தமிழ்நாடு

“அரசின் ஒரு கை நிர்வாகம் என்றால், இன்னொரு கை காவல்துறை” : பதக்கங்கள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் உரை !

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தமிழகத்தை நோக்கி புதிய புதிய தொழிற்சாலைகள் வருகின்றன என்றால், தமிழகம் அமைதிப்பூங்காவாக இருக்கிற காரணத்தால்தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“அரசின் ஒரு கை நிர்வாகம் என்றால், இன்னொரு கை காவல்துறை” : பதக்கங்கள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் உரை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (27.5.2022) சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழாவில் உரையாற்றினார்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்தியக் குடியரசுத் தலைவரின் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சரின் பதக்கங்கள், தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் ஆகியவற்றை வழங்கும் விழாவாக மிகுந்த எழுச்சியோடு, ஏற்றத்தோடு இது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

காவல்துறை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை, ஊர்க்காவல் மற்றும் குடிமைப் பாதுகாப்புத் துறை, தடய அறிவியல் துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த காவல் வீரர்கள் இந்த விருதுகளைப் பெற்றிருக்கிறீர்கள்.

தீரச் செயல், தகைசால் பணி, மெச்சத்தக்க பணி, சிறந்த நற்பணி, பொதுச்சேவையில் சீர்மிகு பணி, சீர்மிகு புலனாய்வு, சீர்மிகு காவல் பயிற்சி, சிறப்புச் செயலாக்கம், விரல் ரேகை அறிவியலில் சீர்மிகு பணி, தொழில்நுட்பச் சிறப்புப் பணி, தடய அறிவியலில் சீர்மிகு பணி ஆகியவற்றுக்கான பதக்கங்கள் வழங்கப்பட்டிருக்கின்றது.

“அரசின் ஒரு கை நிர்வாகம் என்றால், இன்னொரு கை காவல்துறை” : பதக்கங்கள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் உரை !

இப்பதக்கங்களைப் பெற்றிருக்கக்கூடிய அனைத்துக் காவல் வீரர்களையும் நான் மனதார பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். மேலும் பல்வேறு பதக்கங்களைப் பெற வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைக்க நான் விரும்புகிறேன். இதுபோன்ற விருதுகளை மற்ற காவலர்களும் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

காவலர்கள் என்றாலே வீரச் செயல் செய்பவர்கள், தீரச் செயல் செய்பவர்கள்தான். அதில் பதக்கங்கள் பெறுகிறார்கள் என்றால். அத்தகைய வீரதீரச் செயல்களின் மற்றவர்களை விட முனைப்போடு இருப்பவர்களுக்கு அவை வழங்கப்படுகிறது. இவை உங்களுக்கு கிடைத்திருக்கக்கூடிய பெரும் அங்கீகாரம். இத்தகைய அங்கீகாரத்தை "நாமும் பெறுவோம்" என்ற உறுதியை ஒவ்வொரு காவலரும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் இதுபோன்ற பதக்கங்கள், வீரதீரச் செயல்களுக்காக மட்டுமல்ல, பண்பாட்டு பதக்கங்களாகவும் மாறவேண்டும். காவல்துறை "உங்கள் நண்பன்" என்று சொல்கிறோம். அத்தகைய நண்பர்களாக இருப்பவர்களுக்கும், நண்பர்களாக நடந்து கொள்பவர்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்பட வேண்டும். மக்களின் காவலர்களாக இருந்து மக்களைக் காக்கும் பணியில் சிறந்து விளங்கக் கூடிய காவலர்களைப் பாராட்ட வேண்டும்.

காவல்துறை மக்களோடு நெருக்கமானால்தான், நாட்டில் குற்றங்கள் குறையும். மக்களிடம் இருந்து காவல்துறை விலகி இருந்தால், குற்றம் பெருகும். எனவே, "காவல்துறை நம் நண்பன்" என்று சொல்லத்தக்க விதத்தில் காவலர்கள் செயல்பட வேண்டும். காவல் நிலையங்கள் பொதுமக்களின் மக்கள் தொடர்பு பாதுகாப்பு அலுவலகங்களைப் போலச் செயல்பட வேண்டும். அந்தளவுக்கு அதன் செயல்பாடு அமைய வேண்டும்.

தமிழ்நாடு அரசின் ஒரு கை நிர்வாகம் என்றால் இன்னொரு கை காவல்துறை என்பதை நான் சட்டமன்றத்திலேயே நான் சொல்லி இருக்கிறேன். இதன் மூலமாக காவல்துறைக்கு இருக்கும் முக்கியத்துவத்தை நீங்கள் உணரலாம்.

காவல்துறை என்றாலே தண்டனையை வாங்கித் தரும் துறையாக மட்டும் அனைவரும் நினைக்கிறார்கள். காவல்துறை என்பது குற்றங்கள் நடக்காத வகையில் சூழ்நிலைகளை உருவாக்கித் தரும் துறையாக மாறவேண்டும் என்பதையும் நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்து கொண்டிருக்கிறேன்.

குற்றங்கள் எந்தச் சூழலிலும் நடைபெறாத ஒரு காலத்தை உருவாக்குவதற்கு காவல்துறை திட்டமிட வேண்டும் என்பதுதான் காவல்துறை தலைவர் முதல் காவலர்கள் வரைக்கும் நான் வைக்கக்கூடிய கோரிக்கை.

ஒரே ஒரு காவலர் அல்லது ஒரு காவல் நிலையம் தனது கடமையைச் செய்யத் தவறும்போது, அது ஓட்டுமொத்தமாக காவல்துறைக்கே தலைக்குனிவை ஏற்படுத்துகிறது என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம். எந்த ஒரு காவலராக இருந்தாலும், அவரது செயல் காவல்துறையை தலைநிமிர வைக்க வேண்டுமே தவிர, தலைக்குனிவை ஏற்படுத்திவிடக் கூடாது. அத்தகைய எச்சரிக்கை உணர்வு, காவலர்கள் அனைவருக்கும் இருக்குமானால், குற்றச் சம்பவங்களே நடைபெறாத மாநிலமாகத் தமிழ்நாடு மாறும்.

எந்தச் சூழலிலும் பொதுமக்களுக்கு அச்சம் தரும் சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அரசியல் ரீதியாகவோ, மதம் மற்றும் சாதி காரணமாகவோ வன்முறைகள் உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி திட்டமிட்டு இந்த அரசாங்கத்துக்கு நெருக்கடி ஏற்படுத்த நினைப்பவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். போதைப் பொருட்கள் நடமாட்டம் முற்றிலுமாகத் தடுக்கப்பட வேண்டும். கூலிப்படையினர் முழுமையாக துடைத்தெறியப்பட வேண்டும். கள்ளச்சாராயம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டாக வேண்டும்.

“அரசின் ஒரு கை நிர்வாகம் என்றால், இன்னொரு கை காவல்துறை” : பதக்கங்கள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் உரை !

இத்தகைய நோக்கங்களைக் கொண்டதாக காவல்துறை கண்டிப்புடன் நடந்தாக வேண்டும். இத்தகைய சூழலை உருவாக்கி, ஒட்டுமொத்தமான அமைதிப் பதக்கத்தை தமிழகக் காவல்துறை பெறவேண்டும் என்று நான் விரும்புகிறேன். பெறுவீர்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.

எல்லோருக்கும் எடுத்துக்காட்டான திராவிட மாடல் ஆட்சியை தமிழகத்தில் வழங்கி வருகிறோம். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி - எல்லார்க்கும் எல்லாம் என்ற உன்னதமான தத்துவத்தின் அடிப்படையில் திட்டங்களை தீட்டி வருகிறோம். இவை அனைத்துக்கும் அடிப்படை அமைதிதான். அமைதியான சூழலில்தான் தொழில் வளர்ச்சியாக இருந்தாலும் - சமூக முன்னேற்றமாக இருந்தாலும் அது ஏற்படும்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தமிழகத்தை நோக்கி புதிய புதிய தொழிற்சாலைகள் வருகின்றன என்றால், தமிழகம் அமைதிப்பூங்காவாக இருக்கிற காரணத்தால்தான். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது என்றால், தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதால்தான். அத்தகைய அமைதிச் சூழலை காக்க வேண்டும். அதற்குக் குந்தகம் ஏற்படுத்தக்கூடிய சிறு சம்பவமும் நடைபெறக் கூடாது என்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்த நான் விரும்புகிறேன்.

மக்களைக் காக்கும் கடமை காவலர்களாகிய உங்களுக்கு இருக்கிறது. அதேபோல், காவலர்களாகிய உங்களைக் காக்கக்கூடிய கடமை அரசுக்கும் இருக்கிறது. அதை மனதில் வைத்து ஏராளமான திட்டங்களை கடந்த ஓராண்டு காலத்தில் தீட்டி இருக்கிறோம்.

காவலர் முதல் தலைமைக் காவலர் வரை ஒரு நாள் கட்டாய வார விடுமுறை அறிவிக்கப்பட்டது. சிறப்பு உதவி ஆய்வாளர், உதவி ஆய்வாளர்களுக்கு இரு வாரத்துக்கு ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. காவலர்களுக்கு கொரோனா கால ஊக்கத் தொகையாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. காவலர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட இடர்ப்படியானது 800 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. 2,212 காவலர்களுக்கான சிறுதண்டனை குறைக்கப்பட்டது.

1,132 பேருக்கு கருணை அடிப்படையிலான காவல்நிலைய வரவேற்பாளர் பணி வழங்கப்பட்டது. தாம்பரம், ஆவடியில் புதிய காவல் ஆணையரகங்கள் அமைக்கப்பட்டது. காவல்துறையில் கட்டப்படும் வீடுகளின் பரப்பளவு 750 சதுர அடியாக அதிகரிக்கப்பட்டது. 1.20 லட்சம் காவல் ஆளினர்களுக்கு பத்து கோடி ரூபாய் செலவில் சென்னை அண்ணா மேலாண்மை மையத்தின் மூலமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னை காவல் சிறப்புப் பிரிவுகளில் பணிபுரிவோர்க்கு உணவுப்படி வழங்கப்படுகிறது. திட்டமிட்ட குற்ற நுண்ணறிவுப் பிரிவு ஆளினர்களுக்கு 5 விழுக்காடு சிறப்பு ஊதியம் அளிக்கப்படுகிறது. தீயணைப்புத் துறை மற்றும் சிறைத் துறைப் பணியாளர்களுக்கு காவல் துறை மருத்துவமனைகளில் மருத்துவ வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.

இவை அனைத்துக்கும் மேலாக புதிய காவல் ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆணையத்தின் அறிக்கை கிடைத்த பிறகு காவல் துறையினரது கோரிக்கைகள் அரசால் பரிசீலனை செய்யப்பட்டு, அவை படிப்படியாக நிறைவேற்றித் தரப்படும் என்ற உறுதியை இந்த நிகழ்ச்சியின் மூலமாக அறிவிக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன். இவை மட்டுமின்றி, இந்த நிகழ்ச்சியில் மற்றுமொரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிடுகிறேன்.

வீர தீர செயல் புரிந்த காவல் அதிகாரிகள், காவலர்கள் அல்லது வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வரும் முதலமைச்சரின் வீரப்பதக்கங்களுக்கான ஊக்கத் தொகை மற்றும் சலுகைகள், ஒன்றிய அரசு வழங்கக்கூடிய, குடியரசுத் தலைவர் வீரப் பதக்கத்திற்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை மற்றும் சலுகைகளுக்கு இணையாக வழங்கப்படும்.

காவலர்களது நலனை அரசு கண்ணும் கருத்துமாகப் பேணிக் காப்பாற்றும். மக்களின் நலனைக் காவலர்களாகிய நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டு, பதக்கம் பெற்றவர்கள் அனைவரையும் மீண்டும் வாழ்த்தி விடைபெறுகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories