தமிழ்நாடு

கல்வி.. வேலை வாய்ப்பு.. நெரிசலுக்கு தீர்வு : தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வைக்கிறார் முதல்வர்!

தமிழகத்தை வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்க வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என ‘தினகரன்’ நாளேடு ‘நெரிசலுக்கு தீர்வு’ என்ற தலைப்பில் தலையங்கம் வெளியிட்டுள்ளது.

கல்வி.. வேலை வாய்ப்பு.. நெரிசலுக்கு தீர்வு : தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வைக்கிறார் முதல்வர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கல்வி, வேலை வாய்ப்பு, கிராம மற்றும் நகர்ப்புற மேம்பாடு உட்பட பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருவதன் மூலம் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்க வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என ‘தினகரன்’ நாளேடு ‘நெரிசலுக்கு தீர்வு’ என்ற தலைப்பில் தலையங்கம் வெளியிட்டுள்ளது.

அது பற்றிய விவரம் வருமாறு :-

தலைநகர் சென்னையில் தி.மு.க ஆட்சியில் அமைக்கப்பட்ட பல்வேறு பாலங்களால், பெரும் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டுள்ளது. இதை மனதில் கொண்டு சட்டப்பேரவையில் சாலைகள் சீரமைப்புக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மக்கள் பயன்பாடு, வணிக நலனை கருத்தில் கொண்டு புதிய சாலைத்திட்டங்களும் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானிய கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

அறிவிப்பில், செங்கல்பட்டு நகரத்தை தூத்துக்குடி துறைமுகத்துடன் இணைக்கும் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கான திட்டம் தென்தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன்மூலம் வன்முறை சம்பவங்கள் அதிகம் நடக்கும் தென்மாவட்டங்களில் தொழிற்சாலைகள் அதிகரித்து தொழில்வளம் மேம்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி, 3,200 சாலைகள் புனரமைப்பு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.

மேலும், ஏற்கனவே சாலை சீரமைப்பு என்ற பெயரில், தரமாக உள்ள சாலைகளையே புனரமைப்பு செய்வதாகவும், பெயரளவில் பணிகளை மேற்கொண்டதாக கணக்கு காட்டியதாகவும் பல்வேறு மோசடி புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக 660 சாலை ஒப்பந்தங்களை சென்னை மாநகராட்சி கடந்தாண்டு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. அ.தி.மு.க ஆட்சியில் நடந்த சாலை முறைகேடு ஒப்பந்தம் தொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. தற்போதைய தி.மு.க ஆட்சியில் மக்கள் நலன், போக்குவரத்து நெரிசல் குறைப்பு, வணிக நலன்களை கருத்தில் கொண்டு, நடப்பாண்டில் மட்டும் ரூ.2,300 கோடி மதிப்பீட்டில் 600 கிமீ சாலைகளை இருவழித்தடமாகவும், 150 கிமீ சாலைகளை நான்கு வழிச்சாலையாகவும் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் கிராமங்கள், சிறு, பெரு நகர மக்கள் பயனடைவார்கள்.

மழைக்காலங்களில் தரைப்பாலங்களின் நிலைமை கவலைக்குரியதாகி விடுகிறது. வெள்ளத்தில் மூழ்கி அடித்துச் செல்வதும், உடைவதும் தொடர்கிறது. இதனை கருத்தில் கொண்டு ரூ.1,105 கோடி மதிப்பீட்டில், 435 தரைப்பாலங்களை உயர்மட்ட பாலங்களாக கட்டி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 8 மாவட்டங்களில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. மேலும், ஆற்றுப்பாலங்களும் கட்டப்பட உள்ளன. பிரபல சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் சீசன் மற்றும் விடுமுறை காலங்களில் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாக உள்ளது.

இதை மனதில் கொண்டு மலைச்சாலைகளை சீரமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் சுற்றுலாத்துறை மேம்படும். மேலும், பாரம்பரிய கட்டிடங்கள் புனரமைப்பு, வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்கள் புனரமைப்புக்காகவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. கல்வி, வேலைவாய்ப்பு, கிராம மற்றும் நகர்ப்புற மேம்பாடு உட்பட பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருவதன் மூலம், தமிழகத்தை வளர்ச்சிப்பாதையை நோக்கி பயணிக்க வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

banner

Related Stories

Related Stories