தமிழ்நாடு

”'திராவிட மாடல்' யாரையும் புறக்கணிக்காது.. தோளோடு தோள் நின்று அரவணைக்கும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இருண்டு கிடந்த தமிழ்நாட்டில் ஒளிரும் சூரியனாக தி.மு.க ஆட்சி அமைந்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

”'திராவிட மாடல்' யாரையும் புறக்கணிக்காது.. தோளோடு தோள் நின்று அரவணைக்கும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (24-05-2022) சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற, "ஓயாத உழைப்பின் ஓராண்டு" கழக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அக்கூட்டத்தில் அவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

தமிழ்நாட்டில் எத்தனையோ ஊர்கள் இருந்தாலும், நான் பங்கேற்றுப் பேசும் இடமாகத் தேர்ந்தெடுத்த ஊர் இந்த ஆத்தூர். ஆற்றூர் என்பதுதான் பேச்சுவழக்கில் ஆத்தூர் ஆக நாம் அன்போடு அழைத்துக் கொண்டிருக்கிறோம். மன்னராட்சி காலத்திலேயே கோட்டையும், கோயிலும் அமைந்த ஊர் இந்த ஊர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ராணுவ முகாம் இருந்த ஊர் இந்த ஊர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இப்படிப்பட்ட வரலாற்றை பெற்றிருக்கும் ஊராக இந்த ஆத்தூர் இருந்திருக்கிறது.

அப்படிப்பட்ட பெருமைக்குரிய இந்த ஆத்தூரில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ராணுவ வீரர்களைப் போன்ற கட்டுக்கோப்பான தொண்டர்களைக் கொண்ட வகையில் இந்த ஆத்தூர் அமைந்திருக்கிறது. அப்படிப்பட்ட கூட்டத்தில் நான் பங்கேற்று உரையாற்றுவதற்காக இங்கு வந்திருக்கிறேன். சேலம் மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகரம் இந்த நகரம். அதுபோலவே மிகப்பெரிய கூட்டத்தை – கூட்ட வேண்டும் என்று முடிவெடுத்து, ஆனால் ஒரு பெரிய மாநாட்டையே ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

ஏனென்றால் - நேரு எங்கே இருக்கிறாரோ அங்கு மாநாடுதான் நடக்கும். அந்த அடிப்படையில் இதை ஒரு மாநாடாகவே ஏற்பாடு செய்திருக்கிறார்.

இன்னும் சொல்லவேண்டும் என்று சொன்னால், நேரு என்றால் மாநாடு - மாநாடு என்றால் நேரு என்று நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். நேருவுக்கு நிகர் நேரு என்று நான் எத்தனையோ முறை அவரைப் பாராட்டி நான் பேசியிருக்கிறேன். அதையும் தாண்டி சொல்ல வேண்டும் என்று சொன்னால், நேருவைப் பாராட்டுவது என்னை நானே பாராட்டிக் கொள்வதற்கு சமம் என்றும் குறிப்பிட்டிருக்கிறேன்.

இங்கு சிவலிங்கம் அவர்கள் பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னார், கடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்த சேலம் மாவட்டமானது திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை என்றாலும், அதைத் தொடர்ந்து நடைபெற்றிருக்கும் உள்ளாட்சி - நகராட்சித் தேர்தலில் அந்தப் பள்ளத்தை நிரப்பும் அளவுக்குச் செயல்படுவதற்காக, தலைமைக் கழகத்தின் சார்பில் நம்முடைய முதன்மைச் செயலாளர் நேரு அவர்களை நாங்கள் அனுப்பி வைத்தோம்.

நேரு வந்தார் - வென்றார் என்று சொல்லும் அளவுக்கு மாபெரும் வெற்றியைப் இந்த மாவட்டத்தில் பெற்றிருக்கிறோம். அத்தகைய 100 விழுக்காடு வெற்றியை அடுத்தடுத்து வரப்போகிற தேர்தல்களிலும் நாம் அடைவோம் என்ற நம்பிக்கையை இந்த மாபெரும் கூட்டத்தை பார்க்கிறபோது என்னால் உணர முடிகிறது.

சேலம் மாவட்டத்துக்கு நேரு அவர்களை அனுப்பி வைத்தாலும் - அவரிடம் நான் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருப்பேன். சேலத்தை உள்ளடக்கிய மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் எவ்வளவு சுறுசுறுப்பாகப் பணியாற்றி வருகிறார்கள் என்பதை அவர் தொடர்ந்து என்னிடத்தில் சொல்லி வந்திருக்கிறார்.

மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் ராஜேந்திரன் அவர்களாக இருந்தாலும் - கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் அவர்களாக இருந்தாலும் - மேற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி அவர்களாக இருந்தாலும் - அவர்கள் மாவட்டத்தை வழிநடத்துபவர்களாக மட்டுமல்லாமல் – இந்த சேலம் மாவட்டத்தின் முப்படைத் தளபதிகளைப் போலச் செயல்பட்டு வருவதை நான் அறிவேன்.

அதேநேரத்தில் நான் கண்காணித்துக் கொண்டும் இருக்கிறேன். உங்கள் மூவரின் செயல்பாடும் - சேலம் மாவட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தை மீண்டும் வெற்றி முகட்டில் கொண்டுபோய் நிறுத்தும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. எல்லாவற்றிற்கும் மேல், இது சாதாரண மாவட்டம் அல்ல - வீரபாண்டியார் மாவட்டம்! அதையும் மறந்துவிட முடியாது. அவர் மறைந்தாலும் – நம் ஊனோடு உயிரோடு கலந்திருக்கிறார். இங்கு நிழலாக இருந்து இந்த இயக்கத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

”'திராவிட மாடல்' யாரையும் புறக்கணிக்காது.. தோளோடு தோள் நின்று அரவணைக்கும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

வீரபாண்டியாரின் கோட்டை என்பதை நிரூபிக்க உழைத்துக் கொண்டு இருக்கும் பல்லாயிரக்கணக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீரர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த மேடைக்கு வரும்போது கருப்பும் சிவப்பும் பட்டொளி வீசிப் பறந்துகொண்டு இருந்தது. கருப்பும் சிவப்புமான அந்த இருவண்ணக் கொடிதான் நம்முடைய அடையாளம்.

அரசியல், பொருளாதார, சமுதாய வாழ்விலுள்ள இருண்ட நிலையை உணர்த்தி நிற்பதுதான் கருப்பு - அந்த மூன்று துறைகளிலும் உள்ள இருண்ட நிலையைப் போக்கி ஒளிநிலையை உண்டாக்க வேண்டும் என்பதன் அடையாளமே சிவப்பு - என்று அந்தக் கொடியை உருவாக்கியபோது பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள். இத்தகைய இருண்ட நிலையை விலக்கி - ஒளியூட்டும் சின்னமாக உதயசூரியன் நம்மிடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு மே மாதம் 7-ஆம் நாள் தமிழகத்தின் இருண்ட வானில் ஒளிரும் சூரியனாக உதயசூரியன் ஆட்சி உருவானது.

உங்களில் ஒருவனான நான் - உங்களின் தலைமைத் தொண்டனான நான் – ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ எனும் நான் - தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றேன். அப்போது எனக்கு ஒருவிதமான தயக்கம் இருந்தது.

அந்த தயக்கத்துக்கு என்ன காரணம் என்றால் - பத்து ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் பாதாளத்துக்குப் சென்றுவிட்டது; இதை உடனடியாக - ஓராண்டு காலத்தில் சீர்செய்ய முடியுமா என்று நான் யோசித்துக் கொண்டே இருந்தேன்.

தமிழ்நாட்டின் நிதிநிலைமை என்பது மிகமிகக் கவலைக்கிடமாக இருந்தது. ஆறு லட்சம் கோடி ரூபாய்க் கடனில் தமிழ்நாடு தத்தளித்துக்கொண்டு இருந்தது.இந்த நிதி நெருக்கடியில் இருந்து உடனடியாக மீள முடியுமா என்று நான் யோசித்தேன். இவைதான் என் மனதில் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்த தயக்கங்கள். ஆனால், இன்று தமிழ்நாட்டைத் தலைநிமிர வைத்திருக்கிறோம் - என்பதை நான் தலைநிமிர்ந்து சொல்கிறேன்.

வீழ்ச்சியுற்றுக் கிடந்த தமிழ்நாடு - இன்று எழுச்சி பெற்றிருக்கிறது. துவண்டு கிடந்த தமிழ்நாடு - இன்று துள்ளி எழுந்திருக்கிறது. முடங்கிக் கிடந்த தமிழ்நாடு – இன்றைக்கு புத்தெழுச்சி பெற்றிருக்கிறது. நிர்மூலத்தில் இருந்த நிர்வாகம் - நிமிர்ந்து எழுந்திருக்கிறது. நிதி நெருக்கடியில் இருந்த தமிழ்நாடு - அந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வந்துகொண்டு இருக்கிறது. தரையில் ஊர்ந்து கொண்டு இருந்த தமிழ்நாடு - நெஞ்சை நிமிர்த்தி நிற்கத் தொடங்கி இருக்கிறது.

இந்த ஓராண்டு காலம் என்பது மிகப்பெரிய நம்பிக்கையை எனக்குக் கொடுத்திருக்கிறது. தமிழகத்தைத் தலைசிறந்தத் தமிழ்நாடாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உருவாகியிருக்கிறது. இந்தியாவில் சிறந்த மாநிலமாக மட்டுமல்ல - அனைத்து வளங்களும் கொண்ட மாநிலமாக விரைவில் ஆக்க முடியும் என்ற நம்பிக்கையை எனக்குக் கொடுத்திருக்கிறது.

மாலையில் ஆத்தூருக்கு வருவதற்கு முன்பு, நம்முடைய பொதுச்செயலாளர் அவர்கள் குறிப்பிட்டுச் சொன்னாரே, இன்று காலையில் மேட்டூர் சென்று தண்ணீரைத் திறந்து விட்டுத்தான் இங்கு வந்திருக்கிறேன். வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதி அன்றுதான் மேட்டூரில் தண்ணீர் திறப்பது வழக்கம். கடந்த ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி அன்று நான் வந்து தண்ணீரைத் திறந்து வைத்தது உங்களுக்குத் தெரியும். மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதன் மூலமாக - திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர் போன்ற மாவட்டங்களில் சுமார் 5 லட்சத்து 21 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

சேலம் மாவட்டத்தில் இருந்தாலும் சுற்றியுள்ள 12 மாவட்டத்து மக்களுக்கும் - நிலப்பரப்புக்கும் மேட்டூர்தான் நம்பிக்கையின் ஒளிவிளக்காக அமைந்திருக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் மிகச்சரியாக ஜுன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதா? இல்லை! ஒரே ஒரு ஆண்டு மட்டும்தான், அதாவது 2020-ஆம் ஆண்டு மட்டும்தான் ஜூன் 12 அன்று திறந்தார்கள். செப்டம்பர் 17 - ஆகஸ்ட் 2 - ஆகஸ்ட் 10 - செப்டம்பர் 20 - அக்டோபர் 2 - ஜூலை 19 - ஆகஸ்ட் 13 - என 2012-ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் தங்கள் விருப்பப்படி, உழவர்களைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல்தான் தண்ணீரைத் திறந்துவிட்டிருக்கிறார்கள். இது அதிமுக ஆட்சி.

”'திராவிட மாடல்' யாரையும் புறக்கணிக்காது.. தோளோடு தோள் நின்று அரவணைக்கும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஆனால் கழக அரசு கடந்த ஆண்டில் மிகச்சரியாக ஜூன் 12 அன்று நாம் திறந்து வைத்தோம். அதேபோல் இந்த ஆண்டும் ஜூன் 12 அன்று திறக்கலாம் என்று நான், நம்முடைய நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் எல்லாம் திட்டமிட்டு இருந்தோம். ஆனால் இயற்கையே இந்த ஆட்சிக்கு மாபெரும் ஆதரவைக் கொடுக்கிறது என்பதன் அடையாளமாகத்தான் மழை கொட்டுகிறது. தண்ணீர் வரத்து அதிகமாகிவிட்ட காரணத்தால் முன்கூட்டியே இன்றே மேட்டூரில் தண்ணீரைத் திறந்துவிட்டிருக்கிறோம்.

நாடு விடுதலை அடைந்ததில் இருந்து குறுவைச் சாகுபடிக்காக - வழக்கமாகத் திறக்கப்படும் நாளுக்கு முன்னதாகத் - இன்னும் சொன்னால், மே மாதத்தில் பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்படுவது இதுதான் முதன்முறை என்பதை நான் பெருமையுடன் குறிப்பிடுகிறேன். தேர்தல் அறிக்கையில் நாம் கொடுக்காத வாக்குறுதி இது. மக்கள் மட்டுமல்ல - இயற்கையே நம் பக்கம்தான் இருக்கிறது என்பதற்கு இதுதான் ஒரு அடையாளம். கழகம் ஆட்சிக்கு வந்ததும் நாம் செய்யத் தொடங்கிய முதல் பணி பாசன கால்வாய்களை தூர்வாருவது. கால்வாய்களை விரைவாக தூர்வாரிய காரணத்தால், கடைமடை வரைக்கும் தண்ணீர் பாய்ந்தது.

கடந்த ஆண்டிலும் தூர்வாரும் பணிகளை கடந்த ஏப்ரல் மாதமே தொடங்கி வேகமாக செய்திருக்கிறோம். 80 கோடி ரூபாய் மதிப்பில் அந்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, கடைமடைவரை இந்த ஆண்டும் தண்ணீர் பாயப்போகிறது. கடந்த ஆண்டு உழவர்களுக்கு 61 கோடி ரூபாய் மதிப்பிலான குறுவைச் சாகுபடி தொகுப்புத் திட்டத்தை அறிவித்தோம். இதன் காரணமாக, வரலாற்றில் இல்லாத அளவுக்கு நெல் சாகுபடிப் பரப்பு அதிகமானது. 4 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கராக நெல் சாகுபடிப் பரப்பு அதிகமானது. கடந்த ஆண்டு 1 கோடியே 18 லட்சம் டன் உணவு உற்பத்தி நடந்திருக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் இதுதான் அதிகபட்ச உணவு உற்பத்தி. தமிழகத்தில் நல்லாட்சி மலர்ந்ததின் அடையாளம்தான் மண் செழித்து - விளைச்சல் அதிகமாகி இருப்பது.

இரண்டு நாட்களுக்கு முன்பு நீங்கள் பத்திரிக்கையில் பார்த்திருப்பீர்கள். இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பணவீக்கம் அதிகமாகி இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில்தான் பணவீக்கம் குறைந்திருக்கிறது என்பதாக பத்திரிகையில் வந்திருக்கும் செய்தி.

இந்த புள்ளிவிவரத்தைத் தமிழ்நாடு அரசு சொல்லவில்லை. ஒன்றிய அரசின் நிறுவனம்தான் இந்தப்புள்ளிவிவரத்தைச் சொல்லியிருக்கிறது. இப்படி தமிழ்நாட்டில் பணவீக்கமானது குறைவதற்கு என்ன காரணம் என்றால் - தமிழ்நாடு – நம்முடைய அரசு எடுத்துவரும் பல்வேறு சமூக மேம்பாட்டுத் திட்டங்கள்தான் என்று ஆங்கில நாளேடுகளில் ஆய்வாளர்கள் இந்த கருத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.அதில் மிகமிக முக்கியமானது - மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்துப் பயணம். பெண்களது வாழ்வில் மிகப்பெரிய வளர்ச்சியை இந்தத் திட்டம் உருவாக்கியிருக்கிறது. மாத ஊதியம் வாங்கும் பெண்களாக இருந்தாலும் சரி - வாரச் சம்பளம் - தினக்கூலி வாங்கும் பெண்களாக இருந்தாலும் சரி - அவர்களுக்கு 600 முதல் 2600 ரூபாய் வரைக்கும் மாதம்தோறும் செலவு மிச்சம் ஆகிறது.

”'திராவிட மாடல்' யாரையும் புறக்கணிக்காது.. தோளோடு தோள் நின்று அரவணைக்கும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

* மருத்துவத் துறையா? மக்களைத் தேடி மருத்துவம் மூலமாக லட்சக்கணக்கான மக்களுக்கு இலவச மருத்துவச் சேவை அளிக்கப்பட்டிருக்கிறது.

* பள்ளிக் கல்வியா? இல்லம் தேடிக் கல்வி திட்டம் மூலமாக லட்சக்கணக்கான பிள்ளைகளின் கற்றல் இழப்பை ஈடு செய்திருக்கிறோம்.

* ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தது மூலமாக குழந்தைகளும், ஏழை எளிய முதியோரும் அடைந்த பயன் என்பது சொற்களில் அடக்கிட முடியாது.

* பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் வீதம் ஓராண்டுக்கு முன்பே நாம் குறைத்தோம்.

* நம்முடைய அரசு, கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 4000 ரூபாய் பணம் கொடுத்தோம், மளிகைப் பொருள்கள் வழங்கினோம். நெருக்கடியான நேரத்தில் கோடிக்கணக்கான மக்களுக்கு அது ஆறுதல் அளித்தது.

* ஒரு லட்சம் உழவர்களுக்குப் புதிய மின் இணைப்பு தந்திருக்கிறோம்.

* 5 பவுனுக்குக் குறைவான நகைகளை வைத்துக் கடன் பெற்ற 13 லட்சம் பேரின் கடன் தள்ளுபடி செய்திருக்கிறோம்.

* மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 2000 கோடி ரூபாய் கடன் தரப்பட்டிருக்கிறது.

* தேர்தலுக்கு முன்னால் ஒவ்வொரு பகுதிக்கும் நான் நேரிடையாகச் சென்று மக்களைச் சந்தித்தபோது என்னிடம் லட்சக்கணக்கான மக்கள் மனு கொடுத்தார்கள். அதை ஒரு பெட்டியில் போட்டு பூட்டி வைத்தேன். ஆட்சிக்கு வந்ததும் திறந்தோம். அதில் இருந்த மனுக்களில், இரண்டரை லட்சம் மனுக்களுக்குத் தீர்வு கண்டவன்தான் உங்கள் முன்பு நிற்கும் இந்த ’முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ என்பதை கம்பீரமாக நான் சொல்கிறேன்.

100 நாட்களில் உங்களது கோரிக்கைகளை பரிசீலித்து - செய்துதர முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று சொன்னேன். சொன்னதைப் போலவே செய்தேன்.

* இப்போது, அதேபோல் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்கிற திட்டம் அனைத்து தொகுதிக்கும் – 234 தொகுதிக்கும் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

என்னுடைய கொளத்தூர் தொகுதி மட்டுமல்ல, இங்கிருக்கும் நம்முடைய பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகன் அவர்களுடைய காட்பாடி தொகுதி மட்டுமல்ல, எடப்பாடி தொகுதியாக இருந்தாலும், போடிநாயக்கனூர் தொகுதியாக இருந்தாலும், எந்தத் தொகுதியாக இருந்தாலும் - அங்கு நெடுநாட்களாக தீர்க்கப்படாத பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும், அவை அனைத்தையும் வரிசைப்படுத்தி எழுதி வைத்து - முன்னுரிமை அடிப்படையில் தீர்க்கும் திட்டமாக ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டம் இப்போது மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த ஆத்தூர் தொகுதி - கடந்த தேர்தலில் அதிமுக வென்ற தொகுதியாக இருந்தாலும் - இங்கு இருக்கிற மக்களது கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தரப்போகிற திட்டம்தான் இந்தத் திட்டம். தேர்தல் நடக்கின்ற நேரத்தில், தேர்தல் முடிவு வருகின்ற நேரம் வரைக்கும்தான், திமுக தொகுதி - அதிமுக தொகுதி என்று பேசுவோம்.

ஆனால் தேர்தல் முடிந்ததற்கு பிறகு, அவரவர் பொறுப்பேற்றதற்குப் பிறகு, எல்லாத் தொகுதிகளும் – 234 தொகுதிகளும் என்னுடைய தொகுதியாகத்தான் நான் கருதிக் கொண்டிருக்கிறேன். அந்த எண்ணத்தோடுதான் இந்த ஆட்சியை நடத்துகிறேன்.அதனால்தான் சட்டமன்றத்தில், எதிர்க்கட்சியைச் சேர்ந்த அத்தனை பேரும் சேர்ந்து பாராட்டும் அரசாக, திராவிட முன்னேற்றக் கழக அரசு இன்றைக்கு பீடுநடை போட்டுக் கொண்டிருக்கிறது.

மிகுந்த நல்லெண்ணத்தோடு - ஒரு நல்லாட்சியை, மக்களாகிய நீங்கள் உருவாக்குனீர்கள். உங்க நம்பிக்கை வீண் போகவில்லை. இவ்வளவு நன்மைகளும் நடக்க மக்களாகிய நீங்கள்தான் காரணம். அதை நிறைவேற்றிக் கொடுக்கும் கருவிதான் நான்.

* தமிழ்நாட்டில் திமுக ஆட்சி மலர்ந்துவிட்டது என்று இந்தியாவுக்கே தெரிந்துவிட்டது. இங்கிருந்து போன தொழிற்சாலைகள், பல்வேறு நிறுவனங்கள் மீண்டும் தொழில் தொடங்க தமிழகத்துக்கு வருகிறது.

* தமிழ்நாட்டில் திமுக ஆட்சி மலர்ந்துவிட்டது என்று உலகத்துக்கே தெரிந்துவிட்டது. அதனால்தான் நம்மை அங்கிருந்து வரவழைக்கிறார்கள். வாங்க... வாங்க... புதிய ஒப்பந்தங்களைப் போடுங்க... என்று வெளிநாட்டில் இருந்து நம்மை அழைக்கும் நிலைமை வந்திருக்கிறது.

இப்படி உலகம் உணர்ந்ததை – எல்லோரும் உணர்ந்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள சிலரால் உணரமுடியவில்லை.

அவர்களுக்காக நான் வேதனைப்படுகிறேன், பரிதாபப்படுகிறேன், வெட்கப்படுகிறேன்.

இந்த ஆட்சிமீது நியாயமான எதை வைத்தும் குறைசொல்ல முடியாத சிலர், இன்றைக்கு எதை கையில் எடுத்திருக்கிறார்கள் என்றால், ஆன்மீகத்தின் பெயரால் குறை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

எவரது பக்திக்கும் - எவரது உணர்வுக்கும் தடையாக திராவிட முன்னேற்றக் கழக அரசு இருந்ததும் இல்லை, இனியும் இருக்காது!

‘பக்திப் பிரச்சாரம் ஒரு பக்கம் நடக்கட்டும் – அதேபோல் பகுத்தறிவுப் பிரச்சாரம் அதுவாகத் தொடரட்டும்' என்பதுதான் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நமக்குக் காட்டிய பாதை.

ஆட்சி என்பது அனைவருக்கும் பொதுவானது. எல்லாத் துறையும் வளர வேண்டும் என்று நான் சொல்லி வருகிறேன். இதில் இந்து சமய அறநிலையத்துறையும் ஒன்று. அந்தத் துறையையும் உள்ளடக்கிய ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. நான் பெருமையோடு சொல்கிறேன்,

* 2500 கோடி ரூபாய் மதிப்பிலான திருக்கோயில் சொத்துக்கள் திமுக ஆட்சியில்தான் மீட்கப்பட்டிருக்கிறது.

* திருக்கோயில் நிலங்களின் ஆவணங்கள் அனைத்தையும் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறோம்.

* கோயில் பணியாளர்கள் அனைவருக்கும் 4000 ஆயிரம் ரூபாய் பணமும், அரிசி, மளிகைப் பொருட்களும் கொடுத்திருக்கிறோம்.

* அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் திமுக ஆட்சியில்தான் தொடங்கப்பட்டிருக்கிறது.

* அன்னைத் தமிழில் வழிபாடு நடத்த உத்தரவிட்டிருக்கிறோம்.

* 12 இறைவன் போற்றி பாடல் புத்தகங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.

* தல மரக்கன்றுகளை நட்டு வருகிறோம்.

* ஒரு காலபூசைத் திட்டத்தின்கீழ் 9 ஆயிரம் அர்ச்சகர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்குகிறோம்.

* தலைமுடி திருத்தும் பணியாளர்களுக்கு மாதம் 5 ஆயிரம் வழங்குகிறோம்.

* ஒரு கால பூசை செய்யும் கோயில்களுக்கு வழங்கப்படும் மானியத்தை 1 லட்சம் ரூபாயில் இருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி, 12,959 கோயில்களுக்கு மானியம் வழங்கப்பட்டிருக்கிறது.

* அறநிலையத்துறை சார்பில் 10 கலைக் கல்லூரிகள் உருவாக்கப்போகிறோம்.

* கோயில் மண்டபங்களில் மாற்றுத்திறனாளிகள் இலவசமாகத் திருமணம் செய்ய சலுகை தரப்பட்டிருக்கிறது.

* திருக்கோயில் நிரந்தரப் பணியாளர்களுக்கு, 17 விழுக்காட்டில் இருந்து 31 விழுக்காடாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டிருக்கிறது.

* திருக்கோயில் பணியாளர்களுக்குப் பொங்கல் கருணைத் தொகை தரப்பட்டிருக்கிறது.

* ஆணையர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

* 81 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டிருக்கிறது.

* எனது தலைமையில் ஒரு ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

- இவை அனைத்தும் கடந்த ஓராண்டு காலத்தில் இந்து சமய அறநிலையத் துறையில் மட்டும் செய்யப்பட்ட பணிகள்! சாதனைகள்!

உண்மையான ஆன்மீகவாதிகள் என்றால், நியாயமாக நீங்கள் இதை ஆதரித்திருக்க வேண்டும். அதற்கு நேர் மாறாக மதத்தை வைத்து - மதவெறியைத் தூண்டி அரசியல் செய்யும் நிலையில் இருக்கிறவர்கள், இதைத் திசை திருப்புகிறார்கள். பொய்யான அவதூறுகளைச் சொல்லி - ஆட்சியின் மீது அவதூறுகளைப் பரப்புகிறார்கள்.

இந்த அவதூறுகளை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. 'வாழ்க வசவாளர்கள்' என்று பேரறிஞர் அண்ணா சொன்ன சொல்லின்படி, நான் எனது இலக்கை நோக்கி நடந்துகொண்டு இருக்கிறேன். யாருக்கும் பதில் சொல்லி நான் என்னுடைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. நாட்டு மக்களுக்கு நன்மை செய்யவே எனக்கு நேரம் போதவில்லை. அவர்களுக்கு பதில் சொல்வதற்கு எனக்கு எங்கு நேரம் இருக்கிறது?

சேலத்தைச் சேர்ந்த ஒருவர்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான்கு ஆண்டுகள் இருந்தார். தேர்தலுக்கு முன்னதாக அவருடைய எடப்பாடி தொகுதிக்கும் சென்று கிராமசபைக் கூட்டத்தில் பங்கெடுத்தவன் நான். அங்கே செல்வதற்கு முன்னதாக இந்த எடப்பாடி தொகுதியில் மட்டும் வேலைகேட்டுப் பதிவு செய்துள்ளவர்கள் எத்தனை பேர் என்பதைக் கணக்கு எடுக்கச் சொன்னேன். சுமார் பத்தாயிரம் பேர் வேலைக்காக பதிவு செய்திருந்தார்கள்.

அவர்களுக்கு வேலை எதுவும் தரப்படவில்லை. அனைத்து விண்ணப்பங்களையும் கட்டுக்கட்டாக பிரிண்ட் எடுத்துச்சென்று அதே மக்களிடம் காட்டினேன். அத்தனை பேரின் வேலைவாய்ப்புக்காக ஒரு திட்டம் கூடத் தீட்டாதவர்தான் அன்றைக்கு இருந்த முதலமைச்சர் பழனிசாமி அவர்கள். முதலமைச்சரின் தொகுதியாயிற்றே! இங்கு இருக்கிற மக்களிடம் பெரிய அளவில் புகார் இருக்காது என்றுகூட நான் அப்போது நினைத்தேன்.

ஆனால், கிராம சபைக்கூட்டத்திற்கு வந்திருந்தபோது இரண்டு மணிநேரம் பல்வேறு புகார்களை மக்கள் என்னிடத்தில் சொன்னார்கள். 'ரோடு போடுறாங்க, அதுவும் போட்ட ரோட்டையே திரும்பத் திரும்ப போடுறாங்க' என்று பொதுமக்கள் என்னிடத்தில் புகார் சொன்னார்கள்.

1. எடப்பாடி தொகுதியில் ஜவுளிப் பூங்கா,

2. நெருஞ்சிப்பேட்டையில் காவிரி ஆற்றின் குறுக்கே பாலம்,

3. கொங்கணபுரத்தில் தொழில்பேட்டை,

4. மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் பயன்பாடு,

5. எடப்பாடி அரசு மருத்துவமனை மேம்பாடு,

6. கொங்கணபுரம் கூட்டுறவு வங்கி விவகாரம்,

7. மின் மயானங்கள்,

8. தேங்காய், மா, பருத்தி, மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றுக்கு ஆதார விலை,

9. பொதுக்கழிவு சுத்திகரிப்பு நிலையம்,

10. நிலக்கடலை உழவர்களுக்குத் தனி கூட்டுறவுச் சங்கம்,

- இந்தக் கோரிக்கைகள் எதையும் பழனிசாமி தனது சொந்தத் தொகுதிக்குக்கூட செய்து தரவில்லை.

இன்றைக்கு தினந்தோறும் அவர் இந்த ஆட்சியைக் குறைசொல்லி அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார். அறிக்கை விடக்கூடாது என்று நான் சொல்லவில்லை. ஆனால், தான் ஆட்சியில் இருந்த காலத்தில் அவர் இந்த மாவட்டத்திற்கு எதையாவது செய்திருக்கிறாரா? இதுதான் என்னுடைய கேள்வி.

அவரது ஆட்சியில் நடந்த பெரும் சாதனைகள் எது என்றால்,

* பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்முறை,

* தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு,

* கொடநாடு கொலை – கொள்ளை,

- இவைதான் அவரது ஆட்சியின் வேதனையான சாதனைகள்!

ஆனால் ஓராண்டு காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசு செய்த சாதனைகள் என்பவை பத்தாண்டு காலத்தில் செய்யக் கூடிய அளவிலான சாதனைகளை நாம் இன்றைக்கு செய்திருக்கிறோம் என்பதை நான் நெஞ்சை நிமிர்த்தி கூறுகிறேன்.

இந்த சேலம் மாவட்டத்துக்குச் செய்த சாதனைகளைச் சொல்வதற்கே நேரம் போதாது. சேலம் மாவட்டத்தில் மட்டும், இந்த ஓராண்டில் பயனடைந்தவர்களைப் பற்றி இப்போது நான் சொல்கிறேன்...

* முதல்வரின் முகவரி திட்டத்தின்கீழ் 23 ஆயிரத்து 965 கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

* கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்குக் கீழ் நகைக்கடன் பெற்ற 1 லட்சத்து 45 ஆயிரம் பேரின் 483 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

* 6 கோடி முறை, பெண்கள் இலவசப் பேருந்துப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள்.

* மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் 7 லட்சத்து ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள்.

* பால் விலைக்குறைப்பின் மூலமாக 2 லட்சத்து 75 ஆயிரம் பேர் பயனடைந்திருக்கிறார்கள்.

* 3,963 பேர் இலவச மின் இணைப்பு பெற்றிருக்கிறார்கள்.

* 10 லட்சத்து 19 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் கொரோனா நிவாரண நிதி பெற்றிருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ஆம் நாள், இதே ஆத்தூருக்கு வருகை தந்த நான் புதிதாக 13 பணிகளைத் தொடங்கி வைத்தேன்.

* அன்றைய தினம் மரவள்ளிக்கிழங்கு உழவர்களோடு - ஜவ்வரிசி உற்பத்தி நிறுவனத்தைச் சார்ந்தவர்களோடு ஒரு கலந்துரையாடல் நடத்தினேன்.

* சேகோ-சர்வில் கட்டப்பட்ட மின்னணு ஏல மையத்தையும் நேரடி விற்பனை முனையக் கட்டடத்தையும் நான் திறந்து வைத்தேன்.

* கடந்த டிசம்பர் 11 அன்று - நான் சேலத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டேன். 30 ஆயிரத்து 837 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

- இப்படி வரிசையாக சொல்லிக்கொண்டே போகலாம்.

அந்த விழாவில் பேசும்போது 917 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு பணிகளை நான் அறிவித்தேன். அவை அனைத்தும் நடைபெற்று வருகின்றன.

அந்த விழாவில் பேசும்போது மூன்று முக்கியமான அறிவிப்புகளை நான் செய்தேன்.

* தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும், அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்காகவும், சேலத்தில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா ஒன்று விரைவில் அமையப் போகிறது.

* கொலுசு உற்பத்தியில் தலைசிறந்து விளங்கக் கூடியது சேலம் மாவட்டம். நூற்றுக்கும் மேற்பட்ட கொலுசு உற்பத்தியாளர்கள் உடனடியாகத் தொழில் தொடங்குவதற்கு வசதியாக ‘பன்மாடி உற்பத்தி மையம்’ ஒன்று 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

* இளைஞர்களுக்கு அதிமான வேலைவாய்ப்புகளை அளிக்கும் வகையில் கருப்பூரில் ‘டைடல் மென்பொருள் தொழிற்பூங்கா’ ஒன்று விரைவில் அமைக்கப்படும்.

* ஜவுளிப்பூங்கா,

* கொலுசு உற்பத்தி மையம்,

* ஐடி பார்க் - ஆகிய மூன்றுக்கும் இடம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

இங்கு பொறுப்பு அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர் நேரு அவர்களும், மாவட்ட ஆட்சியரும், மக்கள் பிரதிநிதிகளும் முதற்கட்டமாக ஆய்வு செய்திருக்கிறார்கள். விரைவில் அந்த பணிகளைத் தொடங்கப் போகிறோம்.

இவை மூன்றுமே சேலம் மாவட்டத்துக்கு மிகமிக முக்கியமான கோரிக்கைகள்! அதுவும் நீண்ட காலக் கோரிக்கைகள் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.

இப்படி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஏராளமான பணிகளை கழக அரசு செயல்படுத்திக்கொண்டு இருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில், கழக ஆட்சி அமைந்ததும் பெட்ரோல் விலையைக் குறைப்போம் என்று சொன்னோம். அது முடியுமா? சாத்தியமாகுமா? என்று பலரும் கேட்டார்கள். இவர்களால் முடியாது என்று விமர்சனம் செய்தார்கள். அவற்றை எல்லாம் தாண்டி, ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்த அரசுதான் - நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக அரசு.இப்படி விலையை நாம் குறைத்து ஓராண்டு ஆகிவிட்டது. ஆனால் இரண்டு நாளைக்கு முன்பு, ஒன்றிய அரசு இப்போதுதான் குறைத்திருக்கிறது.

லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்ததன் மூலமாக, நமது மாநில அரசுக்கு 1,160 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனை வருவாய் இழப்பு என்று அரசாங்கத்தின் நிர்வாகச் சொற்களில் நான் சொன்னாலும், உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் 1,160 கோடி ரூபாய் மதிப்பிலான சலுகை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதுதான் உண்மை! இன்றைய தினம், ஒன்றிய அரசானது தனது வரியைக் குறைத்திருக்கிறது. இதன் மூலமாக, பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 பைசாவும், டீசல் விலை 7 ரூபாயும் குறைகிறது.

இதில் ஒன்றிய வரிக் குறைப்பு 8 மற்றும் 6 ரூபாய். மாநில அரசினுடைய வரிக் குறைப்பு 1.5 ரூபாய் மற்றும் 1 ரூபாய். ஏன் என்றால், எப்போதும் ஒன்றிய வரி குறைக்கப்படும்போது மாநில வரியும் தானாக குறையும். எனவே ஒன்றிய அரசு மட்டுமே வரியைக் குறைத்ததாக சொல்வது தவறு.

2014-ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபோது, அன்றைக்கு இருந்த பெட்ரோல் விலை என்ன? இப்போதைய விலை என்ன? என்பதை அவர்கள் விளக்கியாக வேண்டும்.

2014-ஆம் ஆண்டு மே மாதத்தில் பெட்ரோல் மீதான ஒன்றிய அரசின் மொத்த வரியானது லிட்டருக்கு 9 ரூபாய் 48 பைசா என்று இருந்தது. 2022 மே மாதத்தில் ஒன்றிய வரியானது 27 ரூபாய் 90 பைசா என்று இருக்கிறது. இதில்தான் 8 ரூபாய் குறைத்திருக்கிறார்கள்.

அப்படிப் பார்த்தால், 19 ரூபாய் 90 பைசா ஒன்றிய வரி நீடிக்கவே செய்கிறது. எனவே, அவர்கள் ஏற்கனவே மிக அதிகமாக ஏற்றியதை இப்போது கொஞ்சம் குறைத்திருக்கிறார்கள். உண்மையாக பார்த்தால், அவர்கள் இன்னும் அதிகமாவே குறைக்க வேண்டும்.

பலமடங்கு விலையை ஏற்றிவிட்டு - சிறிய அளவில் குறைத்திருக்கிறார்கள். எவ்வளவு ஏற்றினார்களோ – அந்த அளவிற்கு குறைத்தாக வேண்டும். ஐந்து மாநிலத்தில் தேர்தல் நடந்ததால் இதன் விலையை உயராமல் பார்த்துக் கொண்டார்கள். தேர்தல் முடிந்ததும் மார்ச், ஏப்ரல் மாதத்தில் விலையை அதிகமாக உயர்த்தினார்கள்.

இந்த இரண்டு மாதத்தில் 10 ரூபாய் விலை அதிகமானது. அவர்கள் உயர்த்தின அந்தப் பத்து ரூபாயில், 9 ரூபாய் 50 காசை இப்போது குறைத்திருக்கிறார்கள்.மாநிலங்களின் அனைத்து நிதி உரிமையையும் சுரண்டித் தின்றுவிட்டு -ஒருவிதமான பொருளாதார நெருக்கடியை அனைத்து மாநில அரசுகள் மீதும் ஒன்றிய பாஜக அரசு சுமத்துகிறது.

மக்களோடு மக்களாக இருந்து – மக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தரவேண்டிய கடமையும் பொறுப்பும் மாநில அரசுக்கு இருக்கிறது.கல்வி - மருத்துவம் - சுகாதாரம் - குடிநீர் - மின்சாரம் - சாலை வசதிகள் - கழிவுநீர்க் கால்வாய்கள் - சத்துணவு - ஊட்டச்சத்து - மானியங்கள் - சலுகைகள் என அனைத்தையும் மாநில அரசிடம் இருந்துதான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இவை அனைத்தையும் செய்து தர வேண்டிய கடமை மாநில அரசுக்கு மட்டுமே இருக்கிறது.

”'திராவிட மாடல்' யாரையும் புறக்கணிக்காது.. தோளோடு தோள் நின்று அரவணைக்கும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அத்தகைய மாநில அரசுகளை - மக்களுக்காகச் சேவையாற்ற விடாமல் தடுப்பதற்கு நிதி உரிமைகள் அனைத்தையும் ஒன்றிய அரசு பறிக்கிறது.ஒன்றிய அரசாங்கத்திடம் இருந்து நமக்கு வர வேண்டிய 21 ஆயிரத்து 761 கோடி ரூபாய் நிலுவைத் தொகை இதுவரை வரவில்லை.

இந்த ஓராண்டு காலத்தில் இவ்வளவு சாதனைகளைச் செய்துள்ளோம் என்றால் இத்தகைய நிதி நெருக்கடியைப் பொறுத்துக்கொண்டு செய்து கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட நிலையில்தான், நமது கழக அரசு பல்வேறு வாக்குறுதிகளையும், மக்கள்நலத் திட்டங்களையும் நிறைவேற்றிச் சாதனை படைத்து வருகிறது.

இவற்றை எல்லாம் கருப்பும் சிவப்பும் தங்கள் குருதியில் கலந்து ஓடும் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள், இந்த இயக்கத்தின் தீரர்கள், கொள்கைப்பற்று மிகுந்த உடன்பிறப்புகள், வீடுவீடாக - வீதி வீதியாக - மக்கள் ஒவ்வொருவரின் மனதிலும் விதைக்க வேண்டும். இதுதான் கழக நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் எனக் கழக உடன்பிறப்புகளின் கடமை!

கொரோனா தொற்றின் தீவிரம் தணிந்துவிட்ட காரணத்தால் - பொதுக்கூட்டங்கள் நடத்துவதை நாம் இப்போது மீண்டும் தொடங்கி இருக்கிறோம். முதலில் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டத்தை நடத்தினோம். இப்போது ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தை நடத்தி கொண்டிருக்கிறோம்.

கடந்த பத்துநாட்களாக தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களிலும் நடைபெறும் கூட்டங்களில், நம்முடைய அமைச்சர்கள், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழகச் சொற்பொழிவாளர்கள் கலந்துகொண்டு உரையாற்றி வருகிறார்கள்.

தலைமைக் கழகம் அறிவிக்கிற கூட்டங்கள் மட்டுமல்லாமல் -தெருமுனைக் கூட்டங்கள் - பாசறைக் கூட்டங்கள் இதுபோன்ற சிறுசிறு கூட்டங்கள் மூலமாகவும் இந்த தகவல்களை மக்கள் மனதில் நீங்கள் விதைக்க வேண்டும் – பதிய வைக்க வேண்டும்.

திராவிட முன்னேற்றக் கழகமானது எழுபது ஆண்டுகளைக் கடந்து அதே எழுச்சியோடு உணர்ச்சியோடு இருக்கிறது என்றால் - ஆளும்கட்சியாக இருக்கும்போது செய்த சாதனைகளும், எதிர்க்கட்சியாக இருக்கும்போது நாம் நடத்திய போராட்டங்களும்தான் காரணம் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

நம்முடைய சாதனைகள் மறைக்க முடியாதவை. நம்முடைய போராட்டங்கள் மறக்க முடியாதவை. திராவிட முன்னேற்றக் கழகம்தான் தமிழ்நாட்டின் விடியலுக்கும் தமிழ் மக்களின் வாழ்வுக்கும் பாதுகாப்பு என்று தமிழ்நாட்டு மக்கள் மனதில் ஆழப் பதியக் காரணம் – நம்முடைய கொள்கைப் பரப்புரைகள்தான்.

எத்தனை நச்சு சக்திகள் முளைத்து - கழகத்துக்கு எதிராக எத்தனை விஷமப் பிரச்சாரம் செய்தாலும் - கழகம் யாராலும் வீழ்த்தமுடியாத சக்தியாக இருப்பதற்குக் காரணம் நம்முடைய பிரச்சாரங்கள்தான். அதற்கு காரணம் நீங்கள்தான்.

இத்தகைய பரப்புரைப் பணியை நாம் எப்போதும் விட்டுவிடக் கூடாது. இளைஞரணியாக இருந்தாலும் - மாணவரணியாக இருந்தாலும் - மகளிரணியாக இருந்தாலும் – தொண்டர் அணியான இருந்தாலும் - தொழிலாளர் அணியாக இருந்தாலும், இளைஞர்கள் - மாணவர்கள் - மகளிர் - தொழிலாளர் அடைந்த நன்மைகள் என்ன என்பதை நீங்கள் தொடர்ந்து மக்களிடத்தில் பரப்புரை செய்யுங்கள்.

கழகத்தை உங்களது பரப்புரைதான் வலுப்படுத்தும். அந்த வகையில் அனைவருக்குமான ஆட்சி இது. அனைவருக்கும் பயனளித்துக் கொண்டிருக்கும் ஆட்சி இது. அனைவருக்கும் பயனளிக்கப் போகும் ஆட்சி இதுதான்.

இது எனது அரசு என்று நான் எப்போதும் சொன்னதில்லை. இது நமது அரசு என்றுதான் நான் தொடர்ந்து கூறி வருகிறேன்.இந்த ஆட்சியை நான் மட்டும் நடத்தவில்லை. நாம் அனைவரும் சேர்ந்துதான் நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த ஆட்சியை, நாம் ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று சொல்கிறோம். ‘திராவிட மாடல்’ என்றால் என்ன? என்று சிலர் கேட்கிறார்கள். அவர்களுக்கு சொல்கிறேன், சமத்துவமும் -அசமூகநீதியும் என்னவென்று கூட சிந்திக்கத் தெரியாதவர்களிடம் இருந்து இந்தக் கேள்வி எழுகிறது. இல்லாத போலிப் பிம்பங்களைக் கட்டியமைக்கத் தெரிந்த அவர்களுக்கு, இருப்பதைக் கண் திறந்து பார்க்க மனமில்லை.

”'திராவிட மாடல்' யாரையும் புறக்கணிக்காது.. தோளோடு தோள் நின்று அரவணைக்கும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஆனால், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் என - இந்தத் சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்காகப் பாடுபட்ட தலைவர்களின் வளர்ப்பாக இருக்கும் நமக்கு - ’திராவிட மாடலை’ விளக்கும் கடமை இருக்கிறது.

மானுட சமுதாயத்தை மேம்படுத்தும் முற்போக்குக் கருத்துகளை உயர்த்திப் பிடிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் - திராவிட மாடலை எட்டுத்திசைக்கும் விளக்கிச் சொல்லுங்கள்! நாம் அனைவரும் சேர்ந்து நடத்தும் இந்த ஆட்சியின் இலக்கணமாக, திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகள் அனைத்தும் அடங்கியிருக்கிறது.

'திராவிடம்' என்ற சொல் - ஒரு காலத்தில், இடத்தின் பெயரா - இனத்தின் பெயரா - மொழியின் பெயரா - வழங்கப்பட்டு வந்திருந்தாலும் இன்று 'திராவிடம்' என்றால் ஒரு அரசியல் தத்துவத்தின் பெயராக இருக்கிறது.

அத்தகைய அரசியல் தத்துவத்தை எத்தனையோ பெரும் மேதைகள் சேர்ந்து நமக்கு உருவாக்கிக் கொடுத்துவிட்டுப் சென்றிருக்கிறார்கள்.

* பண்டித அயோத்திதாசரும், தந்தை பெரியாரும் நமக்கு திராவிடவியல் கோட்பாட்டை உருவாக்கித் தந்தார்கள்.

* சர்.பிட்டி.தியாகராயரும், டி.எம்.நாயரும், டாக்டர் நடேசனாரும் - உருவாக்கிய தத்துவம்தான் - சமூகநீதித் தத்துவம்!

* 'தமிழை வளர்த்தல் ஒன்று - சாதியை ஒழித்தல் மற்றொன்று' என்று பாவேந்தர் பாரதிதாசன் நமக்கு மொழியுணர்வையும், சமூகவிடுதலையையும் விதைத்துச் சென்றிருக்கிறார்!

* மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரும், டாக்டர் முத்துலட்சுமி அவர்களும் நமக்கான பெண்விடுதலைச் சிந்தனைகளை உருவாக்கித் தந்திருக்கிறார்கள்.

* இனமான உணர்வைப் பெறவும்; மாநில உரிமைகளுக்காக வாதிடுவதற்கும், பேரறிஞர் அண்ணா அவர்களும் - இனமானப் பேராசிரியர் அவர்களும் நமக்கு வழிகாட்டி இருக்கிறார்கள்.

* ஒரு நவீன தமிழகமானது எந்தெந்த வகையில் எல்லாம் அமைய வேண்டும் என்பதை ஐந்து முறை இந்தத் தமிழகத்தை ஆண்டு நமக்கு காட்டியிருக்கிறார் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்!

சமூகநீதி – சமத்துவம் – சுயமரியாதை – மொழிப்பற்று - இன உரிமை -மாநில சுயாட்சி ஆகிய தத்துவங்களின் அடித்தளத்தில் நிற்கும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். அத்தகைய இயக்கம் நடத்தும் ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி!

தொழில் வளர்ச்சி - சமூக மாற்றம் - கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும்.வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்லாமல், சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும். பொருளாதாரம் - கல்வி - சமூகம் - சிந்தனை - செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒருசேர வளர வேண்டும். அதுதான் பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழினத் தலைவர் கலைஞரும் காணவிரும்பிய வளர்ச்சி. அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி!

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக வேண்டும். வேலை வாய்ப்புகள் அதிகமாக வேண்டும். தனிநபர் வருமானம் அதிகமாக வேண்டும். மக்களின் சமூக மரியாதை உயர வேண்டும். இதைத்தான் திராவிட மாடல் ஆட்சி உருவாக்க நினைக்கிறது. தமிழ்நாட்டில் இயற்கை வளம் இருக்கிறது. இங்கு சீரான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கிறது. மனித வளம் உள்ளது. சமூகப் பொறுப்புணர்வு இருக்கிறது. உலகறிந்த மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது.

தமிழினத்தைச் சேர்ந்தவர்கள் உலகில் நூற்றுக்கணக்கான நாடுகளில் வாழ்கிறார்கள். இந்த அடித்தளத்தை கொண்டு வளர நினைக்கிறோம். நம்மால் வளர முடியும். நம்மை வளர்க்க திராவிட மாடலால் மட்டும்தான் முடியும்.

* திராவிட மாடல் என்பது எதையும் இடிக்காது! உருவாக்கும்!

* திராவிட மாடல் என்பது எதையும் சிதைக்காது! சீர்செய்யும்!

* திராவிட மாடல் என்பது யாரையும் பிரிக்காது! அனைவரையும் ஒன்று சேர்க்கும்!

* திராவிட மாடல் என்பது யாரையும் தாழ்த்தாது! அனைவரையும் சமமாக நடத்தும்!

*திராவிட மாடல் என்பது யாரையும் புறக்கணிக்காது! தோளோடு தோள் நின்று அரவணைக்கும்!

அத்தகைய அடிப்படையில்தான் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது.

மிகப்பெரிய தொழில் நிறுவனங்களை உருவாக்குவதற்கு திட்டங்கள் தீட்டினாலும் - ஒரு ஏழை எளிய நரிக்குறவர் இளம்பெண்ணின் கோரிக்கைகளையும் காது கொடுத்துக் கேட்கும் அரசுதான் இந்த அரசு!

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரும் அதே நேரத்தில், இருளர் இன மக்கள் - மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளையும் ஏற்று - அவர்கள் மனம் குளிரும் திட்டங்களைத் தீட்டுவதுதான் இந்த அரசு!

இந்த திராவிட மாடல் தத்துவத்தின் அடிப்படையில் ஆட்சி நடக்கிறது என்பதை கழகச் செயல்வீரர்கள் - நாட்டு மக்களுக்கு திரும்பத் திரும்பச் சொல்லுங்கள்.

இது ஒரு கட்சியின் அரசல்ல, ஓர் இனத்தின் அரசு என்பதைச் சொல்லுங்கள்.

இந்த ஐந்து ஆண்டுகள் மட்டுமல்ல - இனி தமிழ்நாட்டை திராவிட முன்னேற்றக் கழகமே ஆளுமேயானால், தமிழ்நாடு என்பது இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்தில் சிறந்த மாநிலமாக ஆகும் என்பதை மக்களுக்கு உங்களின் பிரச்சாரங்களின் வாயிலாகச் சொல்லுங்கள்!

பொதுமக்கள் நமக்கு அளித்த ஆட்சி உரிமையின் மூலமாக -பொதுமக்களுக்கு நன்மை அளிக்கும் ஆட்சியை நாம் வழங்கி வருகிறோம். இதுதான் மக்களாட்சித் தத்துவம்.நிதிநிலைமை மட்டும் இன்னும் சீராக இருக்குமானால் - இன்னும் ஏராளமான திட்டங்களைத் தீட்டி இருக்க முடியும். ஆனாலும் படிப்படியாக நாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் அண்ணாமீது ஆணையிட்டுச் சொல்கிறேன் உறுதியாக நாங்கள் நிறைவேற்றுகிற முயற்சியில் ஈடுபடுவோம்.

நான் கொடுத்த வாக்குறுதிகளை மக்கள் மறந்தாலும் - நான் மறக்க மாட்டேன்.

இந்த ஓராண்டு காலத்தில் இவ்வளவு சாதனைகளைச் செய்துள்ளோம் என்றால், இத்தகைய நிதி நெருக்கடியைப் பொறுத்துக்கொண்டுதான் செய்திருக்கிறோம்.

உழைப்பு - உழைப்பு - உழைப்பு என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் என்னைப் பற்றிச் சொன்னார். அந்த வகையில் இந்த நாட்டு மக்களுக்காக என் சக்தியை மீறியும் உழைப்பேன் – உழைப்பேன் - உழைப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.

தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் - திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தின் பெயர் - கருப்பு சிவப்புக் கொடி - உதயசூரியன் சின்னம் - ஆகிய ஆறும் தமிழ்நாட்டு மக்கள் மனதில் – இதயத்தில் – சிந்தனையில் - செயலில் ஆறாக ஓட வேண்டும் என்று ஆத்தூரில் உறுதியேற்போம். அதுவே தமிழ்நாட்டை வளப்படுத்தும்! நலப்படுத்தும்! விடைபெறுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலி தெரிவித்துள்ளார்.

Related Stories

Related Stories