தமிழ்நாடு

”இவரை பிளாக் செய்யாததற்கு என்னை மன்னித்துவிடுங்கள்” : அமைச்சர் பி.டி.ஆரிடம் மாட்டிக்கொண்ட பாஜக நிர்வாகி!

நீங்கள் மிக மோசமான கொள்கை கொண்டவர் என பா.ஜ.க நிர்வாகிக்குத் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

”இவரை பிளாக் செய்யாததற்கு என்னை மன்னித்துவிடுங்கள்” : அமைச்சர் பி.டி.ஆரிடம் மாட்டிக்கொண்ட பாஜக நிர்வாகி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு குறைத்துள்ளது. மேலும் மாநில அரசுகளும் வரியை குறைக்க வேண்டும் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து பெட்ரோல், டீசல் விலையை அதிகமாக உயர்த்திவிட்டு தற்போது கண்துடைப்புக்காக சொற்பமாக கலால் வரியை ஒன்றிய அரசு குறைத்துள்ளது என காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனங்கள் செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கூட மாநில அரசுகளும் விலை குறைக்க வேண்டும் என்ற ஒன்றிய நிதியமைச்சரின் கோரிக்கைக்கு பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், "கலால் வரியைக் குறைத்தால் தானாக மாநில அரசுக்கான வருவாயில் இழப்பு ஏற்படும். உதாரணத்திற்கு ஒன்றிய அரசு ஒரு ரூபாய் குறைத்தால் தானாக மாநில வரி பெட்ரோலுக்கு 13 பைசா, டீசலுக்கு 11 பைசா குறையும். இதனால் மாநிலங்கள் வரியை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை.

மேலும் ஏற்கனவே ஒன்றிய அரசு அறிவிப்பதற்கு முன்பே தமிழ்நாடு அரசு பெட்ரோல் விலையில் ரூ. 3 குறைத்துள்ளது. இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிடத் தமிழ்நாடு அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தனிநபர் வருமானம் 2 மடங்கு அதிகரித்திருக்கிறது. வருவாய் பற்றாக்குறை ரூ.60,000 கோடியிலிருந்து ரூ.40,000 கோடியாகக் குறைத்திருக்கிறோம்.

தேசிய அளவில் 8% சதவிகிதமாக இருக்கும் பணவீக்கம், தமிழ்நாட்டில் 5 சதவிகிதம்தான் உள்ளது. நாங்கள் என்ன செய்யவேண்டும் என எங்களுக்குத் தெரியும். எங்களைவிட மோசமாகச் செயல்படுவோரின் அறிவுரைகள் எங்களுக்கு தேவையில்லை” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பா.ஜ.கவின் விளையாட்டு மற்றும் திறன் வளர்ப்பு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, "ஒரு மாநிலத்தை எப்படி முழு நாட்டோடு ஒப்பிட முடியும்? முட்டாள்தனமாகப் பேசாதே. தமிழ்நாட்டில் எரிபொருள் வரியை குறைக்க வேண்டும்" என ட்விட்டரில் கடுமையான சொற்களை பயன்படுத்தி தமிழ்நாடு நிதியமைச்சரை விமர்சித்துள்ளார்.

அமர் பிரசாத் ரெட்டியின் விமர்சனத்திற்கு நிதியமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டரில், "சரி செய்யவே முடியாத, மிகவும் மோசமான கொள்கைகளை கொண்ட முட்டாளான இவரை பிளாக் செய்யாததற்காக என்னுடைய மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன்.

அவருடைய முட்டாள்தனமான கருத்துகள் என்னுடைய டைம் லைனில் வந்ததற்கு என்னை பின்தொடர்பவர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இந்த ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories