தமிழ்நாடு

மின் இணைப்பை துண்டித்து கொள்ளை முயற்சி.. வாலிபருக்கு அரிவாள் வெட்டு - கொள்ளையர்கள் அட்டகாசம்!

வீட்டின் மின் இணைப்பை துண்டித்து வாலிபரை அரிவாளால் வெட்டி கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மின் இணைப்பை துண்டித்து கொள்ளை முயற்சி.. வாலிபருக்கு அரிவாள் வெட்டு - கொள்ளையர்கள் அட்டகாசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இரவில் வீட்டின் மின் இணைப்பை துண்டித்து வாலிபரை அரிவாளால் வெட்டி கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (73). இவரது மனைவி ஜானகி. விவசாயியான சாமிநாதனின் மகன் சிவக்குமார் (33) மோட்டார் ரீவைண்டிங் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். திருமணமாகாத இவர் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இவர்களது வீட்டின் அருகில் வேறு வீடுகள் இல்லாததால் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் வீட்டில் ஜானகியும், அவரது மகன் சிவக்குமார் மட்டுமே இருந்தனர்.

அப்போது திடீரென மின்சாரம் தடைப்பட்டு மின் விளக்குகள் அணைந்துள்ளன. இதனால் வீட்டை விட்டு வெளியே வந்த சிவக்குமார் சற்று தொலைவில் இருந்த வீடுகளின் மின் விளக்குகள் எரிவதைப் பார்த்து, வீட்டின் பின்பக்கம் உள்ள மின் மீட்டர் பெட்டியை பார்க்கச் சென்றார்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த 3 கொள்ளையர்கள் திடீரென்று அரிவாளால் சிவக்குமார் தலையில் வெட்டினர் . இதில் நிலைகுலைந்து போன அவர் சத்தமிட்டவாறு ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.

மகனின் அலறல் சப்தம் கேட்டு ஜானகி வீட்டிற்கு வெளியே வந்தார். அப்போது கொள்ளையர்கள் ஜானகியின் கழுத்தில் அரிவாளை வைத்து வீட்டில் வைத்திருக்கும் பணம் மற்றும் நகைகளை எடுத்து வா என மிரட்டினர். இதனால் பயந்துபோன அவர் நகைகளை எடுத்து வருவதாக வீட்டிற்குள் சென்றார்.

பின்னர் சடாரென்று கதவை பூட்டிக்கொண்டு செல்போன் மூலம் அருகில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதை வீட்டிற்கு வெளியே நின்று கவனித்த கொள்ளையர்கள் ஆத்திரத்தில் வீட்டின் கதவை உடைக்க முயன்றனர். அதற்குள் அக்கம் பக்கத்தினர் அங்கு வருவதை பார்த்து கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

பின்னர் அங்கு வந்து காயமடைந்த சிவக்குமாரை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குண்டடம் போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலிஸார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து கொள்ளை முயற்சி நடந்த வீட்டில் தடயங்களைச் சேகரித்தனர் .

banner

Related Stories

Related Stories