தமிழ்நாடு

ஆளுநர் உரை அரசின் கொள்கை மற்றும் செயல்திட்ட அறிக்கையாக அமைந்துள்ளது.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை!

ஆளுநர் அவர்களுக்கு அரசின் சார்பிலும், தனிப்பட்ட முறையிலே என்னுடைய சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆளுநர் உரை அரசின் கொள்கை மற்றும் செயல்திட்ட அறிக்கையாக அமைந்துள்ளது.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆளுநர் பேருரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அளித்த பதிலுரை : (Part – 1)

முதலமைச்சர்: பேரவைத் தலைவர் அவர்களே, 2021 ஆம் ஆண்டுக்கு விடைகொடுத்து, 2022 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கின்றோம். அனைவருக்கும் என்னுடைய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை முதலில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்காலத் தமிழகம் எல்லா வகையிலும் உயர்வையும், மேம்பாட்டையும் அடைய நாம் அனைவரும் சேர்ந்து உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. வீட்டுக்கு விளக்காக, நாட்டுக்குத் தொண்டனாக இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி அமைந்து நிகழ்த்தப்பட்ட முதல் ஆளுநர் உரையிலே, அனைத்து மாநிலங்களும் தலைநிமிர்ந்து நோக்கும் மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டுவோம் என்று குறிப்பிட்டிருந்தோம். அந்த இலக்கை நோக்கிய பயணத்துக்கு உற்சாகமும், உத்வேகமும் தரக்கூடிய வகையில் இந்தப் புத்தாண்டு, 2022 ஆம் ஆண்டு அமையும் என்ற அந்த நம்பிக்கை எனக்கு ஏற்பட்டிருக்கிறது.

பேரவைத் தலைவர் அவர்களே, 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்திலே நடைபெறுகிற முதல் கூட்டத்தொடர் என்கிற காரணத்தால், கடந்த 5 ஆம் தேதியன்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இந்த மாபெரும் சபைக்கு வருகை தந்து வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் உரையினை ஆற்றினார்கள். பொதுவாக ஆளுநர் உரை, அரசின் கொள்கை அறிக்கை; அதாவது, Statement of Policy என்றுதான் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இலக்கணத்தையே, கடந்த காலத்தில் அ.தி.மு.க. ஆட்சியின்போது ஆளுநர் உரைமீது நான் கருத்துரை எடுத்துக் சொன்ன நேரத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறேன். அதுகுறித்து இந்த மன்றத்தினுடைய பழைய ஏடுகளை எடுத்துப் பார்த்தால் அனைவரும் புரிந்துகொள்ள முடியும்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் 6-5-1957 அன்று, ஆளுநர் உரை மீதான விவாதத்திலே கலந்துகொண்டு பேசுகிறபோது ஒன்றைக் குறிப்பிட்டுச் சொன்னார். ‘பொதுவாக, ஆட்சியாளர்களுடைய கொள்கைத் திட்டங்களை விளக்குவதே கவர்னருடைய பேருரை என்பதும், அக்கொள்கைத் திட்டங்களுக்கு ஏற்ப நிதியைப் பகிர்ந்தளிப்பதாகிய புள்ளி விவரங்களைக் கொண்டதே, வரவு செலவுத் திட்டம் என்பதுதான் நான் அறிந்துள்ள வரையில் உணர்ந்திருக்கிறேன்” என்று இவ்வாறு ஒரு சில வரிகளிலேயே, மிகவும் சுருக்கமாக, ஆளுநர் உரை எவ்வாறு அமைந்திருக்க வேண்டும்; வரவு செலவுத் திட்டம் எப்படி வரையப்பட வேண்டும்; என்று அவருக்கே உரிய சான்றாண்மையை அவர் வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறார்.

பேரறிஞர் அண்ணா அவர்களுடைய கூற்றுப்படி, ஆளுநர் உரை, மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்பட்டு அமைந்துள்ளது என்பதில் நான் உள்ளபடியே, மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஆளுநர் உரையைப் படித்து ஆராயும் நடுநிலையாளர்கள், இந்த உரை, கொள்கை மற்றும் செயல்திட்ட அறிக்கையாக, அதாவது Statement of Policy and Programme என அமைந்துள்ளதை நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள் என்று நான் மனதார நம்புகின்றேன். ஆளுநர் அவர்களுக்கு இந்த அரசின் சார்பிலும், தனிப்பட்ட முறையிலே என்னுடைய சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆளுநர் அவர்கள், தான் ஆற்றிய உரையில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வரக்கூடிய விதத்தைப் பற்றி தன்னுடைய உரையிலே சொல்லியிருக்கிறார். அதேபோன்று, அறிவித்துள்ள திட்டங்கள் குறித்தும், செயல்படுத்தவிருக்கும் கொள்கைகள் குறித்தும் ஒவ்வொன்றாக விளக்கிப் பாராட்டிப் பேசியிருக்கிறார். அதற்காக மீண்டும் ஆளுநர் அவர்களுக்கு என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவையெல்லாம் எனக்குக் கிடைத்த தனிப்பட்ட பாராட்டுகள் அல்ல. இந்த அமைச்சரவைக்கே கிடைத்திருக்கக்கூடிய பாராட்டுகள். இந்த அரசினுடைய அங்கமாக இருக்கக்கூடிய அதிகாரிகள், அலுவலர்களுக்குக் கிடைத்திருக்கக்கூடிய பாராட்டுக்கள். எங்களை ஆட்சிப் பொறுப்பிலே அமர்த்தியய மக்களுக்குக் கிடைத்திருக்கக்கூடிய பாராட்டுகள். எங்களை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்த உழைத்திருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தொண்டர்களுக்குக் கிடைத்திருக்கக்கூடிய பாராட்டுகள். அத்தகைய உணர்வோடுதான் இந்த மாமன்றத்தில் நான் கம்பீரமாக நின்றுகொண்டு இருக்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகம், எதிர்க்கட்சியாகவும் இருந்திருக்கின்றது; ஆளும் கட்சியாகவும் இருந்து மேண்மை கொண்டிருக்கிறது. 4-5-1957 அன்று ஆளுநர் உரைமீது பேசிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், "மேண்மை தாங்கிய கவர்னர் அவர்களுடைய உரையைப் பற்றி நான் போற்றவும் வரவில்லை; தூற்றவும் வரவில்லை; என்னுடைய கருத்துரையை ஆற்றவே வந்திருக்கிறேன்" என்று குறிப்பிட்டுச் சொன்னார். அத்தகைய நடுநிலை தவறாத மாண்பையும், பக்குவத்தையும் பெற்றிருப்பவர்கள் நாங்கள். முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் மேலும் என்ன சொல்லியிருக்கிறார் என்று சொன்னால், "ஆளுகின்றவர்கள் யாரைத் துணைக் கொள்ளல் வேண்டும் என்பதைப்பற்றி, வள்ளுவர் பெருமான் தன்னுடைய திருக்குறளில், "பெரியாரைத் துணைக்கோடல்" என்ற அதிகாரத்தில், ஆளுகின்றவர்கள் பெரியாரை தங்களுடைய துணைவராகக் கொள்ள வேண்டுமென்று கூறியிருக்கிறார். எந்தப் பெரியாரைத் துணைகொள்ள வேண்டும் என்று கூறினார் என்று சொன்னால், எதையும் 'சரி - சரி' என்று சொல்லி, அதைக் கண்டிக்காமல் இருக்கின்ற பெரியாரை அல்ல. சபையிலே ஆளுகின்ற தம்மை இடித்துச் சொல்லுகின்ற பெரியாரைத் துணைவராகக் கொள்ளாத மன்னன், பகைவர்கள் இல்லையாயினும், தன்னைத்தானே கெடுத்துக் கொள்வான்; கெட்டு விடுவான் என்று சொல்லியிருக்கிறார்." என்று முத்தமிழறிஞர் கலைஞர் இந்த அவையிலே பேசியிருக்கிறார்.

பேரவைத் தலைவர் அவர்களே, இந்த அரசு, தந்தை பெரியாரின் அரசாக, பேரறிஞர் அண்ணாவினுடைய அரசாக, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞருடைய அரசாக நடைபோடுகிறது என்று நான் ஏற்கெனவே அறிவித்திருக்கிறேன். அந்த அறிவிப்பில் துளி மாற்றம் எப்போதும் இல்லை; இருக்காது என்பதைத் திட்டவட்டமாக நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கின்ற தீர்மானத்தின் மீது ஏராளமான உறுப்பினர்கள் பேசி, அனைவருக்கும் கால அவகாசம் கொடுத்து, பிறகு நான் அவை எல்லாவற்றுக்கும் விரிவான பதிலுரை தருவதற்குக் காலம், நேரம் இல்லாத அளவுக்கு கொரோனா, ஒமைக்ரான் தொற்று மீண்டும் மிரட்டத் தொடங்கியிருக்கிறது. அதனால்தான் அலுவல் ஆய்வுக் குழுவினுடைய முடிவுக்கு ஏற்ப, விரைந்து இந்த அவையை முடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இருந்தாலும், இரண்டு நாட்கள் இந்த அவையில் நடைபெற்றிருக்கக்கூடிய விவாதத்திலே 15 உறுப்பினர்கள் பேசி ஆக்கபூர்வமான கருத்துகளை அரசுக்குச் சொல்லியிருக்கிறீர்கள். அதற்காக முதலில் உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

banner

Related Stories

Related Stories