தமிழ்நாடு

இளைஞர்களுக்கு வழிகாட்டியாக 'திராவிட மாடல்’ அரசு இருக்கும்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

இளைஞர்களுக்கு என்றும் திராவிட மாடல்’ அரசாக நமது அரசு துணைநிற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களுக்கு வழிகாட்டியாக 'திராவிட மாடல்’ அரசு இருக்கும்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (25.5.2022) இராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில அளவிலான முதல் “இளைஞர் திறன் திருவிழா”வை தொடங்கி வைத்து ஆற்றிய உரை:-

மாநில அளவிலான முதல் இளைஞர் திறன் திருவிழா நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பித்துக் கொண்டிருக்கக்கூடிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் அவர்களே! தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் அவர்களே! பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அவர்களே,மயிலைத் தொகுதியினுடைய சட்டமன்ற உறுப்பினர் வேலு அவர்களே!

துணை மேயர் மகேஷ்குமார் அவர்களே!ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் ஆற்றல்மிக்க அமுதா, இ.ஆ.ப., அவர்களே! தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைச் செயலாளர் கிர்லோஷ் குமார், இ.ஆ.ப., அவர்களே! தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பல்லவி பல்தேவ், இ.ஆ.ப., அவர்களே!தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் இன்னசென்ட் திவ்யா, இ.ஆ.ப., அவர்களே! தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் பிரியங்கா, இ.ஆ.ப., அவர்களே! இந்த ராணிமேரிக் கல்லூரி முதல்வர் உமா மகேஸ்வரி அவர்களே!

பேராசிரியர் பெருமக்களே! ஆசிரியர்களே! அரசு உயர் அதிகாரிகளே! அலுவலர்களே! இளைஞர்களே! சுயஉதவிக் குழு உறுப்பினர்களே!எழுச்சிமிக்க இந்த இராணி மேரிக் கல்லூரியில் பயின்று கொண்டிருக்கக்கூடிய மாணவச்செல்வங்களே! பத்திரிகை மற்றும் ஊடகத் துறை சார்ந்திருக்கக்கூடிய பாசமிகு நண்பர்களே! அனைவருக்கும் எனது அன்பான வணக்கத்தை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

மாநில அளவிலான முதல் இளைஞர் திறன் திருவிழாவும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்குகிற இணைப்பு விழாவும், இணைந்து நடைபெறக் கூடிய இந்த சிறப்பான விழாவில் கலந்து கொண்டு, உங்கள் அனைவரையும் சந்தித்து, அதைத் தொடர்ந்து வாழ்த்துரை வழங்ககக்கூடிய ஒரு நல்ல வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். இந்த வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கக்கூடிய துறையினுடைய அமைச்சர்கள் இருவருக்கும் என்னுடைய நன்றியைத் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நீங்கள் இருவரும் சேர்ந்து ஒரு நிகழ்ச்சியை நடத்தும்போது, இரண்டு அமைச்சர்களுக்கும் இருக்கும் பரந்த மனப்பான்மை இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது. இதே தன்மை தொடர வேண்டும். இதனையே மற்ற அமைச்சர்களும் பின்பற்ற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

சிறப்பான விழா, இந்த சிறப்புக்குரிய விழாவில் பாரம்பரியமும், பெருமையும் கொண்ட இராணி மேரிக் கல்லூரி வளாகத்தில் நடைபெறுவது என்பது மிக மிகப் பொருத்தமான ஒன்றாக அமைந்திருக்கின்றது.

உணர்ச்சிமிக்க மாணவிகள் புடைசூழ நடைபெறக்கூடிய விழாவாக இந்த விழா நடந்து கொண்டிருக்கிறது. எல்லோரும் சொன்னார்கள், இந்தக் கல்லூரியினுடைய வரலாற்றைப்பற்றி. 1915-ஆம் ஆண்டு "கேப்பர் இல்லம்" என்ற பெயரில் இருந்த புகழ்பெற்ற கட்டடத்தில்தான் இராணிமேரிக் கல்லூரி தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த "கேப்பர் இல்லம்" என்று சொல்கிறபோது, என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாக இது அமைந்திருக்கிறது. இந்தியாவில் முதன்முதலாக மூன்று மகளிர் கல்லூரிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. அதிலே இதுவும் ஒன்றாக விளங்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும், முதல் மகளிர் கல்லூரி என்று எது என்று கேட்டால் இந்த இராணி மேரிக் கல்லூரி தான்.

இலட்சக்கணக்கான மகளிருக்குக் கல்வி கொடுத்த இந்த நிறுவனத்தில், கொடுத்துக் கொண்டிருக்கக்கூடிய இந்தக் கல்லூரியில், இந்த விழா நடைபெறுவது என்பது பொருத்தமாக அமைந்திருக்கிறது. சரியான இடத்தைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். ஆக, அப்படி தேர்ந்தெடுத்து நடத்தக்கூடிய துறையின் அதிகாரிகளுக்கும், துறையினுடைய அமைச்சர்களுக்கும், நான் முதலில் முதலமைச்சர் என்கின்ற முறையில் நன்றி தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்த இராணிமேரிக் கல்லூரிக்குள் நுழைகிற போது எனக்கு பழைய நினைவுகள் வந்தது. பேசிய அமைச்சர்கள் அதைக் குறிப்பிட்டுச் சொன்னார்கள். பழம்பெரும் பெருமை கொண்டிருக்கக்கூடிய, பெரிய வரலாற்றைப் பெற்றிருக்கக்கூடிய இந்தக் கல்லூரியை இடிப்பதற்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள் முனைந்தார்கள். நான் இந்த நேரத்தில் அரசியல் எல்லாம் பேச விரும்பவில்லை. அது தேவையும் இல்லை.

ஆனால் அன்றைக்கு அது இடிக்கக் கூடாது என்று இந்தக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த மாணவிகள், பழைய மாணவிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். அதைத் தொடர்ந்து, உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட போராட்டத்தை நடத்திய காரணத்தால் அன்றைக்கு இருந்த அரசு, கல்லூரிக்குள் வரும் குடிநீர் சப்ளையை அன்றைக்கு துண்டித்தது. நிறுத்தி வைத்தார்கள். இன்னும் கூட சொல்ல வேண்டுமென்றால், கழிப்பறைகளை பயன்படுத்தக்கூட தடை விதிக்கப்பட்டிருந்தது. கல்லூரியையே மூடிவிட்டு, இங்கு பணியாற்றிய பேராசிரியைகளை வேறு ஊர்களுக்கு இடமாற்றம் செய்தார்கள்.

இளைஞர்களுக்கு வழிகாட்டியாக 'திராவிட மாடல்’ அரசு இருக்கும்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

அப்போது இங்கு படித்துக் கொண்டிருக்கக்கூடிய மாணவியர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். நான் எதிர்க்கட்சியினுடைய தலைவராக பொறுப்பில் இருக்கிறேன். அன்றைக்கு சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கிறது. சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கிறபோது, தலைவர் கலைஞர் இடத்திலிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வருகிறது. சட்டமன்றம் முடித்து விட்டு வீட்டிற்கு வருகிற வழியிலே, கலைஞர் சொல்கிறார். வீட்டிற்கு வருகிற வழியில், இராணி மேரி கல்லூரியில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கக்கூடிய மாணவிகளை சந்தித்து ஆறுதல் சொல்லிவிட்டு வா, "திமுக ஆதரவு தரும்" என்ற அந்த செய்தியை சொல்லிவிட்டு வா என்று எனக்கு தகவல் அனுப்பினார். ஆதரவு தெரிவிக்க நான் வந்தேன். நான் வந்தவுடன் வாசலில் அந்த கேட்டில் இருக்கக்கூடிய காவலர்கள், போலீஸ் காவலர்கள் ரொம்ப மரியாதையுடன் கதவை திறந்து வெளியில் விட்டார்கள். ஆக, அப்படி கல்லூரிக்குள் வந்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்கக்கூடிய மாணவிகள் எல்லாம் நான் சந்தித்து. ஒரு இரண்டு நிமிடம் அல்லது மூன்று நிமிடம் அவர்களிடத்தில் பேசிவிட்டுத்தான் திரும்பிப் போனேன். கேட் திறந்திருந்தது.

ஆனால் இங்கே தான் நீங்கள் கவனிக்க வேண்டும். நான் வருகிறபோது வாசலில் நின்று கொண்டிருந்த போலீஸ் அதிகாரிகள் கேட்டை திறந்துவிட்டார்கள், உள்ளே வந்தேன். வந்து மாணவிகளை சந்தித்துவிட்டு, ஆறுதல் சொல்லிவிட்டு, ஊக்கப்படுத்திவிட்டு, உற்சாகப்படுத்திவிட்டு வெளியில் திரும்ப வருகிறபோது. மூடியிருந்த கேட்டை மறுபடியும் திறந்துவிட்டார்கள், அப்போது தான் வெளியிலே போகிறேன். இதுதான் நடந்தது. ஆனால், இது நடந்த நேரம் 2 மணி அல்லது 3 மணி அளவில் என்று நினைக்கிறேன். ஆனால் இரவு 9 மணிக்கு என்னுடைய வீட்டிற்கு போலீஸ் வந்தது. உங்களை கைது செய்ய வந்திருக்கிறோம் என்று சொன்னார்கள். என்ன காரணம் என்று கேட்டேன்? இராணி மேரி கல்லூரியில் பூட்டியிருந்த கேட் மேலே ஏறி குதித்து, நீங்கள் உள்ளே சென்று மாணவிகளை தூண்டிவிட்டு வந்திருக்கிறீர்கள். அதற்காக உங்கள் மீது வழக்குப் போடப்பட்டிருக்கிறது என்று சொல்லி என்னைக் கைது செய்தார்கள். அதையெல்லாம் அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள். கடலூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஒரு மாத காலம் நான் சிறையில் இருந்தேன். அதில் எனக்கு ஒரு பெரிய பெருமை. ஆகவே இந்தக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கக்கூடிய, கல்லூரியில் பேராசிரியராக இருக்கக்கூடிய, கல்லூரியினுடைய ஆசிரியர்களாக இருக்கக்கூடிய அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறதோ, அதே உரிமை எனக்கும் உண்டு என்கின்ற தலைநிமிர்ந்து உங்களிடத்தில் பேச வந்திருக்கிறேன்.

நான் ஏற்கனவே சொன்னேன். இந்த இடத்திற்கு "கேப்பர்" என்ற பெயர். கடலூரில் என்னை கொண்டு போய் சிறையில் அடைத்து வைத்தார்களே அந்த சிறைக்கு என்ன பெயர் என்று கேட்டால் அதுவும் கேப்பர் சிறை. ஆகவே, என்னுடைய வாழ்நாளில் எத்தனையோ நிகழ்ச்சிகள், மறக்க முடியாத நிகழ்ச்சிகளாக இருந்தாலும், இந்தக் கல்லூரிக்காக போராடிய மாணவ, மாணவிகளுக்கு நான் ஊக்கப்படுத்துகின்ற நேரத்தில், நான் சிறைபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்து வாடினேன் என்று சொன்னால், வாடினேன் என்பது அல்ல, மகிழ்ச்சியோடு தான் இருந்தேன். அதனால், சிறையில் அடைக்கப்பட்டேன் என்று சொன்னால், இதுவும் என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத, ஒரு சம்பவமாக இன்றைக்கும் இருந்து கொண்டிருக்கிறது என்பதை நான் பெருமையோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஆகவே, அப்படிப்பட்ட முக்கியமான இடத்தைப் பிடித்த இடம் தான் இந்த இராணி மேரி கல்லூரி.

இத்தகைய புகழ்பெற்ற இந்த இராணிமேரிக் கல்லூரியில் 3.2 கோடி ரூபாய் மதிப்பில் கலைஞர் மாளிகை கட்டப்பட்டது. கடந்த கால ஆட்சியாளர்கள் கலைஞர் என்கின்ற அந்த பெயரை நீக்கி விட்டார்கள். அதனை மீண்டும் இப்போது நாம் சூட்டி இருக்கிறோம். கட்டடங்களில் இருக்கும் பெயரை நீக்குகிற காரணத்தால் கலைஞருடைய பெயரை மக்கள் மனதில் இருந்து நீக்கிவிட முடியாது. அவர் கோடிக்கணக்கான மக்களுடைய உள்ளத்தில், உணர்வில் இன்றைக்கும் அவர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அத்தகைய பெருமைக்குரிய கலைஞர் பெயரால் மாளிகை அமைந்திருக்கும் இடம்தான் இராணிமேரிக் கல்லூரி ஆகும்.

இந்த விழா மிக மிக ஒரு முக்கியமான விழா ஆகும். இளைஞர் விழா. அதுவும் இளைஞர் திறன் திருவிழா ஆகும். இளைஞர் என்றால், ஏதோ மாணவர்கள் என்று தான் பொருள் என்று நீங்கள் கருதிவிடக் கூடாது. ஏனென்று கேட்டால் நீங்களும் இருக்கிறீர்கள். மாணவியர்களும் இதில் அடக்கம் என்பது எல்லோரும் புரிந்து கொண்டாக வேண்டும். இளைஞர்கள் தான் இந்த நாட்டினுடைய முதுகெலும்பாக விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். இளைஞர்களின் வளர்ச்சியைப் பொறுத்தே அந்த நாட்டினுடைய வளர்ச்சி அமைந்துள்ளது.

அந்த வகையில் மற்ற நாடுகளுடன் நாம் ஒப்பிட்டுப் பார்க்கிறபோது 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் அதிகமாக இருக்கக்கூடிய நாடு எந்த நாடு என்று கேட்டால் நம்முடைய இந்தியா தான். அந்த இளைஞர்களை அனைத்து வகையிலும் திறமைசாலிகளாக அவர்கள் உருவாக்க வேண்டும். அதாவது இளைஞர் சக்தியை உருவாக்கி வைக்க வேண்டும். அதற்கு முக்கியமாக கல்வியை நாம் தந்தாக வேண்டும். அடிப்படைக் கல்வி மட்டுமல்ல, உயர் கல்வியும் தந்தாக வேண்டும். அப்படி கற்ற இளைஞர்களுக்கு அவர்களது தகுதிக்கேற்ற வேலையை நாம் வழங்க வேண்டும். அப்படி வேலை பெற்றவர்கள், அதற்குரிய ஊதியத்தை அவர்கள் பெற வேண்டும். அவர்களுக்கு நிறைவான வாழ்க்கையை அமைத்துத் தருவதன் மூலமாக இந்த நாட்டுக்கு அவர்கள் தங்களது முழுத் திறமையையும் கொடுத்து உழைப்பார்கள்.

இளைஞர்களுக்கு வழிகாட்டியாக 'திராவிட மாடல்’ அரசு இருக்கும்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

இத்தகைய உழைப்புச் சக்கரத்தைச் சரியாக உருவாக்கக்கூடிய அரசு தான் இன்றைக்கு உங்கள் அன்போடு, ஆதரவோடு நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நம்முடைய தமிழக அரசால் உருவாக்கப்பட்ட பெரும்பாலான திட்டங்கள் இத்தகைய உழைப்புச் சக்கரத்தை உருவாக்கும் திட்டங்களாக அமைந்திருக்கிறது. 2010-ஆம் ஆண்டில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள், நமது மாநிலத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கம் (Tamil Nadu Skill Development Mission) என்ற தனித்துவம் வாய்ந்த ஒரு அமைப்பை அன்றைக்கு உருவாக்கினார்.

அப்போது தேசிய அளவிலோ அல்லது பிற எந்த மாநிலத்திலோ இத்தகைய திறன் மேம்பாட்டிற்கான தனி அமைப்பு எதுவும் கிடையாது. நமது மாநிலத்தில் முன்னோடி திட்டமாக இத்தகைய தனி அமைப்பை ஏற்படுத்தி பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக திகழக்கூடிய ஒரு சூழ்நிலையை அன்றைக்கு நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் உருவாக்கினார்.

இந்நிறுவனம் அனைத்து வகையான திறன் பயிற்சிகளை வழங்கும் முதன்மை அமைப்பாக அறிவிக்கப்பட்டு, மாநிலத்தில் இளைஞர்களின் தொழிற்திறன் மேம்பாட்டுக்கான சூழலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனுடைய அடுத்தகட்ட வளர்ச்சியாகத் தான் எல்லோரும் குறிப்பிட்டது போல "நான் முதல்வன்" என்ற அந்தத் திட்டத்தை அறிவித்தேன். நான் மட்டும் முதல்வன் என்று சொல்லிக் கொண்டிருந்தால் போதாது, நீங்களும், ஒவ்வொருவரும் நான் முதல்வன், நான் முதல்வன் என்று சொல்லக்கூடிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். அதற்காகத்தான் அந்த பெயரை நாம் சூட்டி இருக்கிறோம். ஒரு பக்கம் இளைஞர்களுக்கு வேலை இல்லை என்ற நிலைமை, இன்னொரு பக்கம் இருக்கும் வேலைக்கு தகுதியான இளைஞர்கள் கிடைக்கவில்லை என்ற ஒரு நிலைமை. இந்த இரண்டையும் இல்லாமல் ஆக்குவதற்காகத்தான் இன்றைக்கு நம்முடைய அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. வேலைவாய்ப்புகளை உருவாக்க ஏராளமான புதிய நிறுவனங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். வேலைக்கான ஆட்களை உருவாக்க திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கி வருகிறோம்.

புதிய தொழில்நுட்பங்களும் வளர்ந்து வருகின்றன. அதற்கேற்ப நம்முடைய இளைஞர்களைத் தயார்படுத்திட வேண்டும் என்ற கடமை உணர்ச்சியுடன் துவங்கப்பட்ட கனவுத் திட்டம்தான் “நான் முதல்வன்” என்கின்ற அந்தத் திட்டம்.

அதேபோல் ஒவ்வொரு இளைஞருக்கும் ஒவ்வொரு விதமான விருப்பம் இருக்கும். அந்த விருப்பங்களை வளர்த்தெடுக்கவும் இத்திட்டம் அடிப்படையாக அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் முழுவதும் ஐந்து லட்சம் இளைஞர்களின் கல்வி, அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்தவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் தனித்திறமைகள் கண்டறியப்பட்டு, அவர்களை மேம்படுத்த ‘நான் முதல்வன்’ என்ற அந்த மகத்தான திட்டத்தை கடந்த 01.03.2022 அன்று நான் துவக்கி வைத்ததை பெருமையாகக் கருதுகிறேன்.

மாணவர்கள் தங்களின் திறனை வளர்த்துக் கொண்டு அதற்கேற்ப வேலைவாய்ப்பினைப் பெற்று தங்கள் தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. திறன்பெற்ற இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் மாநிலத்தின் வளர்ச்சி அதிகரிக்கும். அதனால்தான் என்னுடைய நேரடிப் பார்வையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படத் தொடங்கியிருக்கிறது.

“நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 10 இலட்சம் இளைஞர்களுக்கு கல்வி, அறிவு மற்றும் திறன் உயர்த்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏற்ற வகையில் பாடத்திட்டங்களும் மாற்றப்பட இருக்கிறது. நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமானது, அரசுக் கல்லூரிகளில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் அதற்கேற்ற பயிற்சிகளை வழங்கிடப் பெருநிறுவனங்களோடு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு வேலைவாய்ப்பு பெறக்கூடிய திறன் பயிற்சிகள் நடத்தப்பட இருக்கிறது.

நான் முதல்வன் திட்டத்தின்கீழ் மாறிவரும் தேவைக்கேற்ப பாடத்திட்டங்களை மேம்படுத்த சர்வதேச பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்துறை சங்கங்களுடன் இணைந்து செயல்பட, தமிழ்நாட்டில் அதிக அளவிலான தொழில் நிறுவனங்கள் கொண்ட துறைகளில் திறன்மிகு மையங்களை உருவாக்குதல், 21-ஆம் நூற்றாண்டிற்கான திறன்கள் மற்றும் தகவல் தொடர்புத் திறன்களை அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் வழங்கி நமது இளைஞர்களைத் திறன் மிக்கவர்களாக மாற்ற வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை இன்றைக்கு நாம் மேற்கொண்டு வருகிறோம்.

நம்முடைய மாநிலத்தினுடைய இளைஞர்கள் மிகவும் திறமையானவர்கள். அவர்களுக்கு வழிகாட்டியாக இந்த அரசு நிச்சயமாக செயல்படும். இதற்குச் சான்றாக நான் சொல்ல வேண்டுமென்று சொன்னால், உலகத்திறன் போட்டிகளில் பங்குபெறும் விதமாக மாநிலத்தில் திறன்போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற 32 மாணவர்கள் ஜனவரி 2022-ல் புதுடில்லியில் நடைபெற்ற இந்திய அளவிலான இறுதிப்போட்டியில் கலந்துகொண்டிருக்கின்றார்கள். பெருமையோடு சொல்கிறேன், அந்த 32 பேரில் 23 பேர் பதக்கங்களைப் பெற்றிருக்கிறார்கள். இதுபோல், அதிக பதக்கங்களை தமிழகம் வெல்வது இதுவே முதன்முறையாகும். இது இந்த அரசு திறன்மேம்பாட்டில் செலுத்திய அக்கறைக்கு ஒரு சான்றாக அமைந்திருக்கிறது.

2006-07ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வாயிலாக இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சித் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மகளிரின் முன்னேற்றத்திற்காக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தொலைநோக்குப் பார்வை தான், 1989-ஆம் ஆண்டு நாட்டிலேயே முதன்முதலாக தருமபுரி மாவட்டத்தில் துவங்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழு என்கிற ஒரு மாபெரும் திட்டம். இது இன்றைக்கு வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இளைஞர்களுக்கு வழிகாட்டியாக 'திராவிட மாடல்’ அரசு இருக்கும்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

தற்போது சமூக, பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கு சுய உதவிக்குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளை உருவாக்கி, முறையான பயிற்சிகளை வழங்கி, வருமானம் ஈட்டக்கூடிய தொழில்களைத் தொடங்க வங்கிக் கடன் இணைப்புகளை ஏற்படுத்தி சுயஉதவிக் குழு இயக்கத்தை நம்முடைய அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இதன் அடுத்த கட்டமாகத்தான் இன்றைய தினம் மாநில அளவிலான முதல் ‘இளைஞர் திறன் திருவிழா’ மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த இளைஞர் திறன் திருவிழாவானது. தமிழகத்தின் 388 வட்டாரங்களில் 1 கோடியே 94 லட்சம் ரூபாய் செலவில் நடத்தப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் இந்த விழாவில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த நிகழ்வை அன்றாடம் நடக்கும் சராசரி நிகழ்வாகக் கருதாமல், இத்திருவிழாவின் நோக்கத்தை வெற்றியடையச் செய்யவேண்டிய பொறுப்பும், கடமையும் இளைஞர்களாக இருக்கக்கூடிய உங்கள் கைகளில்தான் இருக்கிறது. கண்டிப்பாக, நிச்சயமாக, உறுதியாக நீங்கள் இதை வெற்றியடையச் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்குப் பெரிய அளவில் இருக்கிறது.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் ஊரகத் திறன் பயிற்சித் திட்டத்தின் கீழ் 2006-ஆம் ஆண்டு முதல் இதுநாள் வரை 1 லட்சத்து 60 ஆயிரத்து 785 இளைஞர்களுக்குத் திறன்பயிற்சித் திட்டங்கள் மூலமாகத் தொழிற்பயிற்சிகள் அளிக்கப்பட்டு, 1 லட்சத்து 17 ஆயிரத்து 841 நபர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் கடந்த நிதி ஆண்டில் 79 ஆயிரம் இளைஞர்களுக்குத் திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவர்களின் வேலைவாய்ப்பும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இளைஞர்கள் அதிக வேலைவாய்ப்புள்ள தொழில்களைப்பற்றி அறிந்து கொள்வதோடு, திறன் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு மற்றும் தகவல்களும் ஒருங்கே கிடைக்கப்பெற்று, சிறந்த வேலைவாய்ப்புகளைப் பெற வழிவகை செய்யும் நேரத்தில், இந்த ஆண்டு முதல் இளைஞர் திறன் விழாக்கள் நடத்தப்படுகின்றன.

இங்கு சிறப்புற நடைபெற்று வரும் இந்த இளைஞர் திறன் திருவிழா இளைஞர்களின் வாழ்விற்கு மேலும் வளம் சேர்க்கக்கூடிய நோக்கத்தில் இருக்கிறது என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் கடந்த நிதி ஆண்டில் புதிதாக 36 ஆயிரத்து 957 மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2021-2022 நிதி ஆண்டில் சுய உதவிக் குழுக்களுக்கு 21 ஆயிரத்து 392 கோடியே 50 லட்சம் ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

2022-2023 நிதியாண்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 25,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகளை முனைப்போடு இந்த அரசாங்கம் எடுத்துக் கொண்டிருக்கிறது. இங்கு கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள பொருட்களை பொதுமக்கள் அனைவரும் வாங்கிப் பயன் பெற வேண்டும், குழுக்களின் வாழ்வாதாரத்தை வளம் பெறச் செய்யவும் உங்களையெல்லாம் நான் அன்புடன் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

நமது அரசு பொறுப்பேற்றவுடன் சென்ற நிதியாண்டில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் சுமார் 79,000 இளைஞர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இத்தகைய பயிற்சிகள் அனைத்தும் இலவசமாகவே இளைஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சிகள் தனியார் வெளிமுகமைகள் மூலமாகவும் அரசு நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மூலமாகவும் வழங்கப்படுகின்றன. எனவே, நம் இளைஞர்கள் அனைவரும் நான் முதல்வன் திட்டத்தை தவறாது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் பல புதிய திறன்மேம்பாட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தி. தமிழ்நாட்டைத் திறன் மேம்பாட்டின் முதன்மை மாநிலமாக ஆக்கிட இந்த அரசு உறுதி கொண்டிருக்கிறது. தமிழக இளைஞர்கள் அனைவரும்“நான் முதல்வன்” என்று நம்பிக்கையோடு வாழ்க்கையில் வெற்றிபெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை இந்த நிகழ்ச்சியின் மூலமாக நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த இளைஞர் திறன் திருவிழாவை நல்ல முறையில் பயன்படுத்தி, அதற்கேற்ற வகையில் உங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

அரசுப் பள்ளி மாணவர்கள் உயர் கல்வி பயில 7.5 விழுக்காடு சிறப்பு உள் ஒதுக்கீடு,மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் பெயரில் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் பயின்று உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000/- ரூபாய் வழங்கக்கூடிய ஒரு அற்புதமான திட்டம்,நம் பள்ளி நம் பெருமை, இல்லம் தேடிக் கல்வி, ஒலிம்பிக் தங்கம் தேடுதல் திட்டம், - போன்ற இளைஞர் நலம் நாடும் திட்டங்களை செயல்படுத்தி வருவதில் நம் திராவிட மாடல் அரசு என்றைக்கும் முன்னோடியாகத் திகழும்.

இந்த இளைஞர் திறன் திருவிழா நிகழ்ச்சியில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனை அரங்குகளையும் நான் திறந்து வைத்திருக்கிறேன். திறன் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு, திறன்வளர்ப்பு பயிற்சி சேர்க்கைச் சான்றிதழ்களையும், தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும், 608 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 25 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்புகளையும் வழங்க இருப்பது எனக்கு உள்ளபடியே மட்டற்ற மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும், உத்வேகத்தையும் தந்து கொண்டிருக்கிறது.

'முடியுமா நம்மால்' என்பது 'தோல்வி'க்கு முன்பு வரக்கூடிய தயக்கம். 'முடித்தே தீருவோம்' என்பது 'வெற்றி'க்கான தொடக்கம்’ இதை மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். இதைச் சொன்னது முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்தான். அதை மெய்ப்பிக்கக்கூடிய வகையில் அனைவருக்கும் அனைத்துச் சேவைகளும் வழங்கிட ‘திராவிட மாடல்’ அரசாக நமது அரசு உங்களுக்கு என்றைக்கும் துணைநிற்கும் என்பதை பெரிதும் மகிழ்ச்சியுடன், பெருமையுடன், பூரிப்புடன் தெரிவித்துக் கொண்டு, உங்கள் அனைவரையும் சந்திப்பதிலே நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories