்ப் புலமையும் வாய்ந்த மூவர் இந்த விருதினைப் பெறுகிறார்கள்.

முத்தமிழறிஞரின் முயற்சியால் சென்னையில் செயற்பட்டு வரும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் 41 செவ்வியல் தமிழ் நூல்களின் ஆய்வுக்கு முதலிடம் வழங்கி வருகிறது. ஒன்றிய அரசினுடைய வழிகாட்டுதலோடு, தமிழ்நாடு அரசின் நெறிப்படுத்தலோடு, சிறந்ததொரு மொழிப் பணியினைச் செம்மொழி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

தொல்பழங்காலம் முதல் கி.பி. 6ஆம் நூற்றாண்டு வரையிலான காலப் பகுதிக்குள் தோன்றிய இலக்கிய, இலக்கணம் குறித்த ஆய்வினை மேற்கொள்ள உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம் தமிழ் மொழி ஆய்விலும், அதன் மேம்பாட்டிலும் தனிக் கவனம் செலுத்தி வருகிறது.

செம்மொழித் தமிழின் தொன்மையையும் தனித் தன்மையையும் அவற்றின் மரபுத் தொடர்ச்சியையும், ஆராய்ந்து பாதுகாப்பதை முக்கிய நோக்கமாக இந்த நிறுவனம் மேற்கொண்டிருக்கிறது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிறுவனத்துக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதற்குத் தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது. ஏனென்றால், இது தமிழ் மொழிக்கான அமைப்பு. ஏனென்றால் இன்று நடப்பது தமிழின் ஆட்சி, தமிழின ஆட்சி. கடந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் நான் சில அறிவிப்புகளைச் செய்தேன்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைந்துள்ள சாலையைச் ‘செம்மொழிச் சாலை’ எனப் பெயர் மாற்றம் செய்து நமது அரசு செயல்படுத்தியுள்ளது.

புகழ்பெற்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழங்களில் செவ்வியல் தமிழ் இருக்கைகள் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலமாக அமைக்கப்படும் என்று அப்போது நான் சொன்னேன். அதற்குரிய பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன.

முதற்கட்டமாக,

1. ரீயூனியன் - டி லா ரீயூனியன் பல்கலைக்கழகம் (ரீயூனியன் தீவு பல்கலைக்கழகம்)

2. இந்தோனேசியா - சுமத்ரா உத்தாரா பல்கலைக்கழகம்

3. கம்போடியா – கெமர் மொழிகள் ஆய்வு மையம் (CKS)

4. வியட்நாம் - மொழிகள் மற்றும் பன்னாட்டு ஆய்வியல் பல்கலைக்கழகம் (ULIS)

5. தாய்லாந்து - சுலாலோங்கோர்ன் பல்கலைக்கழகம்

ஆகிய தெற்காசிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழங்களில் செவ்வியல் தமிழ் இருக்கைகள் விரைவில் ஏற்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்தது திமுகதான்..  நடப்பது தமிழின்,தமிழின ஆட்சி: முதல்வர் பெருமிதம்

தமிழ் மொழியின் தொன்மை, வன்மை, திண்மை, பொருண்மை, சான்றாண்மை ஆகியவற்றை நிறுவி இருந்தாலும், தமிழ்மொழிக்கும். உலகமொழிகளுக்கும் இடையிலான உறவை, தொடர்பை ஆணித்தரமாக நிறுவ வேண்டியது காலத்தின் தேவை. அதற்கான அடித்தளத்தைத் தனிநாயகம் அடிகள், பாவாணர் போன்ற மொழிப் பேரறிஞர்கள் இட்டுச் சென்றிருந்தாலும், அதை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்று தமிழ்மொழிக்கும் உலக மொழிகளுக்கும் இடையிலான‌ ஒப்பீட்டு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிய தேவை உருவெடுத்துள்ளது. இத்தேவையைத் தமிழ் இருக்கைகள் மூலமாக மேற்கொள்ள வழிவகை ஏற்படும்.

முத்தமிழறிஞர் கலைஞருடைய கனவை நிறைவேற்றுவதற்காகத்தான் நான் முதலமைச்சர் பொறுப்பில் நாளும் உழைத்து வருகிறேன். அதைவிடப் பெரிய பெருமையோ, கடமையோ எனக்கு வேறு எதுவும் இருக்க முடியாது. தமிழறிஞர்களுக்கு விருதுகளும், எளிதில் கருதிப் பார்க்க முடியாத கனவு இல்லம் என்ற திட்டத்தையும் நிறைவேற்றி வருகிறோம்.

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என்ற முழக்கத்திற்கேற்ப காலத்துக்கேற்ற கருத்துக்களை கண்டறிந்து இன்று 16 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்காக, செம்மொழி நிறுவனத்தை நான் பாராட்டுகிறேன்.

அண்மையில் கூட, இந்தியப் பிரதமரை நான் வரவேற்றபோது செம்மொழி நிறுவனம் வெளியிட்ட தொல்காப்பியம், ஆங்கில மொழிபெயர்ப்பை அன்பளிப்பாகத் தந்தேன்.

முத்தமிழறிஞரின் முயற்சியால் உருவான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை மேலும் வளப்படுத்தவும் தமிழ் மொழியின் வளர்ச்சியிலும், தமிழ் நிறுவனங்களின் வளர்ச்சியிலும் கவனம் செலுத்தி ஆக்கபூர்வமான பணிகளை மாண்புமிகு தொழில்கள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் மேற்கொண்டு வருகிறார்.

தன் அனுபவங்களால் நிறுவனத்திற்கு வேண்டிய உதவிகளைச் செய்துவருகிறார் நிறுவனத் துணைத்தலைவர் பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி அவர்கள்.

இயக்குநர் பொறுப்பை ஏற்ற காலம் முதல் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் அக்கறையும் ஈடுபாடும் கொண்டு செயலாற்றி வருகிறார் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் அவர்கள்.

தமிழ்மொழிக்கும், வளம் சேர்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல திட்டங்களைச் செம்மொழி நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. செம்மொழி நிறுவனம் முன்வைத்துள்ள இலக்குகளை அடையத் தமிழ்நாடு அரசு எப்போதும் துணைநிற்கும் என்று சொல்லி உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைச் சொல்லி விடைபெறுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories