தமிழ்நாடு

“48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை அரசே ஏற்கும்;அதன் பிறகு..”: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனியார் மருத்துவமனைகளில், முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவச் சிகிச்சை செலவை தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்துள்ளோம்.

“48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை அரசே ஏற்கும்;அதன் பிறகு..”: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மேல்மருவத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் “இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டத்தை” தொடங்கி வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :

‘உடுக்கை இழந்தவன் கைபோல’ என்ற குறளுக்கு நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சொன்னதுதான் என்னுடைய நினைவிற்கு வருகிறது. “அணிந்திருக்கும் உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படி கைகள் உடனடியாக செயல்படத் தொடங்குகிறதோ, அதைச் சரிசெய்ய வேண்டும் என்று எண்ணுகிறதோ, அதைப்போல நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்க துடித்துச் செல்வதே நட்புக்கு இலக்கணமாகும்” என்று அவர் உரை எழுதியிருக்கிறார்.

அப்படி உடனடியாக உதவக்கூடிய வகையில், தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட திட்டம் தான் இந்த “இன்னுயிர் காப்போம் திட்டம்”. உயிர் காப்பான் தோழன் என்பார்கள். அத்தகைய தோழமை எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திட்டம்தான் இந்த “இன்னுயிர் காப்போம் திட்டம்”.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி நமது நாட்டிற்கே முன்னணி மாநிலமாக, பெருமை சேர்க்கக்கூடிய வகையில் நம்முடைய தமிழ்நாடு இன்றைக்கு திகழ்ந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு மாநிலத்தினுடைய முதலமைச்சர்களை எல்லாம் ஒப்பிட்டு, அதேபோல, தமிழகத்தின் முதலமைச்சராக உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டு அந்தப் பொறுப்பை ஏற்றிருக்கக்கூடிய எனக்கு கருத்துக் கணிப்புகளின் மூலமாக அவர்கள் எடைபோட்டார்கள். அப்படி எடைபோட்ட போது, இந்தியாவில் இருக்கக்கூடிய மாநிலத்தின் முதலமைச்சர்களில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் முன்னணியில் இருக்கிறார் என்று ஒரு செய்தியை போட்டார்கள். எனக்கு மகிழ்ச்சிதான், எனக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் மகிழ்ச்சிதான், தமிழ்நாட்டிற்கே மகிழ்ச்சிதான்.

நான் பல இடங்களில், பல நிகழ்ச்சிகளில் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறேன். இந்தியாவிலேயே இருக்கக்கூடிய முதலமைச்சர்களில் முதல் இடம் என்று சொல்வதைவிட பெருமை என்னவென்றால், இருக்கின்ற மாநிலத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தமிழ்நாடு தான் முதலிடத்தில் இருக்கிறது என்று சொல்ல வேண்டும், அதைத்தான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.

கல்வியில், வேலை வாய்ப்பில், தொழில் வளர்ச்சியில், ஏற்றுமதியில், சமூக வளர்ச்சியில், மகளிர் மேம்பாட்டில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருக்க வேண்டும் என்று நாம் பாடுபட்டுக் கொண்டு இருக்கிறோம். அதே நேரத்தில் வறுமையில், பசியில், குற்றங்கள் நடப்பதில், சாலை விபத்துகள் நடப்பதில் குறைந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்க வேண்டும்.

ஆனால், சாலை விபத்துக்களைப் பொறுத்தவரையில், நமது நாட்டில் அதிக உயிரிழப்புகள் ஏற்படக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து இருந்து வருகிறது. அது உள்ளபடியே நமக்கு மிகுந்த வருத்தத்தை தந்துகொண்டிருக்கிறது. சாலை விபத்துகளால் ஏற்படக்கூடிய ஒவ்வொரு உயிர் இறப்பிலும், அந்த நபர் மட்டுமன்றி அந்தக் குடும்பத்தின் எதிர்காலமே ஒடுங்கி விடுகிறது, பல்வேறு சோதனைகளுக்கு ஆளாகிறது. சாலை விபத்துகளில் இறப்பவர்கள் பெரும்பாலும் இளம் வயதினர் என்பதையும் எண்ணிப் பார்க்கின்ற நேரத்தில், விலைமதிக்க முடியாத இளைஞர்களின் எதிர்காலத்தை சேர்த்தே எடுத்துச்சென்று விடுகின்றது.

சாலை விபத்துகளைக் குறைத்தும் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுத்தும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதில் தமிழ்நாடு அரசு சிறப்புக் கவனம் செலுத்தி வருகின்றது. ஒவ்வொரு தனிமனிதரும் அவரவர் தரக்கூடிய அந்த உயிர் அவரது குடும்பத்துக்கு மட்டுமல்ல; இந்த அரசுக்கும் நாட்டுக்கும் மிகமிக முக்கியம் என்பதை நாம் அனைவரும் உணர்ந்தாக வேண்டும்.

இந்த வகையில் சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்கும் நோக்கத்தோடு தமிழ்நாடு அரசால் வகுக்கப்பட்டுள்ள திட்டம்தான் இந்த இன்னுயிர் காப்போம் என்கிற திட்டம். விபத்து நடக்கக் கூடாது. விபத்து காரணமாக எந்த உயிரும் பறிபோகக் கூடாது என்கிற அந்த நடவடிக்கைகளில் நாம் அதிகம் கவனத்தைச் செலுத்த வேண்டும், அதில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எல்லாம் அரசின் சார்பில், முதலமைச்சர் என்கின்ற அந்த முறையோடு நான் தெரிவித்திருக்கிறேன்.

விபத்தில் உயிர் போவதற்கு முக்கியமான காரணமாகச் சொல்லப்படுவது - நேரமும் காலமும்தான். விபத்து நடந்ததும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்து விட்டால் நிச்சயமாக அந்த உயிரைக் காப்பாற்றிட முடியும். காலதாமதம் ஆகும்போது உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனை மருத்துவர்கள் கோல்டன் ஹவர்ஸ் (Golden Hours) என்று சொல்வது உண்டு.

விலைமதிக்க முடியாத அந்தத் தருணத்தில் எடுக்கும் முடிவுகள், துரிதமான செயல்பாடுகள்தான் மனித உயிர்களைக் காப்பாற்றுகிறது. விபத்தை எதிர்கொள்பவர் அடையக்கூடிய மாபெரும் துன்பம் என்பதும் இந்த நேரம்தான். அப்படிச் சேர்க்கப்படும் இடம், அரசு மருத்துவமனையா, தனியார் மருத்துவமனையா என்ற பாகுபாடு இல்லாமல் இருந்திட வேண்டும். அதை முழுமையாக தவிர்க்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். அதனால்தான் இந்தத் திட்டத்தின் மிக முக்கியமான ஒரு அம்சமாக - சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனியார் மருத்துவமனைகளில், முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவச் சிகிச்சை செலவை தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்துள்ளோம்.

48 மணி நேரத்திற்குள் உரிய சிகிச்சை அளித்து உடனடியாக கவனித்து விட்டால், பெரும்பாலும் உயிர்கள் காக்கப்படும். அப்படியானால் அதற்குப் பிறகு என்ன என்று நீங்கள் கேட்பது என்னுடைய செவிகளில் விழாமல் இல்லை. அதன்பிறகுதான் முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இருக்கிறது. அதில் சிகிச்சை பெறலாம். சாலை விபத்துகளால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்குத் தேவைப்படும் அறுவைச் சிகிச்சைகளும் தீவிர சிகிச்சைகளும் முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே அந்தக் கவலையும் யாருக்கும் வேண்டாம்.

உயிர் காக்கக் கூடிய அவசர சிகிச்சைகள் பெரும்பாலும் முதல் 48 மணிநேர காலத்திலேயே தேவைப்படக்கூடிய சூழ்நிலையில், இந்த அவசர சிகிச்சைகளை மேற்கொள்வதில் பல தனியார் மருத்துவமனைகள் தயக்கம் காட்டி வருவதாகச் சொல்லப்படுகிறது. இதனால், விபத்துகளில் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகள் அருகில் இருந்தாலும், பல நேரங்களில் தொலைவில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை கொண்டு செல்லக்கூடிய, அவர்களுக்கு அவசர சிகிச்சை கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு விடுகிறது. இந்தப் பிரச்சினைகள் அனைத்திற்கும் நல்லதொரு தீர்வாகத்தான் இந்தத் திட்டம் இன்றைக்கு தொடங்கப்பட்டுள்ளது.

முதல் 48 மணிநேரத்தில் தேவைப்படக்கூடிய அவசர சிகிச்சை அனைத்தையும் அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனைகளிலும் மேற்கொள்ளக்கூடிய நோக்கத்தோடுதான் இந்தத் திட்டத்தை இன்றைக்கு நான் தொடங்கி வைத்திருக்கிறேன்.

  • சாலை விபத்தினால்‌ பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்‌ 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ளும்.

  • இத்திட்டத்திற்கென அங்கீகரிக்கப்பட்ட 201 அரசு மருத்துவமனைகள் மற்றும் 408 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 609 மருத்துவமனைகள் உரிய தகுதியின் அடிப்படையில் இணைக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைகள் வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

  • இத்திட்டத்தின் மற்றொரு முக்கிய சிறப்பம்சமாக, முதலமைச்சரின்‌ மருத்துவக்‌ காப்பீட்டு அட்டை உடையவர்கள், இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர்‌, வேறு நாட்டவர்‌ என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் - அதாவது தமிழ்நாட்டின் எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளில் காயமடைவோர் அனைவருக்கும் முதல் 48 மணி நேரம் வரை கட்டணமின்றி மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.

  • சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் மருத்துவமனையிலேயே முதல் 48 மணி நேரம் வரை அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறைகளில் (81 treatment packages) சிகிச்சை அளிக்கப்படும்.

  • 48 மணி நேரத்திற்கு மேலும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நிலையற்றவராக (unstable) இருந்தால் அல்லது மேலும் தொடர் சிகிச்சை நடைமுறைகள் தேவைப்பட்டால், முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அல்லது தகுந்த வழிகாட்டுதல்களின்படி தொடர் சிகிச்சைகள் நிச்சயமாக வழங்கப்படும்.

விபத்துகள் நடந்தால் அரசு எப்படி உதவும் என்பதைத்தான் இதுவரை நான் சொன்னேன். ஆனால் அரசாங்கத்தில் மிகமுக்கியமான நோக்கம் விபத்தே இருக்கக் கூடாது என்பதுதான். விபத்துக்கு மிக முக்கியமான காரணம், அதிகப்படியான வேகம்தான். சாலைகளில் வாகனத்தை ஓட்டும்போது வேகத்தைக் குறையுங்கள். வேகத்தை உங்களது உழைப்பில், செயல்படுத்துங்கள். சாலைகளில், தெருவில் காட்ட வேண்டாம். அதில் உங்கள் வேகத்தை காட்ட வேண்டியதில்லை. இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். சிலர் ஹெல்மெட் வாங்கி பைக் முன்னால் வைத்திருப்பார்கள். போலீசைப் பார்த்ததும் போட்டுக்கொள்வார்கள்.

தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, பிரபல நரம்பியல் மருத்துவர் ராமமூர்த்தி அவர்கள் தலைவரைச் சந்தித்தபோது ஒரு செய்தியைச் சொன்னார். “நாட்டில் அதிகப்படியான ஆக்சிடெண்ட் நடக்கிறது, சின்ன சின்ன பசங்க எல்லாம் பைக் எடுத்துட்டுப் போய் தலையை உடைச்சிட்டு ஆஸ்பத்திரிக்கு வர்றாங்க, அதனால ஹெல்மெட்டைக் கட்டாயம் ஆக்க வேண்டும்” - என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தார்.

ஹெல்மெட் கம்பெனிக்கு நான் லாபம் பார்த்து தர்றேன்னு சொல்லி ஒரு பிரச்சாரத்தை நடத்துவார்கள் என்று தலைவர் அவர்கள் கிண்டலாகப் பதில் சொன்னார். உயிரைப் பற்றி கவலைப்படும் மக்கள் அவர்களாகவே ஹெல்மெட் அணிய வேண்டும் என்று தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னார்கள். ''ஹெல்மெட் போட்டா முடி உதிரும் என்று பலரும் போடாம இருக்காங்க, உனக்கு உயிர் முக்கியமா? முடி முக்கியமான்னு நான் கேட்டேன்' என்று அப்போது ராமமூர்த்தி அவர்கள் சொன்னார்கள். எனவே, இளைஞர்கள் அனைவரும் தங்கள் உயிரைக் காக்க கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.

இன்று கார்களின் விலைக்கு சமமாக பைக் விலை வந்துவிட்டது. சில பைக்குகள் கார்களை விட அதிகமான விலைக்கு விற்கப்படுகின்றன. இந்த பைக்குகளை எல்லோரும் ஓட்டிவிட முடியாது. அதற்கான முழுமையான பயிற்சியும் திறமையும் இருப்பவர்கள்தான் இயக்க முடியும். பையன் கேட்கிறான் என்பதற்காக இப்படி விலை உயர்ந்த பைக்குகளை வாங்கிக் கொடுத்து பிள்ளைகளை இழந்த பெற்றோர்களையும் பார்க்கிறோம். ஆகவே, பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளுக்கு வாகனங்கள் வாங்கித் தருவதில் கவனமாக இருக்க வேண்டும். கார்களில் பயணம் செய்யும்போது, எப்போதும் சீட் பெல்ட் அணிய வேண்டும்.

மிக அதிகமான வேகத்தில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். இவை அனைத்தையும் விட சாலை விதிகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். சிவப்பு விளக்கு விழுந்தால் நிற்பதைக் கூட, தங்களுக்கு இழைக்கப்படும் அவமானமாக சிலர் நினைக்கிறார்கள். சாலை விதிகளைக் கடைப்பிடிப்பது என்பதைப் போலீஸுக்குப் பணிந்து போவதாக சிலர் நினைக்கிறார்கள். இல்லை, சாலை விதிகளைக் கடைப்பிடிப்பதன் மூலமாக ஒரு தனிமனிதரின் சமூகப் பண்பாடு வெளிப்படுகிறது. தனிமனித ஒழுக்கம் வெளிப்படுகிறது. அத்தகைய சமூகப் பண்பாடு கொண்டவர்களாக மக்கள் அனைவரும் செயல்படுவதன் மூலமாக விபத்து இல்லாத தமிழகத்தை நிச்சயமாக, உறுதியாக அமைப்போம்!

அமைப்பதற்கு எங்களைப் போன்றவர்கள் மட்டுமல்ல, உங்களைப் போன்றவர்களும் இணைந்து கைகோர்த்து, இந்தத் திட்டத்திற்கு நாம் துணை நிற்போம் என்ற அந்த உறுதியை நீங்கள் அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories