தமிழ்நாடு

"விளிம்பு நிலை மக்களின் தேவையை பூர்த்தி செய்வதுதான் திராவிட மாடல்".. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கைத் தேவையையும் பூர்த்தி செய்வதுதான் திராவிட மாடல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"விளிம்பு நிலை மக்களின்  தேவையை பூர்த்தி செய்வதுதான் திராவிட மாடல்".. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (08.06.2022) புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி ஆற்றிய உரை:-

நான் புதுக்கோட்டைக்கு வந்திருக்கிறேன். சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தீட்டப்பட்டிருக்கக்கூடிய திட்டங்களுக்கு, அதற்கான உத்தரவுகளை எல்லாம் அந்தக் கோட்டையிலிருந்து பிறப்பித்து, அதை நிறைவேற்றுவதற்காக “புதுக்” கோட்டைக்கு வந்திருக்கிறேன்.

ஒரு காலத்தில் திருச்சி மாவட்டத்தோடு இருந்தது இந்த புதுக்கோட்டை. 1974-ஆம் ஆண்டு அதனை பிரித்து, புதுக்கோட்டையை தனி மாவட்டமாக ஆக்கியவர் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். அப்போது, புதுக்கோட்டை அரண்மனை மாளிகையை விலைக்கு வாங்கி, மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக மாற்றி, அதற்கு இராஜா கோபால தொண்டைமான் மாளிகை என பெயர் சூட்டினார் தலைவர் கலைஞர் அவர்கள்.

இன்றைக்கு புதுக்கோட்டையில் உள்ள 6 தொகுதிகளில், 5 தொகுதிகளை மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வென்று, இந்த அரசின் கோட்டையாக இந்த புதுக்கோட்டை மாறியிருக்கிறது!

5 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், இந்த மாவட்டத்தில் உள்ள தொகுதி மக்களுக்காக, ஏன், இந்த மாநிலத்தில் உள்ள 234 தொகுதி மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி, பாடுபட்டு வரக்கூடிய அரசினுடைய முதலமைச்சராக நான் இங்கு வந்திருக்கிறேன்.

எந்தக் கோட்டையாக இருந்தாலும் அது ஒரு நாள் பழைய கோட்டையாக ஆகிவிடும். ஆனால் எப்போதும் புதிய- கோட்டையாகவே இருப்பது, இந்த புதுக்கோட்டை!

அமைச்சர் ரகுபதி அவர்களும், அமைச்சர் மெய்யநாதன் அவர்களும் இந்த விழாவை ஆட்சித் தலைவரின் ஒத்துழைப்போடு, அரசு அதிகாரிகள், அலுவலர் பெருமக்கள், மக்கள் பிரதிநிதிகளுடைய உற்சாகத்தோடு மிக எழுச்சியோடு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

மெய்யநாதன் அமைச்சரவைக்குப் புதியவராக இருந்ததாலும், அவர் எப்படிச் செயல்படுவார் என்கிற தயக்கம் எனக்கு முதலில் இருந்தது. ஆனால் முதல் முறை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தபோதும், இப்போது ஆட்சிப் பொறுப்பிற்கு வந்ததற்குப் பிறகு தனது துறைக்கான மானியக் கோரிக்கைக்கு பதில் அளித்து பேசிகிறபோது, ஒரு தேர்ந்த அமைச்சராக-இரண்டாவது முறையாக அமைச்சராக அவர் பொறுப்பேற்றிருக்கிறார் என்ற அளவிற்கு அவர் அழகாகப் பேசினார்.

சுற்றுச்சூழல் துறை என்பது கொஞ்சம் டெக்னிக்கலான துறை! இன்றைய உலகில் மிக முக்கியமான துறையும் கூட! அதிலும் தனிப்பட்ட ஆர்வத்தைச் செலுத்தி அந்தத் துறையில் சிறப்பாக ஆளுமையை அவர் செலுத்தி வருகிறார். அதுமட்டுமல்ல, விளையாட்டுத் துறையிலும் தமிழ்நாடு பல்வேறு சாதனைகளைப் படைக்க, அவரது உற்சாகம் காரணமாக அமைந்திருக்கிறது.

அமைச்சர் ரகுபதி அவர்களைப் பற்றி நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை! அரசின் பல்வேறு சட்டங்களை நிறைவேற்றுவதிலும், தமிழக அரசின் வழக்குகளைத் திறம்பட கையாண்டு மாநில உரிமைகளை நிலைநாட்டுவதிலும் திரு. ரகுபதி அவர்களின் பங்கு இன்றியமையாத பங்காக அமைந்திருக்கிறது.

தமிழகத்திற்கு நல்ல அமைச்சர்களைக் கொடுத்த இந்த புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தலைவர் கலைஞரின் பாசத்துக்குரிய மாவட்டமாக இந்த புதுக்கோட்டை மாவட்டம் இருந்த காரணத்தினால்தான்,

புதிய பேருந்து நிலையம்

மகளிர் கல்லூரி

சிப்காட் தொழிற்பேட்டை

சிட்கோ தொழிற்பேட்டை

குடுமியான்மலை அண்ணா பண்ணை

காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம்

புதுக்கோட்டை நகரில் பாதாள சாக்கடைத் திட்டம்

அரசு மருத்துவமனை மற்றும் ராணியார் மருத்துவமனைகளின் புதிய கட்டமைப்புகள்.

- ஆகிய அனைத்தையும் புதுக்கோட்டைக்கு உருவாக்கிக் கொடுத்தார்.

"விளிம்பு நிலை மக்களின்  தேவையை பூர்த்தி செய்வதுதான் திராவிட மாடல்".. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

புதுக்கோட்டை நகராட்சி செலுத்த வேண்டிய குடிநீர்க் கட்டணம் 50 கோடி ரூபாயை செலுத்தி நகராட்சியை கடனிலிருந்து விடுவித்தவர் தான் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். இப்படி புதுக்கோட்டைக்கான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திக் கொடுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.

இத்தகைய புதுக்கோட்டையை உருவாக்கிய ஆட்சிதான், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி! கடந்த ஓராண்டு காலத்தில், ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு அடைந்த பயன்கள் உங்களுக்குத் தெரியும்.

அதில் இந்த புதுக்கோட்டை மாவட்டமும், இந்த மாவட்டத்தின் மக்களான நீங்கள் அடைந்த பயன்களையும் நான் உங்களுக்கு நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட 7 ஆயிரத்து 463 கோரிக்கை மனுக்களில், 3 ஆயிரத்து 614 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

2 லட்சம் எண்ணிக்கையிலான மகளிர்கள் கட்டணமில்லாமல் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் பெற்ற 170 பயனாளிகளின் நகைக்கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது.

4 லட்சத்து 68 ஆயிரத்து 519 குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் தரப்பட்டுள்ளது.

14 வகையான அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை,

4 லட்சத்து 72 ஆயிரத்து 109 பேர் பெற்றிருக்கிறார்கள்.

4 லட்சத்து 82 ஆயிரத்து 187 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு தரப்பட்டிருக்கிறது.

968 முகாம்வாழ் இலங்கை தமிழர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

கொரோனா நோய்த் தடுப்புக்காக – 51 ஆயிரத்து 960 நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்கும் மாத்திரைகள் வழங்கப்பட்டிருக்கிறது.

முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் - 12 லட்சத்து 69 ஆயிரத்து 499 பேர்

இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் - 11 லட்சத்து 35 ஆயிரத்து 783 பேர்

காவல்துறை சார்ந்த 1,716 நபர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வீதம், 85 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்திருக்கக்கூடிய குழந்தைகளுக்கு

3 லட்சம் ரூபாய் நிதியை 110 குழந்தைகள் பெற்றிருக்கிறார்கள்.

316 திருக்கோயில்களில் பணிபுரியும் 316 பூசாரிகளுக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக, 3 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.

திருக்கோயில் புனரமைப்புப் பணிக்காக 1 கோடியே 62 லட்சம் ரூபாய் – இம்மாவட்டத்திலுள்ள 81 கோயில்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், கடந்த ஓராண்டில், 1,254 நபர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் 1 கோடியே 50 இலட்சத்து 48 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

"விளிம்பு நிலை மக்களின்  தேவையை பூர்த்தி செய்வதுதான் திராவிட மாடல்".. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

அதேபோல், ஆதரவற்ற மாற்றுத் திறனாளிகள் 895 நபர்களுக்கு, 1 கோடியே 7 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாயும், கணவரால் கைவிடப்பட்ட 51 பெண்களுக்கு

6 இலட்சத்து 12 ஆயிரம் ரூபாயும் உதவித்தொகை வழங்கப்பட்டிருக்கிறது.

கைம்பெண்களுக்கான உதவித்தொகை – 844 நபர்களுக்கு 1 கோடியே 1 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை 97 நபர்களுக்கு 11 இலட்சத்து 64 ஆயிரம் வழங்கப்பட்டிருக்கிறது.

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள 963 நபர்களுக்கு பணிக்கொடை ரூபாய் 37 கோடியே 97 இலட்சத்து 7 ஆயிரம் வழங்கப்பட்டிருக்கிறது. இப்படி பல்லாயிரக்கணக்கானோர் பல்வேறு திட்டங்களின் மூலமாக பயனடைந்துள்ளார்கள்.

அந்த வரிசையில்தான் இன்றும் இன்னும் சில முக்கியமான திட்டங்களை நான் இங்கே துவக்கி வைக்கிறேன். 81 கோடியே 31 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்றிருக்கக்கூடிய 140 திட்டப்பணிகளை துவக்கி வைத்துள்ளேன்.

ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில், 10 கோடியே 37 இலட்சம் ரூபாய் செலவில், 34 முடிவுற்ற திட்டப் பணிகள் -நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் 3 கோடி ரூபாய் மதிப்பில் 12 பணிகள் -

கறம்பக்குடி பேரூராட்சி வடக்குத் தெரு நியாய விலைக் கடை கட்டடம்- மருத்துவத் துறை சார்பில் 26 பணிகள் - கந்தவர்வக்கோட்டையில் கால்நடை மருத்துவமனைக் கட்டடம் -

புதுக்கோட்டையில் இசைப்பள்ளிக் கட்டடம் - அருள்மிகு முத்துமாரியம்மன் கோவிலுக்கு அடிப்படை வசதிகள் - பள்ளிகளுக்கு அறிவியல் ஆய்வு மையங்கள் -கணினி அறைகள் - அறந்தாங்கியில் நில அளவர் அலுவலகம் புதுக்கோட்டையில் அன்னை சத்தியா நினைவு குழந்தைகள் காப்பகத் திட்டம் அங்கன்வாடி மையங்கள் கோட்டைப்பட்டினத்தில் மீன் உலர் களம் -

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டடங்கள் -

புதுக்கோட்டையில் செயற்கை இழை டென்னிஸ் ஆடுகளம் -

புதுக்கோட்டையில் தொழில் பயிற்சி வளாகத்தில் தங்கும் விடுதிகள்

அண்டக்குளத்தில் சித்த மருத்துவ புதிய கட்டடம்

பிராமணவயல் துணை வேளாண்மை விரிவாக்க மையக் கட்டடம்;

கறம்பக்குடி அரசு கலை கல்லூரியில் வகுப்பறைகள்

இலுப்பூர், இடையப்பட்டியில் குடியிருப்புகள் -

15 இடங்களில் சிறுதானிய விற்பனை நிலையங்கள் என-

மொத்தம் 81 கோடியே 31 லட்சம் ரூபாய் செலவில், 140 பணிகள் முடிவுற்று இன்றைக்கு இந்த விழாவிலே திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

166 கோடியே 84 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 1,399 புதிய திட்டப்பணிகளுக்கு நான் இன்று அடிக்கல் நாட்டியிருக்கிறேன்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தின் முதல் தளத்தில் பார்வையாளர்கள் தங்குவதற்கான சிறப்புக் கட்டடம் -

புதுக்கோட்டை நகர் பகுதிகளில், 14 இடங்களில் உயர் மின் கோபுர விளக்குகள் அமைத்தல் -

பல்வேறு பேரூராட்சிகளில் தார்ச்சாலைகள் அமைத்தல் -

சிறிதும் பெரிதுமான ஊரக உள்ளாட்சிப் பகுதிகளில், 85 கோடியே 77 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1,324 திட்டப் பணிகள்;

வம்பன் கிராமத்தில் புதிய துணை மின் நிலையம் அமைத்தல்

துணை சுகாதார நிலையங்கள் அமைத்தல்

புதிய அங்கன்வாடி மையங்கள் அமைத்தல் -

பிள்ளைத்தண்ணீர் பந்தலில் கால்நடை மருந்தகக் கட்டடம் அமைத்தல் -

ஆதனக்கோட்டை, பேரனூரில் வேளாண்மை விரிவாக்க மையம் கட்டுதல்

துலையனூர், கீழாத்தூர் ஆகிய இரண்டு புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகள் கட்டுதல்

கொடியாற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம்

முத்துக்குடா கடற்கரையில் படகுசவாரி அமைத்தல்

- ஆகிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதாவது 166 கோடியே

84 லட்சம் மதிப்பீட்டில் 1,399 திட்டப்பணிகளுக்கு இன்றைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இவை பொதுமக்கள் அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய திட்டங்களாகும்.

தனிநபர்கள் பயன் பெறக்கூடிய வகையில் 48 ஆயிரத்து 868 பயனாளிகளுக்கு 370 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருக்கிறது.

81 கோடியே 31 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 140 திட்டப்பணிகளைத் திறந்து வைத்திருக்கிறேன்.

இத்திட்டப் பணிகள் மட்டுமல்லாமல், இந்த மாவட்டத்தினுடைய மக்கள் மேலும் பயனடையும் வகையில் பின்வரும் திட்டங்களை இப்போது நான் அறிவிக்கப் போகிறேன்.

திருமயம் பகுதி மக்கள் பயன்பெறக்கூடிய வகையில், 10 கோடி ரூபாய் செலவில், கூடுதல் படுக்கைகள், நவீன அறுவை சிகிச்சை அரங்கம் போன்ற வசதிகளோடு, திருமயம் வட்ட மருத்துவமனை தரம் உயர்த்தப்படும்.

"விளிம்பு நிலை மக்களின்  தேவையை பூர்த்தி செய்வதுதான் திராவிட மாடல்".. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

இந்த மாவட்டத்தில் முக்கிய மீன்பிடிப்பு மையங்களாக இருந்து வரும் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் வாழக்கூடிய மீனவ மக்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், கோட்டைப்பட்டினம் மீன் இறங்குதளம் 15 கோடி ரூபாய் செலவிலும், ஜெகதாபட்டினம் மீன் இறங்குதளம் 15 கோடி ரூபாய் செலவிலும் மேம்படுத்தப்படும். மேலும் ஜெகதாப்பட்டினத்தில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான ஆய்வுப் பணிகளும் மேற்கொள்ளப்படும் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

மொத்தமாகச் சொல்வதாக இருந்தால், மாநிலம் முழுமைக்கும் என்ன தேவை, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என்ன தேவை, ஒவ்வொரு தனிமனிதனின் தேவையும் என்ன என்பதை பார்த்துப் பார்த்துச் செய்யக்கூடிய அரசாக நம்முடைய தமிழ்நாடு அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டைக் கல்வியில், வேலைவாய்ப்பில், தொழில் வளர்ச்சியில், உள்கட்டமைப்பில் சிறப்புற வளர்த்தவர் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். இவை அனைத்தையும் விஞ்சியதாக சாமானியர் வாழ்க்கையைப் பற்றியே, தலைவர் கலைஞர் அவர்கள் நினைத்தார்கள். இந்த அடிப்படையில்தான், இன்றைக்கு உங்களால் உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய இந்த அரசு செயலாற்றிக் கொண்டிருக்கிறது என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஏழை எளிய மக்களில் எத்தனை பேரின் வாழ்க்கைத் தரம் இந்த ஆட்சியால் உயர்ந்தது என்பதை இந்த ஆட்சியின் சாதனையாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

ஏழை - எளிய விளிம்பு நிலை மக்கள் தங்கள் கோரிக்கைக்காக அரசாங்கத்தை சுலபமாக அணுகும் வகையில் அரசு இயந்திரம் செயல்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியினரின் சமூக வாழ்க்கை எவ்வளவு மேன்மை அடைந்திருக்கிறதோ, அதனையே நான் சாதனையாக நினைக்கிறேன்.

அதுமட்டுமல்லாமல், இருளர்கள், நரிக்குறவர்கள் போன்ற சமுதாயத்தைச் சார்ந்திருக்கக்கூடியவர்கள் விளிம்பு நிலை மக்களின் அரசாக இது செயல்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் போன்ற குரலற்றவர்களின் குரலாக இந்த அரசு இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

இத்தகைய மக்களுக்குத் தேவையான அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்து தர வேண்டும் - சிந்தித்துச் சிந்தித்து நிறைவேற்றித் தர வேண்டும் என்று நாம் நினைக்கிறோம்.

வளர்ச்சி என்ற பாதையை டெவலப்மெண்ட் என்ற பொதுவான அர்த்தத்தில் சொல்லவில்லை. மாற்றம், மேன்மை, உள்ளார்ந்த மலர்ச்சி என்ற பண்பாட்டு அடையாளத்துடன் நாங்கள் சொல்கிறோம்.

ஒரு தொழிற்சாலை உருவாவது வளர்ச்சி. அந்தத் தொழிற்சாலை வருவதன் மூலமாக அந்த வட்டாரம் அடையக்கூடிய பயன், அந்த வட்டாரத்தை அடையக்கூடிய வேலைவாய்ப்புகள், அதன் மூலமாக அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் அடையக்கூடிய உயரம், சமூகத்தில் ஏற்படும் மாற்றம் ஆகிய அனைத்தையும் சேர்த்துத்தான் வளர்ச்சி என்று சொல்கிறோம். அத்தகைய வளர்ச்சியை உருவாக்க நாங்கள் நினைக்கிறோம்.

ஒரு பெருந்தொழிற்சாலையை உருவாக்கி, எத்தனை பெண்களுக்கு வேலை கொடுத்துள்ளது? மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் எத்தனை நிறைவேற்றப்பட்டிருக்கின்றன?

ஆகவே, இதைத்தான் கம்பீரமாகச் சொல்கிறோம், இதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று பெருமையோடு சொல்லிக் கொண்டிருக்கிறோம். இதுதான் அதனுடைய உள்ளடக்கம்!

விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கைத் தேவையையும் பூர்த்தி செய்வதுதான் திராவிட மாடல்.

மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமானால், அதிகாரத்துக்கு வந்தாக வேண்டும் என்பதை உணர்ந்ததால், தேர்தலில் குதித்த திராவிட முன்னேற்றக் கழகம், மக்கள்தான் எங்களுக்கு முக்கியமே தவிர, இப்படிப்பட்ட பதவிகள் அல்ல. எத்தகைய திட்டத்தைக் கொண்டு வந்தாலும், அதனை வாக்கு வாங்கக்கூடிய தந்திரம் என்று கொச்சைப்படுத்துபவர்கள் சிலர் இருக்கிறார்கள். வாக்குகளை வாங்குவதற்காகத்தான் இதை எல்லாம் நிறைவேற்றுகிறோம் என்று குற்றம் சாட்டக்கூடியவர்கள், விமர்சனம் செய்யக்கூடியவர்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள்.

நான் கேட்கிறேன், இருளர்களுக்கோ, குறவர்களுக்கோ, மாற்றுத்திறனாளிகளுக்கோ, திருநங்கைகளுக்கோ அவர்களுக்கு வாக்கு வங்கி அதிகமாக இருக்கிறதா? அவர்கள் வாக்கு வங்கி உள்ளவர்களா?

இப்படி வாக்கு வங்கி இல்லாதவர்களது வாழ்க்கைக்கும், அவர்களது சேவைக்கும் உதவிகளைச் செய்யும் அரசு தான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அரசு என்பதை நீங்கள் புரிந்து கொண்டாக வேண்டும். திராவிட முன்னேற்றக் கழக அரசினுடைய நோக்கம் சிந்தனை, செயல் ஆகிய அனைத்தும் மக்கள் நலன்தான், சாதாரண மக்களின் நலன்தான், ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்தான்.

தன்னுடைய வாழ்நாள் முழுக்க கடைசி நாள்வரை, கடைசி நொடிவரை மூத்திரவாளியைச் சுமந்துக் கொண்டு, பகுத்தறிவை ஊட்டி எந்த மக்களின் சுயமரியாதைக்காக தந்தை பெரியார் பாடுபட்டாரோ –

உலக அரசியலை எல்லாம் எடுத்துச் சொல்லி, அரசியல் எழுச்சியையும், தமிழ் உணர்வையும் பேரறிஞர் அண்ணா அவர்கள் எந்த மக்களுக்காக உணர்வு ஊட்டினாரோ–

“எங்களை எல்லாம் உருவாக்கிய பெரியார் அவர்களுடைய மொழியில், இது மூன்றாம் தர அரசு கூட அல்ல, நான்காம் தர அரசு. நாங்கள் நான்காவது தரத்தைச் சார்ந்திருக்கக்கூடியவர்கள்; ஆகவே, நாலாந்தர அரசு நாட்டிலே இருக்கிறது. நாலாந்தர மக்களுடைய நல்வாழ்வுக்காகப் பாடுபடும் அரசு இது என்பதை இறுமாப்போடு, பெருமையோடு, கர்வத்தோடு-பெரியார் அவர்களுடைய பெயரிலும்,-பெருமகனார் பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரிலும் சொல்லிக்கொள்வதில் நான் பெருமகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்” என்று சமூகநீதிக்காகவும் சமத்துவத்துக்காகவும் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட நம்முடைய தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் எந்த மக்களுக்காகப் பாடுபட்டாரோ, அந்த மக்களின் அரசுதான் இன்று கோட்டையில் நடக்கிறது. அந்த மக்களுக்கான அரசையே தொடர்ந்து நடத்துவோம் என்பதை நான் இங்கு உங்கள் முன்னால் நின்று முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான் இங்கேயும் குறிப்பிட விரும்புகிறேன்.

ஆகவே, இங்கே பேசியிருக்கக்கூடிய பல சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதியில் இருக்கக்கூடிய சில பிரச்சனைகளை, கோரிக்கைகளைச் சுட்டிக்காட்டி, ஆனால், அதே நேரத்தில் ஏற்கனவே சொன்ன அந்த உறுதிமொழியை, வாக்குறுதியை ஓரளவுக்கு காப்பாற்றப்பட்டிருக்கிறது, மகிழ்ச்சியடைகிறோம், அதற்காக நன்றி சொல்கிறோம் என்றும் சொன்னார்கள். ஆகவே, இன்னும் சில கோரிக்கைகள், பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும், நான் மறுக்கவில்லை. இங்கே நாடாளுமன்ற உறுப்பினர் திரு.திருநாவுக்கரசர் அவர்கள் பேசுகின்றபோது, அவர் சொன்னதை நான் வழிமொழிகிறேன் என்று சுட்டிக்காட்டியிருக்கிறார். கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் என்னென்ன கோரிக்கைகளை இங்கே மட்டுமல்ல, சட்டமன்றத்திலும் சரி, மக்கள் மன்றத்திலும் சரி எந்தக் கோரிக்கைகளை வைத்தாலும் அதில் இருக்கக்கூடிய உண்மையை, நியாயத்தை இந்த அரசு புரிந்துகொண்டு, அதற்குரிய நடவடிக்கையை நிச்சயமாக, நாங்கள் உறுதியாக எடுப்போம் என்ற நம்பிக்கையை, உறுதியை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, உங்கள் அனைவரையும் சந்தித்து உரையாற்றக்கூடிய இந்த வாய்ப்பினைப் பெற்றமைக்கு மீண்டும் ஒரு முறை நன்றி கூறி விடைபெறுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories