சகிப்பின்மையையும், வெறுப்பு அரசியலையும் வேரோடும் வேரடி மண்ணோடும் வெட்டி வீழ்த்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் முகமது நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திப் பேசிய பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் நுபூர் சர்மாவைக் கண்டித்து உலகின் அனைத்து இஸ்லாமிய நாடுகளும் கொதித்து எழுந்தன. இந்தியா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரின. பன்னாட்டு அளவில் கடும் கண்டனங்கள் எழுந்ததால் பா.ஜ.க. விலிருந்து நுபூர் சர்மா நீக்கப்படுவதாக அக்கட்சி அறிவித்தது. ஆனால் அவரை கைது செய்யவோ, சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளவோ பா.ஜ.க. அரசு முன்வரவில்லை.
ஆனால் நுபூர் சர்மா இறைதூதர் நபிகள் பற்றி பேசிய கருத்தையும், அதனை ட்விட்டரில் ஆதரித்து பதிவு செய்த டெல்லி பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நவீன்குமார் ஜிண்டால் பற்றியும் இணையதள செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த முகமது ஜூபைர், ட்விட்டரில் பதிவு செய்து வெளிப்படுத்தியதால், அவர் மீது வழக்குத் தொடர்ந்து கைது செய்துள்ளது டெல்லி காவல்துறை.
உலக அரங்கில் இந்தியாவுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்திய நுபூர் சர்மாவைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்த பா.ஜ.க. அரசு, ஊடகவியலாளர் என்ற முறையில் அவரது விமர்சனத்தை மக்கள் கவனத்துக்குக் கொண்டுவந்த முகமது ஜூபையர் கைது செய்யப்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.
நுபூர் சர்மாவின் விமர்சனத்தை ஆதரித்து ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல் கடை நடத்தி வந்த கண்ணையா லால் டெலி என்பவர் கடந்த ஜூன் 10ஆம் தேதி, சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து இருந்தார்.
அதைக் கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் கன்னையா லால் மீது காவல்துறையில் புகார் தெரிவித்து இருந்தனர். இஸ்லாமிய அமைப்புகள் மிரட்டுவதாகவும், உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் கன்னையா லால் காவல்துறையில் புகார் கூறி இருந்தார்.
இதனிடையே ஜூன் 28 ஆம் தேதி தையல் கடையைத் திறந்து பணி செய்து கொண்டிருந்த கன்னையா லாலை இழுத்துத் தெருவில் போட்டு, அவரது தலையைத் துண்டித்துக் கொலை செய்த இருவர், அக்கொடூரச் செயலை ஒளிப்பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவாக்கி பகிரங்கமாக வெளியிட்டுள்ளனர்.
துடி துடிக்கத் தலையை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிய முகமது ரியாஸ் அக்தரி, கவுஸ் முகமது இருவரையும் காவல்துறையினர் கைது செய்து இருக்கின்றனர். ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகள் செய்வதைப்போல உதய்பூரில் கன்னையா லால் தலையை வெட்டி, அதை பகிரங்கமாக சமூக வலைதளங்களில் பதிவேற்றி இருக்கும் கொடூரம் கடும் அதிர்ச்சி அளிக்கிறது.
இதுபோன்ற பயங்கரவாத நடவடிக்கைகளை ஒருபோதும் இந்நாட்டில் அனுமதிக்க முடியாது. இச்செயலை பல இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் செய்து இருப்பது ஆறுதல் தருகிறது. மத அடிப்படை வாதம் என்பது இருபுறமும் கூர்மையுள்ள கத்தி போன்றது என்பதை மதவெறியர்கள் யாராக இருந்தாலும் உணர வேண்டும். சகிப்பின்மையையும், வெறுப்பு அரசியலையும் வேரோடும் வேரடி மண்ணோடும் வெட்டி வீழ்த்த வேண்டும்.