தமிழ்நாடு

”ஆன்மீகத்திற்கு நாங்கள் எதிரிகள் அல்ல.. ஆனால் இவர்களுக்கு நாங்கள் எதிரி”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

ஆன்மீகத்திற்கு நாங்கள் எதிரிகள் அல்ல என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

”ஆன்மீகத்திற்கு நாங்கள் எதிரிகள் அல்ல.. ஆனால்  இவர்களுக்கு நாங்கள் எதிரி”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (9.7.2022) திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி ஆற்றிய உரை:

இங்கு குழுமியிருக்கக்கூடிய உங்களை பார்க்கிற நேரத்தில் உங்கள் எழுச்சியை, உணர்ச்சியை, ஆர்வத்தை, ஆரவாரத்தை காணுகிற நேரத்தில் குறிப்பாக, பெரும் திரளாக திரண்டிருக்கக்கூடிய அருமை தாய்மார்கள், சகோதரிகள், மகளிர் அணியைச் சார்ந்திருக்கக்கூடியவர்கள், உங்களை எல்லாம் பார்க்கிற நேரத்தில் எனக்கு என்ன தோன்றுகிறது என்று கேட்டால், கொஞ்ச நேரம் பேசாமல், அப்படியே உங்கள் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு வந்திருக்கிறது. எவ்வளவு கட்டுப்பாடு, அதுவும் பெண்களிடத்தில் காணக்கூடிய கட்டுப்பாட்டைப் பார்க்கிறபோது நான் மெய்சிலிர்த்து நிற்கிறேன். தப்பாக நினைத்துவிடக் கூடாது. நான்கு பெண்கள் இருந்தால், அங்கே என்ன கூச்சல் இருக்கும், குழப்பம் இருக்கும், சலசலப்பு இருக்கும், ஒரு கலகலப்பு இருக்கும். ஆனால் ஆயிரக்கணக்கில் திரண்டிருக்கக்கூடிய தாய்மார்கள், பெண்கள் உங்களிடத்தில் காணக்கூடிய இந்தக் கட்டுப்பாட்டை பார்க்கிறபோது இதுதான் திராவிட உணர்வு என்பதை நான் எண்ணிப் பார்க்கிறேன்.

மாபெரும் வரலாற்றுச் சிறப்புகளையும், ஆன்மீக அடையாளங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கக்கூடிய திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் இந்த இனிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உங்களையெல்லாம் சந்தித்துப் உரையாற்றக்கூடிய வாய்ப்பு கிடைத்தமைக்கு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.

பொன்னூர் மலை, பர்வதமலை, கவித்திமலை, திருவண்ணாமலை என, இப்படிப் பல மலைகள் சூழ்ந்த மாவட்டம் இந்தத் திருவண்ணாமலை மாவட்டம்!

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே, மனிதர்கள் வாழ்ந்த தடயங்களைக் கொண்ட மாவட்டம் இது. இங்கு, கற்கால மனிதர்கள், அவர்கள் வரைந்த பாறை ஓவியங்கள், அவர்கள் பயன்படுத்திய பல்வேறு கருவிகள் கண்டறியப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமல்ல, செங்கம் நடுகற்கள்-

பல்லவர் காலக் குடைவரைகள் -

சோழர் காலக் கற்றளிக் கோவில்கள்-

விஜயநகர பெருங்கோவில்கள்

எனப் பண்பாட்டு அடையாளங்களும் பரவிக்கிடக்கும் பெருமைமிகு மாவட்டம் இந்த திருவண்ணாமலை மாவட்டம். இந்த மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஜவ்வாதுமலை சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இம்மலையை ஒட்டி அமைந்துள்ள அணைகளும், தென்பெண்ணையாற்றின் குறுக்கே அமைந்துள்ள சாத்தனூர் அணையும் புகழ்பெற்ற சுற்றுலா மையமாக அமைந்திருக்கிறது.

217 அடி உயரம் கொண்ட அந்த இராஜகோபுரத்தை உடைய இந்த திருவண்ணாமலைக்குப் புகழ் சேர்க்கும் வகையில் இந்த திருவண்ணாமலையை 1989-ஆம் ஆண்டு தனி மாவட்டமாக உருவாக்கியதே நம்முடைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள்தான்!

நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த காலத்தில், இதே திருவண்ணாமலை மாவட்டத்தில், 16 ஆயிரத்து 850 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நான்கரை மணிநேரம் மேடையிலே நின்று, என் கையால் நம்முடைய மகளிர் அணி சகோதரிகளுக்கு சுழல்நிதி வழங்கிய காட்சிகள் என் நெஞ்சில் இன்றைக்கு நிழலாடிக் கொண்டிருக்கிறது!

இத்தகைய புகழ்மிக்க திருவண்ணாமலை மாவட்டத்தில் எழுச்சியோடு, ஏற்றத்தோடு, அழகோடு இந்த அரசு விழாவை ஏற்பாடு செய்துள்ள மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் இருக்கக்கூடிய எ.வ.வேலு அவர்களையும், மாண்புமிகு சட்டப் பேரவையின் துணைத் தலைவர் பிச்சாண்டி அவர்களையும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், குறிப்பாக மாவட்டத்தின் ஆட்சித் தலைவர் மற்றும் இந்த மாவட்ட அரசு அதிகாரிகள் அத்தனை பேரையும் நான் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன், ஏன் அவர்களுக்கெல்லாம் என்னுடைய இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே, 'எதிலும் வல்லவர் வேலு, அதனால்தான் அவர் எ.வ.வேலு' என்று நான் குறிப்பிட்டிருக்கிறேன்.

”ஆன்மீகத்திற்கு நாங்கள் எதிரிகள் அல்ல.. ஆனால்  இவர்களுக்கு நாங்கள் எதிரி”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

இளைஞர் அணி என்ற அந்த அமைப்புக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய இளைஞர் அணிக்கு அறக்கட்டளை அமைக்கப்பட்டபோது 55 லட்சம் ரூபாய் நிதி வழங்கியதைப் போல, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, முப்பெரும் விழாவை மாபெரும் மாநாட்டைப் போல நடத்தி கலைஞர் அறக்கட்டளைக்கு ஏழை, எளிய நலிந்தோருக்கு வழங்க 55 லட்சம் ரூபாய் நிதியை அளித்தவர்தான் எ.வ.வேலு அவர்கள்!

நிதியளித்ததைவிட, தன்னைக் கலைஞருக்காகவும், எனக்காகவும் ஒப்படைத்துக் கொண்டவர் எ.வ.வேலு அவர்கள். நேற்று மாலை நடைபெற்ற விழாவில், வேலு அவர்களை நான் குறிப்பிட்டுச் சொன்னேன், 'விழா வேந்தன்' என்று நான் குறிப்பிட்டேன். அந்தளவுக்கு கட்சி நிகழ்ச்சிகளாக இருந்தாலும், அரசு நிகழ்ச்சிகளாக இருந்தாலும் அல்லது வேறு நிகழ்ச்சிகள் இருந்தாலும், எல்லாவற்றிலும் தனி முத்திரையைப் பதிக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றவர் எ.வ.வேலு அவர்கள்.

இன்றைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெறக்கூடிய பல்வேறு மாபெரும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால்,

மதுரையில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் பெயரால் மாபெரும் நூலகம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

சென்னையில் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை அமையப் போகின்றது.

இன்னும் பெருமையாகச் சொல்ல வேண்டுமென்றால், சென்னை வங்கக் கடலோரம் வாஞ்சைமிகு தாலாட்டில், தனது அண்ணனுக்கு அருகில் துயில் கொள்ளும், நம்முடைய தலைவர் கலைஞருக்கு நினைவகம் நிறுவப்பட்டு வருகிறது.

கடந்தகால ஆட்சியாளர்களால் முடக்கி வைக்கப்பட்ட மாபெரும் திட்டமான மதுரவாயல் – துறைமுகம் உயர்மட்டச் சாலை அமையப் போகின்றது.

கிழக்குக் கடற்கரைச் சாலை விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது.

இப்படி எண்ணற்ற பெரும் பணிகள்..!

இவை அனைத்தையும் செயல்படுத்தும் பணிகளில் தன்னை ஒப்படைத்துக் கொண்டிக்கக்கூடியவர் தான் எ.வ.வேலு அவர்கள். கலைஞர் நினைவகமாக இருந்தாலும், மதுரை நூலகமாக இருந்தாலும், கிண்டி மருத்துவமனையாக இருந்தாலும், இவையெல்லாமே வருங்காலத்தில் தமிழ்நாட்டின் அடையாளங்களாக மாறப் போகின்றது!

அதனைச் சிறந்த செயல்வீரருக்கான அடையாளமாக இருக்கின்ற வேலு அவர்கள் அதை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். தனிப்பட்ட அவருக்கு மட்டுமல்ல, எனக்கு மட்டுமல்ல, நம் அரசுக்கு மட்டுமல்ல, நம் மாநிலத்துக்கே பெருமைமிகு அடையாளங்களாக இவை அமையப் போகின்றது.

”ஆன்மீகத்திற்கு நாங்கள் எதிரிகள் அல்ல.. ஆனால்  இவர்களுக்கு நாங்கள் எதிரி”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

நேற்று மாலை, திருவண்ணாமலை நகரத்தில் பேரறிஞர் அண்ணா பெயரிலான நுழைவு வாயிலையும், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் திருவுருவச் சிலையையும் திறந்து வைத்தேன்.

தீபங்களால் நிறைந்த திருவண்ணாமலையே மின் விளக்குகளால் ஜொலித்து, பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும், தலைவர் கலைஞர் அவர்களுக்கும் சிறப்புச் செய்ய இந்தத் திருவண்ணாமலை நகரம் எந்த வகையில் எல்லாம் பொருத்தமானது என்பதை அந்த விழாவில் நான் குறிப்பிட்டுப் பேசினேன்.

1963-ஆம் ஆண்டு நடந்த திருவண்ணாமலை இடைத்தேர்தல்தான்

1967-ஆம் ஆண்டு நடந்த ஆட்சி மாற்றத்துக்கு அடித்தளம் அமைத்தது என்பதையும் நான் குறிப்பிட்டுச் சொன்னேன். அதேபோல், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் என்னுடைய பயணத்தை நான் தொடங்கினேன்.

கோடிக்கணக்கான மக்களைச் சந்திக்கும் எனது பயணத்தின் தொடக்கம் என்பது இதே திருவண்ணாமலையில் இருந்து தான் நான் தொடங்கினேன்.

திருவண்ணாமலையில் இருந்து தொடங்கிய அந்தப் பயணமானது, முதலில் பயணமாகத் தொடங்கியது. பின்பு, வெற்றிப் பயணமாக மாறியது. இப்பொழுது, ஆட்சிப்பயணமாக தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.

அதற்கு அடித்தளம் இட்ட இடம் தான் இந்த திருவண்ணாமலை என்பதை நான் பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன். இதற்குக் காரணமான இந்த திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு முதலில் என்னுடைய நன்றியை நான் இதயபூர்வமாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

கழக ஆட்சி அமைந்தாலே, திருவண்ணாமலை மாவட்டமானது புத்தெழுச்சி பெறும். அதை இங்கே கூடியிருக்கிற மக்களாகிய உங்கள் முகங்களில் நான் பார்க்கிறேன்.

திருவண்ணாமலை மாவட்டத்தை உருவாக்கியதே தலைவர் கலைஞர் அவர்கள்தான் என்று நான் முன்பே சுட்டிக் காட்டினேன்.

மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அமைத்துக் கொடுத்தவரும் கலைஞர்தான்.

சாத்தனூர் அணையைப் புனரமைப்பு செய்ததும் கழக ஆட்சியில் தான்!

திருவண்ணாமலையை தனிப்போக்குவரத்து மண்டலமாக ஆக்கியதும் கழக ஆட்சியில் தான்!

120 கோடி ரூபாயில் புதிய மருத்துவக் கல்லூரி

செய்யாறு சிப்காட் தொழிற் பூங்கா

ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடம்

காரப்பட்டில் அரசு பட்டயக் கல்லூரி

திருவண்ணாமலை நகருக்கு புதிய பாதாள சாக்கடைத் திட்டம்

திருவண்ணாமலை நகராட்சிக்கு 36 கோடி ரூபாயில் கூட்டுக் குடிநீர்த் திட்டம்

புதிய விளையாட்டு அரங்கம், புதிய நீச்சல் குளம்

கலசப்பாக்கம் - மிருகண்டாநதி நீர்த்தேக்கம்

செங்கம் - குப்பநத்தம் அணை

போளூர் - செண்பகத்தோப்பு அணை

தண்டராம்பட்டு தனி தாலுகா

தண்டராம்பட்டில் நுகர்பொருள் வாணிபக் கிடங்கு

புதுப்பாளையத்துக்கு சாத்தனூர் அணை கூட்டுக் குடிநீர்த் திட்டம்

அம்மாபாளையத்தில் 60 கோடி ரூபாயில் பால்பவுடர் தொழிற்சாலை

வந்தவாசியில் அரசுக் கல்லூரிக்கு 8 கோடி ரூபாயில் புதிய கட்டடம்

ஆரணியில் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி

- இப்படி பல்வேறு திட்டங்களைச் செய்து கொடுத்த அரசு தான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அரசு.

இதில் மிக முக்கியமானது, 1975-ஆம் ஆண்டு அண்ணாமலையார் கோவில் அந்தத் திருப்பணியை முழுமையாக செய்தது கழக அரசுதான். இந்தத் திருப்பணிக்கு தனிக்குழுவை அமைத்து முதலமைச்சர் அவர்கள் அதற்காக அக்கறை எடுத்துக் கொண்டார். அன்றைய நாளில் ஒரு பெரும் தொகையாக,

7 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அதற்காக நிதி ஒதுக்கினார்.

”ஆன்மீகத்திற்கு நாங்கள் எதிரிகள் அல்ல.. ஆனால்  இவர்களுக்கு நாங்கள் எதிரி”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

மேலும், ஆணையர் பொதுநல நிதியில் இருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார். தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் இருந்து நன்கொடைகள் கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்தார்.

இதைவிட முக்கியமாக இன்னொன்று, அண்ணாமலையார் கோவிலைப் பாதுகாத்ததும் கழக அரசுதான். அண்ணாமலையார் கோவிலானது பழம்பெருமையும், அழகியலும் பிரம்மாண்டமும் கொண்டது.

அதனுடைய தொன்மை, கம்பீரம் காரணமாக அதைத் தொல்பொருள் துறை 2004-ஆம் ஆண்டு கையகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றபோது பிரச்சாரத்திற்காக தலைவர் கலைஞர் அவர்கள் திருவண்ணாமலைக்கு வந்தார். அவரை ஊர் பொதுமக்களும், பக்தர்களும் வந்து சந்தித்து கோரிக்கை வைத்தார்கள்.

“தொல்பொருள் துறை கட்டுப்பாட்டுக்குள் அது போனால், ஆன்மிகப் பணிகள் தொய்வடையும்”- என்று சொன்னார்கள். அப்போது தலைவர் கலைஞர் சொன்னார், “அடுத்து அமையும் ஆட்சியின் கவனத்துக்கு இதனைக் கொண்டு செல்வேன்” என்று உறுதி தந்தார்.

அன்றைக்கு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 வெற்றிப் பெற்றோம். ஒன்றியத்தில் அமைந்த காங்கிரசு அரசுடன் பேசி, அண்ணாமலையார் கோவிலில் பக்தர்களின் எண்ணத்திற்கேற்ப மீட்டுக் கொடுத்தது திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை மறந்து விடக் கூடாது. இன்றைக்கு, மதத்தின் பேரால் அரசியல் நடத்துபவர்களுக்கு இந்த வரலாறு எல்லாம் தெரியாது.

அண்ணாமலையார் கோவில் என்பது தமிழ்நாட்டின் சொத்து. அதைக் கட்டிக் காத்தது கழக அரசு! இவ்வாறு கழக அரசுக்கும் திருவண்ணாமலைக்கும் நீண்ட உறவு இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.

இன்றைய அரசு விழாவில், பல்வேறு துறைகளின் சார்பாக, மொத்தம்

1 லட்சத்து 71 ஆயிரத்து 169 பயனாளிகளுக்கு 693 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருக்கிறது.

70 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான 91 முடிவுற்ற பணிகள் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

340 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 246 புதிய பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு அரசுத் திட்டங்கள் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக, நீர்மேலாண்மைப் பணிகளை மிகச் சிறப்பாக செய்திருக்கக்கூடிய மாவட்டமாக இந்த மாவட்டம் அமைந்திருக்கிறது. வீடியோவில் பார்த்தீர்களே.

”ஆன்மீகத்திற்கு நாங்கள் எதிரிகள் அல்ல.. ஆனால்  இவர்களுக்கு நாங்கள் எதிரி”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

நீர் மேலாண்மையை ஒரு பேரியக்கமாகவே நடத்திக் காட்டி இருக்கிறீர்கள். 1,121 பண்ணைக் குட்டைகளை 30 நாட்களில் அமைத்து சாதனை படைத்த மாவட்டம் தான் இந்தத் திருவண்ணாமலை மாவட்டம்.

தற்போது இந்த பண்ணைக் குட்டைகளில் மீன்வளத் துறை மூலமாக, மீன் குஞ்சுகள் இன்றைக்கு வளர்க்கப்பட்டு வருகிறது.

பண்ணைக் குட்டைகளின் கரைகளில் மரம், காய்கறி, பழச்செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், உழவர்களுக்குக் கூடுதல் வருமானம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நடவடிக்கைகள் காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தின் நிலத்தடி நீர்மட்டம் 6 முதல் 7 அடி வரை உயர்ந்துள்ளதாக ஆய்வில் உறுதி செய்யப்பட்டிருக்கு.

இது மிகப்பெரிய சாதனை.

நீரின்றி அமையாது உலகு!

மனிதரின் மிக முக்கியமான தேவையாக இருப்பது நீர்தான். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திக் காட்டுவதன் மூலமாக மக்களின் உயிர்ப் பிரச்சினையான குடிநீர்த் தேவையில், மாபெரும் சாதனையைச் செய்துள்ள திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தை உங்களின் அனைவரின் சார்பிலே, தமிழக அரசின் சார்பிலே நான் மனதார பாராட்டுறேன், வாழ்த்துறேன்.

இத்தகைய சாதனையை அனைத்து மாவட்டங்களும் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் என்கின்ற முறையிலே கேட்டுக் கொள்கிறேன்.

இந்திய அளவில் முதல்முறையாக தெள்ளார் ஊராட்சி ஒன்றியத்தில், சுய உதவிக் குழுக்களின் வட்டார அளவிலான கூட்டமைப்பு மூலம் பாரத் பெட்ரோலிய நிறுவனத்துடன் இணைந்து பெட்ரோல் மற்றும் டீசல் சில்லரை விற்பனை மையம் (Petrol Bunk) அமைக்கப்பட்டு நல்ல முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த விற்பனை மையம் 834 மகளிர் சுய உதவிக்குழுக்களின் 11 ஆயிரத்து 175 உறுப்பினர்களுடன் சிறப்பாக செயல்பட்டு மாதம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் லாபம் ஈட்டுகிறது என்பதை அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

இதேபோல் இந்திய அளவில் முதல்முறையாக, ஜவ்வாது மலையில் பழங்குடியின மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 2500 பேர் சேர்ந்து, உற்பத்தியாளர் நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்கள். மலைப் பொருட்களைக் கொண்டதாக, இந்த நிறுவனம் இருக்கிறது. இது மிக நல்ல முயற்சி. பழங்குடியின மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு எனது பாராட்டுகளைத் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இதே போல் பல்வேறு முன் முயற்சிகளை இந்த மாவட்ட நிர்வாகம் செய்து வருவதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

நிலக்கடலை சாகுபடியில் மாநிலத்தில் முதலிடம் பெற்றிருக்கிறது இந்த திருவண்ணாமலை மாவட்டம்.

நெல் உற்பத்தியில் மூன்றாவது இடம் பெற்றிருக்கிறது.

மலைக்குன்றுகளைப் பசுமையாக்கும் முன்மாதிரி முயற்சியாக, “பசுமைக் குன்றுகள் திட்டம்” என்ற ஒரு அற்புதமானத் திட்டம் இந்த மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின்கீழ் 4 மலைக்குன்றுகள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஒருங்கிணைந்த பண்ணைப் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

ஜமுனாமரத்தூர் மலைப்பகுதியில் தேனீப் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

புறக்கடைக் கோழிவளர்ப்பு கொட்டகை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

தோட்டக்கலை நாற்றங்கால் பண்ணைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய சிறப்புப் பணிகளில் திருவண்ணாமலை மாவட்டத்தைப் போல மற்ற மாவட்டங்களும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

வழக்கமான திட்டங்களையும் தாண்டிய, சிறப்புத் திட்டங்களில் ஒவ்வொரு மாவட்டங்களும் தனிக் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கும். அதை மையப்படுத்தி திட்டங்கள் வகுக்கப்படவேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏராளமான ஆன்மீகப் பணிகளும் நடந்து வருகிறது.

அருள்மிகு திருஅண்ணாமலையார் வலம் வரும் நான்கு மாடவீதி சாலைகள், கான்கிரீட் சாலைகளாக தரம் உயர்த்தப்பட வேண்டுமென்று நான் ஏற்கனவே சட்டபேரவையில் அறிவித்திருக்கிறேன்.

அதன் முதல் கட்டமாக, தற்போது காந்தி சிலை முதல் திருவூடல் தெரு சந்திப்பு வரை ரூபாய் 15 கோடி மதிப்பீட்டில் 1 கி.மீ தூரத்திற்குப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

அருணாசலேசுவரர் திருக்கோவில் வளாகத்தில் முதலுதவி மையத்தை காணொலி மூலமாக நான் ஏற்கனவே தொடங்கி வைத்தேன்.

ஓதுவார் பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்டு மாணவர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

1 கோடியே 14 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கோயில் மின்வசதி மேம்படுத்தப்பட்டு வருகிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியில் 37 கோவில்களின் திருப்பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

கிராமப்புற பகுதியில் உள்ள 37 கோவில்களில் திருப்பணி செய்யவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

செய்யாறு அருள்மிகு பட்சீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான 5 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 4.28 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டிருக்கிறது.

திருவண்ணாமலை நகரம் அருள்மிகு வடவீதி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலம் மீட்கப்பட்டிருக்கிறது.

இந்த மாவட்டத்தில் மட்டும், ஓராண்டில் 13 திருக்கோயில்களின் குடமுழுக்கு விழா சிறப்பாக, விமரிசையாக நடந்திருக்கிறது.

131 திருக்கோயில்களில் ரூ.6,094 லட்சம் மதிப்பீட்டிலான திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்போதும் என்னிடம் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. என்ன கோரிக்கை?

”ஆன்மீகத்திற்கு நாங்கள் எதிரிகள் அல்ல.. ஆனால்  இவர்களுக்கு நாங்கள் எதிரி”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

அருணாச்சலேசுவரர் திருக்கோயிலில் வழிபாடு செய்யவும், கிரிவலம் செல்லவும், தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி, சித்ரா பவுர்ணமி மற்றும் தீபத்திருவிழாவின் போதும் கிரிவலம் செல்வதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் மற்ற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகிறார்கள். அந்த கிரிவலத்திற்கு வருகை தரக்கூடிய பக்தர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் இந்த அரசு நிச்சயமாக சொல்கிறேன், நிறைவேற்றித் தரும்.

திருவண்ணாமலை கிரிவலப்பாதை என்பது திருவண்ணாமலை நகராட்சி, அத்தியந்தல், ஆணாய்ப் பிறந்தான், அடி அண்ணாமலை, வேங்கிக்கால் ஆகிய 4 ஊராட்சிகளை உள்ளடக்கிய 14 கி.மீ தொலைவு கொண்டது. எனவே, கிரிவலப் பாதையில் செல்லும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

நிதிப் பற்றாக்குறை காரணமாக மின் விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள், பொது அறிவிப்பு அமைப்பு ஆகியவற்றில் ஏற்படும் பழுதுகளும் உடனுக்குடன் சரிசெய்ய இயலாத நிலை இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு, அறநிலையத் துறையும், உள்ளாட்சி அமைப்பையும் இணைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஒரு குழு ஏற்படுத்தி, அந்த குழுவிற்கு, இந்தத் தொடர் செலவினங்களை முறைப்படுத்தி கண்காணிக்கவும் ஆவன செய்யப்படும் என்பதை நான் இங்கே அறிவிக்கிறேன்.

அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்திலும், வேலூர் மாவட்டத்திலும், இருக்கக்கூடிய ஜவ்வாது மலைப் பகுதியில் சுமார் 75000 பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் வாழக்கூடிய 20 மலைக் கிராமங்கள் இணைக்கக்கூடிய பரமனந்தல் ஜமுனாமுத்தூர் அமிர்த சாலையை மேம்படுத்த வேண்டுமென்று இந்த வழியாக போதிய பேருந்து வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டுமென்றும் இவர்கள் நீண்ட காலமாக கோரிக்கையை வைத்து வருகிறார்கள். இந்த கோரிக்கையை ஏற்று இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து வனத் துறையினுடைய அனுமதியைப் பெற்று 140 கோடி ரூபாய் செலவில் அது அகலப்படுத்தப்படும், மேம்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவையெல்லாம் மதத்தை வைத்து அரசியல் செய்கின்ற கண்களுக்குத் தெரியாது. மதத்தை வைத்து அரசியல் செய்கின்றவர்களுக்கு, அவர்கள் கண்களுக்கெல்லாம் இது தெரியாது. ஏனென்றால் அவர்கள் உண்மையான ஆன்மீகவாதிகள் அல்ல, அவர்கள் உண்மையான ஆன்மீக வியாதிகள்! ஆன்மீகப் போலிகள்! ஆன்மீகத்தைத் தங்களது அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தக்கூடிய எண்ணத்தைக் கொண்டவர்கள்!

நாங்கள் மதத்தை வைத்து கட்சி நடத்தவில்லை! கட்சியானாலும், ஆட்சியானாலும் மக்கள் முன் நின்று நாங்கள் ஆட்சி நடத்துறோம், கட்சி நடத்துகிறோம்!!

அதுதான் அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்துத் தொழில் வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய திராவிட மாடல் அரசை இன்றைக்கு நாம் நடத்தி வருகிறோம். அந்த அடிப்படையில்தான் இந்து சமய அறநிலையத் துறை மூலமாகவும் சிறப்பான பணிகளை இந்த அரசு இன்றைக்கு செய்து கொண்டிருக்கிறது.

கோவிலுக்குத் திருப்பணி செய்வது திராவிட மாடலா? என்று சிலர் கேட்கிறார்கள், கேள்வி எழுப்பி வருகிறார்கள். அனைத்துத் துறையையும் சமமாக வளர்ப்பதுதான் ‘திராவிடமாடல்’ என்று நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன்!

இன்னும் சொன்னால், திராவிட இயக்கத்தின் தாய்க் கழகமான நீதிக்கட்சி ஆட்சி காலத்தில்தான், இந்துசமய அறநிலையத் துறை சட்டமே, சட்டமே போட்டோம், 1925-ஆம் ஆண்டு அந்த சட்டம் உருவாக்கப்பட்டது.

எதற்கு கோவில்களை முறைப்படுத்துவதற்காக, ஒரு சட்டம் வேண்டுமென்று ஆன்மீக எண்ணம் கொண்டவர்கள் கோரிக்கை வைத்தபோது அதனை ஏற்று, சட்டம் போட்ட ஆட்சிதான் நீதிக்கட்சியின் ஆட்சி.

எது திராவிட மாடல்? என்று பிற்போக்குத்தனங்களுக்கும் பொய்களுக்கும் பெருமை எனும் முலாம் பூசி பேசுபவர்கள் இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆன்மீகத்தின் பெயரால் இன்றைக்கு அவர்கள் அரசியல் நடத்த முயற்சிக்கிறார்கள். ஆன்மீகத்திற்கு நாங்கள் எதிரிகள் அல்ல! ஆன்மீகத்தின் பெயரால் மனிதர்களை சாதியால், மதத்தால் பிளவுபடுத்துபவர்களுக்குத்தான் அவர்களுக்கு நாங்கள் எதிரிகள். மனிதர்களைப் பிளவுபடுத்தும் கருவியாக ஆன்மீகம் இருக்க முடியாது. மனிதர்களைப் பிளவுபடுத்துவதற்கு ஆன்மீகத்தை பயன்படுத்துபவர்களும் உண்மையான ஆன்மீகவாதிகளாக அவர்கள் நிச்சயமாக இருக்க முடியாது.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பதுதான் எங்கள் அறநெறி!

ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பதுதான் எங்கள் அறநெறி!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதுதான் எங்கள் அறநெறி!

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் - அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு - என்பதுதான் எங்கள் அறநெறி.

அத்தகைய அறநெறியைக் கொண்ட ஆட்சியை நாங்கள் நடத்தி வருகிறோம்.

அறம் என்றால் என்னவென்றே தெரியாத, அறிவுக்கு ஒவ்வாத மூடக்கருத்துகளை முதுகில் தூக்கிச் சுமந்துக் கொண்டிருக்கும் சிலருக்கு போலியான பிம்பங்களைக் கட்டமைக்க வேண்டுமானால் உளறல்களும் பொய்களும் தான் தேவை!

மக்களுக்குத் தேவையான கல்வி - சுகாதாரம் - உள்கட்டமைப்பு வசதிகள் - வேளாண்மை – தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புகள் - புதிய தொழில்கள் - புதிய முயற்சிகள் என்று தமிழ்நாடும் தமிழினமும் முன்னேற சிந்தித்து செயல்படுவதுதான், திராவிட முன்னேற்றக் கழகம்! அதுதான் திராவிட அரசியல் மரபு!

அறிவார்ந்த யாரும், எவரும் இந்த அரசுக்கு ஆலோசனைகள் சொல்லலாம். அதனை நாங்கள் செயல்படுத்துவோம்.

அறிவார்ந்தவர்கள் பேசுவதை மட்டுமே நாம் காதில் கேட்க வேண்டும்!

நமக்கு ஆக்கப்பூர்வமான பணிகள் காத்துக் கிடக்கிறது!

இது தேர்தல் காலம் அல்ல!

மக்களுக்கு நன்மை செய்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ள காலம் இது.

பொய்யும் புரட்டும் மலிவான விளம்பரம் தேடும் வீணர்களைப் பற்றி ஐ டோன்ட் கேர்!

நான் மட்டுமல்ல-

நீங்கள் ஒவ்வொருவரும்-

'ஐ டோண்ட் கேர்' என்று சொல்லி நகர வேண்டும்!

அப்படி பொய்களை அநாதைகளாக விட்டு, உண்மை எனும் வெளிச்சத்தைத் துணையாகக் கொண்டு நடந்தாலே, நாம் முன்னேறலாம்! நம்முடைய இலக்குகளை அடையலாம்!

நான் இங்கே இருக்கக்கூடிய மக்கள் பிரதிநிதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் சொல்ல விரும்புவது, காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது என்பதை யாரும் மறக்க வேண்டாம்!

கலைஞர் அவர்கள் சொல்வார் "கோப்புகள் சிகப்பு நாடாவிலே கட்டப்பட்டு உறங்கிக் கொண்டிருக்கும்போது, ஊழல் எழுந்து உட்கார்ந்து ஊர் சுற்றப் புறப்பட்டு விடுகிறது" என்று குறிப்பிடுவார். அதை மனதில் கொண்டு மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை எந்த கோப்பும், எந்தப் பணியும் தேங்க விடக்கூடாது என்ற எண்ணத்தோடு பணியாற்றுங்கள்.

”ஆன்மீகத்திற்கு நாங்கள் எதிரிகள் அல்ல.. ஆனால்  இவர்களுக்கு நாங்கள் எதிரி”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

இதனை அனைத்து மட்டத்திலும் உறுதி செய்வதற்காகத் தான், எத்தனை அலுவல்களுக்கு நடுவிலும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் நான் திடீர் ஆய்வுகளை மேற்கொள்கிறேன் என்றால், இது தான் காரணம்.

ஏனென்றால், மக்கள்தான் நம் எஜமானர்கள்!

இதே திருவண்ணாமலையில், 1957-ஆம் ஆண்டு நடந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பேரறிஞர் அண்ணா அவர்கள், குறிப்பிட்டாரே, நேற்றைக்கு மாலையில் சொன்னேன்.

''எங்களுக்கு இந்த உலகத்தில் இரண்டு எஜமானர்கள்தான் உண்டு. ஒன்று எங்களின் மனச்சாட்சி. மற்றொன்று இந்த நாட்டு மக்கள்" என்று சொன்னார்.

என்னுடைய மனச்சாட்சிக்கு விரோதம் இல்லாமல் நாங்கள் மக்கள் பணியாற்றி வருகிறேன். என் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. உங்கள் நம்பிக்கையைத்தான் நான் எல்லாவற்றையும்விட மேலானதாக நினைக்கிறேன்.

என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை என்பது, தனிப்பட்ட என் மீதான நம்பிக்கை மட்டுமல்ல. ஒடுக்கப்பட்டிருந்த இந்தத் தமிழினம் ஒளிபெற, உதயசூரியன் என உதித்த, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை. அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற என்றும் உங்களில் ஒருவனாக உழைப்பேன்!

பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் காட்டிய கொள்கைகளின் வழி நடப்போம்!

அனைத்து வளங்களும் கொண்ட மாநிலமாகத் இந்தத் தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டுவோம்!

திராவிட மாடல் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலையை அடைவோம்! என்று கூறி விடைபெறுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories