தமிழ்நாடு

அம்பேத்கர் கண்ட அரசியல் சட்டத்தின் கனவுகளை நிறைவேற்றும் திராவிட மாடல் அரசு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள், படைப்பாளிகள் என சமூகத்தின் அனைத்து அங்கத்தினரும் அரசியல் சட்டத்தைப் பின்பற்றி நடக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அம்பேத்கர் கண்ட அரசியல் சட்டத்தின் கனவுகளை நிறைவேற்றும் திராவிட மாடல் அரசு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள், படைப்பாளிகள் என சமூகத்தின் அனைத்து அங்கத்தினரும் அரசியல் சட்டத்தைப் பின்பற்றி நடக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள், இன்று (17-05-2022) சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், "The Dalit Truth" புத்தகத்தை வெளியிட்டு ஆற்றிய உரை:

அதன் விவரம் வருமாறு:

"The Dalit Truth" புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்துக் கொண்டிருக்கக்கூடிய அமைச்சர் கே.என்.நேரு அவர்களே! சேகர்பாபு அவர்களே! வருகை தந்திருக்கக்கூடிய சட்டமன்ற, நாடாளுமன்ற முன்னாள், இந்நாள் உறுப்பினர்களே! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களே!காங்கிரஸ் கட்சியினுடைய சட்டமன்ற கட்சித் தலைவர் .கு.செல்வப்பெருந்தகை அவர்களே! புத்தகத்தினுடைய தொகுப்பாசிரியர் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கே.ராஜூ அவர்களே! இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய பொதுச் செயலாளர் டி.ராஜா அவர்களே!தமிழகத்தினுடைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய செயலாளர் பாலகிருஷ்ணன் அவர்களே!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினுடைய சட்டமன்றக் கட்சித் தலைவர் என்னுடைய சிந்தனைச்செல்வன் அவர்களே! மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ அவர்களே!திராவிடக் கழகத்தினுடைய துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் அவர்களே!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுச் செயாலாளர் அப்துல் சமத் அவர்களே! சென்னை மேயர் பிரியா அவர்களே! கூட்டணிக் கட்சியைச் சார்ந்திருக்கக்கூடிய நண்பர்களே! பல்வேறு மாநிலங்களிலிருந்து வருகை தந்திருக்கக்கூடிய அரசியல் கட்சியினுடைய தலைவர்களே! அறிஞர் பெருமக்களே!பத்திரிகை மற்றும் ஊடகத் துறையைச் சார்ந்திருக்கக்கூடிய நண்பர்களே! உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.

முதலில் ஒரு விளக்கத்தை நான் உங்களிடத்தில் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கு நம்முடைய செல்வப்பெருந்தகை அவர்கள் என்னிடத்தில் தேதி பெற்றபோது, நான் வந்தால் போதும், பேசவேண்டிய அவசியம்கூட கிடையாது, புத்தகத்தை வெளியிட்டுவிட்டு நீங்கள் போகலாம் என்றுதான் என்னிடத்திலே தேதியை பெற்றிருந்தார்கள். எப்படியோ தேதியை பெற வேண்டும் என்பதற்காக அந்த முறையை அவர் கையாண்டு அதிலே அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.

ஆனால் சொன்னபடியே முதலில் பேசவைத்து விட்டு அதுவும் சுருக்கமாக உரையாற்றி விட்டு விடைபெறக்கூடிய ஒரு சூழலை எனக்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறார். நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விரைவாக முடித்துவிட்டு செல்வதற்கு என்ன காரணம் என்று கேட்டால், கோட்டையிலே சில துறைகளின் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஒரு ஆய்வுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. நான் அவசியம் சென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன். அதனால் விரைவாக பேசிவிட்டு, விடைபெறுவதற்கு, நீங்கள் எல்லாம் எனக்கு அனுமதியைத் தர வேண்டும் என்ற என்னுடைய வேண்டுகோளை முதலில் எடுத்துவைக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

"The dalit truth" என்ற இந்த ஆங்கிலப் புத்தகம் மிக அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு சிறப்புமிக்க புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதில் நான் உள்ளபடியே பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன், புளங்காகித உணர்வோடு உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்.

அம்பேத்கர் கண்ட அரசியல் சட்டத்தின் கனவுகளை நிறைவேற்றும் திராவிட மாடல் அரசு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

இந்தப் புத்தகத்தினுடைய ஒரு பிரதியை முன்கூட்டியே நம்முடைய செல்வப்பெருந்தகை அவர்கள் என்னிடத்தில் கொடுத்தார்கள். இந்தப் புத்தகத்தினுடைய தலைப்பே ஒரு கவர்ச்சிகரமாக, எல்லோரையும் கவரக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது என்று சொன்னால் நிச்சயம் அது மிகையாகாது. இந்தப் புத்தகத்தை ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்த திரு.கே.ராஜூ அவர்கள் உருவாக்கி இருக்கிறார். பட்டியலின, பழங்குடியின மக்களுக்காக உறுதி அளிக்கப்பட்டிருக்கக்கூடிய அரசியல் சட்ட வாக்குறுதிகள் எந்த அளவிற்கு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை அலசி ஆராய்ந்து, இதில் இடம்பெறச் செய்து அதிலே வெற்றி கண்டிருக்கிறார் திரு.கே.ராஜூ அவர்கள். அதற்காக முதலில் உங்கள் அனைவரின் சார்பில் அவருக்கு வாழ்த்துகளை, பாராட்டுக்களை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்தப் புத்தகத்தினுடைய முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை ஒரு கருத்துப் பெட்டகமாக இது அமைந்திருக்கிறது. புத்தகத்தில் இருக்கக்கூடிய தலைப்புகளை ஒவ்வொன்றாய்ப் படித்துப் பார்த்தாலே தெரியும். சுகதேவ தோரட் அவர்கள் முதல் புத்திதி ராஜசேகர் அவர்கள் வரை கல்வியாளர்கள் இளம் அரசியல் தலைவர், சிறந்த நிர்வாகிகள், ஆராய்ச்சியாளர்கள், சமூக சிந்தனைமிக்க திரைப்பட இயக்குநர் என 13 பேருடைய கட்டுரைகள் இந்தப் புத்தகத்தில் அடங்கி இருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரைக்கும், பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு அரசியல் சட்டம் வழங்கியிருக்கக்கூடிய வாக்குறுதிகளைத் தமிழ்நாடு அளவில் நிறைவேற்றி இருக்கக்கூடிய கட்சி என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அவர்களுடைய சமூகநீதிக்காகவும், ஆட்சியில் இருக்கும்போது மட்டுமல்ல, எதிர்க்கட்சியாக இருந்தபோதும் போராடியும் அதற்காகப் பல்வேறு தியாகங்களையும் செய்திருக்கக்கூடிய இயக்கம்தான் இந்த இயக்கம் என்பதை நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சில எடுத்துக்காட்டுகளை நான் உங்களிடத்தில் சொல்ல வேண்டும் என்று சொன்னால், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீட்டை 16 விழுக்காட்டில் இருந்து முதன் முதலில் 18 விழுக்காடாக 1971-ஆம் ஆண்டு கலைஞர் தலைமையில் அமைந்த ஆட்சிதான் நிறைவேற்றிக் கொடுத்தது என்பது தெரியும்.

அதைத் தொடர்ந்து, 1989-ல் பழங்குடியினர் என தனியாக ஒரு விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியதும் கலைஞர் தலைமையில் இருந்த திமுக ஆட்சிதான். 2009-ல் அருந்ததியின மக்களுக்கு உள்ஒதுக்கீடாக மூன்று விழுக்காடு வழங்கியதும் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சிதான். நாட்டிலேயே முதலாவதாக டாக்டர் அம்பேத்கர் பெயரில் சட்டப் பல்கலைக்கழகத்தை அமைத்ததும் கலைஞர் தலைமையில் இருந்த கழக ஆட்சிதான். அனைத்துச் சமுதாய மக்களும் ஓரிடத்தில் ஒற்றுமையாக ஒருமித்த கருத்தோடு, சாதிப் பாகுபாடுகளை எல்லாம் மறந்து, அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சமத்துவபுரங்களை தந்தை பெரியார் பெயரில் உருவாக்கியதும் கலைஞர் தலைமையில் இருந்த திமுக ஆட்சிதான். பட்டியலின, பழங்குடியின மக்களுடைய நலன் காக்க அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிட தாட்கோ என்று அழைக்கப்படக்கூடிய ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம், புதிரை வண்ணார் நல வாரியம், தூய்மைப் பணியாளர் நல வாரியம், பழங்குடியினர் நலவாரியம் ஆகியவற்றை அமைத்துக் கொடுத்ததும் திமுக ஆட்சிதான்.

பெண் சிங்கம் என்ற ஒரு திரைப்படம் அதற்குத் தலைவர் கலைஞர் அவர்கள் வசனம் எழுதியிருக்கிறார். அந்தக் கதை வசனம் எழுதி தந்தமைக்காக அவருக்கு கொடுத்த சம்பளம், அளிக்கப்பட்ட தொகை 50 இலட்சம் ரூபாய். அந்தப் பணத்தோடு சேர்த்து தன்னுடைய சொந்தப் பணம் 11 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாயும் சேர்த்து, 61 இலட்சத்து 5000 ரூபாயை பொறியியல் மருத்துவக் கல்வி பயிலக்கூடிய அருந்ததி மாணவர்களுக்கு கல்வி வளர்ச்சிக்காக ஒவ்வொரு மாணவருக்கும் ஆண்டுதோறும் 5 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.

அம்பேத்கர் கண்ட அரசியல் சட்டத்தின் கனவுகளை நிறைவேற்றும் திராவிட மாடல் அரசு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

இதனால்தான் இந்த வெளியீட்டு விழாவில் நான் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன், அதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். இதில் கலந்து கொள்வதற்கு எல்லாவித தகுதிகளும் எனக்கு உண்டு என்கிற இறுமாப்போடு உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன். ஜிக்னேஷ் நேவானி, சூரஜ் யெங்டே போன்ற இளம் ஆற்றலாளர்களும் இந்தத் தொகுப்பில் தங்களுடைய கட்டுரைகளை அளித்திருப்பது சிறப்புக்குரியதாக அமைந்திருக்கிறது.

அதேபோல தமிழ்நாட்டைச் சார்ந்த திரைப்பட இயக்குனர் இரஞ்சித் அவர்களும் இந்தியாவில் தலித் சினிமா என்ற கட்டுரையில், சமூக ஆதிக்கங்களுக்கு எதிராக திராவிட இயக்கத் திரைப்படங்கள் அமைந்திருந்ததை அவர் இந்தப் புத்தகத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார். மேலும், திமுக-வினுடைய காலம் என்பது, அத்தகைய முற்போக்கு புரட்சிக் கருத்தியல் திரைப்படங்கள் வணிக ரீதியாகவும் வெற்றி பெறும் என்று தயாரிப்பாளர்கள் நம்பிய காலமாக இருந்ததையும் அவர் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.

ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளை வென்றே தீர்வது என உருவான இயக்கம்தான் திராவிட இயக்கம். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், புரட்சிகர முற்போக்குக் கருத்துக்களை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கவும், திரைத்துறையை ஒரு கருவியாக பயன்படுத்தியிருக்கிறது.

பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், இப்படி ஏராளமானவர் திரைத்துறையில் பழமைவாதத்திற்கு எதிராக முற்போக்குக் கருத்துக்களை எடுத்துக் கையாண்டு இருக்கிறார்கள், பேசியிருக்கிறார்கள், எழுதியிருக்கிறார்கள். இப்போது அவர்கள் வழியில் நானும் அந்தப் பணியில் ஈடுபட்டு இருக்கிறேன் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், தலைவர் கலைஞர் அவர்கள் எழுதிய 'ஒரே இரத்தம்', குங்குமம் வார இதழில் அது வாராவாரம் வெளிவந்திருக்கிறது. அந்த ‘ஒரே இரத்தம்’ திரைப்படமானபோது அந்தப் படத்தில் நானும் நடித்தேன். ‘நந்தகுமார்’ ஆக அந்தத் திரைப்படத்தில் நடித்தேன். அடிமைத்தனத்தை எதிர்க்கக்கூடிய ‘நந்தகுமார்’ ஆக நான் அப்போது நடித்தேன். ‘நந்தகுமார்’ என்ற என் கதாபாத்திரத்தின் பெயரே நான் யார் என்ற அந்த உண்மையை உங்களுக்குச் சொல்லும் என்று நான் உளமார நம்புகிறேன்.

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் அவர்கள் இயக்கியிருக்கக்கூடிய நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணிச் செயலாளராக இருக்கக்கூடிய என்னுடைய மகன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நடித்திருக்கக்கூடிய ‘நெஞ்சுக்கு நீதி’ வருகிற 20ஆம் தேதி அந்தத் திரைப்படம் வெளிவர இருக்கிறது. நேற்று முன்தினம் அந்தப் படத்தை எனக்குப் போட்டுக் காண்பித்தார்கள். அந்தப் படத்தை நான் பார்த்தேன். பட்டியலின மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்த்தும் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அரசியலமைப்புச் சட்டத்தின் வழியாக வழங்கியிருக்கக்கூடிய உரிமைகள் குறித்தும் அந்தத் திரைப்படம் பேசியிருக்கிறது, மிகச் சிறப்பாக இருக்கிறது அந்தத் திரைப்படம்.

மதவாத ஆதிக்க சக்திகளை எதிர்க்க இந்தக் காலத்திலே நமது உரிமைகளை உரக்கப் பேசும் பகுத்தறிவுக் கருத்துக்கள் நிரம்பிய திரைப்படங்களைத் திரைத்துறையினர் எடுக்க வேண்டும் என்பதை என்னுடைய வேண்டுகோளாக இந்தப் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் உருவாக்கித் தந்திருக்கக்கூடிய அரசியலமைப்புச் சட்டம்தானன் சமூக தீமைகளுக்கான தீர்வாக அமைந்திட முடியும். அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள், படைப்பாளிகள் எனச் சமூகத்தின் அனைத்து அங்கத்தினரும் அரசியல் சட்டத்தைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் நான் கேட்டுக்கொள்கிறேன். இந்தக் காரணங்களால்தான், இந்தப் புத்தகத்தை வெளியிட வேண்டும் என்று நம்முடைய செல்வப்பெருந்தகை கேட்டபோது, மனப்பூர்வமாக நான் ஒப்புக்கொண்டு இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்.

இன்று தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருப்பது எனது அரசல்ல, நமக்கான அரசு என்று நான் தொடர்ந்து அடிக்கடி எடுத்துச் சொல்வது உண்டு. அனைத்து மக்களுடைய வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கக்கூடிய அரசு நமது அரசு. ஆறாவது முறையாக தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு, பட்டியலின, பழங்குடியின மக்களின் உரிமைகளை காப்பாற்றக்கூடிய அரசு. சுருங்கச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், இது திராவிட மாடல் அரசு.

அம்பேத்கர் கண்ட அரசியல் சட்டத்தின் கனவுகளை நிறைவேற்றும் திராவிட மாடல் அரசு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதல் வேலையாக, மாநில விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுவைத் திருத்தி அமைத்தேன். ஒரே ஆண்டில் இரண்டு கூட்டங்களை நடத்தியிருக்கிறோம், பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளையும் அறிவித்திருக்கிறோம், நீண்ட நாள் கோரிக்கையாக இருந்துவந்த தமிழ்நாடு பட்டியலின பழங்குடி மாநில ஆணையத்தை உருவாக்கி, இன்றைக்கு அந்த மக்களுடைய சட்டப்பூர்வ உரிமையை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறோம். டாக்டர் அம்பேத்கர் பெயரில் வழங்கப்படக்கூடிய தமிழக அரசின் விருதிற்கு இதுவரை இருந்தது ஒரு இலட்சம் ரூபாய், அந்தப் பரிசுத் தொகையை 5 இலட்சம் ரூபாயாக உயர்த்தி அதை வழங்கிக் கொண்டிருக்கிறோம். அதேபோல, நம்முடைய செல்வப்பெருந்தகை அவர்கள் குறிப்பிட்டுச் சொன்னதைப் போல சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14-ஆம் தேதி 'சமத்துவ நாளாக' கொண்டாடப்படும் என்று நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்படி எண்ணற்ற சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அம்பேத்கருடைய கனவுகளை நிறைவேற்றுவதில் உள்ள சிக்கல்களைப் பற்றிப் பேசுவதற்கு இந்த நூலில் ஒரு பகுதி அதற்காக ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில் பிற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இருக்கிறபோதெல்லாம் அம்பேத்கருடைய கனவு செயல்வடிவத்திற்கு வந்து கொண்டிருக்கிறது என்பதை யாராலும் மறக்க முடியாது. அம்பேத்கருடைய கனவினை நிறைவேற்றி, நமது திராவிட மாடல் அரசு தினமும் பல்வேறு நலத்திட்டங்களை உரிமைகளை, அந்த உரிமைகளுக்குரிய திட்டங்களை, சாதனைகளைத் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.

நமது அரசியல் சட்டம் நான்கு அடிப்படை அம்சங்களைக் கொண்டது. ஒன்று Sovereign - இறையாண்மை, இரண்டாவது Socialist - சமதர்மம், மூன்றாவது Secular - மதச்சார்பின்மை, நான்காவது Democracy - மக்களாட்சி. இந்த நான்கும் இணைந்து பயணிக்கும் நாடுதான் நமது அரசியல் சட்டம் தந்துள்ள நமது மக்களாட்சி அரசு, மக்களாட்சியினுடைய குடியரசு. அம்பேத்கர் கனவான இந்த மக்களாட்சிக் குடியரசு காப்பாற்றப்பட வேண்டும் என்பதுதான் நம்முடைய அனைவருடைய விருப்பமாக இருந்து கொண்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தில் கட்டுரை எழுதியிருக்கக் கூடியவருடைய விருப்பமும் அதுவாகத்தான் அமைந்திருக்கிறது. ஏன், இந்த மேடையில் அமர்ந்திருக்கக்கூடிய அத்தனை பேருடைய விருப்பமும் அதுதான். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இங்கே எதிரே அமர்ந்திருக்கக்கூடிய உங்களுடைய உணர்வும் அதுதான். அதற்கு தமிழ்நாட்டிலும், அனைத்து மாநிலங்களிலும் சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும். சமத்துவம் 100 விழுக்காடு உறுதி செய்யப்பட வேண்டும். மதச்சார்பின்மைக் கொடி நாடு முழுவதும் பட்டொளி வீசிப் பறக்க வேண்டும். அப்போது தான் நம் மக்களாட்சி தழைக்கும், நாடு முன்னேறும்.

நான் அடிக்கடி குறிப்பிட்டுக் காட்டுவதைப் போல, நம் நாடு வளர, நம் மாநிலம் வளர வேண்டும். நம் மாநில வளர வேண்டும் என்றால் ஒவ்வொரு மாவட்டமும் வளர்ந்தாக வேண்டும். நம் மாவட்டங்கள் வளர, ஒவ்வொரு கிராமமும் சமூக நீதிப் பூங்காவாக, சமத்துவப் பூங்காவாக மாற வேண்டும். அப்போதுதான் உலகத்தினுடைய நம்பர் ஒன் வல்லரசாக, அதற்கும் மேலாக ஒரு நல்லரசாக இந்தியா மாறும் என்று கூறி, தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய திராவிட மாடல் அரசு, அம்பேத்கர் கண்ட அரசியல் சட்டத்தின் கனவுகளைப் பிசகாமல் நிறைவேற்றி வருகிறது, தொடர்ந்து நிறைவேற்றுவோம் என்ற உறுதியை எடுத்துச் சொல்லி, உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories