தமிழ்நாடு

11 கிலோ தங்கம்.. 118 கிலோ வெள்ளி.. S.P.வேலுமணிக்கு தொடர்புடைய இடங்களில் தோண்டி எடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை!

எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் 11.153 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

11 கிலோ தங்கம்.. 118 கிலோ வெள்ளி.. S.P.வேலுமணிக்கு தொடர்புடைய இடங்களில் தோண்டி எடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் 11.153 கிலோ தங்கம் மற்றும் 118.506 கிலோ வெள்ளிப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராகப் பதவி வகித்த எஸ்.பி.வேலுமணி 2016 முதல் 2021 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை உத்தரவின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் கடந்த ஆகஸ்ட் மாதம் எஸ்.பி.வேலுமணி வீடு உள்பட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையில் 13 லட்சத்து 8 ஆயிரத்து 500 ரொக்கம், நிலப்பதிவு தொடர்பான ஆவணங்கள், தனியார் நிறுவனங்களுடனான பரிவர்த்தனை ஆவணங்கள், இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு வைப்புத்தொகை, ஹார்ட் டிஸ்குகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில் கோவையில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் இன்று அதிகாலை முதல் மீண்டும் சோதனை நடத்தினர். எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது சகோதரர் அன்பரசன், அவரது மனைவி ஹேமலதா உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

எஸ்.பி.வேலுமணியின் உதவியாளர் சந்தோஷ் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். கோவை சிங்காநல்லூர் எம்.எல்.ஏ ஜெயராமன் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. கோவையில் 41 இடங்கள் சென்னையில் 8 இடங்கள், சேலத்தில் 4 இடங்கள் என மொத்தம் 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்தது.

அமைச்சராக பதவிவகித்த காலத்தில் சுமார் ரூ.58.23 கோடி (அதாவது 3,928% வருமானத்தை விட அதிகமாக) சேர்த்திருப்பதாக இந்த வழக்கு எஸ்.பி.வேலுமணி மற்றும் அவர் குடும்பத்தினர் மீது தொடரப்பட்டுள்ளது.

எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய சுமார் 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியதில், 11.153 கிலோ தங்க நகைகள், 118 கிலோ வெள்ளி நகைகள், கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

கணக்கில் வராத பணம் ரூ.84,00,000, சான்று பொருட்களான கைப்பேசிகள், பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், மடிக்கணினி, கணினி ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் வழக்கிற்குத் தொடர்புடைய ஆவணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், ரூ.34,00,000 அளவுக்கு பலதரப்பட்ட கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories