தமிழ்நாடு

“நிலக்கரிக்கும், கிரிப்டோ கரன்சிக்கும் பதில் சொல்லுங்க ‘கிரிப்டோ’மணி” : அமைச்சர் செந்தில்பாலாஜி சாடல்!

“கண் பார்வையிலிருந்து காணாமல் போன நிலக்கரிக்கும், கண்ணுக்குத் தெரியாத கிரிப்டோ கரன்சிக்கும் தங்கமணி பதில் சொல்ல வேண்டும்” என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

“நிலக்கரிக்கும், கிரிப்டோ கரன்சிக்கும் பதில் சொல்லுங்க ‘கிரிப்டோ’மணி” : அமைச்சர் செந்தில்பாலாஜி சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறை முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி மற்றும் கே.சி.வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. பணமும், சொத்துக் குவிப்பு தொடர்பான முக்கிய ஆவணங்களும் சிக்கின.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் தங்கமணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகிய 3 பேர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப் பதிவு செய்த நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறையினர், முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான 69 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் தங்கமணி. இவர் தற்போது குமாரபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். இவர் அமைச்சராக இருந்த 5 ஆண்டு காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.

“நிலக்கரிக்கும், கிரிப்டோ கரன்சிக்கும் பதில் சொல்லுங்க ‘கிரிப்டோ’மணி” : அமைச்சர் செந்தில்பாலாஜி சாடல்!

குறிப்பாக இவர் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த 2016 முதல் 2021 காலகட்டத்தில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தனது பெயரிலும் தனது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் பெயரிலும், பல்வேறு அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அந்த முதல் தகவல் அறிக்கையில், 2016ஆம் ஆண்டு வேட்புமனு தாக்கல் செய்யும்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் பெயரில் உள்ள சொத்து மதிப்பு 1 கோடியே 1 லட்சத்து 86 ஆயித்து 17 ரூபாய் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 2021 சட்டமன்ற தேர்தல் வேட்புமனுத் தாக்கலில் இணைத்து காட்டப்பட்ட சொத்துக்களின் மதிப்பு 8 கோடியே 47 லட்சத்து 66 ஆயிரத்து 318 ரூபாயாக இருந்துள்ளது.

இந்நிலையில், 2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரை முன்னாள் அமைச்சர் தங்கமணி உள்ளிட்ட குடும்பத்தினர் சம்பாதித்ததாக கூறப்படும் வருமானம் 5 கோடியே 24 லட்சத்து 86 ஆயிரத்து 617 ரூபாய் ஆகும். ஆனால் , 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை முன்னாள் அமைச்சர் தங்கமணி, அவரது மனைவி சாந்தி மற்றும் மகன் தரணிதரன் ஆகியோர் வைத்துள்ள உண்மையான சொத்து மதிப்பு, 7 கோடியே 45 லட்சத்து 80 ஆயிரத்து 301 ரூபாய் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

“நிலக்கரிக்கும், கிரிப்டோ கரன்சிக்கும் பதில் சொல்லுங்க ‘கிரிப்டோ’மணி” : அமைச்சர் செந்தில்பாலாஜி சாடல்!

இந்த இடைப்பட்ட காலத்தில் இவர்கள் செலவு செய்ததாக சுமார் 2 கோடியே 60 லட்சத்து 8 ஆயிரத்து 282 ரூபாய் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட சொத்து மதிப்பு மற்றும் செலவு கணக்குகளை கணக்கிட்டு பார்க்கும் பொழுது சுமார் 4 கோடியே 85 லட்சத்து 72 ஆயிரத்து 19 ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை கிரிப்டோ கரன்சிகளாக மாற்றி முதலீடு செய்து சொத்துகளை குவித்து இருப்பதாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் தங்கமணி, அவரது மனைவி சாந்தி மற்றும் மகன் தரணிதரன் மீது நாமக்கல் பிரிவு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், முறைகேடாக சொத்து சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசு மீது அ.தி.மு.க மற்றும் பா.ஜ.கவைச் சேர்ந்தவர்கள் பழிவாங்கும் நடவடிக்கை என பொய் பிரசாரத்தையும் அவதூறுகளையும் பரப்பி வருகின்றனர்.

அதேசமயத்தில் முறைகேடு செய்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் மீது அரசு சார்பில் சட்டப்படி எடுக்கும் நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக ஆரவலர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் வரவேற்பை அளித்துள்ளனர்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் தங்கமணியை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சாடியுள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஒரே கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் ஒரு கருத்தை சொல்ல, தங்கமணி தனியாக ஒரு கருத்தை சொல்கிறார். எல்லோரும் பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள். ஊழல் கறைபடிந்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்ற தேர்தல் வாக்குறுதியையே மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசு நிறைவேற்றி வருகிறது.

கிரிப்டோ கரன்சிகளில் ஊழல் பணத்தை முதலீடு செய்த அரசியல்வாதி என இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதற்கு பதில் அளித்தால் பரவாயில்லை. கண் பார்வையிலிருந்து காணாமல் போன நிலக்கரிக்கும், கண்ணுக்குத் தெரியாத கிரிப்டோ கரன்சிக்கும் தங்கமணி, மன்னிக்கவும், ‘கிரிப்டோ’மணி முதலில் பதில் சொல்ல வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories