தமிழ்நாடு

‘பவாரியா’ கொள்ளையர்கள் அரங்கேற்றிய கொடூர கொலைகள்.. VIPகளை காவு வாங்கிய கொள்ளை சம்பவத்தின் பகீர் பின்னணி!

தாங்கள் கொள்ளையடிக்கும் வீடுகளில் வெறும் பணத்தை மட்டும் கொள்ளையடிக்கமால், அங்கிருக்கும் நபர்களை கொடூரமாக கொலை செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.

‘பவாரியா’ கொள்ளையர்கள் அரங்கேற்றிய கொடூர கொலைகள்.. VIPகளை காவு வாங்கிய கொள்ளை சம்பவத்தின் பகீர் பின்னணி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாட்டில் கடந்த 2005-ஆம் ஆண்டுவாக்கில் 24 கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்றன. பல்வேறு நகரங்கள் கொடூர கொலை மற்றும் கொள்ளை தாண்டவத்தால் தமிழ்நாடே பீதியில் உறைந்திருந்தது. அனைத்து சம்பவங்களிலும் போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு இருந்தாலும் துப்பு கிடைக்காமல் இருந்தது.

இதனிடையே கடந்த 2005ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே அ.தி.மு.க எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான கே.சுதர்சனம் வட நாட்டு கொள்ளையர்களால் நள்ளிரவில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது வீட்டிலிருந்து ஏராளமான நகை, பணத்தையும் கொள்ளைக் கும்பல் திருடிச் சென்றது.

அதுமட்டுமல்லாது சேலம் காங்கிரஸ் பிரமுகர் தாளமுத்து நடராஜன், திருவேற்காடு தி.மு.க பிரமுகர் கஜேந்திரன், வாலாஜாப்பேட்டை டாக்டர் மோகன்குமார் போன்ற வி.ஐ.பி-கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கொலையாளிகளை சுட்டுப் பிடிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.

மேலும் இந்த வழக்கில் டி.ஜி.பி ஏ.எக்ஸ். அலெக்ஸாண்டர், இந்தக் கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை ஒன்றை அமைத்தார். எஸ்.ஆர்.ஜாங்கிட் தலைமையில் அமைக்கப்பட்ட அந்தப் படையில் 4 காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள், 8 ஆய்வாளர்கள், 12 துணை ஆய்வாளர்கள், 4 கைரேகை நிபுணர்கள், 50க்கும் மேற்பட்ட பிற காவலர்கள் இடம்பெற்றனர்.

‘பவாரியா’ கொள்ளையர்கள் அரங்கேற்றிய கொடூர கொலைகள்.. VIPகளை காவு வாங்கிய கொள்ளை சம்பவத்தின் பகீர் பின்னணி!

இந்நிலையில், வழக்கை விசாரித்த போலிஸார், இந்த கொடூரங்களை அரங்கேற்றியது ஓம் பிரகாஷ் பவாரியா என்பவனின் கோஷ்டி என்பதைக் கண்டறிந்தனர். இந்த கோஷ்டியை பிடிப்பதற்காக வெளிமாநிலங்களில் தமிழ்நாடு போலிஸ் முகாமிட்டனர். அப்போது உ.பி.யில் இருந்த போலிஸார், மீரட்டில் 2 பேரை என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர். மீதி உள்ள 13 பேரை தமிழகத்துக்கு அழைத்து வந்தனர். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் பவாரியா மற்றும் அவரது சகோதரர் ஜெகதீஸ்வரா உள்ளிட்ட 13 பேரை கைது செய்யப்பட்டனர்.

மேலும் அவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததில் 2 பேருக்கு தூக்குத் தண்டனையும், சிலருக்கு ஆயுள் தண்டனையும் கிடைத்தது. இதில் ஓம்பிரகாஷ் பவாரியா சிறைச்சாலையிலேயே இறந்துவிட்டார். அவரது சகோதரர் ஜெகதீஷ்வரா 2005ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை புழல் சிறையில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் ஜாமீனில் வெளியவந்து தலைமறைவாக இருந்து ஜெயில்தார்சிங், அவரது மனைவி பீனாதேவி, சந்து, பப்லு ஆகியோர் ஆகியோரை போலிஸார் 15 வருடங்களாக தேடிவந்தனர். இந்நிலையில் சென்னையில் பதுங்கியிருந்த ஜெயில்தார் சிங்கை போலிஸார் இன்று கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதையடுத்து தலைமறைவாக உள்ள பீனா தேவி, சந்து, பப்லு ஆகியோரை தனிப்படை போலிஸார் தீவிரமாக தேடிவருகின்றனர். மேலும் இந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

‘பவாரியா’ கொள்ளையர்கள் அரங்கேற்றிய கொடூர கொலைகள்.. VIPகளை காவு வாங்கிய கொள்ளை சம்பவத்தின் பகீர் பின்னணி!

முன்னதாக இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடும் பவாரியா கொள்ளை கும்பல், தாங்கள் கொள்ளையடிக்கும் வீடுகளில் வெறும் பணத்தைக் மட்டும் கொள்ளையடிக்காமல், அங்கிருக்கும் நபர்களையே கொடூரமாக கொலை செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.

அதுமட்டுமல்லாது உதவி கேட்பது போது நாடகமாடி நள்ளிரவில் தங்களின் கொள்ளைச் சம்பவங்களை நிகழ்த்தி வந்துள்ளனர். கொடூரமான ஆயுதங்கள், நாட்டுத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களினால் அப்பாவி மக்களை கொடூரமாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இத்தகைய கொடூர கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடித்துச் சிறையில் அடைத்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ்.ஆர்.ஜாங்கிட் அதன் நினைவுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். முன்னதாக, எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் மேற்குறிப்பிட்ட சம்பவத்தின் கரு இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories