தமிழ்நாடு

அதிமுக ஆட்சியில் 3 லட்சம் டன் நிலக்கரி காணாமல் போயுள்ளது : அமைச்சர் செந்தில்பாலாஜி பரபரப்பு குற்றச்சாட்டு

கோடை காலத்தில் மின் பற்றாக்குறை இல்லாத அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துறை எடுத்து வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அதிமுக ஆட்சியில் 3 லட்சம் டன் நிலக்கரி காணாமல் போயுள்ளது : அமைச்சர் செந்தில்பாலாஜி பரபரப்பு குற்றச்சாட்டு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் துறை சார்ந்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறுகையில், கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் தொடர்பான நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது என்றும், 4 மாத காலத்தில் 7ஆயிரத்திற்கும் அதிகமான மின் மாற்றிகள் மாற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள 1,072 மின் மாற்றிகள் விரைவில் மாற்றப்படும் என்றார்.

மார்ச் மாதத்திற்குள் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் பணி நிறைவேற்றப்படும் என்று கூறிய அவர், அறிவிக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் விரைவாக நடத்தி முடிக்க பணிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார்.

5,300 கடைகள் உள்ள நிலையில், 3 ஆயிரம் கடைகளுக்கு மட்டுமே டெண்டர் போடப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், 11,715 விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், கட்சி பாகுபாடின்றி வெளிப்படை தன்மையுடனேயே டெண்டர் நடைபெற்றதாக தெரிவித்தார்.

மேலும் 2019ம் ஆண்டு 66 விதிமுறைகள் இருந்தது அவையே தான் தற்போதும் கேட்கப்பட்டு உள்ளதாகவும், கொரோனா காலம் என்பதால் கூடுதலாக 2 விதிமுறை சேர்த்து உள்ளதாகவும் கூறிய அவர், பார் உரிமையாளர்களை அழைத்து பேசி உள்ளதாகவும், அவர்கள் கோரிக்கைகளை எழுத்து மூலமாக அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளதாக தெரிவித்தார்.

முழு ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு தான் விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என்றும், கடந்த ஆட்சியில் முறைகேடாக டெண்டர் விடப்பட்டது போன்று, தற்போதும் பின்பற்ற வேண்டும் என்று நினைப்பதாக கூறினார்.

யாருடைய டெண்டரும் வாங்க மறுக்கவோ, டெண்டர் பிரிக்காமலோ இல்லை என்றும், கடந்த ஆட்சியில் ஒரு சிலருக்கு உரிய வழிமுறைகள் இல்லாமல், கடைகள் நடத்த அனுமதி அளித்ததால், துறைக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என்று குற்றஞ்சாட்டினார். அதுமட்டுமின்றி, நிலத்தின் உரிமையாளர் என்கிற சான்றை மட்டும் வைத்துக் கொண்டு, எனக்கு தான் இந்த டெண்டரை ஒதுக்க வேண்டும் என இன்று போராட்டம் நடத்தியவர்கள் கேட்பதாக குறிப்பிட்டார்.

கோடை காலத்தில் மின் பற்றாக்குறை இல்லாத அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துறை எடுத்து வருவதாக கூறிய அமைச்சர், மழைக்கு பின் விரைவாக மின்சாரம் வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், கோடை காலத்திற்கு தேவையான மின் உற்பத்தி நம்மிடம் உள்ளது என்றார்.

புதிய நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மின் விநியோகம் செய்யும் நடவடிக்கைகளை துறை மேற்கொள்ளும் என்றும், இதுவரை 90% சதவீதம் அளவிற்கு மின்னகத்திற்கு வந்த புகார்கள் தீர்க்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கடந்த ஆட்சியில் 2 லட்சத்து 66 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தில் மீட்டர் பொருத்தும் பணி நடைபெற்று உள்ளது என்றும், இதனை மறந்தோ, மறைத்தோ எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை விட்டுள்ளார் என்றார்.

இந்நிலையில் மின் கட்டணங்களை பொறுத்தவரை எந்தவித ஜி.எஸ்.டி வசூலிக்கப்படவில்லை என்றும், கடந்த ஆட்சியில் பின்பற்றப்பட்ட விதிமுறைகளே பின்பற்றப்பட்டு வருவதாகவும், புதிய உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்று கூறினார்.

கடந்த ஆட்சியில் 3 லட்சம் டன் நிலக்கரி காணமல் போய் உள்ளதாக, அமைக்கப்பட்ட குழுவின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறிய அமைச்சர், மேலும் ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories