தமிழ்நாடு

4வது முறையாக கோப்பை வென்றது ‘பெர்த் ஸ்கார்சர்ஸ்’ - வழியும் ரத்தத்தோடு வெற்றியை கொண்டாடிய ரிச்சர்ட்ஸன்!

பிக் பேஷ் 2022 தொடரின் இறுதிப் போட்டியில் சிட்னியை வீழ்த்தி 79 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்று நான்காவது முறையாக கோப்பையை வென்றது பெர்த் ஸ்கார்சர்ஸ்.

4வது முறையாக கோப்பை வென்றது ‘பெர்த் ஸ்கார்சர்ஸ்’ - வழியும் ரத்தத்தோடு வெற்றியை கொண்டாடிய ரிச்சர்ட்ஸன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பிக் பேஷ் 2022 தொடரின் இறுதிப் போட்டியில் சிட்னியை வீழ்த்தி நான்காவது முறையாக கோப்பையை வென்றது பெர்த் ஸ்கார்சர்ஸ். கோப்பை வென்றுவிட்டு கொண்டாடிக்கொண்டிருந்த பெர்த் வீரர் ஜை ரிச்சர்ட்சனின் மூக்கு உடைந்து ரத்தம் வழிந்தது. ரத்தத்தோடு அவர் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

ஆஸ்திரேலியாவின் டி-20 தொடரான பிக் பேஷ் நேற்று நடந்து முடிந்தது. மெல்போர்ன் மார்வெல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் மோதின. இந்த இரு அணிகள் தான் பிக் பேஷ் தொடரின் வெற்றிகரமான அணிகள். இரண்டு அணிகளும் இக்கோப்பையை தலா 3 முறை வென்றிருக்கின்றன. பலமுறை இறுதிப் போட்டியில் இந்த அணிகள்தான் மோதியிருக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால், பிக் பேஷ் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் இவைதான். அதனால், இந்த அணிகள் மோதிய ஃபைனலுக்கு வழக்கத்தை விட அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

டாஸ் வென்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்கம் அந்த அணிக்கு சுமாராகவே அமைந்தது. 6 ஓவர்களில் 25 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது பெர்த் ஸ்கார்சர்ஸ். ஆனால், கேப்டன் ஆஷ்டன் டர்னர் - லாரி எவான்ஸ் ஜோடி ஆட்டத்தின் போக்கை மாற்றியது. இருவரும் விக்கெட் இழப்பைத் தடுத்ததோடு சிறப்பாக ஆடி ரன் ரேட்டையும் அதிகப்படுத்தினர். ஆஷ்டன் டர்னர் 35 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். லாரி எவான்ஸ், 41 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். 5 விக்கெட்டுக்கு இந்தக் கூட்டணி 59 பந்துகளில் 104 ரன்கள் குவித்தது. இறுதியில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது பெர்த் ஸ்கார்சர்ஸ்.

சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு தொடக்கம் ஓரளவு சுமாராகவே இருந்தது. 7 ஓவர்களில், 3 விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் எடுத்தது அந்த அணி. ஆனால், பெர்த் மிடில் ஆர்டர் போல் சிட்னியின் மிடில் ஆர்டர் நிலைத்து நின்று ஆடவில்லை. மோய்சஸ் ஹென்ரிக்ஸ், டேனியல் கிறிஸ்டியன் போன்ற சீனியர் வீரர்களும் வந்த வேகத்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். பெர்த் பௌலர்கள் பட்டையைக் கிளப்ப விக்கெட்டுகள் வீழ்ந்துகொண்டே இருந்தன. இறுதியில் வெறும் 92 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது சிட்னி சிக்ஸர்ஸ். இதன்மூலம் 79 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்று நான்காவது முறையாக கோப்பையை வென்றது பெர்த் ஸ்கார்சர்ஸ்.

கடைசி விக்கெட் விழுந்ததும் பெர்த் வீரர்கள் வெற்றியைக் கொண்டாடத் தொடங்கினார்கள். கொஞ்சம் அதீத கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு வீரரின் தோள்பட்டையில் பட்டு ஜை ரிச்சர்ட்ஸனின் மூக்கு உடைந்தது. அதனால், உடனடியாக ரத்தம் வழியத் தொடங்கியது. வழிந்த ரத்தத்தோடு சிரித்துக்கொண்டே அவர் வெற்றியைக் கொண்டாட, அந்தப் புகைப்படங்களும், வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது.

banner

Related Stories

Related Stories