
சென்னை மாதவரம் பொன்னியம்மன்மேடு பகுதியை சேர்ந்தவர் கணேஷ் பாபு (48). இவர் மாதவரம் 200 அடி சாலை ரெட்டை ஏரி சந்திப்பு அருகே கணேஷ் என்டர்பிரைசஸ் என்கின்ற பெயரில் தனியார் பெயிண்ட் வர்ணம் பூசும் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இவரது நிறுவனம் செயல்படும் அலுவலகத்திற்கு செயலாளர் வேலைக்கு பெண்கள் தேவை என விளம்பரம் செய்து இருந்தார். அதன் பேரில் அந்த நிறுவன பணிக்கு செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த கலா வயது (25) என்ற பெண் நேர்காணலுக்கு சென்றிருந்தார்.
அப்போது அந்த பெண்ணிடம் நிறுவன உரிமையாளர் கணேஷ் பாபு ஆபாச வார்த்தைகள் பேசி சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் இச்சம்பவம் குறித்து மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து மாதவரம் போலிஸார் வழக்குப்பதிவு செய்து நிறுவன உரிமையாளர் கணேஷ் பாபுவை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்ததில் கணேஷ் பாபு அந்த இளம் பெண்ணிடம் ஆபாச வார்த்தைகள் பேசி ஆபாச செயலில் ஈடுபட்டு அவர் ஆடைகளை கலைத்து சில்மிஷ வேலைகள் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
பின்னர் அவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.








