தமிழ்நாடு

“தி.மு.க ஆட்சியை தமிழ் ஆட்சியாக - தமிழன் ஆட்சியாக நடத்திக் கொண்டு இருக்கிறோம்” : முதல்வர் பெருமிதம்!

ஈராயிரம் ஆண்டு இலக்கண, இலக்கிய செழுமை கொண்ட மொழிக்கு செம்மொழி என்ற அந்த அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது திராவிட முன்னேற்றக் கழக அரசு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“தி.மு.க ஆட்சியை தமிழ் ஆட்சியாக - தமிழன் ஆட்சியாக நடத்திக் கொண்டு இருக்கிறோம்” : முதல்வர் பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் (15.3.2022) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் ஆற்றிய உரையாற்றினார்.

அதன் விபரம் பின்வருமாறு :

உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.

மிகவும் எழுச்சியோடு, உணர்ச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய விழாவை இந்த மேடையில் நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். எத்தனையோ விருது வழங்கக்கூடிய விழாக்களில் நாம் பங்கேற்றிருந்தாலும், இந்த விழாவில் நான் பங்கெடுக்கிற நேரத்தில் எனக்கு ஏற்படக்கூடிய உணர்ச்சியும், எழுச்சியும் அதிகமானதாக அமைந்திருக்கிறது.

தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்

தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!

தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்

தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்

தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ! - என்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கவிதை வரிகளை மனதில் ஏந்திக் கொண்டு, இந்த மேடையில் நான் நின்று கொண்டு இருக்கிறேன்.

ஈராயிரம் ஆண்டு காலம் என்று இதுவரை நாம் சொல்லிக் கொண்டிருந்தோம். ஆனால் இப்போது கிடைத்திருக்கக்கூடிய ஆய்வுகளின் படி பார்த்தால், மூவாயிரத்து ஐநூறு ஆண்டு பழமையும் - சிறப்பும் கொண்ட தமிழ் மொழிக்கும் இனத்துக்கும் பெருமை சேர்க்கக் கூடிய பெருமக்களின் பெயரால் அமைந்துள்ள விருதுகளை, அதே புகழும் பெயரும் அறிவும் ஆற்றலும் கொண்டிருக்கக்கூடிய பெருமக்கள் இங்கே பெற இருக்கிறார்கள்.

* தமிழனுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே அறத்தைப் போதித்த திருவள்ளுவர் பெயரிலான விருதை மு.மீனாட்சி சுந்தரனார் அவர்களுக்கும் -

* பகுத்தறிவுப் பகலவன் - அறிவுலக ஆசான் தந்தைப் பெரியார் பெயரிலான விருதை - திராவிட இயக்கத்தின் கணினி என்று தலைவர் கலைஞர்
அவர்களால் போற்றப்பட்ட எழுத்தாளர் க.திருநாவுக்கரசு அவர்களுக்கும்-

* ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளிவிளக்காம் டாக்டர் அம்பேத்கர் பெயரிலான விருதை - சட்ட நீதியை மட்டுமல்ல, சமூக நீதியையும் வழங்கும் தீர்ப்புகளைத் தந்த நீதியரசர் சந்துரு அவர்களுக்கும் -

* நாமணக்கும் பேச்சால் தமிழர் உள்ளமெல்லாம் இன்றும் மணம் தந்து வரும் பேரறிஞர் அண்ணா பெயரிலான விருதை நாவுக்கரசர் - திராவிட இயக்கத்தின் போர்முரசமாம் நாஞ்சில் சம்பத் அவர்களுக்கும் -

* கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசர் பெயரிலான விருதை நம்முடைய பெருமதிப்பிற்குக்குரிய இலக்கியச் செல்வர் குமரி ஆனந்தன் அவர்களுக்கும் -

* பாட்டுத் திறத்தால் இவ்வையகத்தை அசரவைத்த மகாகவி பாரதி பெயரிலான விருதை - தனது பேச்சுத் திறத்தால் தமிழ்நாட்டு மேடைகளை அசர வைத்துக் கொண்டிருக்கக்கூடிய பாரதி கிருஷ்ணக்குமார் அவர்களுக்கும் -

* வார்த்தைகளால் தமிழுக்கு வாளாக அமைந்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பெயரிலான விருதை திராவிடப் புலவர் செந்தலை கவுதமன் அவர்களுக்கும் -

* முத்தமிழால் மூவாத்தமிழுக்கு அணி சேர்த்த கி.ஆ.பெ.விசுவநாதன் அவர்களுடைய பெயரிலான விருதை முன்னாள் துணை வேந்தரும் எந்நாளும் தமிழாய்வு வேந்தருமான மா.ராசேந்திரன் அவர்களுக்கும் -

* கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெயரிலான விருதை - பட்டிமன்ற வாதத்தினுடைய சக்ரவர்த்தியான பாரதி பாஸ்கர் அவர்களுக்கும் -

* சொல்லின் செல்வர் பெயரிலான விருதை ஒவ்வொரு சொல்லையும் கல் போல எடுத்து வீசக்கூடிய சூரியா சேவியர் அவர்களுக்கும் -

* எங்கோ பிறந்து இங்கு பிறந்த தமிழனாகவே வாழ்ந்த ஜி.யு.போப் பெயரிலான விருதை இதழியல் துறையில் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் அ.சு.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் -

* சீறாபுராணம் மூலம் தமிழை உயர்வித்த உமறுப்புலவர் பெயரிலான விருதை தமிழிசை வளர்ச்சிக்கு நாளும் தொண்டாற்றும் மதுரை நா.மம்முது அவர்களுக்கும் -

* தமிழ்த் தேசிய காப்பியத்தின் மூலமாக தமிழினத்தின் பெருமையை நிலைநாட்டிய இளங்கோவடிகள் பெயரிலான விருதை, மேடையில் ஏறினால் எல்லாக் காப்பியங்களையும் கரைமடை திறந்தது போல ஒப்பிக்கும் நெல்லை கண்ணன் அவர்களுக்கும் -

* 20 மொழிகளை அறிந்து, அன்னைத்தமிழே அனைத்துக்கும் தாய் என்று சொன்ன திராவிட மொழிநூல் ஞாயிறு பாவாணர் பெயரிலான விருதைப் பெறும் தகுதியை தனது ஆய்வுத் திறத்தால் பெற்ற முனைவர் கு.அரசேந்திரன் அவர்களுக்கும் -

*பொதுவுடமைக் கொள்கையை திசை எட்டும் சேர்த்த சிங்காரவேலர் பெயரிலான விருதை - தினந்தோறும் தீக்கதிர் மூலமாக அதே பணியைச் செய்து வரும் மதுக்கூர் ராமலிங்கம் அவர்களுக்கும் -

* தமிழின இயக்கமாம் திராவிட இயக்கம் உருவாகும் போதே தனித்தமிழுக்காக இயக்கம் கண்ட தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகள் பெயரிலான விருதை - சமயமும் தமிழுமாய் சுகித்து வாழக்கூடிய சுகி சிவம் அவர்களுக்கும் -

* வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற அருட்பெருஞ்சோதி வள்ளலார் பெயரிலான விருதை அதே நோக்கம் கொண்ட முனைவர் இரா.சஞ்சீவிராயர் அவர்களுக்கும் -

* முந்தைய நூற்றாண்டிலேயே தமிழன் - திராவிடன் என்ற இரண்டு சொற்களையும் அரசியல் களத்தில் பதிய வைத்த அயோத்திதாசப் பண்டிதர் பெயரிலான விருதை, அயோத்திதாசர் எழுத்துக்களை பெருமளவில் வெளி உலகுக்கு எடுத்து வந்தவரும், அரசியல் ஆய்வாளர்களில் தலைசிறந்தவர்களுள் ஒருவரான ஞான அலாய்சிஸ் அவர்களுக்கும் -

* முதலமைச்சர் கணினித் தமிழ் விருதை கணினியில் முனைப்பாகச் செயல்படும் முனைவர் தனலட்சுமி அவர்களுக்கும் -

* பாமரர்களையும் செய்தித்தாள் படிக்க வைத்த சி.பா.ஆதித்தனார் பெயரிலான விருதை படித்தவர்களுக்கும் புதிய சிந்தனைகளை உருவாக்கி வரும் உயிர்மை இதழுக்கும் -

* தமிழ்த்தாய் பெயரிலான விருதை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்துக்கும் வழங்குவதை தமிழ்நாடு அரசு பெருமையாகக் கருதுகிறது. உங்களுக்கு வழங்கியதன் மூலமாக இந்த விருது பெருமை அடைகிறது.

எனது கையால் வழங்கியதன் மூலமாக நானும் பெருமைப்படுகிறேன். விருதுகளைப் பெற்ற பெருமக்களே! உங்களுக்கு விருதுகளை வழங்கியதன் மூலமாக நான் எனது தமிழ்க் கடமையைச் சரியாகச் செய்து விட்டதாக நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். தமிழுக்குத் தொண்டு செய்வோம் சாவதில்லை - தமிழ்த் தொண்டன் பாரதி தான் செத்ததுண்டோ ? - என்று பாடினார் புரட்சிக் கவிஞர்.

தமிழுக்குத் தொண்டு செய்தவர்கள் அவர்களது படைப்புகளின் மூலமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களது புத்தகங்களின் மூலமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அது மட்டுமல்ல, அவர்களைப் போலவே இருக்கும் தமிழ்த் தொண்டர்களாகவும் அவர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

அத்தகைய தீரமிகு எழுத்தாளர்கள் - கனல் தெறிக்கும் பேச்சாளர்கள் - களம் கண்ட போராளிகள் - ஆய்வு அறிஞர்கள் - மொழிபெயர்ப்பாளர்கள் - பத்திரிகையாளர்கள் - ஆகியோர் இந்த விருதுகளைப் பெற்றுள்ளார்கள். இந்த விருதுகளை இவர்களுக்கு வழங்கிதன் மூலமாக தமிழ்நாடு அரசு இன்னொரு மிக முக்கியமான பெருமையை அடைகிறது.

வாழும் காலத்திலேயே - தகுதிசால் தமிழ்த் தொண்டர்களைப் பாராட்டியது தமிழ்நாடு அரசு என்ற விருதை தமிழக அரசு அடைகிறது. இது தான் மிக முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்.

யாருடைய பெயரால் விருதுகள் உள்ளதோ அவர்கள் வாழ்ந்த காலத்தில் எத்தகைய அங்கீகாரத்தை பெறத் தவறினார்களோ - அது போன்ற சூழல் இனி வருங்காலத்தில் இருக்கக் கூடாது என்பதை இன்றைய தமிழக அரசு தனது கொள்கையாக வைத்துள்ளது என்பதை இந்த மாபெரும் நிகழ்ச்சியின் மூலமாகத் உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அதனால் தான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை தமிழாட்சியாக - தமிழின ஆட்சியாக நாங்கள் நடத்தி வருகிறோம். நாங்கள் என்றால் உங்கள் அனைவரையும் சேர்த்துத்தான் நான் சொல்கிறேன். விருதுபெற்ற பெருந்தகைகளையும் இணைத்துக் கொண்டே நான் சொல்கிறேன்.

* ஈராயிரம் ஆண்டு இலக்கண, இலக்கிய செழுமை கொண்ட மொழிக்கு செம்மொழி என்ற அந்த அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது திராவிட முன்னேற்றக் கழக அரசு.

* தமிழர்கள் வாழும் இந்த மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது கழக அரசு.

* தமிழர்கள் கல்வியில், வேலை வாய்ப்பில், அதிகாரம் பொருந்திய அனைத்து இடங்களிலும் போய் அமர சமூகநீதியை உருவாக்கிக் கொடுத்தது திராவிட இயக்கம்.

அதாவது தமிழ் மொழிக்கு - தமிழ் இனத்துக்கு - தமிழ்நாட்டுக்கு தலையாய தொண்டு செய்த இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதையும் கழக அரசு என்பதையும் நான் தலைநிமிர்ந்து சொல்ல முடியும். ஐந்து முறை ஆட்சியில் இருந்த போது - எத்தனையோ சாதனைகளைச் செய்திருந்தாலும், கடந்த பத்து மாத காலத்தில் பைந்தமிழுக்கு பல்வேறு சாதனைகளைச் செய்த அரசு தான் கழக அரசு என்பதை உங்களுக்கு மீண்டும் நான் நினைவூட்டுகிறேன்.

* தமிழ்நாட்டு அரசுத் துறை பணியிடங்களில் நுழைபவர்களுக்கு தமிழ் மொழி அறிவு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

* ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள அனைத்து தெரிவு முகமைகளைப் பொறுத்தவரையில் கட்டாயத் தமிழ்மொழித் தகுதித் தேர்வு நடத்தப்படும்.

* ஆலயங்களில் அன்னைத் தமிழ் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது.

* மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மாநிலப் பாடலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

* மதுரையில் கலைஞர் நினைவு நூலகம்

* தமிழ் அறிஞர்கள் நூல்கள் நாட்டுடமை

* எழுத்தாளர்கள் பிறந்தநாளில் கூட்டங்கள்

* குறைந்த விலையில் சங்க இலக்கிய நூல்கள் வெளியீடு

* திராவிடக் களஞ்சியம் உருவாக்கம்

* இதழியலாளர்க்கு கலைஞர் எழுதுகோல் விருது

* உலகப் பல்கலைக் கழகங்களில் செம்மொழித் தமிழ் இருக்கைகள்

* நூலகங்களுக்கு சிற்றிதழ்கள்

* இலக்கியமாமணி விருதுகள்

* திசைதோறும் திராவிடம்

* முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம் - இப்படி தமிழாட்சி நடந்து வருகிறது.

* 2010-ஆம்ஆண்டு முதல் வழங்கப்படாமலிருந்த முத்தமிழறிஞர் கலைஞர் செம்மொழித் தமிழ் விருதுகள் 22.01.2022-ஆம் நாளன்று வழங்கப்பட்டன. இனி ஒவ்வோர்ஆண்டும் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாளாம், ஜூன் மாதம் 3-ஆம் நாள் ரூ.10.00 இலட்சம் பரிசுத்தொகையுடன் வழங்கப்படும்.

* பாரதி ஆய்வாளர்கள் ஐவருக்கு தலா 3 லட்சம் வழங்கி பெருமைப்படுத்தி இருக்கிறோம்.

* தமிழக எல்லைப் போராட்ட வீரர்கள் 110 பேருக்கு தலா 1 லட்சம் வழங்கி சிறப்புச் செய்திருக்கிறோம்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் விரும்பிய ஆட்சி மட்டுமல்ல, தமிழர்கள் விரும்பிய ஆட்சியாகவும் நமது ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

தமிழ் வளர்ச்சி என்பது அந்த மொழியின் பெருமையைப் பேசுவது மட்டுமல்ல, மொழியைப் பெருமைப்படுத்தும் படைப்பாளிகளைப் போற்ற வேண்டும்.

கொரோனா காலத்தில் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தார்கள். ஏற்கனவே ஜனவரி மாதம் தொடங்க இருந்த புத்தகக்கண்காட்சி தள்ளிப்போன காரணத்தால், அவர்களுக்கு இழப்பும் அதிகமாக ஏற்பட்டது. இதனை அரசாங்கம் கவனத்தில் கொண்டு, எங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். ஒரு கோடி ரூபாய் வரைக்கும் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று அவர்கள் சொன்னார்கள். அதனை மனதில் வைத்துக்கொண்டு ஐம்பது லட்சம் ரூபாயை தமிழக அரசு அவர்களுக்கு வழங்கி இருக்கிறது. இந்த வகையில் இந்த ஆண்டு மட்டும் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் பதிப்பாளர்- விற்பனையாளர்களுக்கு கிடைத்திருக்கிறது.

புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைக்க நான் சென்றபோது ஒரு அறிவிப்பைச் செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால், அது தேர்தல் காலம். உள்ளாட்சி அமைப்புனுடைய தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரம். அதனை அந்த நேரத்தில் சொல்ல முடியவில்லை. தேர்தல் நடத்தை விதிகள் அதற்கு இடம் தரவில்லை. தேர்தல் முடிந்துவிட்ட காரணத்தால் இந்த நிகழ்ச்சியின் மூலமாக அந்த அறிவிப்பைச் செய்கிறேன்.

அனைத்து நூல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மாபெரும் புத்தகப் பூங்கா அமைக்கலாம் என்றும் - அதற்கான நிலத்தை அரசு வழங்கும் என்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஒருமுறை சொன்னார். அதற்கு புத்தகப் பூங்கா என்றும் அவரே பெயர் சூட்டினார்.

பாபசி அமைப்பைச் சார்ந்திருக்கக்கூடிய அவர்களுடைய ஆலோசனைகளைப் பெற்று அதற்கான நிலத்தைத் தேர்வு செய்து, அரசு வழங்கும் என்று இந்த நிகழ்ச்சியின் வாயிலாக நான் உறுதி அளிக்கிறேன். இந்த புத்தகப் பூங்கா உருவானால், அனைத்து புத்தகங்களையும் ஒரே இடத்தில் வாங்கலாம், அனைத்துப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் ஒரே இடத்தில் சந்திக்கக்கூடிய சூழல் நிச்சயம் உருவாகும். அதனை உருவாக்கித் தர அரசு தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் உறுதியாகச் செய்யும்.

விருது பெற்ற அனைவரையும் நான் பாராட்டுகிறேன், போற்றுகிறேன். வாழ்த்துகிறேன். உங்களது ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் இந்த அரசுக்கு எப்போதும் தேவை.

இது உங்களது அரசு. அந்த உரிமையோடு நீங்கள் வழிகாட்டுங்கள். இன்றைய தினம் 21 விருதுகள் தரப்படவிருக்கின்றன. விருதுக்கு தகுதியான பெருமக்களைத் தேர்வு செய்த மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களையும், தமிழ்வளர்ச்சித் துறை அதிகாரிகளையும் நான் பாராட்டுகிறேன்.

தந்தை பெரியார் பெயரிலான விருது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பிலும் மாமேதை அம்பேத்கர் பெயரிலான விருது ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பிலும் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த விருதுக்குரியவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் தான் வழங்கப்பட்டது. கழக அரசு தான் இந்த ஆண்டு முதல் ஐந்து லட்சம் ரூபாய் வழங்க அரசாணை வெளியிட்டது.

மற்ற 18 விருதுகளுக்கான தொகை 1 லட்சத்தில் இருந்து 2 லட்சம் ரூபாயாக ஆக்கப்பட்டுள்ளது. விருதுகளை உரியவர்களுக்கு உரிமையாக்கி இருக்கிறோம். இந்த விருதுகளைப் பெற்றதன் மூலமாக உங்களது தொண்டு மேலும் மேலும் அதிகரிக்கட்டும். இவர்களைப் போலவே இன்னும் பலரும் உருவாகட்டும். தொண்டு செய்வோம் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் எனச் சொல்லி உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி கூறி விடை பெறுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories