தமிழ்நாடு

”2 நிமிடம்.. 17 வயதில் நான் பேசியது”: மாணவர்கள் முன் 1971ம் ஆண்டு பேசியதை நினைவுகூர்ந்த முதலமைச்சர்!

மாணவச் செல்வங்களுக்கு பேச்சுப் பயிற்சி தருமானால் தமிழ்நாட்டுக்கு ஏராளமான பேச்சாளர்கள் கிடைப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

”2 நிமிடம்.. 17 வயதில் நான் பேசியது”: மாணவர்கள் முன் 1971ம் ஆண்டு பேசியதை நினைவுகூர்ந்த முதலமைச்சர்!
 • Twitter
 • Facebook
 • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (3.6.2022) சென்னை, குருநானக் கல்லூரியில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் விழா மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவ மாணவியருக்கான பேச்சுப் போட்டி - பரிசளிப்பு விழாவில் ஆற்றிய உரை:-

மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அனைத்துக் கல்லூரி மாணவ - மாணவியருக்கான பேச்சுப் போட்டி நடத்தி அதனுடைய பரிசளிப்பு விழாவிலே நானும் கலந்து கொண்டு உங்கள் அனைவரையும் சந்திக்கக்கூடிய வாய்ப்பை பெற்றமைக்காக நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு உருவாக்கி தந்திருக்கக்கூடிய ஆணையத்திற்கு எனது நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

மாநில சிறுபான்மை ஆணையத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் 'தலைநிமிரும் தமிழகம்' என்ற தலைப்பில் தமிழிலும், ஆங்கிலத்திலும் பேச்சுப் போட்டியானது நடத்தப்பட்டு - அதில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு இன்று பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது. முதலில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றிப் பாதையில் நீங்கள் தொடர்ந்து செல்ல வேண்டும்.

எனது அன்புக்கும் மரியாதைக்கும் உரிய பீட்டர் அல்போன்ஸ் அவர்கள், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டது முதல் மிக சிறப்பாகச் அனைவரும் பாராட்டத்தக்க வகையில் அவர் தனது கடமையை நிறைவேற்றி வருகிறார் என்பது எனக்கு மட்டுமல்ல உங்களுக்கு தெரியும். அதற்கு மகுடம் வைப்பது போல் இந்த விழா நடைபெற்று கொண்டிருக்கிறது. சிறுபான்மையினர் ஆணையத்தின் மூலமாக தமிழ்நாட்டு மாணவர் சமுதாயத்தினர் மத்தியில் மாபெரும் விழிப்புணர்ச்சியை பீட்டர் அல்போன்ஸ் அவர்களும், இந்த ஆணையத்தின் அனைத்து உறுப்பினர்களும் உருவாக்கி இருக்கிறார்கள்.

அதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் என்ற முறையிலே என்னுடைய வணக்கத்தை, நன்றியை, பாராட்டுக்ளை தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்ததுமே தமிழகம் தலைநிமிரத் தொடங்கிவிட்டது. இதனைக் கண்கூடாக மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் 'தலைநிமிரும் தமிழகம்' என்ற தலைப்பில் தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் பேச்சுப் போட்டி நடத்தி இருக்கிறார்கள். இன்றைய காலக்கட்டத்துக்கு இது மிக முக்கியமானது ஆகும்.

பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் பேசுகின்றபோது சொன்னார். இந்தப் போட்டி தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டு இருக்கக்கூடிய வகையிலே இந்தப்போட்டி நடந்திருக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவியரையும் நான் என்னுடைய வாழ்த்துகளை பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். உங்களது உரையை நான் கேட்கவில்லை அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை, என்றாலும் - 'தலைநிமிரும் தமிழகம்' என்ற சொற்களை நீங்கள் ஓங்கி ஒலித்தமைக்கான நன்றி கூற கடமைப்பட்டு இருக்கிறேன்.

”2 நிமிடம்.. 17 வயதில் நான் பேசியது”: மாணவர்கள் முன் 1971ம் ஆண்டு பேசியதை நினைவுகூர்ந்த முதலமைச்சர்!

மாவட்ட அளவில் 228 பரிசுகளும்- மாநில அளவில் 6 பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளன. மாவட்ட அளவிலான பரிசுகள் 20 ஆயிரம், 10 ஆயிரம், 5 ஆயிரம் எனவும், மாநில அளவிலான பரிசுகள் 1 லட்சம், 50 ஆயிரம், 25 ஆயிரம் எனவும் வழங்கப்பட்டு இருக்கிறது. நமது பீட்டர் அல்போன்ஸ் அவர்கள், கல்லூரி காலத்தில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு ஊர்களில் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளைப் பெற்றவர். அதேபோல் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும் கவிதை, பேச்சு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசிகளைக் குவித்தவர் அவர்.

அந்தக் காலத்தில் எவ்வளவு தரப்பட்டிருக்கும் பரிசு அதை நினைத்துப் பார்க்கிறேன். இன்று 1 லட்சம் வரைக்கும் பரிசு தரும் அளவுக்கு போட்டி பெருகி இருக்கிறது. உங்களது பேச்சுக்கும் மரியாதையும் மதிப்பும் உயர்ந்திருக்கிறது. போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களைப் பார்க்கும் போது நான் என்னுடைய கல்லூரிக் காலத்துக்குச் சென்று விட்டேன். 1971 ஆம் ஆண்டு தமிழகத்தில் இந்தி திணிக்கப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்ட நேரத்திலே, கோவையில் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய மாணவர் மாநாடு நடந்தது, தலைவர் கலைஞர் அவர்களும் அதில் கலந்து கொண்டார்.

அந்த மாநாட்டின் தலைவர் தஞ்சையைச் சேர்ந்த எல்.ஜி. என்று அழைக்கப்படுகின்ற எல்.கணேசன் அவர்கள். நானும் மாநாட்டு தலைவரிடம் சென்று ''இரண்டு நிமிடம் எனக்கு பேச அனுமதி வேண்டும்” என்று வாய்ப்பு கேட்டேன். நான் சொல்வது 1971ஆம் ஆண்டு. அவரும் அனுமதி தந்தார். அப்போது நான் பேசும்போது சொன்னேன். ''இந்தி திணிக்கப்படுகிற முயற்சி நடக்கிறது. அப்படி திணிக்கப்படுகிற நேரத்தில் அதனை எதிர்த்து போராட மாணவர் பட்டாளம் தயாராக இருக்க வேண்டும் என்று அனைவரும் சொன்னார்கள். அப்படிப்பட்ட மாணவர் பட்டாளத்தில் என்னையும் சேர்த்துக் கொள்ள வாய்ப்பு தாருங்கள்” என்று ஒரு வேண்டுகோள் வைத்து சொன்னேன்.

அது எந்த பட்டியலாக இருந்தாலும், தியாகம் செய்யக்கூடிய பட்டியலாக இருந்தாலும் அதிலே என்னையும் சேர்த்துக் கொள்வதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று சொன்னேன். மொழிக்காக, நம்முடைய இனத்துக்காக போராடுகிற நேரத்தில் உயிரை இழக்கக்கூடிய சூழ்நிலை வந்தாலும் அந்த தியாகத்தைச் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு அந்த மேடையிலே இன்னொன்றையும் சொன்னேன், என்னுடைய தந்தைக்கு நான்கு ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள். எனவே அந்த நான்கு ஆண்பிள்ளைகளில் ஒரு பிள்ளை போய்விடுவதால் என்னுடைய தந்தை நிச்சயம் கவலைப்பட மாட்டார். ஏன்னென்றால் மொழிக்காக, இனத்துக்காக தனயனை இழந்த தந்தை என்று அவரை நாடு பாராட்டும், போற்றும் அந்த பெருமையை வாங்கி தந்த பெருமை எனக்கு சேரும் என்று நான் அப்போது முழங்கினேன். அப்போது எனக்கு 17 வயது. நான் அந்த மாநாட்டில் பேசியது என்பது அவ்வளவுதான். அப்போது பேசியபோது எழுந்த கரவொலி இப்போதும் என் காதுகளில் ரீங்காரமிட்டு கொண்டு இருக்கிறது.

”2 நிமிடம்.. 17 வயதில் நான் பேசியது”: மாணவர்கள் முன் 1971ம் ஆண்டு பேசியதை நினைவுகூர்ந்த முதலமைச்சர்!

இப்போது பரிசு வாங்கிய மாணவச் செல்வங்களைப் பார்த்தபோது - உங்கள் காலத்தில் நான் இருந்தபோது நடந்தவை நினைவுக்கு வருகின்றன.

ரத்தம் சூடான -

இளமை முறுக்கேறிய -

உணர்ச்சி கொப்பளித்த -

எழுச்சி பீறிடும் காலக் காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்ற இது போன்ற பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் பெரும்பாலும் அரசியல் ஆர்வம் கொண்ட மாணவர்களாகத் தான் இருப்பார்கள்.

திராவிட இயக்கம் -

தேசிய இயக்கம் -

பொதுவுடமை இயக்கம் - ஆகிய கொள்கைக் கோட்பாடுகளின் மீது பற்றுக் கொண்டு அது தொடர்பாக அதிகம் படிக்கும் மாணவர்கள் தான் இது போன்ற போட்டிகளில் அதிகம் கலந்து கொள்வார்கள். அவர்கள் தான் பெரும்பாலும் பரிசையும் பெற்று இருக்கிறார்கள்.

இன்னும் சொன்னால் பிற்காலத்தில் அரசியல் இயக்கங்களில் இருந்து பொறுப்புகளுக்கு வந்து பணியாற்றக் கூடியவர்களாக அந்த மாணவர் தலைவர்கள் உயர்ந்து இருக்கிறார்கள். இன்றைக்கு கழகப் பொதுச்செயலாளராக இருக்கும் அண்ணன் துரைமுருகன் அவர்கள் அதற்கு ஒரு அடையாளம்.

மொழிப்போர் தளபதியாக இன்றைக்கும் போற்றி பாராட்டிக் கொண்டு இருக்கக்கூடிய தஞ்சை எல். கணேசன் - மதிமுக பொதுச்செயலாளர் அண்ணன் வைகோ அவர்கள் - இந்த மேடையில் இருக்கும் அருமைச் சகோதரர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் - முன்னாள் சபாநாயகர் மறைந்த அண்ணன் காளிமுத்து அவர்கள் - முன்னாள் துணை சபாநாயகர் விருதுநகர் சீனிவாசன் அவர்கள் - - இப்படி நான் சொல்லிக் கொண்டே போகலாம்!

இதனை நான் சொல்வதற்குக் காரணம், மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் அரசியலுக்கு வாருங்கள் என்று அழைப்பதற்காக அல்ல, இந்த பேச்சாற்றலை மேலும் மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இதை குறிப்பிட்டு சொல்கிறேன். பேச்சு என்பது ஒரு கலை. அது எல்லோருக்கும் வாய்க்காது. எல்லாவற்றிலும் வென்றவர்கள் கூட மேடைகளில் தோற்றுவிடுவார்கள். மேடைகளை ஆட்சி செய்வது என்பதும், கோட்டையை ஆட்சி செய்வதைப் போல அவ்வளவு கடினமானது.

தலைவர் கலைஞர் அவர்கள் 1970 ஆம் ஆண்டு இலண்டனுக்குச் சென்றபோது ஹைட் பார்க் என்ற இடத்துக்குச் சென்றிருக்கிறார். அந்த பூங்கா என்பது பேச்சாளர்கள் பயிற்சி பெறும் இடமாக இருந்ததாம். அதைப் போய் பார்த்திருக்கிறார். அது போன்ற பயிற்சிப் பாசறைகளை உருவாக்கும் சூழ்நிலையை நாம் ஏற்படுத்த வேண்டும். அத்தகைய பயிற்சிப் பாசறையாக சிறுபான்மையினர் ஆணையம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதற்காக நான் மனமார வாழ்த்துகிறேன்.

இந்த ஆண்டு 4 ஆயிரம் பேர் பங்கெடுத்துள்ளார்கள். மேலும் மேலும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொள்ளும் அளவுக்கு இந்த ஆணையம் மாணவர்களை தயார் செய்ய வேண்டும். அதற்கு இந்த அரசு என்றைக்கும் உங்களுக்கு ஒத்துழைப்பு நல்கும். பேசும் கலை வளர்ப்போம் - என்று தலைவர் கலைஞர் அவர்கள் ஒரு புத்தகம் எழுதினார்கள்.

'நீங்களும் பேச்சாளர் ஆகலாம்' என்று இனமானப் பேராசிரியர் அவர்கள் ஒரு புத்தகம் எழுதினார்கள்.

இந்த இரண்டு நூல்களையும் நம்முடைய மாணவச் செல்வங்கள் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

* கலைஞர் பேச்சு புயல் என்றால்

பேராசிரியர் பேச்சு அமைதி!

*கலைஞர் பேச்சு மழை என்றால்

பேராசிரியர் பேச்சு வெள்ளம்!

* கலைஞர் பேச்சு சூரியன் என்றால்

பேராசிரியர் பேச்சு நிலா!

* கலைஞர் பேச்சு இடிமுழக்கம் என்றால்

பேராசிரியர் பேச்சு எதிரொலி!

- தமிழ்நாட்டு மேடைகளை எழுபது ஆண்டுகள் ஆட்சி செய்தவர்கள் தான் இவர்கள் இருவரும். இவர்களிடம் இருந்து நீங்கள் பேச்சுக் கலைக்கான அனைத்தையும் கற்றுக் கொள்ளலாம்.

* நிறையப் படியுங்கள்.

* அனைத்தையும் கற்றுக் கொள்ளுங்கள்.

* நிறையத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

* முக்கியமானதை குறித்து வையுங்கள்.

* சரியான தகவல்களைத் திரட்டுங்கள்.

* எதையும் தெளிவாகச் சொல்லுங்கள்.

* உங்களுக்குத் தெரிந்ததை மட்டும் பேசுங்கள்.

* மேடையைப் பார்த்ததும் அச்சம் வேண்டாம்.

* வார்த்தைகளைச் சரியாக உச்சரியுங்கள்.

* அடுத்தவர் கருத்துகளாக அடுக்காதீர்கள்.

* உங்களது சுய சிந்தனைக் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

என்று மேடைப் பேச்சுக்கு எத்தனையோ இலக்கணம் இருக்கிறது.

ஒரு காலத்தில் மிக நீண்ட நேரம் பேசினால் தான் அது சிறந்த பேச்சு என்று கருதப்பட்டது. இப்போது தேவையானதை - மிகச் சுருக்கமாக - சுவையாகச் சொல்வது மட்டுமே சிறந்த பேச்சாகக் கருதப்படுகிறது. அத்தகைய பேச்சுக்கலையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

இவர் எப்போது முடிப்பார் என்று மக்கள் நினைப்பதற்கு முன்னதாக - இவர் இவ்வளவு விரைவாக முடித்துவிட்டாரே என்று நினைக்கக்கூடிய வகையில் உங்களது மேடைப்பேச்சுக்கள் அமைய வேண்டும். அத்தகைய திறமைசாலிகளாக அனைவரும் வருங்காலத்தில் வருவீர்கள் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் இருக்கிறது. இந்த போட்டிக்கு நீங்கள் தேர்ந்தெடுத்த தலைப்புகள் அனைத்தும் மிக மிக உன்னதமான தலைப்புகள்.

”2 நிமிடம்.. 17 வயதில் நான் பேசியது”: மாணவர்கள் முன் 1971ம் ஆண்டு பேசியதை நினைவுகூர்ந்த முதலமைச்சர்!

* ஒன்றே குலம் ஒருவனே தேவன்

* மனிதநேயம் ஓங்கட்டும், மதவெறி நீங்கட்டும்.

* மக்களாட்சியின் மாண்பும் மதச்சார்பற்ற அரசும்

* ஏன் வேண்டும் இடஒதுக்கீடு?

* பன்மைத்துவமே இந்தியத்துவம்

* உழைப்பில்லாத செல்வமும் - மனிதம் இல்லாத அறிவியலும் - என்பது போன்ற தலைப்புகள் பேச்சுப்போட்டித் தலைப்புகள் மட்டுமல்ல.

இந்தியாவுக்கான தலைப்புகள் ஆகும்.

இந்தியாவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கத் தேவையான தலைப்புகள் ஆகும்.

சமூகநீதியும் - சமத்துவமும் - சகோதரத்துவமும் - மனிதநேயமும் - மதச்சார்பற்ற தன்மையும் கொண்ட இந்தியா தான் மக்களாட்சியின் இந்தியாவாக இருக்க முடியும். இவை அரசியல் தத்துவங்கள் மட்டுமல்ல - ஆட்சியின் தத்துவமாக மாற வேண்டும்.

இந்த அடித்தளம் கொண்டதாகத்தான் திராவிட மாடல் ஆட்சியானது இன்று தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.

* திராவிட மாடல் என்பது எதையும் இடிக்காது! உருவாக்கும்!

* திராவிட மாடல் என்பதை எதையும் சிதைக்காது! சீர் செய்யும்!

* திராவிட மாடல் என்பது யாரையும் பிரிக்காது! அனைவரையும் ஒன்று சேர்க்கும்!

* திராவிட மாடல் என்பது யாரையும் தாழ்த்தாது! அனைவரையும் சமமாக நடத்தும்!

* திராவிட மாடல் என்பது யாரையும் புறக்கணிக்காது! தோளோடு தோள் நின்று அரவணைக்கும்!

அத்தகைய அடிப்படையில் தான் இந்த திராவிட மாடல் ஆட்சி இன்றைக்கு நடைபெற்று வருகிறது.

இந்த தத்துவத்தை பயிற்றுவிக்கும் பாசறையாகவே மாநிலச் சிறுபான்மையினர் ஆணையம் திகழ்வதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். அனைத்துத் துறைகளும் இது போன்று மாணவச் செல்வங்களுக்கு பேச்சுப் பயிற்சி தருமானால் தமிழ்நாட்டுக்கு ஏராளமான பேச்சாளர்கள் கிடைப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

எனவே வெற்றி பெற்று இருக்கக்கூடிய அனைவர்க்கும் என்னுடைய வாழ்த்துகள், பாராட்டுகள். இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியிருக்கக்கூடிய சிறுபான்மை ஆணையத்திற்கு என்னுடைய நன்றியை வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு, என் உரையை நிறைவு செய்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories