தமிழ்நாடு

உ.பிக்கு ஒரு நியாயம்; தமிழ்நாட்டுக்கு ஒரு நியாயமா? - ஜோதிராதித்ய சிந்தியாவின் கருத்துக்கு சு.வெ., பதிலடி!

உத்தரபிரதேசத்துக்கு ஒரு நியதி தமிழகத்துக்கு ஒரு நியதியா? என விமானத்துறை அமைச்சரின் கருத்துக்கு சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.

உ.பிக்கு ஒரு நியாயம்; தமிழ்நாட்டுக்கு ஒரு நியாயமா? - ஜோதிராதித்ய சிந்தியாவின் கருத்துக்கு சு.வெ., பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

"நாங்கள் உண்மைக்கு மாறாக பேசவேண்டிய தேவையில்லை. ஏனெனில் தேவைக்கு அதிகமாகவே எங்களிடம் உண்மைகள் இருக்கின்றன” எனக் குறிப்பிட்டு விமானத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-

”மதுரையை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என்பது குறித்து ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்யா எம்.சிந்தியா அவர்களை நானும், மாணிக்கம் தாகூர் எம்.பியும் சந்தித்த போது அவர் வெளிப்படுத்திய கருத்துகளை நாங்கள் வெளியிட்டது ஆழமான விவாதங்களை உருவாக்கி இருக்கிறது.

இது குறித்து ஒன்றிய அமைச்சர் மீண்டும் தனது கருத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். மிக்க மகிழ்ச்சி. என்னிடமும், மாணிக்க தாகூர் எம்.பி அவர்களிடமும் அவர் கூறியதையே நாங்கள் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளோம்.

தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிலில் நான் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை என்கிறார். மிகுந்த அதிர்ச்சியாய் இருக்கிறது என்கிறார். ஏன் இவ்வளவு அதிர்ச்சி ? எது உண்மையற்றது ? முதலில் வட இந்தியாவிலும், தென்னிந்தியாவிலும் ஒன்றுக்கு மேற்பட்ட சர்வதேச விமான நிலையங்கள் இருக்கும் மாநிலங்கள் உண்டு என்கிறார். இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டுமெனில் அதன் பயணிகள் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் வேண்டுமென்கிறார். அரசு இன்னும் எத்தனை விமான நிலையங்களையும் திறக்கத் தயாராக இருக்கிறது என்கிறார்.

இவற்றையெல்லாம் தாண்டியது மூன்றாவதாகச் சொல்வது. மதுரையில் இருந்து ஏற்கெனவே சில சர்வதேச விமானங்கள் செல்கிறது. அப்படியிருக்க சர்வதேச விமான நிலையம் என்று அழைப்பதுதான் பிரச்சனையா? என கேட்கிறார். கூடுதலாக சர்வதேச விமானங்களை மதுரையில் இருந்து இயக்குவதற்கு ஒத்துழைக்கிறோம் என சொல்கிறார்.

இவ்வளவு சொல்லும் அமைச்சர் “மதுரையை சர்வதேச விமானநிலையம் ஆக்குவோம்” என்று மட்டும் சொல்ல மறுக்கிறார். அது தான் பிரச்சனையின் மையப்புள்ளியே.

நேர் சந்திப்பின் போது “பல வடமாநிலங்களில் ஒரு சர்வதேச விமானநிலையம் தான் இருக்கிறது.ஏற்கெனவே 5 மாநில முதல்வர்கள் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் வேண்டுமென கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கே இன்னும் ஏதும் செய்யவில்லை. இதில் ஏற்கெனவே தமிழகத்தில் 3 சர்வதேச விமானநிலையங்கள் இருக்க, நான்காவதாக மதுரையை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வாய்ப்பே இல்லை” எனத்தான் மிக அழுத்தமாக வாதிட்டார்.

அதைத் தான் வேறுவகையில் தற்போதும் கூறியுள்ளார். மதுரையில் இருந்து ஏற்கனவே வெளிநாடுகளுக்கு விமானங்கள இயக்கப்படுகின்றன. அப்படியிருக்க அதனை சர்வதேச விமானநிலையம் என அறிவித்தால் தான் செல்லுமா? என்று கேட்கிறார். பிறகு என்ன பிரச்சனை. அறிவிக்க வேண்டியதுதானே? என்றால் அதற்கு பதில் இல்லை.

அபுதாபி, மஸ்கட், சிங்கப்பூர், கோலாலம்பூர் ஆகிய நகரங்களுக்கு மதுரையில் இருந்து விமானங்களை இயக்க முயற்சி செய்வதாக அமைச்சர் கூறிய செய்தியை உடனடியாக வெளியிட்டோம். அதை நாங்கள் மறுக்கவும் இல்லை ; மறைக்கவும் இல்லை. வரவேற்றோம். ஆனால் அமைச்சர் தான் பேசிய சில விசயங்களை மறுக்கிறார்.

சர்வதேச விமான நிலையம் எனில் அதற்கென அளவீடுகள் , ஒப்பந்தங்கள், அடிப்படைக் கட்டமைப்புகள், பயணிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் தொடர்புடையது என்கிறார். இதில் தான் பிரச்சனை இருக்கிறது. கட்டமைப்பு மற்றும் பயணிகள் எண்ணிக்கை தான் பிரச்சனை எனில் நாடாளுமன்றத்தில் நான் பேசியதை மீண்டும் கேளுங்கள்.

தங்களிடம் நேரில் கூறியதையே மீண்டும் சொல்கிறோம். கடந்த ஆண்டு உத்திரபிரதேசத்தின் வாரணாசி மற்றும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணப்பட்ட பன்னாட்டுப் பயணிகளின் எண்ணிக்கையை விட ஏறக்குறைய மூன்று மடங்கு அதிகம் மதுரை விமான நிலையத்தில் இருந்து பயணப்பட்ட பன்னாட்டு பயணிகளின் எண்ணிக்கை.

அதுமட்டுமல்ல நாடு முழுவதுமுள்ள 21 சர்வதேச (A) விமான நிலையங்களில், 11 விமான நிலையங்களில் இருந்து பயணம் செய்த பன்னாட்டு பயணிகளின் எண்ணிக்கையை விட மதுரை விமான நிலையத்திலிருந்து பயணம் செய்த பன்னாட்டு பயணிகளின் எண்ணிக்கை அதிகம். அது மட்டுமல்ல, ஒன்றிய விமானத்துறை அறிவித்துள்ள 10 கஸ்டம்ஸ் விமான நிலையங்களில் பன்னாட்டுப் பயணிகள் அதிகம் பயணிக்கும் விமான நிலையமாக தொடர்ந்து பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருப்பது மதுரை விமான நிலையமே.

அதனால் தான் தொடர்ந்து பல ஆண்டுகளாக மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமானநிலையமாக அறிவியுங்கள் என்று கேட்கிறோம். நீங்களோ ஏதேதோ காரணம் சொல்கிறீர்கள்.

ஆனால் உபி யில் 2021 அக்டோபரில் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறக்கிறீர்கள். நவம்பர் மாதம் நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறீர்கள். அடுத்த ஆண்டே அயோத்தியில் சர்வதேச விமான நிலையம் துவக்கப்படும் என அறிவிப்பு வெளியிடுகிறீர்கள்.

எந்த அளவீடு, கட்டமைப்பு, புள்ளி விபரங்களின் அடிப்படையில் மூன்று சர்வதேச விமானநிலையங்கள் உ.பியில் துவக்கப்படுகின்றன? எந்த புள்ளி விபரத்தின் படி எங்களுக்கு மறுக்கப்படுகின்றன?

இந்தியாவின் எந்த வளர்ச்சி சார்ந்த மனிதவளக் குறியீடுகளிலும் முன்னணியில் இல்லாத மாநிலத்துக்கு இவ்வளவு முக்கியத்துவத்தை கொடுக்கும் நீங்கள், வளர்ச்சி சார்ந்த குறியீடுகள் பலவற்றில் முதன்மையாக இருக்கும் மாநிலம், GST பங்களிப்பில் நாட்டிலேயே இரண்டாவதாக இருக்கும் மாநிலமான தமிழகத்துக்கு ஏன் நியாயம் வழங்க மறுக்குறீர்கள்?

“அரசு இன்னும் எத்தனை விமான நிலையங்களையும் திறக்கத் தயாராக இருக்கிறது” என்றும் கூறும் அமைச்சர் அவர்களே! அதே வேகத்தோடு மதுரை விமானநிலையத்தை சர்வதேச விமானநிலையமாக அறிவியுங்கள். வரவேற்க தயாராக இருக்கிறோம். அதுவரை எங்கள் கோரிக்கைகள் தொடரும்.

நாங்கள் உண்மைக்கு மாறாக பேசவேண்டிய தேவையில்லை. ஏனெனில் தேவைக்கு அதிகமாகவே எங்களிடம் உண்மைகள் இருக்கின்றன.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories