தமிழ்நாடு

திருண்ணாமலையில் 2 நாட்கள் வேளாண் கண்காட்சி... அமைக்கப்பட்டுள்ள அரங்குகளின் விவரங்கள் உள்ளே!

திருண்ணாமலையில் 2 நாட்கள் நடைபெறும் ”வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்- 2025” விழாவில் கண்காட்சி அரங்குகள் மற்றும் கருத்தரங்கத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

திருண்ணாமலையில் 2 நாட்கள் வேளாண் கண்காட்சி... அமைக்கப்பட்டுள்ள அரங்குகளின் விவரங்கள் உள்ளே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (27.12.2025) திருவண்ணாமலையில், திருக்கோவிலூர் சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ”வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்- 2025”  விழாவில் கண்காட்சி அரங்குகள் மற்றும் கருத்தரங்கத்தினைத் தொடங்கி வைத்தார்.

தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சூழலில், நவீன பயிர் சாகுபடித் தொழில்நுட்பங்களை உழவர்கள் கடைப்பிடித்து, காலநிலை மாற்றத்தின் தாக்கத்தினை எதிர்கொண்டு குறைந்த பரப்பில் அதிக உற்பத்தி செய்யவேண்டிய நிலையில் அதற்கான அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்ளும் வகையிலும், இயந்திரங்கள் பயன்பாடு, விளைபொருட்களை மதிப்புக்கூட்டுதல், ஏற்றுமதி செய்தல் போன்றவற்றிற்கான விவரங்களை விவசாயிகளுக்கும் தொழில் முனைவோருக்கும் ஒரே இடத்தில் வழங்கிடுவதில் வேளாண் கண்காட்சிகள் மற்றும் கருத்தரங்குகள் முக்கியப்பங்காற்றுகின்றன.

திருண்ணாமலையில் 2 நாட்கள் வேளாண் கண்காட்சி... அமைக்கப்பட்டுள்ள அரங்குகளின் விவரங்கள் உள்ளே!

=> 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்களின் விவரங்கள்

முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, வேளாண்மை-உழவர் நலத் துறையால் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்குகள் ஆண்டுதோறும் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.  அவ்வகையில், இந்த ஆண்டின் முதல் “வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்” 11.06.2025 முதல் 13.06.2025 வரை ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகில் விஜயமங்கலத்திலும், இரண்டாவதாக ”வேளாண் வணிகத் திருவிழா” 27.09.2025 முதல் 28.09.2025 வரை நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்திலும் முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றன. உழவர் பெருமக்கள், பொதுமக்கள், மாணவர்கள் ஆகியோர் திரளாகப் பங்கேற்றுப் பயன்பெற்றனர். 

=> திருவண்ணாமலையில் நடைபெறும் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் 

இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டின் மூன்றாவது நிகழ்வாக  வேளாண்மையில் நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள், உயர்விளைச்சல் தரவல்ல புதிய பயிர் இரகங்கள், பாரம்பரிய இரகங்கள், அறுவடை பின்சார் மேலாண்மை நுட்பங்கள், மதிப்புக்கூட்டும் நுட்பங்கள், சந்தைப்படுத்தும் நுட்பங்கள், உயிர்ம மற்றும் இயற்கை வேளாண்மை, உணவு பதப்படுத்துதல், கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு நுட்பங்கள், ஏற்றுமதி தொடர்பான விழிப்புணர்வு  போன்ற பல்வேறு வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த அனைத்து விவரங்களையும் உழவர்கள், மாணவர்கள், பொதுமக்களிடையே கொண்டுசேர்த்திடும் வகையில்  27.12.2025 மற்றும் 28.12.2025 ஆகிய இரு நாட்கள் திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் “வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு 2025”-யை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைத்ததுடன், விழாவில் தலைமையுரை ஆற்றி, 518 உழவர்களுக்கு 9.43 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். 

முதலமைச்சர் அவர்கள் வேளாண்மை – உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வேளாண் கண்காட்சியை திறந்து வைத்து, பார்வையிட்டார். பின்னர், விவசாய பெருமக்கள் பயன்பெறும் வகையில் வேளாண் கருத்தரங்கத்தினையும் தொடங்கி வைத்தார்.  

திருண்ணாமலையில் 2 நாட்கள் வேளாண் கண்காட்சி... அமைக்கப்பட்டுள்ள அரங்குகளின் விவரங்கள் உள்ளே!

=> 1000 முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் தொடங்கி வைத்தல்

விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருட்களையும் சாகுபடிக்கான ஆலோசனைகளையும் துறைத்திட்டங்கள் குறித்த விபரங்களையும் ஒரே இடத்தில் வழங்க ஏதுவாக வேளாண்மை, தோட்டக்கலைப் பட்டதாரிகள், பட்டயதாரிகளால் நடத்தப்படும்
”1000 முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள்” திட்டத்தினையும் முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்

=> வேளாண் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளின் விவரங்கள்

கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள 250-க்கும் மேற்பட்ட உள் மற்றும் வெளிப்புறக் காட்சி அரங்குகளில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பபிர்கள் துறை,  வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, ஒன்றிய அரசின் வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள்,  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் போன்ற அரசுத் துறைகள் தங்கள் செயல்பாடுகள், திட்டங்களைக் காட்சிப்படுத்தியுள்ளனர். நுண்ணீர்ப்பாசன அமைப்புகள் உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள், விதை ஆகியவற்றின் உற்பத்தியாளர்கள், வங்கிகள், பயிர்க்காப்பீட்டு நிறுவனங்கள், சர்க்கரை ஆலைகள் உள்ளிட்ட பல்வேறு தனியார் நிறுவனங்களும் கலந்து கொண்டு வேளாண் உற்பத்திக்குத் தேவையான புதிய இரகங்களின் விதைகள்,  காய்கறி விதைகள், பழ வகைகளில் ஒட்டு இரகக் கன்றுகள், தென்னையில் வீரிய ஒட்டுக் கன்றுகள், நுண்ணூட்ட உரக்கலவை, உயிர் உரங்கள், இயற்கை உரங்கள் போன்ற இடுபொருட்கள் மற்றும் நவீன உபகரணங்களைக் காட்சிப்படுத்தியுள்ளதுடன் விற்பனையும் செய்து வருகின்றனர்.

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், பாரம்பரிய உணவு உற்பத்தி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் உணவு பதப்படுத்தும் அமைப்புகளும் பங்கேற்றுள்ளன.

அரசின் அனைத்துத் திட்டங்களையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள வாய்ப்பாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்,  முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், உழவரைத் தேடி வேளாண்மை- உழவர் நலத்துறை திட்டம், பயறு பெருக்குத் திட்டம், எண்ணெய்வித்து பெருக்குத் திட்டம்,   ஊட்டச்சத்து வேளாண்மை-காய்கறி சாகுபடி,  பசுமைக்குடில்- கொய்மலர்கள் சாகுபடி, வணிக ரீதியில் உதிரி மலர்கள் சாகுபடி, காளான் சாகுபடி தொழில்நுட்பங்கள், தோட்டக்கலைப் பயிர்களில் தானியங்கி நுண்ணீர்ப்பாசன முறை,  பண்டைய காலம் முதல் தற்காலம் வரை தானிய சேமிப்பு முறைகள், புவிசார்குறியீடு பெற்ற பொருட்கள், பல்வேறு இன கால்நடைகள், செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள், கோழிகள் போன்றவை மாதிரிகள் மற்றும் காட்சிகள், புதிய நவீன சர்க்கரை வளாக மினியேச்சர் மாதிரி, சமீபத்திய கரும்பு வகைகள் மற்றும் சர்க்கரை ஆலை தயாரிப்புகள் ஆகியவை குறித்த கண்காட்சி அரங்குகளும், உழவர் செயலி பதிவிறக்கம், அரசு நல உதவித்திட்டங்களில் பயன்பெறப் பதிவு செய்தல், தமிழ் மண்வள இணையதளம் மூலம் மண்வள அட்டை விநியோகம் போன்ற இணையவழி சேவைகளைப் பற்றி அறிந்து கொள்ளவும் அங்கேயே பயன்பெறவும் ஏதுவாக சிறப்பு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருண்ணாமலையில் 2 நாட்கள் வேளாண் கண்காட்சி... அமைக்கப்பட்டுள்ள அரங்குகளின் விவரங்கள் உள்ளே!

=> வேளாண் கருத்தரங்கங்கள் பற்றிய விவரங்கள்

வேளாண்மை இயந்திரமயமாக்குதலில் உள்ள சவால்களும், தீர்வுகளும், மண்வளம் காக்கும் உயிர்ம வேளாண்மை, காலநிலை மாற்றங்களைத் தாங்கவல்ல வேளாண்மைத் தொழில்நுட்பங்கள், நவீன வேளாண் தொழில்நுட்பங்கள், உயர்விளைச்சல் கரும்பும் உன்னத பலன்களும், உழவர்களின் வருமானத்தைப் பெருக்கும் வழிமுறைகள், வேளாண் வணிகம் மற்றும் ஏற்றுமதிக்கான வாய்ப்புகள்,  இடைத்தரகரில்லா வேளாண் சந்தை, மின்னணு சந்தை, நஞ்சில்லா வாழை, கரும்பு, மரவள்ளி, மஞ்சள் உற்பத்திக்கான பூச்சி நோய் மேலாண்மை, அடுத்த தலைமுறைக்கான தோட்டக்கலைப் பண்ணையம், மகத்துவ மஞ்சள் சாகுபடி, வளம் தரும் வாழை சாகுபடி, தென்னையில் பூச்சி நோய் மேலாண்மை மற்றும் மதிப்புக்கூட்டுதல்,  வேளாண் காடுகள் மூலம் வருமானம், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல், மீன்வளர்ப்புத் தொழில்நுட்பம் போன்ற நவீன தலைப்புகளில் விஞ்ஞானிகள், அனுபவமிக்க வேளாண் பெருமக்கள், தொழில்நுட்ப வல்லுநர்களைக்கொண்டு கருத்தரங்குகளும் நடத்தப்படுகின்றன. 

மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் இக்கண்காட்சிக்கு உழவர்களை அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் வேளாண் பெருமக்கள், பொதுமக்கள், மாணவர்கள் என சுமார் ஒரு இலட்சம் பேர் கலந்து கொண்டு பயன்பெறுவர்.  

banner

Related Stories

Related Stories