தமிழ்நாடு

ஓராண்டில் 10 ஆண்டுகால சாதனை.. கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் ஒளியேற்றிய திமுக அரசு: முதல்வர் பெருமிதம்!

கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் ஒளியேற்றிய ஆட்சிதான் நம்முடைய ஆட்சி, கழக ஆட்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஓராண்டில் 10 ஆண்டுகால சாதனை.. கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் ஒளியேற்றிய திமுக அரசு: முதல்வர் பெருமிதம்!
 • Twitter
 • Facebook
 • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13.5.2022) சென்னையில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்
எஸ்.ஆர். ராஜா இல்லத் திருமண விழாவில் ஆற்றிய உரை:-

நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களே! துவக்கத்தில் அனைவரையும் வரவேற்று மகிழ்ந்திருக்கக்கூடிய கழகப் பொருளாளர், நாடாளுமன்ற திராவிட முன்னேற்றக் கழக குழுவினுடைய தலைவர் அருமை நண்பர் டி.ஆர்.பாலு அவர்களே! காஞ்சிபுரம் வடக்கு மாவட்டக் கழகத்தினுடைய செயலாளர் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்களே!

திருவண்ணாமலை மாவட்டக் கழகத்தினுடைய செயலாளர் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களே! மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் அவர்களே! மாவட்டச் செயலாளர் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களே! உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்களே! பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசர் அவர்களே!

கழகத்தின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., அவர்களே! செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி., அவர்களே! முன்னாள் ஒன்றிய இணை அமைச்சர், இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் .ஜெகத்ரட்சகன் அவர்களே! திராவிட இயக்கத்தினுடைய தமிழ்ப் பேரவையின் பொதுச் செயலாளர் மதிப்பிற்குரிய பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களே! மாநகராட்சி மேயர்களாக வருகை தந்திருக்கக்கூடிய வசந்தகுமாரி அவர்களே! மகாலட்சுமி அவர்களே! துணை மேயர்கள்மகேஷ்குமார் அவர்களே! காமராஜ் அவர்களே! வருகை தந்திருக்கக்கூடிய சட்டமன்ற, நாடாளுமன்ற முன்னாள், இந்நாள் உறுப்பினர்களே! உள்ளாட்சி அமைப்பில் பொறுப்பேற்றிருக்கக்கூடிய மக்கள் பிரதிநிதிகளே!


நம்முடைய சட்டமன்ற உறுப்பினர் இந்த மணவிழா நிகழ்ச்சியை எழுச்சியோடு, ஏற்றத்தோடு நடத்திக் கொண்டிருக்கக்கூடிய தாம்பரம் ராஜா உள்ளிட்ட அவருடைய குடும்பத்தைச் சார்ந்திருக்கக்கூடிய சகோதர, சகோதரிகளே! வருகை தந்திருக்கக்கூடிய பெரியோர்களே! தாய்மார்களே! என் உயிரோடு கலந்திருக்கக்கூடிய தலைவர் கலைஞர் அவர்களின் உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புக்களே! உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.

நினைவில் வாழக்கூடிய ரகுநாதன்-திருமதி தரணி அம்மாள் ஆகியோருடைய பேரன் நம்முடைய சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா- நித்யகல்யாணி ஆகியோரின் அருமை மகன் நெல்சன் மண்டேலா அவர்களுக்கும், பாலவாக்கம் பகுதியைச் சார்ந்த அயிலு- நேசம்மாள் ஆகியோருடைய பேத்தி பாலகுமார்-மனோகரி ஆகியோருடைய மகள் அபிராமி அவர்களுக்கும் நம்முடைய அன்பான வாழ்த்துகளோடு இந்த மணவிழா நிகழ்ச்சி நிறைவேறி இருக்கிறது.

இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு தலைமைப் பொறுப்பை ஏற்று, மணவிழாவை நடத்தி வைத்து அதே நேரத்தில் மணமக்களை வாழ்த்தக்கூடிய ஒரு சிறப்பான வாய்ப்பினை பெற்றமைக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு உருவாக்கித் தந்திருக்கக்கூடிய ராஜா அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும் மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய மணமக்களுக்கும் நான் முதலில் என்னுடைய நன்றியை, வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ராஜா அவர்களைப் பற்றி இங்கு பாலு அவர்கள் வரவேற்புரை ஆற்றியதிலிருந்து அதைத் தொடர்ந்து உரையாற்றியிருக்கக்கூடியவர்கள் நம்முடைய பொதுச் செயலாளர் அண்ணன் துரைமுருகன் உள்ளிட்ட அத்தனை பேரும் மிகத் தெளிவாக உங்களிடத்தில் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள். எனவே, நான் அதிகம் அவரைப் பற்றி சொல்லத் தேவையில்லை.

ஓராண்டில் 10 ஆண்டுகால சாதனை.. கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் ஒளியேற்றிய திமுக அரசு: முதல்வர் பெருமிதம்!

தாம்பரம் மக்களே ஒவ்வொரு தேர்தலிலும், இவர்தான் எம்.எல்.ஏ. என்று முடிவு செய்து 2006, 2016, 2021 என்று மூன்று முறை நடைபெற்றிருக்கக்கூடிய இந்தத் தேர்தலில் தொடர்ந்து அவர் வெற்றி பெற்று வந்திருக்கிறார் என்று சொன்னால், மக்களிடத்தில் அந்த அளவுக்கு ஒரு செல்வாக்கைப் பெற்றவராக விளங்கியிருக்கிறார், விளங்கிக் கொண்டிருக்கிறார் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருக்கிறார்.

நான் அவரைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் பார்க்கிற நேரத்தில், எப்போது சட்டமன்றத்தில் அவர் பேசுவதற்கு எழுந்தாலும் தனிப்பட்ட முறையில் அல்ல, தன்னுடைய தொகுதிக்காக, தன்னுடைய தொகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்காக அவர் குரல் கொடுக்கக் கூடியவராக விளங்கிக் கொண்டிருக்கிறார். அவரிடத்தில் ஒன்றை நான் கூர்ந்து கவனித்ததுண்டு, அவர் தன்னுடைய தொகுதிக்காக எந்தத் துறையாக இருந்தாலும் அந்தத் துறையின் சார்பில் நிறைவேற்றப்படக்கூடிய நலத்திட்ட உதவிகளை தன்னுடைய தொகுதிக்கு கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக, அதை எப்படியாவது முடித்தே தீரவேண்டும் என்பதில் ஒரு அழுத்தம் கொண்டவராக பணியாற்றக்கூடியவர் நம்முடைய ராஜா அவர்கள்.

அவரே இங்கு குறிப்பிட்டுச் சொன்னார், 1980-ஆம் ஆண்டில் நம்முடைய இயக்கத்திலே, திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு படிப்படியாக, ஏதோ எடுத்தவுடனே ஒரு மிகப்பெரிய பொறுப்பிற்கு வந்துவிட்டார் என்று சொல்ல முடியாது. தொடக்க காலத்தில் ஒரு வட்டப் பிரதிநிதியாக, வட்டக் கழகத்தின் செயலாளராக, தாம்பரம் நகர இளைஞரணியின் அமைப்பாளராக, நகர கழகத்தினுடைய பொருளாளராக இப்படி படிப்படியாக உயர்ந்து, வளர்ந்து 1997 முதல் தொடர்ந்து 25 ஆண்டு காலமாக தாம்பரம் நகரக் கழகச் செயலாளராக இருந்தவர், பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்று சொன்னால், அவருடைய உழைப்பு எந்த அளவிற்கு இந்த இயத்திற்கு துணை நிற்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

தாம்பரம் சட்டமன்ற உறுப்பினராக மட்டுமல்ல, ஏற்கனவே அவர் தாம்பரத்தின் நகர மன்றத் தலைவராக, எப்படி மூன்று முறை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருக்கின்றாரோ, அதே போல மூன்று முறை நகர மன்றத்தின் தலைவராகவும் இருந்து, தாம்பரம் இந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று சொன்னால், அதிலே முக்கிய பங்கு வகிக்கக்கூடியவர் நம்முடைய ராஜா அவர்கள் என்று சொன்னால், அது நிச்சயம் மிகையாகாது. ஆகவே, எந்தப் பணியிலே அவர் ஈடுபட்டாலும் அதிலே வெற்றி காணக்கூடியவர். அவர் சாதாரணமாக யாரிடத்திலும், தேவையில்லாமல் பேசமாட்டார், என்னிடத்தில் கூட. எது தேவைப்படுகிறதோ, எதை பேசவேண்டுமோ, எதைப் பேசினால், அதில் வெற்றி காண முடியுமோ, அதை உணர்ந்து, ஆனால் அதே நேரத்தில் அழுத்தந்திருத்தமாக, அதை எடுத்துச் சொல்லக்கூடிய ஆற்றலை பெற்றவர் நம்முடைய ராஜா அவர்கள்.

அதே போலத்தான் பாலு அவர்கள் குறிப்பிட்டது போல, அவர் ஈடுபட்டிருக்கக்கூடிய தொழிலில் அது சிமெண்ட் தொழிலாக இருந்தாலும் சரி, அல்லது நகைக் கடை வைத்து தொழில் நடத்துவதாக இருந்தாலும் சரி, அவர் தொட்டதெல்லாம் துலங்கி விடும். ஆகவே அந்த அளவிற்கு அதில் ஈடுபாடு கொண்டவர். அப்படிப்பட்ட ராஜா அவர்கள் தன்னுடைய மகனுக்கு, தென்னாப்பிரிக்க சுதந்திரப் போராட்டத்திற்காக போராடி பல்வேறு தியாகங்களை செய்திருக்கக்கூடிய நெல்சன் மண்டேலாவின் பெயரை தன்னுடைய மகனுக்கு சூட்டியிருப்பது எத்தகைய நாட்டுப்பற்றை, அந்த தியாக உணர்வை, அவர் உணர்ந்திருக்கிறார், மதித்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக தன்னுடைய மகனுக்கு அவருடைய பெயரை சூட்டி மகிழ்ந்திருக்கிறார்.

நிறவெறிக்கு எதிராக போராடியவர்தான் நெல்சன் மண்டேலா அவர்கள். சிறையில் இருந்து மீண்ட பிறகும் நாட்டை ஆட்சி செய்யக்கூடிய தலைவராக உயர்ந்தவர் நம்முடைய நெல்சன் மண்டேலா அவர்கள். அவருடைய பெயரை தன்னுடைய மகனுக்கு சூட்டியிருப்பது என்பது உள்ளபடியே பெருமைக்குரிய ஒன்று. அதேபோல, அவர் கரம் பிடித்திருக்கக்கூடிய மணமகள் அபிராமி அவர்கள், தன்னுடைய கணவருக்கு இந்தப் பெயரை வைத்திருப்பதைப் பார்த்து அவர் உள்ளபடியே பெருமைப்படலாம். அமைதிக்காக பாடுபட்ட அந்த மண்டேலா போல, இந்த மண்டேலாவும் அமைதியாக இல்லறம் நடத்துவார் என்ற நம்பிக்கை நம் அனைவருக்கும் உண்டு என்பதில் யாருக்கும் எந்த வேறுபாடும் இருக்க முடியாது.

நம்முடைய கழக ஆட்சி அமைந்த பிறகு, தமிழகத்தில் எப்படிப்பட்ட சூழ்நிலை உருவாக்கியிருக்கிறது, சாதனைகள் மட்டுமல்ல, ஏற்கனவே நடைபெற்றுக் கொண்டிருந்த சோதனைகளுக்கும் முடிவு கட்டியிருக்கிறோம். அதேபோல சட்டம்-ஒழுங்கை பேணிப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறோம்.

ஓராண்டில் 10 ஆண்டுகால சாதனை.. கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் ஒளியேற்றிய திமுக அரசு: முதல்வர் பெருமிதம்!

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஓராண்டு காலம்தான் முடிந்திருக்கிறது. ஆனால் இந்த ஓராண்டு காலத்தில் 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தால் எதை சாதிக்க முடியுமோ அதைவிட பல மடங்கு சாதனையை இன்றைக்கு நாம் சாதித்துக் காட்டியிருக்கிறோம்.

 • அது இல்லம் தேடிக் கல்வியாக இருந்தாலும்,

 • மக்களைத் தேடி வரக்கூடிய மருத்துவமாக இருந்தாலும்,

 • நான் முதல்வன் என்கிற அந்தத் திட்டமாக இருந்தாலும்,

 • இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 என்கிற அந்தத் திட்டமாக இருந்தாலும்,

 • சமத்துவபுரங்களாக இருந்தாலும்,

 • உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்கிற அந்தத் திட்டமாக இருந்தாலும்,

 • ஏறக்குறைய 2000 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கக்கூடிய அந்தப் பணிகளாக இருந்தாலும்,

  தேர்தல் அறிக்கையில் என்னென்ன வாக்குறுதிகளை சொன்னோமோ, அந்த வாக்குறுதிகளை மட்டுமல்ல, சொல்லாத பல வாக்குறுதிகளையும் செய்து முடித்திருக்கக்கூடிய ஆட்சி தான் நம்முடைய ஆட்சி.

நான் சட்டமன்றமாக இருந்தாலும், மக்கள் மன்றமாக இருந்தாலும் அல்லது அதிகாரிகளை அழைத்துப் பேசக்கூடிய கூட்டங்களாக இருந்தாலும், ஆய்வு நடத்தக்கூடிய கூட்டங்களாக இருந்தாலும், பொது நிகழ்ச்சிகளாக இருந்தாலும் தொடர்ந்து நான் சொல்லிக் கொண்டிருப்பது இது என்னுடைய ஆட்சி என்று நான் சொல்லமாட்டேன், நம்முடைய ஆட்சி என்று தான் நான் சொல்வேன் என்ற அடிப்படையில், தேர்தல் நடைபெற்று, வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும் நேரத்தில் பத்திரிகையாளர்களிடத்தில் பேசுகிறபோது கூட நான் குறிப்பிட்டுச் சொன்னேன், வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்காதவர்களுக்கும் நன்மை செய்யக்கூடிய ஆட்சியாக நம் ஆட்சி இருக்கும் என்று நான் சொன்னேன். வாக்களித்தவர்கள் மகிழ்ச்சி அடையக்கூடிய வகையில், வாக்களிக்கத் தவறியவர்கள் இவர்களுக்கு வாக்களிக்காமல் போய்விட்டோமே என்று வருத்தப்படக்கூடிய அளவிற்கு நாம் ஆட்சியை நடத்துவோம் என்று நான் உறுதியாக எடுத்துச் சொன்னேன். அதைத்தான் இன்றைக்கு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

ஆகவே, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் என்னென்ன வாக்குறுதிகளை, உறுதிமொழிகளை நிறைவேற்றுவோம் என்று தேர்தல் அறிக்கை புத்தமாக வெளியிடுவது வழக்கம். ஆனால் இப்போது நாம் தேர்தல் அறிக்கை வெளியிட்டது மட்டுமல்ல, இந்த ஓராண்டு காலத்தில் என்னென்ன செய்து முடித்திருக்கிறோம் என்பதையும் புத்தகமாக வெளியிட்டு மக்களிடத்தில் எடுத்துச் சொல்லக்கூடிய அளவிற்கு பல காரியங்களை நாம் செய்து முடித்திருக்கிறோம்.

நாம் செய்திருக்கக்கூடிய சாதனைகளில் ஒரு மிகப்பெரிய, ஒரு அளப்பறிய சாதனை என்னவென்று சொன்னால், மகளிருக்கு வழங்கப்பட்டிருக்கக்கூடிய பேருந்து கட்டண சலுகை. இந்தத் திட்டத்தால், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியிலனப் பெண்கள் அதிகளவிற்கு பயன்பெறக்கூடிய அளவிற்கு திட்டம் இன்றைக்கு நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. வேலைக்குப் போகக்கூடிய பெண்களின் அன்றாடச் செலவில் பெரும் சுமையை நாம் குறைத்து இருக்கிறோம். அதாவது நான் புள்ளிவிவரத்தோடு சொல்ல வேண்டுமென்றால், ஒவ்வொரு பெண்ணுக்கும் சராசரியாக 600 ரூபாயிலிருந்து 1200 ரூபாய் வரை மிச்சமாகக்கூடிய சாதனையை நாம் செய்து முடித்திருக்கிறோம். ஆக இப்படி மிச்சமாகும் பணத்தைச் சேமித்து வைத்து அந்தப் பெண்கள் அதை என்ன செய்வதாக சொல்கிறார்கள் என்றால், அன்றாடச் செலவிற்கு இல்லை என்ற நிலையில் இருக்கும் பெண்கள் சேமிக்கக்கூடியவர்களாக ஆகியிருக்கிறார்கள் என்று பெருமையோடு சொல்லக்கூடிய அளவிற்கு இன்றைக்கு அவர்கள் முன்னேறியிருக்கிறார்கள்.

நாங்கள் போட்ட கையெழுத்தின் காரணமாக எத்தனை கோடி மக்கள் பயன்பெற்றிருக்கிறார்கள் என்று சட்டமன்றத்தில் நான் புள்ளிவிவரத்தோடு எடுத்துச் சொல்லியிருக்கிறேன். இப்படி கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் ஒளியேற்றிய ஆட்சிதான் நம்முடைய ஆட்சி, கழக ஆட்சியாக இன்றைக்கு நடந்துகொண்டிருக்கிறது. அந்த ஆட்சிக்கு பக்க பலமாக தாம்பரம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து பல்வேறு பணிகளை நம்முடைய எஸ்.ஆர்.ராஜா அவர்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். எனவே அவருடைய இல்லத்தில் அவருடைய குடும்ப விளக்குக்கு நடைபெற்றிருக்கக்கூடிய இந்த மணவிழா நிகழ்ச்சியில் உங்களோடு சேர்ந்து நானும் பங்கேற்று மணமக்களை வாழ்த்துவதிலே உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன்.

புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கக்கூடிய, வீட்டிற்கு விளக்காக, நாட்டிற்கு தொண்டர்களாக இருந்து நம்முடைய மணமக்கள் வாழ்வாங்கு வாழ்ந்து நாட்டிற்கும், வீட்டிற்கும் பெருமை சேர்க்கக்கூடியவர்களாக உங்கள் வாழ்க்கையை நடத்திக் காட்டவேண்டும் என்று நான் இந்த நேரத்தில் கேட்டு, நம்முடைய எஸ்.ஆர். ராஜா அவர்கள் இன்றைக்கு என்னை அழைத்து இந்த மண விழாவை நடத்தி வைக்கக்கூடிய ஒரு நல்ல வாய்ப்பை எனக்கு உருவாக்கித் தந்தமைக்காக இந்த மண விழாவை நடத்தி வைக்கக்கூடிய ஒரு நல்ல வாய்ப்பை உருவாக்கி தந்தமைக்காக மீண்டும் அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும், மணமக்களுக்கும், வந்திருக்கக்கூடிய உங்களுக்கும் என்னுடைய இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்து வாழ்க மணமக்கள், வாழ்க மணமக்கள் என்று கூறி வாழ்த்துரையை நிறைவு செய்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories