தமிழ்நாடு

“அ.தி.மு.க ஆட்சியில் செய்ததும் இதுவும் ஒன்றல்ல” : சொத்து வரி குறித்து தெளிவாக விளக்கிய அமைச்சர் K.N.நேரு!

2018ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் 200 சதவீத வரி உயர்த்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

“அ.தி.மு.க ஆட்சியில் செய்ததும் இதுவும் ஒன்றல்ல” : சொத்து வரி குறித்து தெளிவாக விளக்கிய அமைச்சர் K.N.நேரு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஒன்றிய அரசின் நிதி ஆணையம் வலியுறுத்தியதால் தான் தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்த்தப்பட்டதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள, குடியிருப்பு, வணிக, கல்வி பயன்பாடு கட்டடங்களுக்கான சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, “மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய சொத்து வரி உயர்வு அவசியம். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்காத வகையில் வரி உயர்த்தப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் 15வது நிதி ஆணையத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் சொத்து வரி உயர்ந்துள்ளது. சொத்து வரியை உயர்த்தாவிட்டால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு கிடையாது என ஒன்றிய அரசு கூறிவிட்டது.

தற்போதைய வரி உயர்வு நாட்டின் பிற நகரங்களை காட்டிலும் குறைவு. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் சொத்து வரி குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டது. சென்னையில் 24 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் வரி உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில், தமிழகத்தை விட 50 சதவீதம், 100 சதவீதத்துக்கும் மேலாக வரி வசூலிக்கப்படுகிறது. தமிழக முதல்வர் ஏழை எளிய மக்கள் அதிகம் பாதிக்கப்படாத அளவிற்கு, இந்த வரி உயர்வை ஏற்படுத்திக் கொடுத்தார். அதுவும் தற்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற உள்ளாட்சி பிரதிநிதிகள், நகராட்சி பணத்திலேயே நகரங்களை முன்னேற்றுவதற்காக இதன்மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் 200 சதவீத வரி உயர்த்தப்பட்டது. தேர்தல் வந்ததால் தாங்கள் வெளியிட்ட வரி உயர்வை அ.தி.மு.க நிறுத்தி வைத்தனர்.

அ.தி.மு.க ஆட்சியில் ஏழை, பணக்காரர்கள் என்று இல்லாமல், ஒரே வகையில் வரி உயர்வு செய்யப்பட்டது. ஆனால், தற்போது, ஏழைகளுக்கு குறைவானதாகவும், 1,800 சதுர அடிக்கு மேற்பட்ட கட்டடங்களுக்கு அதிகமாகவும் வரி உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 54 லட்சம் பேரில் முக்கால்வாசி பேர் 600 சதுர அடிக்கு குறைவான இடத்தில் வசிக்கின்றனர். அவர்களுக்கு இதுவரை 100 ரூபாய் வரி என்றால், தற்போது ரூ.125 என்கிற அளவில் வரி உயர்த்தப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories