சென்னை கொளத்தூரில் நேற்று தம்பதியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (62). இவரது மனைவி பாரதி (59). இவர்களது மகள் பாக்கியலட்சுமி (40), மகன் தினேஷ் (35).
நேற்று கோவிந்தராஜ் மற்றும் பாரதி ஆகிய இருவரும் விஷம் அருந்திய நிலையில் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டனர். பாக்கியலெட்சுமி, தினேஷ் நிலை என்ன என்பது குறித்து தெரியாமல் இருந்தது.
அவர்கள் இருவரையும் கொளத்தூர் போலிஸார் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று பாக்கியலெட்சுமி மற்றும் அவரது தம்பி தினேஷ் ஆகிய இருவரும் விஷம் அருந்திய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரியவந்தது.
விஷமருந்திய அவர்கள் இருவரும் வாந்தி எடுத்ததால் விஷம் உடலுக்குள் பரவுவது தவிர்க்கப்பட்டுள்ளது. 2 பேரும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விசாரணையில், தினேஷுக்கு தங்க மோசடி கும்பலுடன் தொடர்பு இருந்து வந்துள்ளது. பல கோடி மோசடி செய்த விவகாரத்தில் கைதான பாலாஜி என்பவருக்கும் தினேஷுக்கும் தொடர்பு இருந்து வந்துள்ளது.
தினேஷும், குறைந்த விலைக்கு தங்கம் வாங்கித் தருவதாக உறவினர்களிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளார். பணம் கொடுத்தவர்கள் வீட்டிற்கு வந்து தொல்லை கொடுத்ததால் அவமானம் தாங்காமல் பெற்றோர் தற்கொலை செய்துகொண்டதாக தினேஷ் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தன்று வீட்டுக்குச் சென்றபோது தாயும், தந்தையும் விஷமருந்தி சடலமாக கிடந்ததால் பயத்தில் வீட்டைவிட்டு வெளியேறி கிழக்கு கடற்கரை சாலை பகுதிக்குச் சென்று தனது அக்கா பாக்கியலெட்சுமியுடன் விஷமருந்தியதாக தினேஷ் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.