தமிழ்நாடு

“தமிழ்நாட்டின் ஏற்றுமதி 2030-ஆம் ஆண்டிற்குள் 100 பில்லியன் டாலராக உயரவேண்டும்” : முதல்வர் அறிவுறுத்தல்!

தமிழ்நாட்டின் தற்போதைய ஏற்றுமதி அளவு 2030-ஆம் ஆண்டிற்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“தமிழ்நாட்டின் ஏற்றுமதி 2030-ஆம் ஆண்டிற்குள் 100 பில்லியன் டாலராக உயரவேண்டும்” : முதல்வர் அறிவுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாட்டின் தற்போதைய ஏற்றுமதி அளவு 26 பில்லியன் டாலர். அதில் இருந்து இருந்து 2030-ஆம் ஆண்டிற்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற தென் பிராந்திய ஏற்றுமதியாளர் விருது விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 22 நாட்களாக தொடர்ந்து சட்டமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்று அந்தக் கூட்டத் தொடரில் பல்வேறு துறைகளின் சார்பில் மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று, அதன் மூலமாக அதற்குரிய ஒப்புதலைப் பெற்று நேற்றையதினம் முடித்திருக்கிறோம். நேற்றுதான் கூட்டத்தொடர் முடிவடைந்திருக்கிறது. சட்டமன்றக் கூட்டத்தொடர் எப்போது முடியும் என்று காத்திருந்து அதற்கான தேதியை வாங்கி, இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருக்கக்கூடிய நம்முடைய அமைச்சர்

தா.மோ.அன்பரசன் அவர்களுக்கு நான் முதலில் என்னுடைய வாழ்த்துகளை, நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஆனால் அதே நேரத்தில், ஒரு முதலமைச்சர் ஒரு நாளாவது ஓய்வெடுக்கக் கூடாதா என்று நினைக்காமல், அவர் தன்னுடைய கடமையை முடிக்க வேண்டும் என்பதற்காக சுறுசுறுப்போடு தனது துறையைப் பற்றி மட்டும் கண்ணும் கருத்தோடும் இருந்து அந்தப் பணியை அவர் முடித்திருக்கிறார். அதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம், அவர் துறையிலே எவ்வளவு கவனமாக இருக்கிறார் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.

6-ஆவது மற்றும் 7-ஆவது தென் பிராந்திய சிறந்த ஏற்றுமதியாளர் விருது வழங்கும் விழா, தமிழ்நாட்டின் தலைநகராக இருக்கக்கூடிய சென்னையில் நடப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழகம் வந்திருக்கக்கூடிய அனைவரையும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் உங்கள் அனைவரையும் வருக, வருக என நான் வரவேற்க கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்தியாவில் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கோடு, ஒன்றிய அரசின் வர்த்தக அமைச்சகத்தால் 1965-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஃபியோ (FIEO) என்கின்ற இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பானது அங்கீகரிக்கப்பட்ட ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்கள், பண்டங்கள், வாரியங்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையங்கள் ஆகியவற்றின் தலைமை அமைப்பாக இது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

“தமிழ்நாட்டின் ஏற்றுமதி 2030-ஆம் ஆண்டிற்குள் 100 பில்லியன் டாலராக உயரவேண்டும்” : முதல்வர் அறிவுறுத்தல்!

இந்திய அளவில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏற்றுமதி நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த அமைப்பில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை அறியும்போது நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன். இத்தகைய பெருமைக்குரிய விழாவிற்கு என்னை அழைத்தமைக்காக, இந்த அமைப்பின் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் நான் முதலில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்றுமதி மிக மிக அவசியம். தற்போது, இந்தியாவின் ஏற்றுமதியில் தென் மண்டலம் 27 விழுக்காட்டுக்கும் அதிகமாக பங்களிக்கிறது. 5 ஆண்டுகளுக்குள் இந்தப் பங்கு 35 விழுக்காட்டைத் தாண்டும் என்று நான் நம்புகிறேன். தென் மண்டலத்தில் தமிழகத்தின் பங்கு மிகமிக அதிகமானது என்பதை நீங்கள் எல்லாம் நன்கு அறிவீர்கள்.

கடந்த 2020-21-ஆம் ஆண்டில், இந்தியாவின் சர்வதேச வர்த்தகத்தில் ரூ.1 லட்சத்து 93 ஆயிரம் கோடி ஏற்றுமதி செய்து 8.97 விழுக்காடு பங்களிப்புடன் இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த விழுக்காடு என்பது ஆண்டுதோறும் அதிகமாக வேண்டும்; தமிழ்நாடு முதன்மையான மாநிலமாக ஆக வேண்டும் என்பதுதான் இந்த அரசினுடைய விருப்பம், என்னுடைய இலட்சியம்.

மோட்டார் வாகனம் மற்றும் பாகங்கள், ஆடை மற்றும் அணிகலன்கள், காலணிகள், கொதிகலன்கள், இரப்பர் - உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது. இது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. தொழிலை மேம்படுத்துகிறது. மாநிலத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறது. தொழிலதிபர்களுக்குள் போட்டித் தன்மையை உருவாக்குகிறது. தொழில்கள் இடையே செயல்திறனை அதிகரிக்கிறது.

அதனால்தான் 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக, மாநிலப் பொருளாதாரம் மாற வேண்டும் என்று நான் பெரிதும் நம்புகிறேன். இந்த இலக்கை அடைய வேண்டும் என்றால் ஏற்றுமதி வர்த்தகமும் அதிகமாக வேண்டும். தமிழ்நாட்டின் தற்போதைய ஏற்றுமதி அளவு 26 பில்லியன் டாலர். அதில் இருந்து இருந்து 2030-ஆம் ஆண்டிற்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த வேண்டும்.

இதனை அடைவதற்கான புதிய உத்தியை கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி நான் வெளியிட்டேன். இதற்காக, பல்வேறு முன்னெடுப்புகளை அரசு செய்து வருகிறது. அதில் சிலவற்றை மட்டும் உங்களுக்கு நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

❖ தமிழ்நாட்டில் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், ஏற்றுமதி நிறுவனங்களுக்குத் தேவையான பொதுக் கட்டமைப்புகளை உருவாக்க 100 கோடி ரூபாய் சிறப்பு நிதி உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

❖ தமிழ்நாட்டில் உள்ள திறன்மிக்க மனிதவளத்தை மேலும் மேம்படுத்தி, ஓர் அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்கிட “அறிவுசார் நகரம்” (Knowledge City) ஒன்று உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

❖ சென்னையின் வர்த்தக வளர்ச்சிக்கு குறிப்பாக, ஏற்றுமதிக்கு உயிர்நாடியாகத் திகழக்கூடிய மதுரவாயல்–சென்னை துறைமுகம் உயர்மட்டச் சாலைத் திட்டத்தை நிறைவேற்றிட ரூபாய் 5 ஆயிரத்து 570 கோடி மதிப்பீட்டில் 20.6 கிலோ மீட்டர் நீளமுள்ள இரட்டை அடுக்கு உயர்மட்டச் சாலை அமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

❖ சென்னை வெளிவட்ட சுற்றுச்சாலை திட்டத்திற்கு ரூபாய் 2 ஆயிரத்து 250 கோடியும், சென்னை – கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டத்திற்கு ரூபாய் 1,200 கோடியும், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு ரூபாய் 628 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

❖ திறன் படைத்த மனிதவளத்தை உருவாக்கும் நோக்கத்தோடு, ரூபாய் 2 ஆயிரத்து 877 கோடி செலவில் முன்னணி தொழில் நிறுவனங்களின் பங்களிப்புடன் 71 அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்கள் - “தொழில் 4.0” (Industry 4.0) தர நிலையை அடைவதற்கு ஒரு சிறப்புத் திட்டமாகச் செயல்படுத்தப்படும்.

❖ மாநிலத்திலிருந்து ஏற்றுமதியை மேலும் மேம்படுத்த, அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில், மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு (State Export Promotion Committee) அமைக்கப்பட்டிருக்கிறது.

❖ தென் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு மேலும் உத்வேகம் அளித்திட, தூத்துக்குடியில், ஏற்றுமதியை மையமாகக் கொண்ட “சர்வதேச அறைகலன் பூங்காவிற்கு” (International Furniture Park) 07.03.2022 அன்று அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது.

❖ ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்துவம் வாய்ந்த பல பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை உலக அளவில் சந்தைப்படுத்த, ஒவ்வொரு மாவட்டத்திலும் “மாவட்ட ஏற்றுமதி மையங்கள்” உருவாக்கப்பட்டு வருகிறது.

❖ “குறு, சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதி நிறுவனங்களுக்கான கையேடு வெளியிடப்பட்டிருக்கிறது.

* இந்தக் கையேட்டின் தொடர்ச்சியாக ஒவ்வொரு துறை சார்ந்த ஏற்றுமதிக்கான வழிகாட்டி கையேடு உருவாக்கிட ஃபியோ அமைப்பு உதவ வேண்டும் என்று இந்த நேரத்தில் நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

❖ தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் புத்தொழில் வளர்ச்சிக்கு வழிகோலும் வகையில் ஈரோடு, மதுரை, திருநெல்வேலியில் புதிய மண்டல அளவிலான புத்தொழில் மையங்கள் ஏற்படுத்த டான்சிம் (TANSIM) மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

❖ சென்னை நந்தம்பாக்கத்தில் ரூபாய் 75 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய மாநில புத்தொழில் நிறுவன மையம் ஒன்று தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் (TIDCO) மூலமாக அமைக்கப்படும்.

❖ ஏற்றுமதியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஏறத்தாழ

50 விழுக்காடு பங்களிக்கின்றன. இந்நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக, இத்துறைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட, 49 விழுக்காடு அதிகரிக்கப்பட்டு, ரூபாய் 911 கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் தனித்தன்மையான

❖ தஞ்சாவூர் ஓவியங்கள் - தட்டுகள், வீணை

❖ கோவை கோரா காட்டன் சேலைகள்

❖ கோவில்பட்டி கடலைமிட்டாய்

❖ சேலம் பட்டு

❖ ஈரோடு மஞ்சள்

❖ அலப்பை பச்சை ஏலக்காய்

❖ நீலகிரி தேயிலை

❖ திருவில்லிப்புத்தூர் பால்கோவா

❖ பழனி பஞ்சாமிர்தம்

❖ சிறுமலை மலை வாழைப்பழம் என 43 புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் அதில் இருக்கிறது.

❖ கம்பம் பன்னீர் திராட்சை

❖ சேலம் ஜவ்வரிசி

❖ உடன்குடி பனங்கருப்பட்டி,

❖ மணப்பாறை முறுக்கு

❖ தூத்துக்குடி மக்ரோனி

❖ பண்ருட்டி முந்திரி மற்றும் பலாப்பழம்

❖ மார்த்தாண்டம் தேன்

உள்ளிட்ட 24 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பித்து பரிசீலனையில் இருக்கிறது.

வெளிநாடுகளிலும், இந்தப் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதன் மூலம், நமது உற்பத்தியாளர்களும், ஏற்றுமதியின் மூலம் மேன்மை அடைந்திட முடியும். இவற்றை அதிகமாகத் தயாரிக்க வேண்டும். அதே நேரத்தில், கொஞ்சமும் தரம் குறைந்துவிடக் கூடாது.

தமிழ்நாட்டில் இப்போது இருக்கும் திறனையும் வளத்தையும் வைத்துப் பார்க்கும்போது, ஏற்றுமதியில் நாம் இன்னும் பல மடங்கு உயர முடியும். இதனை அரசும், ஃபியோ அமைப்பும் இணைந்து நிச்சயம் நிறைவேற்ற முடியும். ஏற்றுமதி சார்ந்த ஒன்றிய அரசின் திட்டங்கள் தமிழ்நாட்டைச் சார்ந்த நிறுவனங்களுக்கு முழுமையாக சென்றடைய ஃபியோ அமைப்பு மாநில அரசுடன் இணைந்து பங்காற்ற வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த மாவட்டத்தைச் சார்ந்த சிறந்த ஏற்றுமதிக்கான பொருள்களை ஆங்காங்கே உற்பத்தி செய்தாலும் அவற்றை ஒன்று திரட்டுவதிலும், அப்பொருள்களின் தரத்தினை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதிலும் இருக்கக்கூடிய இடர்பாடுகளை களையும் விதமாக, தனியார் பங்களிப்புடன் ஒரு ஏற்றுமதி கொள்முதல் அமைப்பை (Export Buying House) உருவாக்க ஃபியோ அமைப்பு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். குறிப்பாக, O.D.O.P (ஒ.டி.ஓ.பி) என்கின்ற ஒரு மாவட்டத்திற்கு ஒரு பொருள் என்ற ஒன்றிய அரசின் திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்திட துணைபுரிய வேண்டும்.

இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (FIEO) இந்த பிராந்தியத்தில் இருந்து ஏற்றுமதியை ஊக்குவிப்பதில் முக்கியப் பங்காற்றுவதுடன் மாவட்ட அளவில் மாநில அரசுகளுடன் மிக நெருக்கமாக செயல்படுகிறது என்பதை நான் மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தென் மாநிலங்களில் இருந்து தொழில் மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்துவதில் FIEO-வின் முயற்சிகளுக்கு நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டில் சிறப்பாக செயல்படும் ஏற்றுமதியாளர்கள் அங்கீகரிக்கப்படுவதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

தங்கள் தொழில் உலகளவில் போட்டித்தன்மை வாய்ந்தது என்பதைக் காட்டக்கூடிய விதமாக, பல இடையூறுகள் உள்ள இந்த நேரத்தில், ஏற்றுமதியாளர்கள் அனைவரையும் அவர்களின் வெற்றிக்காக நான் வாழ்த்துகிறேன், நன்றி கூறி உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைச் சொல்லி விடைபெறுகிறேன்.

banner

Related Stories

Related Stories