முரசொலி தலையங்கம்

’நானும் விவசாயி’ என சொல்லாமல் விவசாயிகள் மனதில் பன்னீர் தெளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் : முரசொலி புகழாரம்

மகசூல் பெருக்கம் மகிழும் விவசாயி என்று சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அளித்த வாக்குறுதியை ஒட்டுமொத்தமாக நிறைவேற்றும் திட்டமாக இருக்கிறது கலைஞர் வேளாண் வளர்ச்சித் திட்டம் என முரசொலி ஏடு பாராடியுள்ளது.

’நானும் விவசாயி’ என சொல்லாமல் விவசாயிகள் மனதில் பன்னீர் தெளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் : முரசொலி புகழாரம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விவசாயிகள் மனதில் பன்னீர் தெளிக்கும் திட்டம்! என முரசொலி ஏடு தலையங்கம் தீட்டியுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:

”விவசாயிகளை மண்ணின் மருத்துவர்கள் என்றார் முத்தமிழறிஞர் கலைஞர். அவரது பெயரால் மாபெரும் திட்டம் ஒன்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்கள். அந்தத் திட்டமானது, தமிழ்நாட்டு விவசாயிகளின் மனதில் பசுமையை வளர்க்கும் திட்டமாக இருக்கிறது. ‘மகசூல் பெருக்கம் - மகிழும் விவசாயி' என்று சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அவர் அளித்த வாக்குறுதியை ஒட்டுமொத்தமாக நிறைவேற்றும் திட்டமாக இருக்கிறது. தலைவர் அறிவித்த ஏழு வாக்குறுதிகளில் மிக முக்கியமான வாக்குறுதி இது!

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைந்ததில் இருந்து வேளாண்மைத் துறையானது மிகமிக உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது. அந்தத் துறையின் பெயரே வேளாண்மை - உழவர் நலத்துறையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. வேளாண்மை என்பது மண்ணை மட்டுமல்ல, அதனைப் பண்படுத்தும் உழவர்களையும் காக்கும் துறையாக அமைய வேண்டும் என்று திட்டமிட்டு முதல்வர் அதனை வடிவமைத்தார். இத்துறைக்காக தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வோம் என்றும் முதல்வர் அறிவித்தார்கள். வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இதுவரை இருமுறை வேளாண்மைக்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.

தமிழ்நாடு அரசு வேளாண்மையை தனிக் கவனம் செலுத்தி - முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லப் போகிறது என்பதை உணர்த்துவதாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்திருந்தது. அந்த வரிசையில்தான், ‘கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்' என்ற மகத்தான திட்டம் நேற்றைய தினம் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

கோட்டையில் முதலமைச்சர் இதனை தொடங்கி வைத்தார்கள். தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து விவசாயிகள் இதனை பார்வையிட்டார்கள். 2.10 லட்சம் விவசாயிகள் இதில் பங்கெடுத்துள்ளார்கள். 2.75 லட்சம் தென்னங் கன்றுகள் தரப்பட்டுள்ளன. 19 ஆயிரம் தெளிப்பான்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 150 மெட்ரிக் டன் உளுந்து விதை தரப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் உடனடியாக 109 வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல், பண்ணைக் குட்டைகள் அமைத்தல், தூர்வாருதல், சிறுபாசன ஏரிகள் அமைத்தல், ஊரணிகள், குட்டைகள் போன்ற வளர்ச்சிப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த திட்டம் தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராமப் பஞ்சாயத்துகளில் செயல்பட இருக்கிறது. அரசின் அனைத்து செயல்திட்டங்களும் கிராம அளவில் கடைக்கோடி மனிதரையும் சென்றடைய வேண்டும் என்பதுதான் இதன் முதன்மையான நோக்கமாக இருக்கிறது.

* தரிசு நிலங்களை சாகுபடிக்குக் கொண்டு வருதல்

* நீர்வள ஆதாரங்களைப் பெருக்குதல்

* சூரியசக்தி பம்பு செட்டுகளுடன் நுண்ணீர்ப் பாசன வசதி ஏற்படுத்துதல்

* வேளாண் விளைபொருட்களின் மதிப்பைக் கூட்டுதல்

* விளைபொருட்களை சந்தைப்படுத்துதல்

* பண்ணைக் குட்டைகள் அமைத்தல்

* பால் உற்பத்தியைப் பெருக்குதல்

* உழவர்களுக்கு வருவாய்த் துறை மூலமாக கிடைக்கவேண்டிய சான்றிதழ்களை வழங்குதல் - எளிமையாகக் கிடைக்கச் செய்தல்

* பயிர்க்கடன்கள் வழங்குதல்

* தூர்வாருதல்

* உழவர் குழுக்களை உருவாக்குதல்

- ஆகிய செயல்கள் இந்த திட்டத்தின் மூலமாக முன்னெடுக்கப்பட இருக்கின்றன.

இப்போது இருக்கும் பாசனப்பரப்பை விட கூடுதலாக 11.75 லட்சம் ஹெக்டேர் நிலங்களை சாகுபடிக்குக் கொண்டு வருவதும், இரு போக சாகுபடி பரப்பை 20 லட்சம் ஹெக்டேராக மாற்றுவதும் தனது இலக்கு என்று இத்துறை அறிவித்துள்ளது.

வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், "ஐந்து ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியை உருவாக்கிட இத்திட்டம் செயல்படுத்தப்படும்" என்று அறிவித்தார். ‘அனைத்து கிராமங்களும் வளர்ச்சி அடைந்து - தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மாறி விடும்' என்றும் சொன்னார். அந்த வகையில் விவசாயிகளின் மனதில் பன்னீர் தெளிக்கும் திட்டமாக இது அமைந்துள்ளது.

’நானும் விவசாயி’ என சொல்லாமல் விவசாயிகள் மனதில் பன்னீர் தெளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் : முரசொலி புகழாரம்

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்தவர் கலைஞர். அவர் வழிவந்த முதலமைச்சர் அவர்கள் தனது சாதனையாக வேளாண்மைக்கு என தனிநிதி நிலை அறிக்கையும் கொடுத்தார். ஒரு லட்சம் விவசாயி களுக்கு இலவச மின் இணைப்பையும் வழங்கி உள்ளார். இப்போது கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தையும் உருவாக்கிக் கொடுத்துள்ளார்.

பயிர்களின் உற்பத்தித் திறனில் தேசிய அளவில் முதலிடத்தை நோக்கி தமிழ்நாட்டைக் கொண்டு சென்றுள்ளார் முதலமைச்சர். "கிராம வளர்ச்சி என்பது பெரும் மக்கள் இயக்கமாக மாற வேண்டிய இந்தக் காலக் கட்டத்தில் கிராமத்தில் உள்ள அனைத்து உழவர்களையும் ஏதாவது ஒரு திட்டத்தின் மூலமாகப் பயனடையச் செய்ய வேண்டும்" என்று தனது இலக்கை முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள். அனைத்து கிராமங்களும் ஒட்டு மொத்தமாக வளர வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயித்துள்ளார்கள். ஐந்தாண்டு காலத்தில் இந்த இலக்கு உறுதியாக எட்டப்படும் என்ற நம்பிக்கை தெரிகிறது.

‘நானும் விவசாயிதான்' என்று சொல்லிக் கொள்ளாமலேயே இதனை நிறைவேற்றிக் காட்டும் முதல்வரை மக்கள் மட்டுமல்ல, மண்ணும் வாழ்த்தும்!” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories