தமிழ்நாடு

”ஒன்றிய அரசுக்கு விசுவாசத்தை காட்ட மக்களிடம் வாங்கிக் கட்டிக்கொள்ளும் ஆளுநர்கள்”: முரசொலி கட்டுரை!

ஒன்றிய அரசுக்கு விசுவாசத்தைக் காட்ட, உதவாக்கரை கருத்துகளைச் சொல்லி, ஊர் மக்களின் எதிர்ப்பையும், ஏளனத்தையும் ஆளுநர்கள் வாங்கிக் கட்டிக் கொள்ளக் கூடாது.

”ஒன்றிய அரசுக்கு விசுவாசத்தை காட்ட மக்களிடம் வாங்கிக் கட்டிக்கொள்ளும் ஆளுநர்கள்”: முரசொலி கட்டுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மராட்டிய மாநிலத்தின் ஆளுநராக, கடந்த மூன்று ஆண்டுகளாக, பகத்சிங் கோஷ்யாரி என்பவர் இருந்து வருகிறார். இவருடைய பின்னணியைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால்: புதியதாக உருவாக்கப்பட்ட உத்தரகாண்ட் மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சராகவும், அந்த மாநிலத்தின் பா.ஜ.க தலைவராகவும் இருந்தவர் கோஷ்யாரி. இளமைக் காலத்திலேயே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் சேர்ந்தவர்.

ஆளுநர் கோஷ்யாரி, முன்பிருந்த உத்தவ்தாக்கரே அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கையே கடைப்பிடித்து வந்தவர். அவ்வப்போது திட்டமிட்டு சர்ச்சைகளை உருவாக்கும் கருத்துகளை வெளியிடுவதில் சமர்த்தர்.

கவர்னர் கோஷ்யாரியின் சர்ச்சைக் கருத்துகளுக்கு ஓர் எடுத்துக்காட்டு; மும்பைப்பல்கலைக்கழகத்தில் புதிய கட்டடங்களைத் திறந்து வைத்துப் பேசும்போது, சர்வதேச மாணவர் விடுதிக்கு, இந்துத்துவக் கோட்பாட்டின் மூலவரான வி.டி.சாவர்க்கர் பெயரைச் சூட்ட வேண்டும் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

”ஒன்றிய அரசுக்கு விசுவாசத்தை காட்ட மக்களிடம் வாங்கிக் கட்டிக்கொள்ளும் ஆளுநர்கள்”: முரசொலி கட்டுரை!

ஆனால் மாணவர் அமைப்புகள் இணைந்து ஆளுநர் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன், அந்த விடுதிக்கு, சாவர்க்கர் பெயரை அல்ல, சத்திரபதி சிவாஜி பெயரையே சூட்ட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஓங்கிக் குரல் கொடுத்தனர்.

ஆளுநர் கோஷ்யாரி இப்போது 29.7.2022 அன்று, மும்பை அந்தேரி பகுதியில் நடந்த சாலை சந்திப்புப் பெயர்ப் பலகைத் திறப்பு விழாவில் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசும்போது, “மராட்டியத்தில் இருந்து குறிப்பாக மும்பை, தானேயில் இருந்து, குஜராத்தியர்களும், மற்றும் ராஜஸ்தானியர்களும் வெளியேற முடிவு செய்து விட்டால், மராட்டிய மக்கள் கைகளில் பணமே இருக்காது: மும்பை நகரம், நாட்டின் நிதித்தலைநகரமாக இருக்காது. ராஜஸ்தானியர், மார்வாரிகள், குஜராத்தியர் ஆகியோர் வாணிபம் செய்வதில் மட்டும் அல்லாமல் ஈகை செய்வதிலும் சிறந்தவர்கள்" என்று. சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் நோக்கில், மராட்டிய மக்களைத் தரம் தாழ்த்திக் கூறியிருக்கிறார்.

”ஒன்றிய அரசுக்கு விசுவாசத்தை காட்ட மக்களிடம் வாங்கிக் கட்டிக்கொள்ளும் ஆளுநர்கள்”: முரசொலி கட்டுரை!

ஆளுநர் கோஷ்யாரியின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையையும், பலத்த எதிர்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதில் வினோதம் என்ன என்றால், பா.ஜ.க.வினரும் எதிர்ப்பில் கலந்து கொண்டுள்ளனர் என்பதுதான்.

மராட்டிய மாநில பா.ஜ.க. மூத்த தலைவர் அஷீஷ் ஷெலர், தற்போதைய முதல்வர் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் போன்றோர், ஆளுநர் கோஷ்யாரியின் கருத்தை ஏற்கவில்லை .

முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே. ஆளுநரின் கூற்றுக்கு தனது கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்திருக்கிறார். " ஆளுநருக்கு கோலாப்பூரி காலணியைக் காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது ( time to show him the famous Kolhapuri chappal ). மராட்டிய மக்கள் என்ன பிச்சைக்காரர்களா? ஆளுநரை வீட்டுக்கு அனுப்பும் நேரம் நெருங்கிவிட்டது. மராட்டிய மக்களை இழிவுபடுத்திப் பேசியதற்காக ஆளுநர் உடனே மன்னிப்பு கோர வேண்டும்" என்று உத்தவ் தாக்கரே சொல்லம்புகளை ஏவியிருக்கிறார்.

”ஒன்றிய அரசுக்கு விசுவாசத்தை காட்ட மக்களிடம் வாங்கிக் கட்டிக்கொள்ளும் ஆளுநர்கள்”: முரசொலி கட்டுரை!

மராட்டிய ஆளுநர் இப்படி என்றால், இங்குள்ள ஆளுநரும் சர்ச்சைக் கருத்துகளை வெளியிட்டு, அதன் மூலம் வேண்டுமென்றே எதிர்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.

ஆளுநரின் வேலை, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை வெளியிட்டு, ஒன்றிய அரசுக்கும், அதன் கொள்கை முடிவுகளுக்கும் வக்காலத்து வாங்கி, சுய விளம்பரம் தேடிக் கொள்வதல்ல என்பதை உணர வேண்டும்.

திராவிடம், சனாதனம் குறித்த அரைகுறை கண்டுபிடிப்புகளை மடித்து தனது சட்டைப் பையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒன்றிய அரசுக்கு விசுவாசத்தைக் காட்ட, உதவாக்கரை கருத்துகளைச் சொல்லி, ஊர் மக்களின் எதிர்ப்பையும், ஏளனத்தையும் ஆளுநர்கள் வாங்கிக் கட்டிக் கொள்ளக் கூடாது. அறிஞர் அண்ணா தீர்க்கதரிசி; அதனால்தான், “ஆட்டுக்குத் தாடி அவசியமா?; ஆளுநர் பதவி தேவைதானா?” என்று கேட்டார். அந்தக் கூற்றின் அடிப்படை உண்மையினை நாட்டு மக்கள் இப்போது புரிந்து கொண்டிருக்கிறார்கள்!

- முரசொலி கட்டுரை (01.08.2022)

banner

Related Stories

Related Stories