தமிழ்நாடு

"சமயோசிதமாக செயல்பட்டு மக்களின் உயிரைக் காத்த தி.மு.க நிர்வாகி” : நேரில் அழைத்து முதலமைச்சர் பாராட்டு!

திருவொற்றியூர் குடியிருப்புவாசிகளை எச்சரித்து, தக்க நேரத்தில் வெளியேற்றி உயிரிழப்பு ஏற்படாமல் தடுத்த தி.மு.க நிர்வாகி தனியரசுவை, வாழ்த்திப் பாராட்டியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

"சமயோசிதமாக செயல்பட்டு மக்களின் உயிரைக் காத்த தி.மு.க நிர்வாகி” : நேரில் அழைத்து முதலமைச்சர் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

திருவொற்றியூர் குடியிருப்புவாசிகளை எச்சரித்து, தக்க நேரத்தில் வெளியேற்றி உயிரிழப்பு ஏற்படாமல் தடுத்த தி.மு.க பகுதி செயலாளர் தனியரசுவை, தலைமைச் செயலகத்திற்கு வரவழைத்து வாழ்த்திப் பாராட்டியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னை திருவொற்றியூர் அருகே உள்ள அரிவாக்குளம் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 1993-ஆம் ஆண்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு 1998-ம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டது.

இந்தக் குடியிருப்பில் 24 வீடுகள் கொண்ட 14 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு சுமார் 36 குடும்பங்கள் வசித்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் B பிளாக்கில் உள்ள கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பிரச்னை எதுவும் பெரிதாக இல்லாததால் மக்கள் உறங்கச் சென்றுள்ளனர்.

நேற்று காலையில் அப்பகுதி அருகே வசிக்கும் தி.மு.க பகுதி செயலாளர் தனியரசுவை அழைத்து வந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து கூறியுள்ளனர். தனியரசு அந்தப் பகுதியை சுற்றிலும் பார்வையிட்டுள்ளார். அப்போது லேசான சத்தத்துடன் விரிசல் அதிகரிப்பதை கவனித்த அவர் கட்டடத்திற்குள் யாரும் இருக்க வேண்டாம் என அறிவுறுத்தி எல்லோரையும் துரிதமாக அப்புறப்படுத்தியுள்ளார்.

வீடு இடியப்போகிறது எனக் கூறினால் மக்கள் பதற்றமடைந்து உள்ளே இருக்கும் பொருட்களை எடுக்க ஆர்வம் காட்டுவார்கள் என்பதால் முதலில் எல்லோரும் கீழே வாருங்கள் என்று கூறியுள்ளார். இதனையடுத்து அங்கிருந்த மக்கள் அனைவரும் கீழே வந்துள்ளனர்.

இதனையடுத்து வேறு யாரும் உள்ளே இருக்கிறார்களா என்று அவரே மூன்றாவது மாடி வரை சென்று பார்த்துவிட்டு கீழே இறங்கியுள்ளார். அனைவரும் வீட்டில் இருந்து வெளியேறிய சில நிமிடங்களில் வீடு இடிந்து விழுந்து தரைமட்டமானது.

"சமயோசிதமாக செயல்பட்டு மக்களின் உயிரைக் காத்த தி.மு.க நிர்வாகி” : நேரில் அழைத்து முதலமைச்சர் பாராட்டு!

தி.மு.க நிர்வாகி தனியரசுவின் அறிவுறுத்தலின்பேரில் மக்கள் அனைவரும் அந்தக் குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்டதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. தக்க நேரத்தில் தங்களைக் காப்பாற்றிய தனியரசுவை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து செய்தியறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவொற்றியூர் குடியிருப்புவாசிகளை எச்சரித்து, தக்க நேரத்தில் வெளியேற்றி உயிரிழப்பு ஏற்படாமல் தடுத்த தி.மு.க பகுதி செயலாளர் தனியரசுவை, தலைமைச் செயலகத்திற்கு வரவழைத்து வாழ்த்திப் பாராட்டியுள்ளார்.

இந்நிகழ்வின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் மாதவரம் சுதர்சனம் மற்றும் கே.பி.பி.சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

banner

Related Stories

Related Stories