தமிழ்நாடு

“நான் எவ்வளவு நாட்களுக்கு இருப்பேன் என்று சொல்லமுடியாது” : சட்டசபையில் கண் கலங்கிய அமைச்சர் துரைமுருகன்!

சட்டப்பேரவையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், “என் தலைவரின் மகனான உங்களுக்கு - முதல்வருக்கு இன்னும் உழைப்பேன்! உழைத்துக் கொண்டே இருப்பேன்” என உணர்ச்சிமேலிடக் குறிப்பிட்டார்.

“நான் எவ்வளவு நாட்களுக்கு இருப்பேன் என்று சொல்லமுடியாது” : சட்டசபையில் கண் கலங்கிய அமைச்சர் துரைமுருகன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சட்டப்பேரவையில் நேற்று, முதல்வர் அவர்கள் 110 விதியின் கீழ் உரையாற்றி அமைந்ததும் - கட்சித் தலைவர்களின் வாழ்த்துரையை அடுத்து உரையாற்றிய அவை முன்னவரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அவர்கள், “என் தலைவரின் மகனான உங்களுக்கு - முதல்வருக்கு இன்னும் உழைப்பேன்! உழைத்துக் கொண்டே இருப்பேன்” என உணர்ச்சிமேலிடக் குறிப்பிட்டார்.

சட்டப்பேரவையில் அவை முன்னவர் துரைமுருகன் ஆற்றிய உரை வருமாறு:-

சுமார் 50 ஆண்டுகளைத்தாண்டி, இந்த அவையிலே உட்கார்ந்திருக்கிற எனக்கு எத்தனையோ மனநிறைவான நிகழ்ச்சிகளை நான் பார்த்திருக்கிறேன். அவையெல்லாம், என்னுடைய தலைவர் கலைஞர் அவர்களுடைய காலக்கட்டத்தில். ஆனால், இன்று, அந்த மகிழ்ச்சிகளையெல்லாம் தாண்டி, இதயத்தை, அன்பால், பாசத்தால் உலுக்கிப் போடுகிற அளவிற்கு ஒரு நிகழ்ச்சியை இன்றைக்கு நம்முடைய முதல்வர் அவர்கள் நடத்தியிருக் கிறார்கள். எவ்வளவு மகிழ்ச்சியோடு இருக்க வேண்டுமோ, அவ்வளவு மகிழ்ச்சி யோடு நான் இருக்கிறேன்.

நான் அவரை இளம் வயது முதற்கொண்டே அறிவேன். பள்ளிக் கூடத்து மாணவனாக, கல்லூரி மாணவனாக, இளைஞரணி செயலாளராக அதற்கு பிறகு கட்சியினுடைய நிர்வாகி யாக, மேயராக, அமைச்சராக, துணை முதலமைச்சராக, பல்வேறு கோணங்களில், நிலைகளில் நான் பார்த்திருக்கிறேன். ஒவ்வொன்றிலும் ஒரு விதத்தில் அவருடைய திறமை வெளிப்பட்டிருக்கிறது. ஆனால் இன்றைக்கு முதலமைச்சர் என்றஸ்தானத்திலே உட்கார்ந்த பிறகு, இந்த ஓராண்டில் நடைபெற்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து அது ஒருபுறமும், இனி அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்பதைஅடுத்த ஒருபுறமும், இரண்டு திட்டங்களையும் அறிவித்துவிட்ட பிறகு, தான் யார், என் கட்சி என்ன? என் கொள்கை என்ன? என்று மூன்றாவது நிலை யிலிருந்து அவர் பிரகடனப்படுத்தியபொழுது கலைஞருக்கு இருக்கின்ற அந்த துணிவு, தைரியம் அத்தனையும் சிந்தாமல், சிதறாமல் இவர் பெற்றிருப்பதைப் பார்த்து நான் மயங்கிப் போனேன்.

எனக்கு என் தலைவர் கலைஞர் பேச்சைத் தவிர, உலகத்தில் வேறு எந்தப் பேச்சும் என்னை மயக்காது. ஆனால் இன்றைக்கு அவருடைய மகன், அப்பாவையே தோற்கடித்து விட்டு, என்னை மகிழ்ச்சியில் திளைக்க வைத்துவிட்டார். தனியாக சிந்தித்ததால் பல்வேறு திட்டங்கள் உருவாக்கம்! சில நேரங்களில் அவரிடத்தில் சில கோபங்கள்கூட வரும். காரணம், உட்கார்ந்து பேசமாட்டேன் என்கிறாரே, நான்குபேருடன் உட்கார்ந்து பேசமாட்டேன் என்கிறாரே என்று. ஆனால், பேசியிருந்தால்கூட இப்படிப்பட்ட திட்டங்களை உங்களால் தயாரித்திருக்க முடியாது, குழப்பி விட்டிருப்போம். ஆனால், தனியாக நீங்கள் சிந்தித்ததால்தான் இத்தகைய திட்டங்களை உருவாக்கியிருக்கிறீர்கள்.

என்ன மாதிரி பேச்சு! நெஞ்சுரம் கூடுவதைப் போல் பேச்சு! நெஞ்சை உருக்குகிற பேச்சு! உங்கள் வார்த் தைகள் ஒவ்வொன்றுக்கும் இருக்கிற அந்த வேகம், எந்தெந்த இடத்திலே அதை பிரயோகிக்க வேண்டுமோ அங்கே பிரயோகித்திருக்கிறீர்கள். ஆனால், இவ்வளவு உணர்ச்சியும் பெற்றிருக்கிற ஒரு முதலமைச்சர் தாங்கள் பேசிய ஒரே ஒரு இடத்திலேகூட, ஒரு எழுத்துக்கூட மாறுபட்டு நிற்காமல் அந்த தைரியத்தோடு நின்று பேசினீர்களே, உங்களை வெல்வதற்கு எவனாலும் முடியாது. அதுதான் எனக்கு முக்கியமானது. கலைஞர் சொன்னார் உங்களைப் பற்றி. “ஸ்டாலின் என்றால், அதற்கு என்ன பொருள் என்றால், உழைப்பு! உழைப்பு! உழைப்பு!” என்று மூன்று முறை சொன்னார். நான் இன்றைக்குச் சொல்கிறேன், உழைப்பு! உழைப்பு! உழைப்பு! என்று மூன்று பக்கம், நான்கு முறை சொல்கிறேன் உழைப்பு! உழைப்பு! உழைப்பு! உழைப்பு! நான்கு திக்கிலும் உங்களுடைய உழைப்பு இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. அவருடைய style of functioning-ஐ நான் கூர்ந்து அவ்வளவு பார்ப்பேன்.

எதையாவது ஒரு திட்டத்தை எடுத்தால், அந்தத் திட்டத்தை முடிக்கிறவகையில், அதிலே ஒரு வேகம் காட்டுகிறார். முடிந்த பிறகு, அதோடு அதை விட்டுவிடுவதில்லை. அதனுடைய தொடர்ச்சியையும் அவர் கண்காணிக்கிறார். திட்டங்கள் இதோடுபோதும் என்கிற திருப்தியே அவருக்கு ஏற்படுவதில்லை. திட்டங்களைத் தீட்டுவதில், செயல்படுத்துவதில் அவருக்கு திருப்தியே ஏற்படாது. குளம் நிறைந்தால், அந்தக்குளம் திருப்தியாகிவிடும்; ஏரி நிறைந்து கலங்கள் போனால், ஏரி திருப்தியடைந்துவிடும்.

இன்றைக்கு காலையில் சிற்றுண்டி போடுகிற செய்தி, இது ஒரு மிகப் பெரிய செய்தி, அதைப்படிக்கும்போதே நான் 'சபாஷ்' என்று சொல்லி விட்டேன். அதற்காக நான் பாராட்டக் கடமைப் பட்டிருக்கிறேன். ஓரே ஒரு வருடம்தான். அவரே சொன்னார், ஒரு வருடம் என்பது, 'அரசியலில் ஒரு சிறு துளி' என்றார். அண்ணா சொன்னார் ஐந்து ஆண்டு கள், ‘சிட்டிகை’ போடுகிற நேரம்' என்று சொன்னார். ஓர் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடேனேயே, எங்களுக்கு என்ன ராஜபாட்டையா இருந்தது? சுமக்க முடியாத கடன், முடங்கிப்போன நிருவாகம், குற்றுயிரும், குலையுயிருமாகக் கிடக்கிற சட்டம்-ஒழுங்கு இந்த நிலையிலே இந்த ஆட்சியை கையில் எடுத்து ஓராண்டுக்குள் திருத்த வேண்டுமென்று திருத்தினார், திருத்தப்போகிற போது எதிரில் கொரோனா.

அதிலும்கூட பாருங்கள், யார் செய்வார்! நான் அவரிடம் கோபித்துக் கொண்டேன். கோயம்புத்தூரில், யார் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ அந்த வார்டுக்குள் டாக்டர்கூட உள்ளே போவதற்குப் பயப்படுவார்கள். இவ்வளவு பெரிய பதவியில் இருப்பவர் தன் உயிரைப் பற்றிக்கூட கவலைப்படாமல் அங்கு உயிரோடு போராடிக்கொண்டிருப்பவர்கள் முன்னால போய், தான் நேரடியாக நின்று ஆறுதல் சொன்னாரே!

கவர்னரையே அனுப்ப வைத்தவர் நம்முடைய தளபதி அவர்கள். இங்கு உட்கார்ந்து அந்த வேலையைச் செய்துகாட்டி விட்டார். ஆகையினால், இவ்வளவையும் செய்ததற்குப் பாராட்டுகிறேன்.

திராவிட இயக்கம் என்றென்றும் இருக்க வேண்டும்! எனக்கு உணர்ச்சிதான் வருகிறதே தவிர, என் வாழ்க்கையில் நான் மேடையில் பேசுவதற்கு வாக்கியத்தை பெரும்பாலும் தேடியது கிடையாது. ஆனால், நான் இன்றைக்கு உணர்ச்சிவசப்பட்டு பேசக்கூடிய நிலை. அவரும் என்னைப் பாராட்டினார். நானும் அவருக்கு இங்கிருந்து உபசரிப்பு செய்ய வேண்டும். அதனால்தான் நான் அன்றைக்கு ஒரு நாள் கமலபாதி திரிபாதி என்று சொன்னேன். அந்த நன்றி உணர்வோடு என் தலைவரின் மகனான உங்களுக்கு நான் இன்னும் உழைப்பேன்.

எனக்கு ஒரே ஒரு ஆசை. இந்தத்திராவிட இயக்கம் இருக்க வேண்டும். ஆட்சி போகும், வரும். ஆனால், திராவிட இயக்கம் என்றென்றைக்கும் இருக்க வேண்டும். அதற்காகத்தான் “திராவிட மாடல்” என்று வைத்திருக்கிறீர்கள்.

எனக்கொரு ஆசை, இவ்வளவு நாள் இருந்த என் வயதில் ஆசை, இந்த DMK அதாவது இந்தத் திராவிட இனம், திராவிடப் பற்று இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். அதைக் காப்பாற்றக்கூடிய ஒரு ஆண் மகன் நீங்கள் பிறந்திருக்கிறீர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. எனவே, நான் எவ்வளவு நாட்களுக்கு இருப்பேன் என்று சொல்லமுடியாது.

பேரவைத் தலைவர் : நூறாண்டு காலம் நீங்கள் நோய்நொடி இல்லாமல் நன்றாக இருப்பீர்கள். எல்லோருடைய வாழ்த்தும் உங்களுக்கு இருக்கின்றது.

அமைச்சர் துரைமுருகன்: ஆகையால், என் தம்பிக்கு நான் சொல்கிறேன், என் வாழ்நாளும் சேர்த்து நீ வாழ வேண்டும், இருக்க வேண்டும் என்று வாழ்த்தி அமர்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories