தமிழ்நாடு

“இஸ்லாமிய மக்களுடன் என்றும் தோளோடுதோள் நிற்கும் இயக்கம் தி.மு.க”: முதல்வர் மு.க.ஸ்டாலின் ரமலான் வாழ்த்து!

ஒற்றுமையுணர்வும் சகோதரப் பாசமும் நிலைத்திருப்பதால்தான் தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.

“இஸ்லாமிய மக்களுடன் என்றும் தோளோடுதோள் நிற்கும் இயக்கம் தி.மு.க”: முதல்வர் மு.க.ஸ்டாலின் ரமலான் வாழ்த்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பெரும்பான்மைவாதமும் மதவாதமும் தலைதூக்காத சமய நல்லிணக்கப் பூங்காவாகத் தமிழ்நாட்டைக் காத்து நிற்கும் "திராவிட மாடல்" ஆட்சி நடைபெற்று வருகிறது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரமலான் திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “புனித இரமலான் மாதம் முழுவதும் தங்கள் நோன்புக் கடமையை ஆற்றி, ஏழை எளியவருக்கு உதவிகள் புரிந்து, அன்பு, இரக்கம், கருணை, ஈகை ஆகிய உயரிய பண்புகளை உலகுக்கு வெளிப்படுத்தும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த இரமலான் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“நீங்கள் உண்மையையே பேசுங்கள், அது அழிவைத் தந்தாலும் முடிவில் வெற்றியையே தரும்"

“பசித்தவருக்கு உணவளியுங்கள்; நோயாளிகளை நலம் விசாரியுங்கள்; கைதிகளை விடுவியுங்கள்” - என நபிகளார் போதித்த உயரிய வாழ்க்கை நெறிகளையும் பண்புகளையும் கடைப்பிடித்து ஒழுகும் - ஈகைப் பண்பின் இன்னுருவாக விளங்கும் இசுலாமியப் பெருமக்களுடன் என்றும் தோளோடு தோள் நிற்கும் இயக்கம் திராவிட இயக்கம்.

அவர்களது உற்ற தோழனாக, சிறுபான்மையினரின் காவலராக, அவர்களில் ஒருவராகவே நம் நெஞ்சில் வாழும் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் விளங்கினார். எண்ணற்ற நலத்திட்டங்களைக் கழக ஆட்சி அமைந்தபோதெல்லாம் சிறுபான்மையினர் நலனுக்காக நிறைவேற்றினார்.

அந்தச் சாதனைகளின் பட்டியலை அணி வகுத்தாற்போல் சொல்லிட வேண்டுமென்றால், 1969-ல் மீலாதுன்நபிக்கு முதன்முதலில் அரசு விடுமுறை; உருது பேசும் முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது; இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் சமுதாய மக்கள் பயனடைய "சிறுபான்மையினர் நல ஆணையம்" துவங்கியது; ஓய்வூதியம் பெற்று வந்த 2000 உலமாக்களின் எண்ணிக்கையை 2400 வரை உயர்த்தியது; முதன் முறையாக வக்பு வாரியச் சொத்துகளைப் பராமரிப்பதற்கென 40 லட்சம் ரூபாய் மானியம் வழங்கியது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினரின் முன்னேற்றத்திற்காக , `தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்” “உருது அகாடமி” உள்ளிட்டவற்றை தொடங்கியது, "காயிதே மில்லத் மணிமண்டபம்" அமைத்திட நிதி ஒதுக்கி, அடிக்கல்லும் நாட்டி கட்டி முடிக்க நடவடிக்கை எடுத்தது -அனைத்து சாதனைகளுக்கும் முத்தாய்ப்பாக, 2007-இல் இஸ்லாமியர்களுக்குப் பிற்படுத்தப்பட்டோருக்கான 30 விழுக்காட்டில் 3.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கியது என்று தலைவர் கலைஞர் அவர்களுக்கும், இஸ்லாமிய சமுதாயத்தினருக்குமான உறவு என்றைக்கும் நீடித்து நிலைத்து நிற்கவல்லது. அந்த உறவின் தொடர்ச்சியாகத்தான் திராவிட முன்னேற்றக் கழக அரசும் சிறுபான்மை மக்களின் அரணாகத் தொடர்கிறது.

முதல்முறையாக 5 மாவட்டங்களில் மாவட்ட சிறுபான்மை நல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்துக்கு ஒரு மகளிர் சங்கம் என்பதைத் தளர்த்தி, ஒன்றுக்கும் மேற்பட்ட மகளிர் உதவும் சங்கங்கள் ஆரம்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பெரும்பான்மைவாதமும் மதவாதமும் தலைதூக்காத சமய நல்லிணக்கப் பூங்காவாகத் தமிழ்நாட்டைக் காத்து நிற்கும் "திராவிட மாடல்" ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஒற்றுமையுணர்வும் சகோதரப் பாசமும் நிலைத்திருப்பதால்தான் தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.

இசுலாமிய மக்களின் சமூக - பொருளாதார முன்னேற்றத்துக்காகப் பல திட்டங்களை அளிக்கும், அவர்களுக்கு ஒரு சோதனை என்றால் அவர்களுக்குத் துணை நிற்கும் காவலாக விளங்கி வரும் நமது அரசின் சார்பில் மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் எனது புனித இரமலான் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories