தமிழ்நாடு

“பாஜகவுக்கு “His masters voice”ஆக இருக்கும் பழனிசாமியின் நயவஞ்சக அரசியல் அம்பலப்படும்”: அமைச்சர் பதிலடி!

இடஒதுக்கீட்டிற்கு எதிராக அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்து ஓராண்டுகாலம் தீர்ப்பைச் செயல்படுத்துவதை தள்ளிப்போட்டு பிற்படுத்தப்பட்ட மாணவர்களை வஞ்சித்தனர் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

“பாஜகவுக்கு “His masters voice”ஆக இருக்கும் பழனிசாமியின் நயவஞ்சக அரசியல் அம்பலப்படும்”: அமைச்சர் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

“அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அவர்கள் அவதூறான பரப்புரைகளைக் கைவிட்டு - தமிழ்நாட்டு மண்ணின் சமூகநீதி உணர்வினைக் கொஞ்சமாவது பெற்றிட வேண்டும்!” தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கூவத்தூரில் காலில் விழுந்து தரையில் தவழ்ந்து ஆட்சியைப் பெற்று, அதனை அப்படியே ஒன்றிய பா.ஜ.க அரசிடம் கொண்டு சென்று அடகு வைத்து, தமிழ்நாட்டின் உரிமைகளையெல்லாம் பறிகொடுத்து – நான்கு ஆண்டுகள் பரிதாப ஆட்சியை நடத்திய அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளர் - மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி எங்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி – அனைத்திந்திய அளவில் கிடைக்கும் முக்கியத்துவத்தைப் பார்த்து பொறாமையில் தனது புலம்பல்களை ஓர் அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார். வட இந்திய இளைஞர்கள் எல்லாம், “வழி நடத்த வாருங்கள்” என எங்கள் கழகத் தலைவரைப் பார்த்து அழைப்பது இவருக்கு ஆற்றாமையில் வயிற்றெரிச்சலை வர வைத்திருக்கிறது!

“சமூகநீதிக்கு இப்போது என்ன பாதிப்பு வந்துவிட்டது” என்று கேள்வி கேட்டு - இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்களின் அணியில் பழனிசாமி அவர்கள் சேர்ந்து, சமூகநீதி வரலாற்றில் பா.ஜ.க.வினரோடு தனக்கும் ஒரு கருப்புப் பக்கத்தை உருவாக்கிக் கொள்ள முயலுகிறார். ஒருபக்கம் போராடிப் பெற்ற இடஒதுக்கீட்டு உரிமைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒழித்துக்கட்டி, EWS என்ற பெயரில் பங்குக்கு வரும் குயுக்தி நரித்தனம் கூட அவருக்குப் புரியவில்லையோ என்று நினைப்பதை விட - ஒன்றிய அரசுக்கு முட்டுக் கொடுத்து தனக்கு ஒரு “பாதுகாப்பு” தேடிக் கொள்ளவில்லை என்றால் - பழைய ஊழல்கள் தன்னை பதம் பார்த்து விடுமோ என்று அஞ்சுகிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதால் தமிழ்நாட்டில் சமூகநீதிக்கு ஆபத்து இல்லை என்று அவரது கூற்றுப்படியே ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டாலும், இந்த அமைப்பின் நோக்கமே அனைத்திந்திய அளவில் சமூகநீதிக் கருத்தியலை முன்னெடுக்க வேண்டும் என்பதுதானே! இதனைப் புரிந்துகொள்ள அறிவிற்சிறந்தவர்கள் போல் ஆழ்ந்து படிக்க வேண்டிய அவசியமில்லை; நுனிப்புல் மேய்பவர்கள் போல் மேலோட்டமாகப் படித்திருந்தால்கூட போதுமே?

பா.ஜ.க.வுக்கு “His master’s voice” ஆக இருக்கும் பழனிசாமி இப்படி தன்னுடைய திருவாய் மலர்ந்து கொண்டே இருந்தால் - குறிப்பாக இடஒதுக்கீட்டுப் பிரச்சினையில் இப்படி குறுக்குசால் ஓட்டினால் - அவரது நயவஞ்சக அரசியல்தான் தொடர்ந்து அம்பலப்பட்டுக் கொண்டே இருக்கும்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எழுதிய அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்புக்கான அழைப்புக் கடிதத்தின் பொருள் பல மாநிலக் கட்சித் தலைவர்களுக்குப் புரியவில்லை என்கிறாரே, இவர் பேசிய மாநிலத் தலைமை எது? இவருக்குப் புரியவில்லை என்றால் யாருக்குமே புரியாது எனப் பொருளா? ஒருவேளை தனக்குக் கடிதம் எழுதாமல் – ஓ.பன்னீர்செல்வத்திற்கு நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கடிதம் எழுதிவிட்டாரே என்ற ஆதங்கமா? என்ன செய்ய முடியும் – அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம்தானே இருக்கிறார்?

சமூகநீதி பற்றிப் பேசுவதற்கு முழுத் தகுதியும் படைத்தவர் நமது முதலமைச்சர் அவர்கள். தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு கொடுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அவர் வழிவந்த எங்கள் தலைவருக்கு - முதலமைச்சருக்குச் சமூகநீதி பற்றிப் பேச அனைத்து உரிமையும் உண்டு என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் ஏனோ பழனிசாமி பொறாமையில் புழுவாகத் துடிக்கிறார்.

இவ்வளவு ஏன், எம்.ஜி.ஆர். அவர்கள் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டைப் பெற 9 ஆயிரம் ரூபாய் வருமான வரம்பை நிர்ணயித்தபோது கொதித்தெழுந்து - அந்த உத்தரவை திரும்பப் பெற வைத்த தி.மு.க.வின் சமூகநீதி வரலாறு தெரியாமல் தவிக்கிறார் EWS-க்குக் குடை பிடிக்கும் பழனிசாமி. சமூகநீதிக்கான நீண்ட நெடிய பயணத்தில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் எழுப்பும் உரிமைக்கான குரல் ஏனோ எதிர்க்கட்சித் தலைவருக்கு விளங்கவில்லை. சரி - இப்போது அகில இந்தியத் தொகுப்புக்கான இடஒதுக்கீட்டிற்கு அளிக்கப்படும் மருத்துவக் கல்வி இடங்களில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு பிரச்சினையை எடுத்துக் கொள்வோம். தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த அ.தி.மு.க. இதுகுறித்து குரல் கொடுத்தது உண்டா? ஏன் பழனிசாமி 4 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்து என்ன துரும்பை கிள்ளிப் போட்டார்? நாடகம்தானே போட்டார்!

முதன்முதலில் இதற்காக ஒன்றிய அரசிடம் வாதாடியது திராவிட முன்னேற்றக் கழகம். மக்களவை - மாநிலங்களவையில் குரல் எழுப்பியது தி.மு.க. முதன்முதலில் உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டதும் தி.மு.க. அந்த வழக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி – மீண்டும் உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டதும் தி.மு.க. ஆனால் வழக்கு விசாரணைக்கு வந்தபோது அ.தி.மு.க. கூட்டணி வைத்திருந்த ஒன்றிய பா.ஜ.க. அரசு “சலோனி குமார்” வழக்கைக் காரணம் காட்டி உயர்நீதிமன்ற விசாரணையைத் தடுத்தது. பிறகு மீண்டும் உச்சநீதிமன்றத்திற்குப் போனதும் தி.மு.க. அதன்பிறகு உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் நடைபெற்ற உயர்நீதிமன்ற விசாரணையில்தான் “மருத்துவக் கல்விக்கான அகில இந்தியத் தொகுப்புக்கான இடங்களில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டைப் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்க வேண்டும்” என உயர்நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பளித்தது. அப்போதுகூட ஆட்சியிலிருந்த அ.தி.மு.க. அரசு, 2020-2021 கல்வியாண்டிலிருந்து இந்த இடஒதுக்கீட்டைப் பெறுவதை கோட்டை விட்டு ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு உதவிக்கரம் கொடுத்து அம்பலப்பட்டு நின்றது.

27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவது குறித்த வழிமுறைகளை ஆராய - உயர்நீதிமன்றம் அமைக்க உத்தரவிட்ட கமிட்டியை ஏற்படுத்த மனமின்றி - அதற்கு ஒரு உறுப்பினரை நியமிப்பதில் கூட பழனிசாமி அரசு காலதாமதம் செய்தது. அ.தி.மு.க. அரசு இருந்தவரை இந்த இடஒதுக்கீட்டைப் பெறவும் இல்லை; ஒன்றிய அரசு தீர்ப்பைச் செயல்படுத்தவும் இல்லை. இடஒதுக்கீட்டிற்கு எதிராக அ.தி.மு.க.வும் - பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து ஓராண்டுகாலம் தீர்ப்பைச் செயல்படுத்துவதைத் தள்ளிப்போட்டு பிற்படுத்தப்பட்ட மாணவர்களை வஞ்சித்தனர்.

இந்நிலையில்தான் நமது முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் அடிப்படையில் ஒன்றிய பா.ஜ.க. அரசின்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உயர்நீதிமன்றத்திலும் - உச்சநீதிமன்றத்திலும் தொடுத்தது தி.மு.க. அதன் விளைவுதான் இப்போது உச்சநீதிமன்றம் அளித்த பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய தீர்ப்பு. மருத்துவக் கல்விக்கு அகில இந்தியத் தொகுப்பிற்கு ஒதுக்கப்படும் இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு 2021-2022 கல்வியாண்டிலிருந்து கடைப்பிடிக்கப்படும் என்ற அறிவிப்பை ஒன்றிய பா.ஜ.க. அரசு வெளியிட்டது, தி.மு.க. தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கும் – தொடர் சட்டப் போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றியே! அந்த வெற்றிக்கு முழுச் சொந்தக்காரர் எங்கள் தளபதி - எங்கள் கழகத் தலைவர் – நமது மாண்புமிகு முதலமைச்சர் என்பதை பழனிசாமி புரிந்துகொள்ள வேண்டும்.

இடஒதுக்கீட்டிற்கும் - சமூகநீதிக் கொள்கைக்கும் உள்ள முக்கியத்துவத்தை அகில இந்திய அளவில் கொண்டு செல்லவும் - அனைத்து மாநிலங்களிலும் சமூகநீதி உணர்வினை ஏற்படுத்திடவும், நமது மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எடுத்திருக்கும் சீரிய முயற்சி இது!

இதில் தனக்குக் கடிதம் எழுதாமல் – ஓ. பன்னீர்செல்வத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் கடிதம் எழுதிவிட்டாரே என்ற பொறாமையில் இப்படி ஓர் அறிக்கையை வெளியிட்டு தன் முதுகை தானே சொறிந்துக் கொண்டுள்ளார்.

ஆனால், பெருந்தன்மைக்குப் பெயர் பெற்ற நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களோ, அ.தி.மு.க.வும் இதில் பங்கேற்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடனே அழைப்பு விடுத்திருக்கிறார். ஆகவே பேரறிஞர் அண்ணாவின் பெயரையும் - திராவிடத்தையும் தங்கள் கட்சியின் பெயரில் வைத்துள்ள அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அவர்கள், சமூகநீதிப் பேரியக்கமான திராவிட இயக்கத்தின் அடிநாதக் கொள்கைக்கே எதிராகச் செய்யும் இதுபோன்ற அவதூறான பரப்புரைகளைக் கைவிட்டு - தமிழ்நாட்டு மண்ணின் சமூகநீதி உணர்வினைக் கொஞ்சமாவது பெற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

banner

Related Stories

Related Stories