தமிழ்நாடு

“வேண்டாத வாக்காளர்களை நீக்குவதை தேர்தல் சீர்திருத்தம் என்று சொல்வதா?” : மோடி அரசுக்கு ‘முரசொலி’ கேள்வி!

வேண்டாத வாக்காளர்களை நீக்குவதற்காக மட்டும்' என்று இணைப்பைச் செய்து விட்டு அதை தேர்தல் சீர்திருத்தம் என்று சொல்வது நியாயமா?

“வேண்டாத வாக்காளர்களை நீக்குவதை தேர்தல் சீர்திருத்தம் என்று சொல்வதா?” : மோடி அரசுக்கு ‘முரசொலி’ கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தேர்தல் சட்டத் திருத்த மசோதாவை எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றிவிட்டது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இந்த சட்டத்தை தேர்தல் சீர்திருத்தம் என்று சொல்வதுதான் அபத்தம்!

வாக்காளர் பட்டியலுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்காக தேர்தல் சட்ட மசோதாவைக் கொண்டு வருவதாகச் சொல்லப்பட்டாலும் இதற்குள் மறைமுகமாக பல்வேறு உள்ளடக்கங்கள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்புகிறார்கள். அதற்கு பதில் சொல்லவே பா.ஜ.க. தரப்பு தயாராக இல்லை. இப்படி எல்லாவற்றையும் விளக்கம் அளிக்காமல் பெரும்பான்மை என்று சொல்லி நிறைவேற்றிக் கொள்வது அவர்களது பாணி.

தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதாவில் நான்கு முக்கியமான திருத்தங்கள் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை, நீக்கம் என்பதற்கு பதிலாக ஆண்டுக்கு நான்கு முறை அந்த நடைமுறைகளைச் செய்யலாம்.

‘மனைவி' (wife) என்பதை ‘இணையர்' (spouse) என்று மாற்றுகிறது.

ஆதார் விபரங்களை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க வேண்டும்.

வாக்குப்பதிவு நடக்கும் இடம், வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாக்கும் இடம் ஆகியவற்றை குறிப்பிட்டு அறிவிப்பு செய்வதற்கான அதிகாரத்தை அளிக்கிறது.

இதில் மிக முக்கியமானது ஆதார் விபரங்களை அடையாள அட்டையுடன் இணைப்பது ஆகும். இதனைத் தான் எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கிறார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் ஆதார் அட்டையை அடையாள அட்டையுடன் இணைப்பது நல்லது தானே என்று தோன்றும்.

கள்ள ஓட்டு போடுவது தடுக்கப்படுமே என்று நினைக்கத் தோன்றும். ஆனால் ஆதார் அட்டை என்பது ‘யாரை வாக்காளராக எதிர்காலத்தில் வைக்கலாம், யாரை நீக்கலாம்' என்பதை வரையறுப்பதற்கான மறைமுக தடங்கலாக எதிர்க்கட்சிகளால் பார்க்கப்படுகிறது.

பா.ஜ.க.வுக்கு சிறுபான்மையினர் வாக்களிக்க மாட்டார்கள் என்பதால் அவர்களை மட்டும் நீக்கிவிட்டு, மற்றவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்வார்கள் என்று சந்தேகம் கிளப்பப்படுகிறது.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரையும் இணைக்கும் திட்டம் 2014ஆம் ஆண்டே ஆந்திர மாநிலம் நிஜாமாபாத், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் ஆகிய மாவட்டங்களில் மாதிரி திட்டமாகத் தொடங்கப்பட்டது.

இப்படி ஒரு சட்டத்தை 2015 ஆம் ஆண்டே கொண்டு வந்தார்கள். ஆதார் எண்ணை, வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க முயற்சித்தார்கள். ஆனால் அதனை உச்சநீதிமன்ற அமர்வு நிராகரித்து விட்டது. 2015 ஆகஸ்ட் 11ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் இத்தகைய தடை ஏற்படுத்தப்பட்டது.

இது தொடர்பாக விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் மிக முக்கியமான தகவல் ஒன்றை பதிவு செய்துள்ளார். “2015ஆம் ஆண்டு ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைத்து விட்டனர். அதனால் அங்கு சுமார் 55 லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமை பறிபோனது. தொழில் நுட்பக் காரணங்களால் இணைப்பின் போது வாக்காளர்களின் பெயர்கள் டெலிட் ஆனதாக சொல்லப்பட்டாலும் இது திட்டமிட்டே நடத்தப்படுகிறது” என்கிறார் ரவிகுமார்.

ஆதார் அட்டைகள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வந்த போது ஒன்பது நீதிபதிகள் அடங்கிய நீதிபதிகள் அமர்வு சொன்னது இதுதான்: “ஆதார் விபரங்களை சமூக நலத் திட்டங்கள் தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது. ஆதார் என்பது ஒரு தனி மனிதனின் அந்தரங்க உரிமை. அதை வெளியில் பகிரக்கூடாது” என்றார்கள்.

வாக்காளர் அடையாள அட்டை என்பது 18 வயது வந்தவர் அனைவர்க்கும் வாக்குரிமை தரப்படுவதன் அடையாளம் ஆகும். அதில் முகவரி தவிர வேறு எதுவும் இருக்காது. அது தேர்தலுக்கு தேவையும் இல்லை. ஆனால் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலமாக ஒரு வாக்காளரின் அனைத்து அடையாளங்களும் அதில் இணைக்கப்படுகிறது.

அவரது மத, இன அடையாளங்கள் கிடைத்து விடும். இதன் மூலமாக அவரின் வாக்குரிமை பறிக்கப்படும். இதை வைத்து குறிப்பிட்ட பிரிவினருக்கு சாதகமாக நடக்கவோ, அல்லது குறிப்பிட்ட பிரிவினரை எதிர்த்து குறிவைக்கவோ முடியும். ஒருவரின் மதம், இனம், சாதி அடையாளம் கிடைப்பது என்பது அவரை பட்டியலில் இருந்து நீக்குவதற்குப் பயன்படும்.

ஆதார் எண்ணை வாங்கி வைத்துக் கொண்டு பெரும் வணிக நிறுவனங்கள் பொதுமக்களை தொல்லைகளுக்கு உள்ளாக்கி வருகின்றன. அதே போன்ற சூழல் இங்கும் ஏற்படும். புதுச்சேரியில் வாக்காளர்களது எண்ணை மொத்தமாக வாங்கி பா.ஜ.க. சார்பில் வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்பட்டதையும் நாம் பார்த்தோம்.

மத்திய பா.ஜ.க. அரசு எடுத்துவர நினைக்கும் குடியுரிமைச் சட்டத்தின் இன்னொரு மாற்று வடிவம் தான் ஆதாரும், அடையாள அட்டையும் இணைப்பு என்பதாகும். தேர்தல் முறையில் உண்மையில் செய்ய வேண்டிய சீர்திருத்தம் குறித்து வி.எம்.தார் குண்டே கமிட்டி( 1974), தினேஷ் கோஸ்வாமி கமிட்டி (1990), இந்திரஜித் குப்தா( 1998) ஆகிய ஆணையங்கள் ஏராளமான முன்னீடுகளை வழங்கி உள்ளன. அதில் எதையும் செய்ய முன்வராமல் ‘வேண்டாத வாக்காளர்களை நீக்குவதற்காக மட்டும்' என்று இணைப்பைச் செய்து விட்டு அதை தேர்தல் சீர்திருத்தம் என்று சொல்வது நியாயமா?

இந்த மசோதா தனிமனிதர்களின் அந்தரங்க உரிமையைப் பாதிக்கும் வகையில் இருக்கிறது. இது தனிநபர் சுதந்திரத்துக்கு எதிராக அமைந்துள்ளது. இதனை அமல்படுத்துவதன் மூலமாக குறிப்பிட்ட பகுதியினரின் வாக்குரிமை பறிக்க வழியேற்படும். இந்திய அரசியல் சட்டம் ஒவ்வொரு மனிதருக்கும் தனிநபர் சுதந்திரத்தை வழங்குகிறது. அதனை உச்சநீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகள் தெளிவுபடுத்தி இருக்கின்றன.

உறுதிப்படுத்தி இருக்கின்றன. ‘ஆதார் சட்டமே தனிநபர் சுதந்திரத்தில் தலையிடுவதாகும்' என்றே உச்சநீதி மன்றம் சொல்லி இருக்கிறது. அத்தகைய சூழலில் ஆதாரை, வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பது எப்படி சரியாக இருக்க முடியும்? “இந்த மசோதா குறித்து மக்களிடம் கருத்துக் கேட்ட பிறகே நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்” என்று தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அவர்கள் குறிப்பிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர்களிடத்திலேயே சரியான விவாதம் நடத்தாமல் தான் அது நிறைவேற்றப்பட்டுள்ளது.

தங்களது நோக்கத்தை பா.ஜ.க. மறைமுகமாகச் செயல்படுத்திக் கொண்டே இருக்கிறது என்பதற்கு உதாரணம் தான் இந்த மசோதாவே தவிர, தேர்தல் சீர்திருத்தத்துக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!

banner

Related Stories

Related Stories