தமிழ்நாடு

”OBC இடஒதுக்கீடு தீர்ப்பு: தி.மு.கவும், தமிழ்நாடு அரசும் போராடி வெற்றி கண்டுள்ளது” - தி இந்து புகழாரம்!

பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினரை அடையாளம் காண பயன்படுத்தப்படும் அளவு கோல்களின் அரசியலமைப்பு இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

”OBC இடஒதுக்கீடு தீர்ப்பு: தி.மு.கவும், தமிழ்நாடு அரசும் போராடி வெற்றி கண்டுள்ளது” - தி இந்து புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு பெறுவதில் தமிழ்நாடு அரசும் தி.மு.கழகமும் தத்தம் பங்கினை ஆற்றியுள்ளது என்ற தலைப்பிலும், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் மூலம் தி.மு.கழகம், கீழமை நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிடுவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்திருந்தது என்கிற துணைத் தலைப்பிலும் ‘தி இந்து’ ஆங்கில நாளேடு நேற்று (24.1.2022) செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வில் அகில இந்திய அளவில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, நீண்ட நாட்களாக சட்ட ரீதியாக போராடியதற்குப் பின், அதன் உச்சகட்டமாக கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவு பிறப்பித்தது. இதற்கு தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான தி.மு.க.வும் தமிழக அரசும் பெருமளவில் போராடி உந்து சக்தியாக பங்காற்றியுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் ‘ரிட்’ மனு!

தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் மூலம் தி.மு.கதான் உச்ச நீதிமன்றத்தில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்தது. கீழமை நீதிமன்றத்துக்கு உத்தரவிடக் கூறி அந்த ரிட் மனுவை தி.மு.க. தாக்கல் செய்திருந்தது. ஆனால் இந்த வழக்கினை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் தி.மு.க. கேட்டுக்கொள்ளப்பட்டது. 1993 ஆம் ஆண்டில் இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றி, தமிழகத்தில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. வாதிட்டது.

ஆனால் அப்போது உயர் நீதிமன்றம் இதை ஏற்கவில்லை. இதே பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று விசாரணையில் உள்ளதால், அதன் முடிவிற்காகக் காத்திருப்பதாக உயர் நீதிமன்றம் தெரிவித்தது. 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இது தொடர்பான ‘ரிட்’ மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அதற்கு உச்ச நீதிமன்றம் தெரிவித்த காரணம், உயர் நீதிமன்றத்தில் எழுப்பப்பட்ட பிரச்சினைக்கும், தங்களிடம் நிலுவையில் உள்ள வழக்கிற்கும் எந்தவிதமான தொடர்புமுமில்லை என்பதுதான்.

‘இடஒதுக்கீடு வழங்க தடையேதும் இல்லை’!

இறுதியாக 2020ம் ஆண்டு ஜூலை மாதம், தமிழகத்தில் மருத்துவக் கல்லூரியில்அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர்க்கான இட ஒதுக்கீடு சட்டரீதியாகவோ அரசியல் சட்டப்படியோ வழங்க தடையேதும் கிடையாது என்று உயர்நீதி மன்றம் தெரிவித்தது. அத்துடன், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தமிழக அரசு அளிக்கும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு வழங்குவதற்காக நிபுணர் குழு அமைத்து அதன் பரிந்துரைபடி செயல்பட ஒன்றிய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே சமயம், 2021-22ம் கல்வி ஆண்டு முதற்கொண்டுதான் இந்த இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும்; ஏன் என்றால் 2020-21 ஆம் கல்வியாண்டிற்கான சேர்க்கை நடைமுறைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டிருக்கும் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

”OBC இடஒதுக்கீடு தீர்ப்பு: தி.மு.கவும், தமிழ்நாடு அரசும் போராடி வெற்றி கண்டுள்ளது” - தி இந்து புகழாரம்!

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர, உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றத்தின் முடிவை நிறுத்தி வைத்தது. இதற்கிடையே இதுகுறித்து முடிவெடுக்க நிபுணர் குழு ஒன்றினை ஒன்றிய அரசு நியமித்தது. அந்தக் குழுவும் 2021-22ஆம் ஆண்டுக்கான இடஒதுக்கீட்டு முறையை நிர்ணயிக்கவே அமைக்கப்பட்டது. ஆனால், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாத ஒன்றிய அரசுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றை தமிழக அரசு தொடர்ந்தது. அதில், அகில இந்திய பிரிவில், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு முறையை ஒன்றிய அரசு பின்பற்றவில்லை என்று குறிப்பிட்டிருந்தது.

இதற்கிடையே ஒன்றிய அரசு 2021ஆம் ஆண்டு ஜூலை 29ல் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், நடப்பு கல்வி ஆண்டான 2021-22ல் அகில இந்தியப் பிரிவில் இளநிலை (யூஜி) படிப்பிற்கான 15 சதவிகித ஒதுக்கீட்டிலும் முதுநிலை (பிஜி) படிப்பிற்கான 50 சதவிகித இட ஒதுக்கீட்டிலும், கிரிமிலேயர் அல்லாத இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகிதமும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகிதமும் ஒதுக்கி நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்றம் இந்த மாதத் துவக்கத்தில், அகில இந்திய ஒதுக்கீட்டில், மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பிற்கான இளநிலை (யூஜி) முதுநிலை (பிஜி) மற்றும் பிரிவு பி10 முதுகலை இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான அரசியல் அமைப்புச் சட்டத்தை உறுதி செய்தது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினரை அடையாளம் காண பயன்படுத்தப்படும் அளவு கோல்களின் அரசியலமைப்பு இன்னும் முடிவு செய்யப்படவில்லை. உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரஹுட் தலைமையிலான அமர்வு முன் கடந்த வாரம் தி.மு.க. சார்பில் ஆஜராகி வாதிட்ட மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், சமூக சமத்துவத்துக்கான போராட்டத்தில் இந்தத் தீர்ப்பு நீண்ட நாட்கள் துணையாக நிற்கும் என்றார்.

இவ்வாறு ‘தி இந்து’ நாளேடு அந்தக் கட்டுரையில் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories