
டெல்லியில் ஆண்டுதோறும் குடியரசு தின விழாவையொட்டி ஜனவரி 26-ஆம் தேதி அணிவகுப்பு நடைபெறும். இந்த நிகழ்வில் நாட்டிலுள்ள ஒவ்வொரு மாநிலங்களும், அந்தந்த மாநிலங்களின் பண்பாடு, கலாசாரத்தை பறைசாற்றும் விதமாக அலங்கார ஊர்திகளை வடிவமைத்து அணிவகுப்பில் பங்கேற்பது வழக்கம்.
அதன்படி, இந்தாண்டு டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்துகொள்ள தமிழ்நாடு அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட அலங்கார ஊர்தியில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, வீரமங்கை வேலுநாச்சியார், மகாகவி பாரதியார் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் உருவப்படங்கள் அடங்கியிருந்தன.
இந்நிலையில், தமிழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட ஊர்திகள் ஒன்றிய அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும் தமிழ்நாட்டு ஊர்திகளை இடம்பெறச் செய்ய வேண்டும் எனக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
இதையடுத்து ஒன்றிய அரசால் நிராகரிக்கப்பட்ட தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இடம்பெறும் என்றும், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் அந்த அலங்கார ஊர்தி மக்களின் பார்வைக்காக அனுப்பப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சாவாக்கர் வழி வந்தவர்களுக்குக் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரைப் பற்றி என்ன தெரியும் என காட்டமாக மூத்த பத்திரிகையாளர் மணி விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து மூத்த பத்திரிக்கையாளர் மணி, "ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தவர்களும், சமீபகாலம் வரை தங்களது அலுவலகத்தில் சுதந்திரக் கொடியே ஏற்றாதவர்கள்தான் இன்று நமக்கு தேசபக்தி பற்றிச் சொல்லிக் கொடுக்கிறார்கள்.
மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்த சாவாக்கர் வழி வந்தவர்களுக்கு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியைப் பற்றி என்ன தெரியும். இப்படி இவர்கள் பேசும்போது தமிழ்நாட்டு முதல்வர் கேட்கத்தான் செய்வார். உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ. அவர்தான்டா எங்களுக்கு முதலமைச்சர்" எனத் தெரிவித்துள்ளார்.








