தமிழ்நாடு

மர்மமான முறையில் இறந்து கிடந்த முதியவர்.. மகன் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

திருவண்ணாமலையில் சந்தேகத்துக்கு இடமான முறையில் இறந்த முதியவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவ குழுவை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மர்மமான முறையில் இறந்து கிடந்த முதியவர்.. மகன் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருவண்ணாமலை மாவட்டம், பெருங்குளத்தூர் கிராமத்தை சேர்ந்த சங்கோதி என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரின் விவசாய நிலத்தில், மே 24ம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இந்நிலையில், தனது தந்தை சங்கோதியை, தொந்தி மற்றும் ஆனந்தன் ஆகிய இருவரும் கொலை செய்துள்ளதாகவும், அவரது உடலில் காயங்கள் இருந்த போதும், தானிப்பாடி போலிஸார், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் கூறி, தாங்கள் கூறும் மருத்துவரைக் கொண்டு பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என சங்கோதியின் மகன் சின்னமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில்,தனது தந்தைக்கும், தொந்தி மற்றும் ஆனந்தன் ஆகியோருக்கு முன் விரோதம் இருந்துள்ளதாகவும், தனது தந்தை கையில் கிடைத்தால் கொன்று விடுவோம் என இருவரும் மிரட்டியதாகவும், அடுத்த சில மணி நேரங்களில் தனது தந்தை சங்கோதி,ஆனந்தனின் நிலத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

தனது தந்தை சங்கோதியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதால் தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி பிரேத பரிசோதனையை முழுமையாக வீடியோ பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனவும், தாங்கள் தெரிவிக்கும் மருத்துவரை கொண்டு பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கின் விசாரணை நடைபெற்று வருவதாகவும், காவல் துறை யாரையும் காப்பாற்ற முயற்சிக்கவில்லை எனவும் தெரிவித்தார். மேலும், விசாரணைக்கு மனுதாரர் தரப்பில் ஒத்துழைப்பு வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

இருதரபு வாதங்களையும் கேட்ட நீதிபதி, திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனை மூத்த உதவி பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர், விழுப்புரம் மருத்துவ கல்லூரி தடவியல் நிபுணர் ஆகியோர் கொண்ட குழுவினர், சங்கோதியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்ய அறிவுறுத்திய நீதிபதி, 24 மணி நேரத்திற்குள் பிரேத பரிசோதனை அறிக்கைதை காவல்துறைக்கு வழங்கவேண்டும் என்றும் 48 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.

மேலும் சட்டப்படி இந்த வழக்கு விசாரணையை மேற்கொள்ள உத்தரவிட்ட நீதிபதி, விசாரணை நிலை குறித்த அறிக்கையையுடன், பதில்மனுவையும் தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை ஜூன் 6ம் தேதிக்கு தள்ளிவைத்தார்

banner

Related Stories

Related Stories