தமிழ்நாடு

பொதுமக்கள் சிரமத்தைப் போக்க அசத்தல் அறிவிப்பு... ரேஷன் கடைகளில் இனி கட்டாயமில்லை!

ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை சரிபார்ப்பின்றி அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொதுமக்கள் சிரமத்தைப் போக்க அசத்தல் அறிவிப்பு... ரேஷன் கடைகளில் இனி கட்டாயமில்லை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தொழில்நுட்பத்‌ தடைகளால்‌ கைரேகை சரிபார்ப்பு முறை செயல்படுத்தப்பட இயலாத காலங்களில்‌ கைரேகை சரிபார்ப்பின்றி தவறாது அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க வேண்டும்‌ என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட உணவுப்பொருள் வழங்கல் துறை ரேஷன் கடைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'நியாய விலைக்‌ கடைகள்‌ வாயிலாகக்‌ குடும்ப அட்டைதாரர்களுக்குப்‌ பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ இன்றியமையாப்‌ பண்டங்கள்‌ வழங்கும்போது கைவிரல்‌ ரேகை சரிபார்ப்பு முறை பின்பற்றப்படுகிறது.

ஆதார்‌ இணையத்‌ தரவுத்‌ தளம்‌ வேலை செய்யவில்லை என்றும்‌, இதனால்‌ விரல்‌ ரேகை சரிபார்ப்பு மேற்கொள்ள இயலவில்லை என்றும்‌, இதனால்‌ சில பகுதிகளில்‌ நியாயவிலைக்‌ கடைகளில்‌ அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப்‌ பண்டங்கள்‌ வழங்கப்படாமல்‌ குடும்ப அட்டைதாரர்கள்‌ திருப்பிவிடப்படும்‌ நேர்வுகள்‌ கவனத்திற்குக்‌ கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த 22.02.2022 முதல்‌ விரல்ரேகை சரிபார்க்கும்‌ நடைமுறையில்‌ இடையூறுகள்‌ நமது மாநிலத்தில்‌ மட்டுமன்றிப்‌ பரவலாக இதர மாநிலங்களிலும்‌ நிகழ்ந்துள்ளன. இவை தொடர்புடைய நிறுவனங்களின்‌ உயர்‌ அலுவலர்களின்‌ கவனத்திற்கு உடனுக்குடன்‌ கொண்டு செல்லப்பட்டுச்‌ சரி செய்யப்‌ போர்க்கால நடவடிக்கைகள்‌ எடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே பரவலாக இணைய இணைப்பு / தொழில்நுட்பத்‌ தடைகளால்‌ கைரேகை சரிபார்ப்பு முறை செயல்படுத்தப்பட இயலாத காலங்களில்‌ உடனடியாக கைரேகை சரிபார்ப்பின்றி இதர வழிமுறைகளில்‌ உரிய பதிவுகளை மேற்கொண்டு உரிய கண்காணிப்புடன்‌ தவறாது இன்றியமையாப்‌ பண்டங்கள்‌ விநியோகம்‌ செய்யப்பட வேண்டும்‌.

அனைவருக்குமான பொது விநியோகத்திட்டத்தின்‌ கீழ்‌ தகுதியுள்ள அனைத்துக்‌ குடும்ப அட்டைதாரர்களுக்கும்‌ அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய அத்தியாவசியப்‌ பண்டங்கள்‌ தரமாக விநியோகம்‌ செய்யப்பட்டு உணவுப்‌ பாதுகாப்பினை உறுதிப்படுத்திட வேண்டுமெனவும்‌ நியாயவிலைக்‌ கடைப்பணியாளர்கள்‌ உட்பட அனைத்து அலுவலர்களுக்கும்‌ உரிய அறிவுரைகள்‌ வழங்கப்பட்டு உள்ளன' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories